சிவசைலநாதர் கோவில்

சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்

திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலமான சிவசைலத்தில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது.

சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். பிற்காலத்தில் ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார். மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, என்ன அதிசயம் சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம். இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.

இங்குள்ள இறைவன் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு 

வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை

 https://www.alayathuligal.com/blog/4fjcple22ktb7kxe2rwdbmb3h7p5pd

 
Previous
Previous

அங்காள பரமேஸ்வரி கோவில்

Next
Next

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்