
நாகப்பட்டினம் குமரன் கோவில்
மயிலுக்கு பதில் யானை வாகனமாக விளங்கும் முருகன் தலம்
நாகப்பட்டினம் நகரத்தில், நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ளது குமரன் கோவில். இக்கோவிலில் மூலவராக, முருகப் பெருமான் வள்ளி தேவசேனாபதியாக 'மெய்கண்ட மூர்த்தி' என்னும் நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான். இதன் காரணமாக, மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் புதைந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.
தோல் நோய் தீர்க்கும் முருகன்
இந்தக் கோவிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். பின்னர் அவர் பல தலங்களுக்குச் சென்று அங்கு தமிழில் கவி பாடி வழிபட்டு வந்தார். அவர் சிதம்பரம் கோவிலில் உயிர் நீத்தார். அப்போது இக்கோவிலில் மாலை வேளை பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது முருகன் அசரீரியாக, அழகு முத்துவின் ஆன்மா என்னுடன் ஐக்கியமாக இங்கே வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் வழி விடுங்கள் என்று உத்தரவிட்டார். இந்த நிகழ்வு இன்றும் வைகாசி விசாகத்தன்று இங்கு அனுசரிக்கப்படுகின்றது.
தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக பக்தர்களின் நம்பிக்கை.
செல்வ விருத்தி அளிக்கும் குபேரன் தலம்
இக்கோவிலின் வடக்கு பிரகாரத்தில் குபேரனுக்காக தனி சன்னதி அமைந்துள்ளது. அதனால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். ஆகவே திருப்பரங்குன்றத்தை, 'திருமணத் திருத்தலம்' என்று கூறுவார்கள். எனவே பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த தலத்தில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதனால் தென் மாவட்டத்திலேயே, அதிக திருமண மண்டபங்கள் உள்ள ஊராக திருப்பரங்குன்றம் விளங்குகின்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களிலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5 பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 6ல் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை, ஏப்ரல் 7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 8ல், பகல் 12.20 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க, மதுரையிலிருந்து சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள். அவர்களை முருகப்பெருமான் வரவேற்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்து வருவார். பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை திருமணத்தை, சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் நடத்தி வைப்பார்கள்.
திருக்கல்யாணம் முடிந்ததும், சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்வார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையிலிருந்து சீர்வரிசை கொண்டு வரப்படும்.
முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு மீனாட்சி அம்மன் சென்றிருக்கும் வேளையில், மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். அப்போது பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்
தரிசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப குழந்தையாய், இளைஞனாய்,முதியவராய் காட்சி தரும் முருகன்
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே அமைந்துள்ள முருகன் தலம் எட்டுக்குடி. எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர் என்பதால் எட்டுக்குடி என்ற பெயர் வந்தது.முருகனின் அறுபடை கோவில்கள் தவிர, புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இங்கு முருகன், வள்ளி தெய்வானை உடன் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவர் அமர்ந்திருக்கும் மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது ஆச்சரியமும் , அதிசயமுமான விஷயம் ஆகும். பொரவாச்சேரி மற்றும் எண்கண் முருகன் தலங்களிலும் இதேபோன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை நாம் தரிசிக்கலாம். அற்புத அழகுடன் கூடிய இந்த மூன்று முருகன் சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.
இந்த கோவிலில், முருகன் தன்னை தரிசிக்கும் பக்தர்களின் மனநிலைக்கேற்ப மூன்று விதமான கோலங்களில் காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.
சித்ரா பௌர்ணமி திருவிழா
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாலை தொடங்கும் இந்த அபிஷேகம் , மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். சித்ரா பௌர்ணமி திருவிழாவில் 25 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.
பிரார்த்தனை
குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில்
ஆடு, மயில் வாகனங்களுடன் காட்சியளிக்கும் அபூர்வ முருகன்
சிவகங்கையில் இருந்து சுமார் 21 கி. மீ தொலைவில் இருக்கிறது திருமலை. இங்கு சுமார் 200 அடி உயர மலை மீது, மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இறைவனின் திருநாமம் மலைக்கொழுந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாகம்பிரியாள். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோவில், முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.
இத்தலத்தில் குடவரை முருகன் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படும் இத்தல முருகப்பெருமான், கீழ் ஆடை மட்டுமே அணிந்துள்ளார். ஆடையின் மேல் கட்டப்பட்டுள்ள மேகலையின் நுனிப் பகுதி, முருகனின் இடப்புறமாகத் தொங்கி பீடத்தினைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இவர் அணிந்திருக்கும் முப்புரிநூல் வலது கையின் மேல் செல்கிறது. முருகனுக்கு வலது பக்கத்தில் உள்ள குறளன், முருகனின் தலைக்கு மேலே நீண்ட குடையைக் குறுக்காகப் பிடித்துள்ளான். அவனுக்குப் பின்புறம் கொடிமரத்தொன்றின் மீது சேவல் நின்றவாறு உள்ளது. முருகனுக்கு இடப்பக்கம் பணிவுடன் கைகளைக் சுட்டியவாறு நின்ற நிலையில் துறவி ஒருவர் காணப்படுகிறார். முருகனின் காலடியில் இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் எதிரெதிரே இருக்கின்றன.
இத்தலத்து துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்தபடி எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.
இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
அறுபடை வீடுகளுக்கும் முந்தைய முருகன் தலம்
கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புகழ் தலம் செஞ்சேரிமலை.
முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் உபதேசித்த தலம் ஒன்று உண்டு. அத்தலம்தான் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சேரிமலை.
சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவபெருமான் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இது என்பதால், முருகன் தலங்களில் மிகவும் பழமையானது என்னும் தனிச்சிறப்புடையது இத்தலம். அறுபடை வீடுகளுக்கும் முந்தையது.
சேவற்கொடியோன் கையில் சேவல் ஏந்தியிருக்கும் சிறப்பு
கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார். வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலே ஒரு போர்க் கருவி போல ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பாகும். பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.
தல வரலாறு
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அதனால் அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி, பார்வதிதேவி சிவபெருமானிடம் வேண்டினார்.
சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து,'குமரா! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவபெருமானின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க, 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
பிரார்த்தனை
இங்குள்ள தலவிருட்சமான கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து முருகப்பெருமான் சன்னதியில் தீபம் ஏற்றி வேண்டினால் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு முதலிய நற்பலன்களை அடையலாம். மேலும், ஜாதக ரீதியான தோஷங்கள், கிரக தோஷம், மனநோய் மற்றும் தீய சக்தி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.

செட்டிகுளம் பால தண்டாயுதபாணி கோவில்
கையில் கரும்புடன் காட்சி தரும் முருகப்பெருமானின் அபூர்வ கோலம்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட்டிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலும் பெரம்பலூருக்கு தெற்கே சுமார் 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது செட்டிகுளம். இந்த ஊரில் உள்ள மலையின் மீது அமைந்திருக்கிறது பால தண்டாயுதபாணி கோவில். பொதிகை மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் இத்தலத்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் வளையல் விற்கும் செட்டியாராக காட்சி தந்தார். அதனால் இத்தலத்திற்கு செட்டியார் குளம் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்திற்கு வடபழநிமலை என்ற பெயரும் உண்டு.
பொதுவாக தண்டாயுதபாணி சுவாமி கோலத்தில் கையில் தண்டத்துடன் காட்சி தரும் முருகப்பெருமான், இத்தலத்தில், தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி தருகிறார். இது நாம் வேறு எந்த முருகன் தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். மேலும் இவர் மொட்டை தலையாக இல்லாமல் உச்சிக்குடுமியுடன் காட்சியளிப்பது மற்றுமொரு சிறப்பாகும்.
தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு, தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி அன்னை காமாட்சியம்மன் ஆசி வழங்கினார். அன்று முதல் இத்தலத்தில் கரும்பு ஏந்திய ஏந்திய கோலத்தில் நமக்கு அருள்பாலித்து வருகிறார். அதனாலேயே இத்தலத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், காமாட்சியம்மன் கையில் கரும்பு இல்லாமல் காட்சி தருகிறார்.
மழலைப் பேறு வேண்டி கரும்பு தொட்டில் பிரார்த்தனை
மழலைப் பேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்து முருகனை பற்றி பாடியுள்ளார்.

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன்- தெய்வானை நிச்சயதார்த்த தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர,முருகனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.
தல வரலாறு
சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் மீன் உருவம் எடுத்து ஒளிந்தான். சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் 'திருக்குராவடி' என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.
இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்தி லும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்.
நிச்சயதார்த்த தலம்
முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது.
ராகு தோஷ நிவர்த்தி தலம்
முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்
https://www.alayathuligal.com/blog/57mj4d6yd6s4ygtkd7gb42mffkhwtd

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்தின் சிறப்பு அம்சங்கள்
பழனிமலை தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.
இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக தகவல் உண்டு.
அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம். அது கிடைப்பது மிக புண்ணியம்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்கிரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்கிரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமைதான் என்பது பலரின் எண்ணம்.
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு தகவல் உண்டு.

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர்
45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை
பழனிமலை தெய்வம் தண்டாயுதபாணிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில், மற்ற விசேஷ நாட்களைவிட, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வருவார்கள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. தனக்கு காவடி எடுக்க விரும்பிய பக்தனுக்கு, முருகன் செய்த அருள் லீலைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு சமயம் அவரைக் கடுமையான நோய் தாக்கியது. ஒவ்வொரு நாளும் அவர் உடல் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பழனி முருகனை நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு உறங்கி விடுவார். ஒரு நாள் இரவில் அழகிய இளைஞன் ஒருவன் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழனிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழனிமலை முருகன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து, இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.
மகிழ்ச்சி அடைந்த துரைசாமிக் கவிராயர், பழனி முருகனுக்கு 'அன்னக்காவடி' எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார். துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழனிக் குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். 'துரைசாமிக் கவிராயர் பழனிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!' என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். 'பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்' என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழனி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார்.
அவர் பழனி சென்றடைய 45 நாட்களாயிற்று.'துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!' என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழனியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழனிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழனி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.
'பழனிப் பரமனே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!' என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார். ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. பழனி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.
அப்போது துரைசாமிக் கவிராயர் பக்திப் பரவசம் பொங்க பின்வரும் பாடலைப் பாடினார்.
#பல்லவி
மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)
#அனுபல்லவி
உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)
#சரணம்
சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய
அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)
இந்த நிகழ்வை கண்ட அனைவரது உள்ளமும், உடலும் சிலிர்த்தது.

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தலம் காங்கயம்பாளையம். இத்தலத்தில் காவேரி ஆற்றின் காவிரியின் நடுவில், நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. பாவம் நீக்கும் புண்ணியம்பதியாம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். நீர் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவைப் போன்றே, இங்கும் சிவபெருமான் காவேரி ஆறு சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.
ஒரு சமயம், கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான் - பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன் செய்ய சிவபெருமான் அகத்தியரை தென்புலம் அனுப்பினார். அத்துடன், வேறு சில அரும் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது, நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் தெரிவிக்கின்றன புராணங்கள்.
தென்புலம் வந்த அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள, காவிரி நதி நீர் ஓடும் பாதையின் மையப்புள்ளியில் மணல் லிங்கம் அமைத்து,சிவ பூஜை செய்தால் தன்னுடைய பாவங்கள் நீங்கும் என எண்ணினார். காவிரி நதி நீர் பாதையின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகப்பெருமான் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து நடு இடத்தைத் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான், இக்கோவிலில் முருகப்பெருமான், தெற்கு நோக்கிய பிரமச்சாரியாக வலது காலை முன்வைத்தும் இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் காட்சி தருகிறார். முருகப்பெருமானின் இந்தக் கோலம் , வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் ஆகும்.
கிளி ஏந்திய முருகப்பெருமான்
மேலும் முருகப் பெருமான் தனது இடக்கரத்தில் கிளி ஒன்றை வைத்திருக்கிறார். பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது மங்கலப் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில்தான் முருகப் பெருமான் அகத்தியரை சந்திக்கும் போது தன்னுடன் கிளியை எடுத்துக் கொண்டு சென்றார் என்று குறிப்பிடுகிறார்கள்.

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்
கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை. முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை உடனிருக்கின்றனர். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.
திருமண, புத்திர தோஷம் உடையவர்கள் இத்தல முருகனுக்கு பால் பாயாசம் நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
செவ்வாய், சனி தோஷங்களை நீக்கும் பரிகார தலம்
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெருங்குடி கிராமம். அகத்திய முனிவர் வழிபட்டதால் 'அகத்தீஸ்வரர்' எனும் திருப் பெயர் ஏற்று சிவபெருமான் அருள்பாலிக்கும் எண்ணற்ற சிவத்தலங்கள் தென்னகத்தில் உண்டு. அவற்றில் ஒன்று பெருங்குடி. இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.
இத்தலத்தில், அகத்தீஸ்வரர் சன்னதியின் வலது பக்கத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் அருள்புரிகிறார். வள்ளி இங்கு அரூபமாக காட்சி தருகிறார். வள்ளியை மணம் புரிவதற்கு முன், முருகப்பெருமான் தெய்வானையுடன் காட்சியளித்தது இக்கோவிலில்தான். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தனது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு நேர் எதிரே ஈசானிய மூலையில், சனீஸ்வர பகவான் தனியே எழுந்தருளியிருக்கிறார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதால், செவ்வாய் தோஷம், சனி தோஷம் இருப்பவர்களுக்கு இந்தக் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து அருளும் சனீஸ்வர பகவான்
இத்தலத்து சனீஸ்வர பகவான், திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு நிகரான வல்லமை உடையவர் என்று அகத்திய முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். சனீஸ்வர பகவான் தனது காக வாகனத்தை இழந்தபோது இத்தலத்து அம்மனை வழிபட்டு தங்க காக வாகனத்தைப் பெற்றார் என்று தல புராணம் கூறுகிறது. அதனால் புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பிரச்சனை உள்ளவர்கள், வாகனத்தை இழந்தவர்கள் போன்ற பலரும் இங்கு வந்து சனீஸ்வர பகவானையும், சிவகாமசுந்தரி அம்மனையும் வழிபடுகிறார்கள்.

ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி இருக்கும் அபூர்வ கோலம்
கும்பகோணத்தில் இருந்து மெலட்டூர் வழியாக தஞசாவூர் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது. வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
தசரத மகாராஜா புத்திர செல்வம் வேண்டி இத்தலத்து இறைவனையும், முருகனையும் வழிபட்டு பூஜை செய்தார். பின்னர் ராமபிரான் அவருக்கு மகனாக அவதரித்தார். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், இக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதியில் முருகப்பெருமான் கையில் வில்லும் அம்பும் ஏந்தி, வள்ளி தெய்வயானை சமேதராக காட்சி தருகிறார். அதனால் இவர் தனுசு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இப்படி முருகப் பெருமான், கையில் வேல் இல்லாமல், வில்லும் அம்பும் ஏந்தி இருப்பது ஒரு அபூர்வ கோலமாகும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
https://www.alayathuligal.com/blog/6bexs8x8ztshxkgsrdpzxzwnay2zhg

சென்னை கந்தசாமி கோவில்
வேத மந்திரங்களால் முருகன் விக்கிரகத்தை சீர் செய்த அற்புதம்
சென்னை பாரிமுனைப் பகுதியிலுள்ள ராசப்ப தெருவில் அமைந்ததுள்ளது, சுமார் 450 ஆண்டுகள் பழமையான கந்தசாமி கோவில். மூலவர் கந்தசாமி. உற்சவர் முத்துக் குமாரசுவாமி. சிதம்பர சுவாமி , பாம்பன் குமரகுரு பரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிய தலம்.
தல வரலாறு
வேளூர் மாரிச்செட்டியார்,பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற முருக பக்தரகள், ஒவ்வொரு கிருத்திகையன்றும, சென்னையிலிருந்து திருப்போரூக்கு நடைப் பயணமாகச் சென்று திருப்போரூர் கந்தசாமியை வழிபடும் வழக்கம் உடையவர்கள். அப்படி ஒரு சமயம், 1673ம் ஆண்டு மார்கழி மாதம் கிருத்திகையன்று, திருப்போரூர் கந்தசாமியை வணங்கி விட்டு சென்னை திரும்பும் வழியில், செங்கண்மால் ஈசுவரன் கோவில் என்ற இடத்தில் அசதியில் படுத்து உறங்கி விட்டார்கள். அப்போது அவர்கள் இருவர் கனவிலும் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள், இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப் பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஒரு போலவே கனவு வந்தபடியால்,வந்து சொன்னது முருகனே என்று மகிழ்ந்தார்கள். சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள் அருகில் முருகன் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும்வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்திலேயே முருகருக்கு கோவில் கட்டினார்கள்.
சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
உற்சவர் முத்துக் குமாரசுவாமி
ஒரு சமயம் , முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கோயிலுக்கு உற்சவ விக்கிரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர் . சிற்ப சாஸ்திரத்தில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரைத் தேர்வு செய்தனர் . சிற்பியிடம், உற்சவ முருகனாகப் பஞ்சலோகத்தில் விக்கிரகம் ஒன்றை வார்த்துக் தரும்படி ஒப்படைத்தனர் . சிற்பியும் புடம் போட்டு எடுத்தபின், வார்ப்படத்தைப் பிரித்தபோது விக்கிரகம் 'மினு மினு' வென மின்னியது . அதன் ஒளிச் சிதறல்கள் கண்களை கூசச் செய்தது . ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள் போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் அனைவருமாகச் சேர்ந்து சிற்பியிடம், சிற்பம் நல்லா வந்திருக்கிறது ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.
சிற்பியும், சரி! துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்கிரகத்தைத் தொட்டார் . அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாங்கியவர் போல் தூரப்போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பியை தூக்கி வைத்து ஆசுவாசப்படுத்தி, என்ன ஆயிற்று ஐயா என்றனர். சிற்பியோ, என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது என வாய் குழறி குழறிக் கூறினார் . இந்த விக்கிரகம் நீறு பூத்த அனலாக இருக்கிறது. இதைச் சுத்தம் செய்யும் தகுதியோ, சக்தியோ எனக்கில்லை என்றார். என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.அந்த விக்கிரகத்தை தீண்டப்பயந்து வழிப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி விட்டனர் . இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.
ஒருநாள் காசியிலிருந்து சாம்பையர் எனும் துறவி கந்தக்கோட்டம் வந்தார். அவர் மூலவரை தரிசித்து முடித்தவுடன் உற்சவர் எங்கே என்று விசாரித்தார். அவருக்கு உற்சவர் இருந்த பெட்டியை காண்பித்தனர். கொஞ்ச நேரம் அந்த விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாம்பையர், மயக்கம் போட்டு விழுந்தார். பிறகு எழுந்தவர் சந்தோஷத்தில், மூலவருக்கு எவ்வளவு சான்னித்தியம் உள்ளதோ, அதே சாந்நித்தியம் இந்த உற்சவர் சிலைக்கும் உள்ளது என்று சொன்னார். இப்படி அமைவது மிக மிக அபூர்வம் என்றார். ஆத்ம சக்தியினால் மட்டுமே இந்த உற்சவரை சுத்தம் செய்யமுடியும். எந்த கருவிகளாலும் சுத்தம் செய்ய முடியாது என்றார். அவரே சிலையின் முன் அமர்ந்து வேத மந்திரங்களை சொல்லி அந்த சிலையை சுத்தம் செய்தார். அவர் உற்சவர் திருமேனியில் இருந்த பிசிறுகளையெல்லாம் நீக்கினார். ஆனால் முகத்தில் இருந்த பிசிறுகளை நீக்க முடியவல்லை. இன்று நாம் உற்சவராக தரிசிப்பது இந்த பொன்னிற முருகனைத்தான். ஆனால் முகத்தில் மட்டும் பிசிறுகள் இருக்கும்.

தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்
தம்பதியர்க்கு கருத்து ஒற்றுமையை அருளும் முருகப்பெருமான்
தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். நடுவில் முருகன் நின்றிருக்க, வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அமைப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, அவர்கள் வாழ்வில் அன்னியோன்யம் வளர்ந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
ஆலயத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும். இக்கோயிலில் இன்னொரு சிறப்பு - ஜுரதேவர்! இவருக்கு மிளகு அபிஷேகம் செய்து, காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பக்தர்கள் உடனடி நிவாரணம் பெறுகிறார்கள்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
நவக்கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி
https://www.alayathuligal.com/blog/jafy4l7743sl49adbja5zkh8876dz9

பொரவாச்சேரி கந்தசாமி கோவில்
அழகு மிளிரும் முருகப்பெருமானின் அபூர்வ திருமேனி
நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் தலத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது பொரவாச்சேரி கந்தசாமி கோவில்.
முருகன் என்றால் அழகு. அதற்கேற்றாற்போல் சொக்க வைக்கும் அழகுடன் முருகப்பெருமான், ,இத்தலத்தில் கந்தசாமி என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வயானை சகிதமாக அருள் பாலிக்கிறார். இவர் ஆறுமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும், கொண்டு, அலங்கார ஆபரணம் அணிந்து மயில் மீது அமர்ந்திருக்கும் இந்த முருகப்பெருமானின் விக்கிரகம் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. சிலாமூர்த்தத்தின் முழு எடையையும், அதாவது முருகப்பெருமான், மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் அந்த மயிலின் கால்கள் தாங்கி உள்ளன என்பது வியப்பாக உள்ளது. மேலும் வியப்பளிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் ஆறுமுகப் பெருமானின் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இங்குள்ள சன்னதியின் அமைப்பின் காரணமாக நாம் மிக அருகில் சென்று மயிலின் கால் நகம், முருகப்பெருமானின் இடது புறங்கையில் ஓடும் பச்சை நரம்பு உட்பட அனைத்து சிறப்பம்சங்களையும் தரிசிக்க முடியும்.இத்தகைய அழகு மிளிரும் சிற்பத்தை நாம் காண்பது அரிது.
பொரவாச்சேரி முருகப்பெருமான் சிலையை வடித்த அதே சிற்பிதான், எட்டுக்குடி மற்றும் எண்கண் தலங்களுக்கும் இதே போன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை வடித்துக் கொடுத்திருக்கிறார்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்
செவ்வாய் தோஷம் நீங்கவும்,குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கவும், சத்துருக்களின் தொல்லை நீங்கவும் இங்கே உரியமுறையில் வழிபாடுகள் செய்யப்படுகிறது. செவ்வாய் தோஷம் நீங்கச் செவ்வாய்க்கிழமையன்று பாலாபிஷேகம் செய்ய வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க இக்கோயிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம்.
குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையன்று பாலபிஷேகம் செய்து செவ்வரளி மலர் சாத்தி செவ்வாழை பழத்தோடு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் மூலமாகக் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
சிங்காரவேலர் மயில் வாகனத்திலும், வள்ளி-தெய்வயானை யானை மேலும் எழுந்தருளியிருக்கும் அபூர்வக் கோலம்
சென்னையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் திருநாமம் சிங்காரவேலர். இவரை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
பொதுவாக கோவில்களில், முருகப்பெருமான் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ, மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் சிங்காரவேலர்,தனியே மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வயானை தனித்தனியே யானை மேலும் எழுந்தருளியிருப்பது தனிச சிறப்பாகும்.
முருகப்பெருமான் சண்முகநாதராக அருள்பாலிக்கும் தலங்களில் எல்லாம் கிழக்கு நோக்கித்தான் காட்சி அளிப்பார்.ஆனால் மயிலாப்பூர் தலத்தில், சிங்காரவேலர் மேற்கு நோக்கி இருப்பது மேலும் ஓரு சிறப்பாகும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1.இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்
https://www.alayathuligal.com/blog/8anclgmaxr8w2a5pf5edegy49bbare
2. மயிலாப்பூர் கற்பகாம்பாள்
https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
கண்ணாடியில் தெரியும் முருகப்பெருமானின் பிம்பத்திற்கு அபிஷேகம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப்பெருமான் (உற்சவர் ஜெயந்திநாதர்) தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின் வெற்றி வீரனாக வள்ளி, தெய்வயானை சகிதமாக ஜெயந்திநாதர் கோவில் யாக சாலைக்குத் திரும்புவார்.
அப்போது ஜெயந்திநாதரின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் 'நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக அபிஷேகம் நடக்கும். இதை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின் முருகன் சன்னதிக்கு திரும்புவார். அத்துடன் சூரசமஹாரம் நிகழ்ச்சி முடிவடையும்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி ஆறாம் நாளன்று வெளியான பதிவு
கடத்தப்பட்ட தன் விக்ரகத்தை கடலில் கண்டெடுக்க உதவிய கந்தப் பெருமான்
https://www.alayathuligal.com/blog/4j4mmh5t7prma3y4ahpf9a68zyh9ex.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
தீபாவளிக்கு இந்திரன், தன் மருமகன் முருகப்பெருமானுக்கு புத்தாடை வழங்கும் தலம்
அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப் பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது. முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடுதான் திருச்செந்தூர் ஆகும்
வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் கபாடபுரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து இக்கோவிலின் பழமையை நாம் அறியலாம். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் 'செயந்தியாண்டவர்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் 'செந்திலாண்டவர்' என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் 'திருசெயந்தியூர்' என்பதிலிருந்து 'திருச்செந்தூர்' என்று மாறியது.
திருச்செந்தூர் கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், தெய்வயானையின் தந்தையான இந்திரன் இத்தலத்தில் மருமகன் முருகப்பெருமானுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஐதீகம்.
கந்தசஷ்டி விழா
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
ஊமைக் குழந்தையை பேச வைத்த செந்திலாண்டவன்
குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர். இவர் சைவ நெறியைப் போற்றிய தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடையவர் ஆவார். இவரது நூல்கள் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். இளம்வயதில் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். குழந்தையைப் பேச வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர்கள் குமரகுருபரருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அவரைத் திருச்செந்தூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டனர். விரதத்தை முடித்தபின்பும் அவர்கள் வேண்டியது கிடைக்கவில்லை.
எனவே, குமரகுருபரரின் பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். 'இனி உயிரோடு இருந்து எந்தப் பலனுமில்லை. மூவரும் திருச்செந்தூர் கடலில் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்' என எண்ணி கடற்கரை அருகே வந்தார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவில் அருகிலுள்ள கடலருகே வந்து உயிரைவிட முயன்றனர். அந்த நேரத்தில் ஒரு அர்ச்சகர் வடிவத்தில் முருகப்பெருமான அவர்கள் முன்பு தோன்றினார். 'கடலில் விழுந்து உயிரைவிட முடிவு செய்துவிட்டீர்களே! அது ஏன்?' என்று கேட்டார் அர்ச்சகர்.
'அய்யா எங்களுக்கு குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தக் குழந்தை இன்னும் வாய் திறந்து பேச முடியாமல் இருக்கிறது. நாங்கள் பல விரதங்கள் இருந்து பார்த்துவிட்டோம். ஆனால் முருகப்பெருமான் எங்கள்மீது இரக்கம் காட்டி குழந்தையை இன்னும் பேச வைக்கவில்லை. நாங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இந்தக் குழந்தை பேசும் சக்தி இழந்ததை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் நாங்கள் உயிரைவிட முயன்றோம்' என்றனர்.
அர்ச்சகர் வடிவிலிருந்த முருகப்பெருமான், 'என் கையில் உள்ளது எது?' என குமரகுருபரரிடம் கேட்டார். அர்ச்சகர் கேள்விக்கு உடனே பதில் சொன்னார். குழந்தையான குமரகுருபரர். 'இது... பூ...' என்று சொல்லிக்கொண்டே 'பூமேவு செங்கமல' எனத் தொடங்கி முருகன்மீது பக்திகொண்டு பாடல்களைப் பாட ஆரம்பித்தார். கந்தர்கலி வெண்பாவைக் குழந்தையான குமரகுருபரர் பாடினார்.
மதுரை மீனாட்சி அம்மன் பரிசாக அளித்த முத்துமாலை
இவர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். ஒரு சமயம், இந்த நூலில் உள்ள 'வருகைப்பருவம்' என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாக வரலாறு உள்ளது. மேலும் மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றித் 'திருவாரூர் நான்மணி மாலை' என்னும் நூலை இயற்றினார்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா நான்காம் நாளன்று வெளியான பதிவு
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
https://www.alayathuligal.com/blog/nlxf623gs25b7ycgh6tf5j8n8mjcdl