திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில்
ஆடு, மயில் வாகனங்களுடன் காட்சியளிக்கும் அபூர்வ முருகன்
சிவகங்கையில் இருந்து சுமார் 21 கி. மீ தொலைவில் இருக்கிறது திருமலை. இங்கு சுமார் 200 அடி உயர மலை மீது, மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இறைவனின் திருநாமம் மலைக்கொழுந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாகம்பிரியாள். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோவில், முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.
இத்தலத்தில் குடவரை முருகன் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படும் இத்தல முருகப்பெருமான், கீழ் ஆடை மட்டுமே அணிந்துள்ளார். ஆடையின் மேல் கட்டப்பட்டுள்ள மேகலையின் நுனிப் பகுதி, முருகனின் இடப்புறமாகத் தொங்கி பீடத்தினைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இவர் அணிந்திருக்கும் முப்புரிநூல் வலது கையின் மேல் செல்கிறது. முருகனுக்கு வலது பக்கத்தில் உள்ள குறளன், முருகனின் தலைக்கு மேலே நீண்ட குடையைக் குறுக்காகப் பிடித்துள்ளான். அவனுக்குப் பின்புறம் கொடிமரத்தொன்றின் மீது சேவல் நின்றவாறு உள்ளது. முருகனுக்கு இடப்பக்கம் பணிவுடன் கைகளைக் சுட்டியவாறு நின்ற நிலையில் துறவி ஒருவர் காணப்படுகிறார். முருகனின் காலடியில் இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் எதிரெதிரே இருக்கின்றன.
இத்தலத்து துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்தபடி எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.
இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.