திருவாரூர் தியாகராஜர் கோவில்
எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி
பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.
சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.
பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லாலோ அல்லது வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.