சிவகுருநாதசுவாமி கோவில்
காலடியில் ராகுவுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்
கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையிலிருந்து சிவபுரி கிளைப் பாதையில், 2 கி. மீ. சென்றால் தேவாரத் தலமான சிவபுரத்தை அடையலாம். இறைவன் திருநாமம் சிவகுருநாதசுவாமி. இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி.
இத்தலத்தில், பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.
பொதுவாக சிவாலயங்களில், சுற்று சுவற்றில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் காலடியில் முயலகன் மட்டுமின்றி ராகுவும் இருப்பது ஒரு விசேடமான அம்சமாகும். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும்.