மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்
சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.
இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.
இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில், திருக்குளத்தில் பவனி வருவார்கள்.
கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. அதேபோன்று சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.