எமதண்டீஸ்வர சுவாமி கோவில்
பிரதோஷ நாளில் மூச்சு விடும் நந்தி
திண்டிவனம்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
இக்கோவிலில், மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். செவ்வக வடிவ ஆவூடையாரில், இங்கு மூலவராக ஈசன் எழுந்தருளியிருப்பது அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. மூலவர் கருவறையினுள்ளே, பூசனைகள் செய்யும் போது, யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல, ஓர் ஒலியை மக்கள் கேட்டுள்ளார்கள்.
பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்றுக் கேட்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். அதை நீருபிக்கும் விதமாக நந்தியின் நாசித் துவாரங்கள் அமைந்திருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பிரதோஷ அபிஷேகத்தின்போது காற்றுக் குமிழ்கள் நந்தியின் நாசித் துவாரத்திலிருந்து வெளியேறுவதையும் குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தலத்தில் திருமணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இது தவிர சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், போன்றவை இங்குச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.
தகவல், படங்கள் உதவி : திரு. சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், ஆலகிராமம்
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
தினம் தினம் தன் முக பாவனையை மாற்றிக் கொள்ளும் திரிபுரசுந்தரி அம்மன்
https://www.alayathuligal.com/blog/gtpf72ntya5zssfc6wzcdray9c4wd8