திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
சனி பகவானின் முடக்கு வாதத்தை நீக்கிய தலம்
மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் திருவாதவூர். இறைவன் திருநாமம் திருமறைநாதர் . இறைவியின் திருநாமம் வேதநாயகி.
சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத் தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது.
சனி பகவானுக்கு, மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. தான் பெற்ற சாப நீக்கத்தை, பக்தர்களுக்கு அருளும் முகமாக இந்த ஆலயத்தில், சனி பகவான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
வாத நோயை நீக்கும் அபிஷேக நல்லெண்ணெய்
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
தங்கள் வாத நோய் தீர வேண்டும் என்பதற்காக பல வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.