புஷ்பவனநாதர் கோவில்
நாரதருக்கு நாதோபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி
தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்த 3 கி.மீ. தொலைவில் மேலத்திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி.
சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலத்தை நாம் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது. ஒரு சமயம், ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் சிவபெருமானிடம் வினவ, சிவபெருமான் பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர்.
சரசுவதி சிவபெருமானுக்கு பரிசாக அளித்த வீணை
ஒரு சமயம் கல்விக் கடவுளான சரசுவதிக்கும், சிவபெருமானுக்கும் விவாதப் போட்டி நடைப்பெற்றது. அதில் சிவபெருமான் வெற்றி பெற்றார். சிவபெருமானின் வாதத் திறமையைக் கேட்டு மனம் மகிழ்ந்த சரசுவதி தன் கையிலிருந்த வீணையை அவருக்கு பரிசாக அளித்து விட்டாள்.
இசைக்கலைஞர்களுக்கு அருளும் வீணா தட்சிணாமூர்த்தி
இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை இவர் முன் வைத்து தங்கள் கலையில் முன்னேற்றம் பெற இவரை வழிபடுகின்றனர்.இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது.
தகவல் உதவி - திரு. சரவணன் குருக்கள், திருப்பூந்துருத்தி
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
ஆடி அமாவாசையன்று பதிமூன்று கங்கைகள் பொங்கும் கிணறு
https://www.alayathuligal.com/blog/82998zcpg26z797chn2pgpw4nly9tk