தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

காசிக்கு சமமான சிவ தலஙகள்

இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க நினைப்பது காசி விஸ்வநாதர் கோவில்தான். அதிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் தங்களின் இறுதிக்காலத்தை காசிக்கு சென்று இக்கோவிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானை தரிசித்து கங்கைக் கரையிலேயே தங்களின் இறுதி நாட்களை முடித்துக்கொள்ள ஆசைப்படுவதுண்டு. தமிழகத்திலும் காசிக்கு நிகரான கோவில்கள் உள்ளன.

"ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம் சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ஷேத்திர ஸமான ஷட்" என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகமும் உண்டு. அதன்படி திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) என்ற இந்த ஏழு சிவன் கோவில்களும் காசிக்கு சமமான கோவில்களாகும். இங்கு சென்று வழிபட்டால், காசிக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்

அமிர்தகடேசுவரர் கோவில்

சிவபெருமான் ஒவ்வொருநாளும் நவக்கிரகங்களுக்குரிய வஸ்திரம் அணியும் தேவாரத் தலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவில், வடவாற்றின் கரையில் உள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இத்தலம் செட்டிதாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி, முட்டம் செல்லும் சாலையில் ஆறாவது கி.மீட்டரில் உள்ளது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும், தங்களுக்கான நாளில் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவபெருமான் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். அதனால் இந்த ஈசனுக்கு ஞாயிறு-சிவப்பு, திங்கள்-வெள்ளை, செவ்வாய்-சிவப்பு, புதன்-பச்சை, வியாழன்-மஞ்சள், வெள்ளி-வெள்ளை, சனி-நீலம் என ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகத்துக்குரிய வண்ண ஆடை அணிவிக்கப்படுகிறது.

எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. மேலும் இத்தலத்தில் அங்காரகன் வழிபட்டதால், இத்தலம் செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்றது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்

https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe

தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/dmgrwag3jxzb57ged3gwfc4l5et5wk

Read More
எறும்பீசுவரர் கோவில்

எறும்பீசுவரர் கோவில்

தேவர்கள் எறும்பு வடிவில் வழிபட்ட தேவாரத் தலம்

திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர். இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி.

புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இறைவன் எறும்பீஸ்வரர், வடக்கில் தலை சாய்ந்த நிலையில் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.

தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். அவர் 'தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப்(திருவெறும்பூர்) சிவபெருமானை வழிபடுவாயாக, அப்போது சூரனை அழிக்க ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்' என்று ஆலோசனை கூறினார்.

அதன்படி தான் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவன் விருப்பப்படி கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர். எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினையும் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் சிவபெருமான் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்கு அருள் வழங்கினார்.

Read More
எமதண்டீஸ்வர சுவாமி  கோவில்

எமதண்டீஸ்வர சுவாமி கோவில்

பிரதோஷ நாளில் மூச்சு விடும் நந்தி

திண்டிவனம்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.

இக்கோவிலில், மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். செவ்வக வடிவ ஆவூடையாரில், இங்கு மூலவராக ஈசன் எழுந்தருளியிருப்பது அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. மூலவர் கருவறையினுள்ளே, பூசனைகள் செய்யும் போது, யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல, ஓர் ஒலியை மக்கள் கேட்டுள்ளார்கள்.

பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்றுக் கேட்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். அதை நீருபிக்கும் விதமாக நந்தியின் நாசித துவாரங்கள் அமைந்திருப்பதை

அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பிரதோஷ அபிஷேகத்தின்போது காற்றுக் குமிழ்கள் நந்தியின் நாசித் துவாரத்திலிருந்து வெளியேறுவதையும் குறிப்பிடுகிறார்கள்.

இந்தத் தலத்தில் திருமணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இது தவிர சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், போன்றவை இங்குச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

Read More
சிவகுருநாதசுவாமி கோவில்

சிவகுருநாதசுவாமி கோவில்

காலடியில் ராகுவுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்

கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையிலிருந்து சிவபுரி கிளைப் பாதையில், 2 கி. மீ. சென்றால் தேவாரத் தலமான சிவபுரத்தை அடையலாம். இறைவன் திருநாமம் சிவகுருநாதசுவாமி. இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி.

இத்தலத்தில், பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.

பொதுவாக சிவாலயங்களில், சுற்று சுவற்றில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் காலடியில் முயலகன் மட்டுமின்றி ராகுவும் இருப்பது ஒரு விசேடமான அம்சமாகும். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும்.

Read More
சிவசைலநாதர் கோவில்

சிவசைலநாதர் கோவில்

சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்

திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலமான சிவசைலத்தில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது.

சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். பிற்காலத்தில் ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார். மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, என்ன அதிசயம் சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம். இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.

இங்குள்ள இறைவன் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்.

Read More
வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

சன்னதிகள் எதிர் எதிரே அமைந்திருக்கும் வித்தியாசமான வடிவமைப்பு

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருவேங்கைவாசல். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள்.

இக்கோவிலில் தெய்வ சன்னதிகள், வேறு எந்த தலத்திலும் நாம் காண இயலாத வகையில் அமைந்திருப்பது, கோவில் வடிவமைப்பில் ஒர் அபூர்வமாகும். இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.

பொதுவாக எல்லா கோவில்களிலும் மூலவரை வணங்கிய பின்தான் பரிவார தேவதைகளை வணங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜலட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக மூலவரான வியாக்ரபுரீஸ்வரரை வணங்கும்படியாக கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Read More
யந்திர சனீஸ்வரர் கோவில்

யந்திர சனீஸ்வரர் கோவில்

லிங்க வடிவில் காட்சி தரும் யந்திர சனீஸ்வரர்

நவகிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சனி பகவான் சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று பிறந்தார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சந்தவாசல் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்குப்பம் ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கோயில் சுருவறையில், வேறெங்கும் காண இயலாத வகையில், லிங்க வடிவில் சனீஸ்வரன் காட்சியளிப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு

மூலவர் சனீஸ்வரரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சி தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்தின் உருவம் உள்ளது.

சனீஸ்வரரின் மார்பு பகுதியில் அறுகோண யந்திரமும், நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.

பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கி இருக்கின்ற நிலையில் இங்கு மட்டும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கி திறநத வெளியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

யந்திர சனீஸ்வரர் கோவில் வரலாறு

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. சம்புவராய மன்னரின் படைத்தளபதி ஒருவர் இந்த வழியாக சென்றபோது விபத்தில் பலத்த காயமடைந்தார். சனிதோஷம் இருப்பதால் இந்த விபந்து ஏற்பட்டதாகவும் அதன் பாதிப்பில் இருந்து விலகிட இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலையை மூல மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டும்படி படை தளபதிக்கு அசரீரி கூறியது. அதையடுத்து மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில்,மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையை தளபதி பிரதிஷ்டை செய்தார்.

நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கண்டுபிடிப்பு

சனி பகவானின் சிறப்பு குறித்து நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கூறுகையில் சனி கிரகத்தின் வடதுருவமும், யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்

சனி தோஷ நிவர்த்தி தலம்

கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமமும், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். இத்தோஷம் உடையவர்கள் இவரை வழிபடுவதால் நிவாரணம் பெறலாம்.

புதிய தொழில் தொடங்குபவர்கள்,நீதிமன்ற வழக்குகளால் அவதிப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து அதன் ஆவணங்களை யந்திர சனீஸ்வரரின் மடியில் வைத்து வணங்குவது சிறப்பாகும். மேலும் கடன் பிரச்சனை, குழந்தைப்பேறு, பில்லி சூனியம் போக்குதல், விவசாயம் ஆகியவற்றுக்கும் இவரை வணங்கினால் நல்லபலன்கள் கிடைக்கும்.

வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஏரிக்குப்பம் கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவானை வணங்கி அவரது அருள் பெற்று தோஷம் நீங்கிச் செல்கிறார்கள்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி

பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.

சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.

பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லாலோ அல்லது வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.

Read More
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒன்றாக சேர்ந்திருக்கும் அபூர்வக் கோலம்

சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் தாரமங்கலம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.

இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும். அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார். பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.

இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

Read More
சுத்தரத்தினேசுவரர் கோவில்

சுத்தரத்தினேசுவரர் கோவில்

சிறுநீரக நோய்களைத் தீர்ககும் பஞசநதன நடராஜர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாடலூர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள தலம் ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் சுத்தரத்தினேசுவரர். இறைவி அகிலாண்டேசுவரி.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் பஞசநதன நடராஜர் அருள் பாலிக்கிறார்.எட்டு அடி உயரத் திருமேனி உடைய இவர் ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நடராஜர் என்ற பெருமை உடையவர். இவர் சூரிய பிரகாசிப்புத் தருகின்ற, அரிய வகைக் கல்லான பஞசநதன என்ற கல்லால் ஆனவர். இத்தகைய கல்லாலான சிற்பங்களை கோவில்களில் காணபது என்பது மிக மிக ஆபூர்வம்.

சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்கள், சிறுநீரகம் செயலிழந்து அதனனால் ரத்தம் சுத்தகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள். இத்தலத்துக்கு ஒரு கிலோ வெட்டிவேரை வாங்கி வந்து அதனை 48 துண்டுகளாக்கி பின் அதனை மாலையாகத் தொடுத்து பஞசநதன நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த மாலையையும், இத்தலத்து தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வெட்டிவேரை தினம் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு குறைகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு தங்கள் சிறுநீரக நோய் குணமடைந்து செல்கின்றனர்.

Read More
புஷ்பவனநாதர் கோவில்

புஷ்பவனநாதர் கோவில்

நாரதருக்கு நாதோபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி

தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்த 3 கி.மீ. தொலைவில் மேலத்திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி.

சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலத்தை நாம் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது. ஒரு சமயம், ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் சிவபெருமானிடம் வினவ, சிவபெருமான் பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர்.

சரசுவதி சிவபெருமானுக்கு பரிசாக அளித்த வீணை

ஒரு சமயம் கல்விக் கடவுளான சரசுவதிக்கும், சிவபெருமானுக்கும் விவாதப் போட்டி நடைப்பெற்றது. அதில் சிவபெருமான் வெற்றி பெற்றார். சிவபெருமானின் வாதத் திறமையைக் கேட்டு மனம் மகிழ்ந்த சரசுவதி தன் கையிலிருந்த வீணை அவருக்கு பரிசாக அளித்து விட்டாள்.

இசைக்கலைஞர்களுக்கு அருளும் வீணா தட்சிணாமூர்த்தி

இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை இவர் முன் வைத்து தங்கள் கலையில் முன்னேற்றம் பெற இவரை வழிபடுகின்றனர்.இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது.

Read More
வெளிகண்டநாத சுவாமி கோவில்

வெளிகண்டநாத சுவாமி கோவில்

சூரியன்,சந்திரனின் அபூர்வக் கோலம்

திருச்சி மாநகரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள பாலக்கரை பகுதியில் அமைந்துள்ளது வெளிகண்டநாத சுவாமி கோவில். இறைவி சுந்தரவல்லி.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் சூரியன்,சந்திரன் உள்பட எல்லா நவக்கிரகங்களும் நின்ற நிலையில் எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் வெளிகண்டநாத சுவாமி கருவறைக்கு நேர் எதிர் திசையில் சூரியனும், சந்திரனும் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கோலம் மிகவம் விசேடமானது என்று தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சூரிய பூஜை வழிபாடு என்பது எல்லா சிவாலயங்களிலும், தமிழ் மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோவிலில் மாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும்.

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்

அமிர்தகடேசுவரர் கோவில்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

பொதுவாக சனி பகவான் காக வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் கருட வாகனத்துடன் அவர் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

சனி பகவானுக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனி பகவான் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

Read More
சூரியகோடீசுவரர் கோவில்

சூரியகோடீசுவரர் கோவில்

சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக'

சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக' ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.

சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றார்

சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை. பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினம் தினம் கதிரவனின் பொற் கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் ஆகும்.

சூரிய பகவான் பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்ற தலம்

ஒரு சமயம் சூரிய பகவானுக்கு அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது. சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் பிரதோஷ நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால், அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான்.

சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர். சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரியகோடீஸ்வரரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார். சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் காணிக்கையாகச் அர்ப்பணித்தார். அப்படி அவர் சமர்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாக வளர்ந்து, பின்னர் அந்த இடமே இலுப்பை மரக் காடாகியது. மாமுனிவர் இலுப்பை மர விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து மாலை வேளைகளில் கோடி தீபங்கள் ஏற்றி சூரியகோடீசுவரரை வழிபட ஆரம்பித்தார்.

பிரதோஷ காலத்தில் ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக் கொண்டடிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியபகவான் அந்த கோடி தீபங்களைக் கண்டு வணங்கி பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்றார்.

கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம்

சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.

Read More
செந்நெறியப்பர் கோவில்

செந்நெறியப்பர் கோவில்

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை ருண விமோசனர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ள தேவாரத் தலம் திருச்சேறை. இறைவன் திருநாமம் செந்நெறியப்பர்.

இங்கு தனி சன்னதியில் 'ருண விமோசனராய்' அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய, அனைத்து வித கடன் தொல்லைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இச் சன்னதியின் முன் நின்று"கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே" எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள 'ருணவிமோசன லிங்கேஸ்வரர்'. ருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால், வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

Read More
சூரியகோடீசுவரர் கோவில்

சூரியகோடீசுவரர் கோவில்

பைரவரின் கழுத்தில் சிவப்பு ஒளி வெளிப்படும் அற்புதம்

கும்பகோணத்தில் இருந்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே மைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி.

இக்கோவிலில், சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள பைரவர், சொர்ண பைரவர், என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.

இந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார். தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர். இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

Read More
ஜலநாதீசுவரர் கோவில்

ஜலநாதீசுவரர் கோவில்

அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.

கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி

இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

Read More
நவபாஷாண நவக்கிரக கோவில்

நவபாஷாண நவக்கிரக கோவில்

ராமபிரான் கடலின் நடுவே நவக்கிரக பூஜை செய்த தலம்

ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக தென்திசை நோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமபிரானும் உப்பு படிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது.

பின்பு 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்த ராமபிரான் தமது கையால் கடலின் நடுவே ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்து நவக்கிரக பூஜை செய்தார். புராண காலம் தொட்டு இத்தலத்தில் ஆரவாரமில்லாத கடலின் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

இத்தலத்திலே பார்வதியும், பரமேஸ்வரனும் சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளி, இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கினார்கள். மேலும் ராமபிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம் இதுவேயாகும்.

பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க அருளும் தலம்

முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை இத்தலத்தில் செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஆடி அமாவாசை திருவிழா

இத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை பத்து நாள் திருவிழாவின்போது, நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட கூடுவது வெகு சிறப்பு. தை அமாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

Read More
சேஷபுரீஸ்வரர் கோவில்

சேஷபுரீஸ்வரர் கோவில்

ராகு – கேது தோஷம் நீக்கும் தேவாரத் தலம்

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பாம்புரம். இத்தலத்து இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை.

ஆதிசேஷன் வழிபட்ட தலம்

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.

விஷம் தீண்டாப் பதி

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

ராகு கேது பரிகார தலம்

திருப்பாம்புரம் ஒரு ராகு கேது நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்கிறது தல மகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.

நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.

போதை பழக்கம் விடுபட, வழிபட வேண்டிய தலம்

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Read More