பழனிமலை தண்டாயுதபாணி கோவில்

பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர்

45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை

பழனிமலை தெய்வம் தண்டாயுதபாணிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில், மற்ற விசேஷ நாட்களைவிட, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வருவார்கள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. தனக்கு காவடி எடுக்க விரும்பிய பக்தனுக்கு, முருகன் செய்த அருள் லீலைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு சமயம் அவரைக் கடுமையான நோய் தாக்கியது. ஒவ்வொரு நாளும் அவர் உடல் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பழனி முருகனை நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு உறங்கி விடுவார். ஒரு நாள் இரவில் அழகிய இளைஞன் ஒருவன் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழனிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழனிமலை முருகன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து, இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.

மகிழ்ச்சி அடைந்த துரைசாமிக் கவிராயர், பழனி முருகனுக்கு 'அன்னக்காவடி' எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார். துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழனிக் குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். 'துரைசாமிக் கவிராயர் பழனிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!' என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். 'பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்' என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழனி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார்.

அவர் பழனி சென்றடைய 45 நாட்களாயிற்று.'துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!' என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழனியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழனிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழனி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.

'பழனிப் பரமனே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!' என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார். ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. பழனி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.

அப்போது துரைசாமிக் கவிராயர் பக்திப் பரவசம் பொங்க பின்வரும் பாடலைப் பாடினார்.

#பல்லவி

மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)

#அனுபல்லவி

உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)

#சரணம்

சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய

அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)

இந்த நிகழ்வை கண்ட அனைவரது உள்ளமும், உடலும் சிலிர்த்தது.

 
Previous
Previous

அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

Next
Next

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்