திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர் முருகன் வைணவப் புலவருக்கு அளித்த மாணிக்கப் பதக்கம்
பகழிக் கூத்தர், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். வைணவரான இவர் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சன்னாசி என்னும் சிற்றூரில், தர்பாதனர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் 'திருமாலைத் தவிர வேறு எக்கடவுளையும் போற்றிப்பாட மாட்டேன்' என்று உறுதி பூண்டிருந்த தீவிரமான வைணவர்.
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
பகழிக் கூத்தர் ஒருமுறை கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எனவே, 'தனக்குள்ள வயிற்று நோயைத் தீர்த்து வைத்தால் உன் மீது பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்' எனத் திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக் கொண்டார். வயிற்றுவலி சில நாள்களிலேயே தீர்ந்துவிட்டது. எனவே தனது வேண்டுதலின்படி திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தை 103 பாடல்களில் பாடினார். குழந்தை நிலையில் தெய்வங்களை வைத்து, குழந்தைப் பருவ நிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் புகழ்ந்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். திருச்செந்தூர் முருகன் சன்னதியில்,புலவர்கள் பலரின் முன்னிலையில், 'திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்'அரங்கேற்றப்பட்டது. இந்நூல் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய அனைத்தும் ஒரு சேர அமையப் பெற்ற நூலாக அமைந்துள்ளது.
முருகன் அளித்த பரிசு
சபையோர் இவரது பிள்ளைத்தமிழின் சிறப்பை உணர்ந்திருந்தும் இவருக்குரிய மரியாதை செய்யாமல் பாராமுகமாய் இருந்து விட்டனர். முருகப்பெருமான், தமிழால் தம்மைப் பாடுவோருக்குத் தாம் செய்யும் அருளைக் காட்டுவதற்காகத் தாமே தமது மார்பில் அணிந்திருந்த மாணிக்கப் பதக்கத்தைப் பகழிக் கூத்தர் உறங்கிக் கொண்டிருந்த போது, பகழிக்கூத்தரின் மார்பில் அணிவித்துவிட்டுச் சென்றார். மறுநாள் முருகப்பெருமானின் மாணிக்கப் பதக்கம் காணாது தேடித் தம் தவறுணர்ந்த சபையோர் பகழிக் கூத்தரைப் பல்லக்கிலேற்றிச் சென்று பலவாறு சிறப்பித்தனர்.
முருகப் பெருமானுக்கு விருப்பமான இந்த பிள்ளைத்தமிழ் நாள்தோறும் அபிஷேக நேரத்தில் திருப்புகழோடு சேர்த்து இன்றும் கோவிலில் பாடப்படுவது சிறப்பு அம்சமாகும்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா ஐந்தாம் நாளன்று வெளியான பதிவு
முருகப்பெருமான் முகத்தில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
https://www.alayathuligal.com/blog/7hfp23dhrp2re89twh9759nwsyl8l4