
கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
திரிபங்கி நிலையில் காட்சியளிக்கும் விசித்திர வடிவ நரசிம்மர்
திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது, பிரசித்தி பெற்ற கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது. இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்னும் சிறு குன்றிலும் உள்ளன. மூன்றாவதாக, கீழப்பாவூரில் மட்டுமே சமதளப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச் சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இதனை ஒட்டி பின்புறத்தில் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தமிழகத்தில் இத்தலத்தில் மட்டும்தான், திரிபங்க நிலையில் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுத்ததால் அவரது உக்கிரகத்தைத் தணிக்க அவரது சன்னிதி முன்பு மாபெரும் தெப்பக்குளம் உள்ளது சிறப்பு. இது நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
மகாவிஷ்ணு, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த நரசிம்ம அவதார காலம் இப்பூவுலகில் (அகோபிலத்தில் ) இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்தது. 'மற்ற அவதாரங்களைப் போல், நரசிம்ம அவதாரம் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லையே' என்ற எண்ணம் மகாவிஷ்ணுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்வதற்கும்,தன்னை நோக்கி தவமிருந்த ரிஷிகளுக்கு நரசிம்ம தரிசனம் தருவதற்காகவும் இத்தலத்தில், கிருதயுகத்தில் அகோபிலத்தில் எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடனுடன் எடுத்து, மகா உக்கிர மூர்த்தியாக பதினாறு திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்து அடிக்கடி சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவருடைய முழு அருளுக்குப் பாத்திரமாகலாம். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்ட திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும், போன, இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும்.

களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய அபூர்வ வேணுகோபால சுவாமி
செங்கல்பட்டு நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.
கருவறையில், பெருமாள் லட்சுமி தேவியைத் தன் இடது மடியின் மேல் அமர்த்திக் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இப்பெருமாள் தனது மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டும், கீழ் இடது திருக்கரத்தால் லட்சுமி பிராட்டியை அணைத்துக் கொண்டும், கீழ் வலது திருக்கரத்தால் அபய ஹஸ்த கோலத்தைக் காட்டியபடியும் காட்சியளிக்கிறார்.
பொதுவாக, வைணவத் திருத்தலங்களில் வேணுகோபாலன் தம் இரு கரங்களால் புல்லாங்குழலை ஏந்திய இரு கை உருவமாகவே பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ருக்மிணி-சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி சற்று வித்தியாசமான தோற்றத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் கொண்டும், கீழ் இருக்கரங்களால் புல்லாங்குழலை பற்றிக் கொண்டும் சேவை சாதிக்கிறார். நிற்கும் நிலையிலுள்ள பெரும்பாலான மற்ற தெய்வ வடிவங்களின் அமைப்பில் இரண்டு வளைவுகள் (த்விபங்கம்) அல்லது மூன்று (த்ரிபங்கம்) வளைவுகளே காணப்படும். மாறாக, இந்த மனங்கவரும் வேணுகோபால சுவாமியின் திருமேனி ஐந்து (பஞ்சபங்கம்) வளைவுகளைக் கொண்டுள்ளது என்பது அரிய சிறப்பாகும். இத்தகைய வேணுகோபால சுவாமியின் திருவுருவை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்
தெற்கு அகோபிலம் என்று போற்றப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்
விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி அருகில் பூவரசன்குப்பம் ஊரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில். மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் அமிர்தவல்லி. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோவிலில், தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால், இந்த ஒரு கோவிலில் மட்டும்தான், நரசிம்மர் தாயாரை ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றார்.
இக் கோவில் தெற்கு அகோபிலம் எனக் கூறப்படும் அளவுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகளுக்கு நரசிம்மர் காட்சி தந்தாராம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற பாதி மனித பாதி மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்குக் காட்சி தர தெற்கு நோக்கி வந்தபோது பூவரசன்குப்பத்தின் அருகில் அவர்களுக்குக் காட்சி தந்தார். ஆனால் அவர்களால் உக்கிர அவதாரத்தில் இருந்த நரசிம்மரை தரிசிக்க முடியவில்லை. காரணம் அத்தனை சூடாக அந்த பூமியே தகித்ததாம். ஆகவே அவர்கள் அவரது துணைவியாரான அமிருதவல்லித் தாயாரிடம் பெருமானை தாங்கள் தரிசனம் செய்ய வசதியாக இருக்க அவர் கோபத்தை தணிக்குமாறு வேண்டிக் கொள்ள, தாயாரும் அவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு கண்ணால் நரசிம்மரையும் இன்னொரு கண்ணால் முனிவர்களையும் பார்த்துக் கொண்டு இடது தொடை மீது அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தாயாரை நரசிம்மரும் நோக்க அவர் உக்கிரத்தை தாயார் அப்படியே உறிஞ்சிக் கொண்டு விட , நரசிம்மரின் கோபம் அடங்கியது. முனிவர்கள் ஆனந்தம் அடைந்து அவரை மனமார தரிசித்தார்கள். அது முதல் நரசிம்மர் அதே கோலத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும். மற்றும் எதிரிகள் எல்லாம் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.

தஞ்சை 24 பெருமாள்கள் கருட சேவை
தஞ்சை வைகாசி திருவோண 24 பெருமாள்கள் கருட சேவை விழா
தஞ்சாவூர் மற்றும் அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
தஞ்சை கொடிமரத்து மூலைக்கு அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் எழுந்தருளுவார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள், ஸ்ரீநரசிம்மர், மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜப்பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேசர், கரந்தை ஸ்ரீயாதவக் கண்ணன், கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு ராஜவீதி ஸ்ரீகலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத் தெரு பஜார் ஸ்ரீராமசுவாமி, எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீஜனார்த்தனர், கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், மேலராஜவீதி ஸ்ரீவிஜயராமர், ஸ்ரீநவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு ஸ்ரீபூலோகக் கிருஷ்ணர், மாச்சாவடி நவநீதகிருஷ்ணர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி, சுக்காந்திடல் ஸ்ரீலக்ஷ்மி நாராயணபெருமாள், கரந்தை வாணியத் தெரு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், கொல்லுப்பேட்டைத் தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆகிய கோயில்களில் இருந்து 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.
நவநீத சேவை
கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இதில் 15 பெருமாள்கள் கையில் வெண்ணை குடத்துடன், நவநீத அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
வரதராஜப் பெருமாள் கருட சேவை
108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் முக்கியனமான தலமாகும். இங்கு, வருடத்துக்கு மூன்று கருட சேவை நடைபெறும் என்றாலும், வைகாசி மாதம் வரும் கருடசேவை உலகப் பிரசித்தமானது. இவ்விழா வைகாசி விசாக நாளில் கொண்டாடப்படுகின்றது. இந்த கருட சேவையை கண்டு மகிழ்ந்து ஆழ்வார்கள் தனி மங்களாசாசனமே செய்துள்ளார்கள்.
ஒரு விநாடி தரிசனம் - கருட சேவையை திருக்குடைகளால் மறைப்பதற்கான பின்னணி
கருட சேவையின் பொழுது அலங்காரம் முடிந்து பெருமாள் புறப்படும் நேரத்தில் கருட சேவையை ஒரு விநாடி பொழுது திருக்குடைகளால் மறைப்பார்கள். இது இங்கு மட்டுமே நடைபெறும் வழக்கமாகும். இதற்கு ஒரு விநாடி தரிசனம் என்று பெயர். இதற்கு காரணம் முற்காலத்தில் சோளிங்கர் நகரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்னும் விஷ்ணு பக்தர். அவர் காஞ்சியில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தவறாது தரிசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அவரால் ஒரு முறை காஞ்சிபுரம் கருட சேவைக்கு செல்ல முடியவில்லை. அதனால் மனம் வேதனையுற்ற, அவர் சோளிங்கரில் இருந்தபடியே பெருமாளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். தன் பக்தனுக்கு பெருமாள் மனமிரங்கி சோளிங்கரில் அவருக்கு கருட தரிசனம் தந்தார். இதனைக் கருத்தில் கொண்டே இன்றும் கருட சேவை நடைபெறும் பொழுது சேவையை திருக்குடைகளால் ஒரு விநாடி பொழுது மறைக்கிறார்கள்.
ராபர்ட் கிளைவ் காணிக்கையாக தந்த மகர கண்டி ஆபரணம்
ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியாவில் நிறுவக் காரணமாய் இருந்த ராபர்ட் கிளைவ், மகர கண்டி என்னும் ஆபரணத்தை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்குக் காணிக்கையாக கொடுத்தார். ஒவ்வொரு கருட சேவையின் போதும், ராபர்ட் கிளைவ் மகர கண்டி ஆபரணத்தை இன்றும் பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 2.6.2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகின்றது

சேங்காலிபுரம் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் ஒருக்களித்த நிலையில் சயனித்திருக்கும் அபூர்வ கோலம்
திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ள குடவாசலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது சேங்காலிபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பரிமள ரங்கநாதர் கோவில். முன்னர் இந்த ஊரின் பெயர் திருக்கலீஸ்வரம் என்று இருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னனின் படை தளபதியான அரவான் ராஜராஜன் என்பவர் சாளுக்கிய மன்னனான ஜெயசிம்மனை தோற்கடித்ததினால், இந்த ஊரை அவருக்கு பரிசாக மன்னன் கொடுத்து விட, இந்த ஊரின் பெயர் ஜயசிங்ஹ குலகாலபுரம் என ஆயிற்று. நாளடைவில் அதுவே சேங்காலிபுரம் என மருவியது.
இத்தலம் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் ஆகும். இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அந்த கோவில்களை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம்,
பொதுவாக அனைத்து கோவில்களிலும் சயன கோலத்தில் காணப்படும் பெருமாள், ஆகாயத்தை நோக்கி படுத்த நிலையில் காணப்படுவார் . ஆனால் இங்குள்ள பெருமாளோ சயன கோலத்தில் இருந்தாலும், தனது முகம் உட்பட முழு சரீரத்தையும் பக்தர்களுக்கு காட்டி அருள் பாலிக்கும் வகையில் சயன கோலத்தில் காட்சி தருகின்றார் என்பது ஒரு அதிசய காட்சியாகும். தனது ஒரு கைமீது தலையை வைத்து படுத்தபடி சயன கோலத்தில் உள்ளார். பூமி மீது நேரடியாக தலையை வைத்துக் கொண்டு படுக்கலாகாது என்பது ஒரு நெறிமுறை என்பதினால், அதை தவிர்க்கவே, தனது ஒரு கையின் மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உள்ளார்.
வலது காலில் ஆறு விரல்கள் உள்ள பெருமாள்
இத்தலத்து பெருமாளுடைய வலது காலில் ஆறு விரல்கள் உள்ளன. அதை தரிசிப்பவர்களுக்கு பெரும் அதிருஷ்டம் வரும். மேலும், ஆறாவது விரல், கலியுகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.
ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய இருவரும் 'இங்கேயே இரு' என்ற பாவனையில் கைகளை வைத்து இருக்கும் அபூர்வ தோற்றம்
தசரத சக்ரவர்த்தி தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பல கோவில்களில் யாகங்கள், பூஜைகள், பரிகாரங்கள் செய்தார். இந்த தலத்திற்கும் வந்திருந்து ஒரு வருடம் பூஜைகள் செய்தார். ஆனால் பலன் கிடைக்காமல் இருக்கவே, இந்த தலத்திருந்து வருத்தத்துடன் திரும்பிப் போகையில், அவர் முன் தோன்றிய ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி 'உனக்கு அனுக்கிரகம் கிடைக்கும் வேளை வந்து விட்டதினால் இன்னமும் சற்றே இங்கிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க, பெருமாளை தோத்திரம் செய்' என அழைத்தார்கள். அந்த நிலையில் இங்கேயே இரு என கூறும் வகையில் காட்சி தரும் கைகளுடன், இரு தேவிகளும் காணப்படுகின்றார்கள். அந்த தேவிகளின் கைகளை உற்றுப் பார்த்தால் இந்த காட்சியைக் காணலாம். பிற கோவில்கள் அனைத்திலும் உள்ள இரு தேவிகளும் கைகளில் பூ அல்லது ஆயுதங்களோடு காட்சி தர இங்கு மட்டுமே ' இங்கு இன்னும் சற்று இரு' என கூறுவது போன்ற நிலையில் உள்ள கைகளோடு காட்சி தருகிறார்கள். அதைக் கேட்டு படுத்திருந்த பெருமாள் அங்கேயே நின்றிருந்த தசரதரை நோக்கி சற்றே ஒருக்களித்து படுத்துக் கொண்டு 'தசரதா, நான் உன்னுடைய தவத்தினால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் இன்னமும் உனக்கு உள்ள பாவங்களை தொலைத்துக் கொள்ள சில புண்ணிய காரியங்களை செய்ய வேண்டி உள்ளது. அவற்றையும் நீ செய்து முடித்தப் பின்னர், நானே உனக்கு புத்திரனாக பிறப்பேன்' என கூறினாராம்.

கோவை, ஒத்தக்கால் மண்டபம் நவகோடி நாராயணப்பெருமாள் கோவில்
ஜாதக தோஷங்களை நீக்கும் பெருமாள்
கோயம்புத்தூரிலிருந்து 19 கி.மீ தொலைவிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நவகோடி நாராயணப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில், பெருமாள் நவகோடி நாராயணர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
வைணவப் பெரியவரான ராமாநுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து, துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு. இத்தலப்பெருமாள், நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதால், ' நவகோடி நாராயணன்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ராமாநுஜர் பெருமாளை இத்திருநாமத்தில் முதன்முதலில் அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். நவகோடி ரிஷிகளும் வழிபட்ட நாராயணர் இவர் என்ற கூற்றும் இங்கு உண்டு.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமாநுஜரும் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலையும், புற நகர்ப் பகுதியில் உள்ள இக்கோயிலையும் அரசர்களும் வீரர்களும் போர்ப் பாசறையாகப் பயன்படுத்தியுள்ளனர். திப்புசுல்தானின் படைவீரர்கள் ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து திண்டுக்கல் செல்லும்போது, இக்கோயிலில் முகாமிட்டிருந்தனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இக்கோயிலைச் சுற்றியும் மிகப் பெரிய கோட்டை இருந்ததாகவும் பிற்காலத்தில் சிதைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
பிரார்த்தனை
செண்பகம், மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள், உடனே நிறைவேறுவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம்.

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
12 அடி உயர கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்
அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது
இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு
1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோவிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

பெரிய அய்யம்பாளையம் உத்தமராய பெருமாள் கோவில்
சிறுவனின் தோற்றத்தில் காட்சியளிக்கும் அபூர்வ பெருமாள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் பெரிய அய்யம்பாளையம் என்னும் ஊரில், ஒரு சிறு குன்றின் மேல் அமைந்திருக்கிறது உத்தமராய பெருமாள் கோவில். இத்தலம் வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், கண்ணமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இத்தல பெருமாள் ஊமை சிறுவனுக்கு காட்சி கொடுத்து பேச வைத்தவர் என்பதால், மூலவர் உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். சதுர வடிவான கருவறையில் ஏகாந்தமாக, தேவியர்கள் இன்றி சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராய பெருமாள் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்க, கீழ் இரு கரங்கள் திருப்பதி-திருமலை பெருமாளைப் போல அபய, கடி ஹஸ்தங்களாகக் கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் தனியே வந்து தங்கியவர் என்பதால், தாயாருக்கு சன்னதி கிடையாது.
பேசாத குழந்தைகளைப் பேச வைக்கும் பெருமாள்
சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மையற்ற ஊமைகளாக இருப்பர். இன்னும் சிலர் திக்குவாய் பிரச்னையுடனோ, சரியான உச்சரிப்பு இல்லாதவர்களாகவோ இருப்பர். இவர்கள் நன்கு பேசவும், ஊமைக்குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர் பேசாத குழந்தைகளுக்காக சுவாமிக்கு தேனபிஷேகம் செய்கின்றனர் அபிஷேக தேனை சவாமி முன்பாக குழந்தையின் நாக்கில் துளசியால் தொட்டு வைக்கின்றனர் பின் அந்த தேனையே பிரசாதமாகத் தருகின்றனர் தினமும் தேனைப் பருகி சுவாமியை வழிபட விரைவில் பேசும் தன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பேச்சாளர்கள் பாடகர்கள் தாங்கள் குரல் வளத்துடன் இருக்கவும்: இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் தவாமிக்கு அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கும். மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் விலகவும், திருமணமாகாதோர் உத்தமமான வரன் அமையவும் இங்கு வழிபடுகிறார்கள்.

உத்தமர் சீலி வேணுகோபால சுவாமி (செங்கனிவாய் பெருமாள்) கோவில்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அருளும் செங்கனிவாய் பெருமாள்
திருச்சி - கல்லணை செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமர் சீலி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது வேணுகோபால சுவாமி (செங்கனிவாய் பெருமாள்) கோவில். தாயார் திருநாமம் அரவிந்தநாயகி.
கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் புல்லாங்குழல் ஏந்தி, புன்முறுவலுடன் புல்லாங்குழல் வாசிக்கும் நிலையில் ருக்மிணி – சத்யபாமா சமேதராக, வேணுகோபால சுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இவருக்கு 'செங்கனிவாய்ப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலை கட்டியவர் சோழ மன்னன் கரிகாலன். இந்தத் தலத்தில்தான் கரிகாலன், மைத்ரேய மகரிஷியிடம் கல்லணை கட்டுவதற்கான ரகசியங்களை உபதேசமாகப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. சோழ மன்னர்களில் முதலாம் பராந்தக சோழனின் (907-953) நான்கு புதல்வர்களில் ஒருவர் பெயர் உத்தமசீலி. இவர் பெயராலேயே இவ்வூர் உத்தமசீலி என்றும் உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசித்து வழிபட வேண்டிய கோவில் இது. இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் வீடு கட்டும் பணியில் தடை ஏற்பட்டால், இங்கு வந்து வேணுகோபால சுவாமியை வேண்டிக் கொண்டு சென்றால், உடனே வீடு கட்டும் பணி நல்லபடியாக முடிவதும் பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.

கள்ளழகர் கோவில்
மதுரை சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்
மதுரை சித்திரை திருவிழாவில், சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளழகரை காண பல லட்சம் மக்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.
16ஆம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார் சென்று அங்கே அலங்காரம் செய்து கொண்டு தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாராம். சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தாராம். மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினாராம் திருமலை நாயக்கர். தங்கை மீனாட்சி கல்யாணத்தைக் காண சீர்வரிசைகளுடன் மதுரைக்கு புறப்பட்டு வரும் அழகர், மீனாட்சி திருமணம் நடந்து முடிந்து விட்டதால் சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கி பின்னர் தன் கோவிலுக்கு திரும்பி விடுவதாக வழக்கம்.
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக உடுத்தும் ஆடைகள், அணியும் தங்க நகைகள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம். பச்சைப்பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிக்க நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு, 05.05.2023 வெள்ளிக்கிழமையன்று தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகரை குளிர்வித்திடும் தீர்த்தவாரி வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அந்திலி லட்சுமி நரசிம்மர் கோயில்
மகாவிஷ்ணு கருட பகவானுக்கு நரசிம்மராக காட்சி தந்த தலம்
விழுப்புரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருக்கோவிலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள அந்திலி என்னும் ஊரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில்.
மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக, நரசிம்மர் அவதாரம் திகழ்கிறது. பெருமாள் நரசிம்மராக காட்சி தந்த எட்டு தலங்களில் இதுவும் ஒன்று.1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில், கருட வடிவில் இருக்கும் பாறையின் மேல் அமைந்துள்ளது. வருடத்தின் 365 நாட்களும், மூலவர் லட்சுமி நரசிம்மர் மீது சூரிய ஒளி படுவது தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மகாவிஷ்ணு தனது வாகனமான 'பெரிய திருவடி' என்று போற்றப்படும் கருட பகவானுக்கு, நரசிம்மராக மகாவிஷ்ணு காட்சி தந்த தலம் இது. மகாவிஷ்ணு நரசிம்மர் அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பிரகலாதனை காப்பாற்றி தரிசனம் செய்தார். பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில், மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனைக் கூட அழைக்காமல் சென்றுவிட்டார். இதனால் பரமபதத்தில் உள்ள கருட பகவான், ஏன் தன் மேல் ஏறி மகாவிஷ்ணு செல்லவில்லை என்ற மன குழப்பத்தில் பூலோகம் வந்து, தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த பாறையின் மீது உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் இருந்தார் , இதனால் மிகவும் பலசாலியான கருடன் பலவீனமாக மாறினார் அவரின் வெப்பம் பூலோகம் மற்றும் வைகுண்டம் வரை பரவியது எல்லாரும் நாராயணரிடம் முறையிட்டனர் ,நாராயணர் கருட பகவானுக்கு காட்சி தந்து உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார் , கருட பகவான் அவரிடம் குழந்தை பிரகலாதனுக்காக தூணில் இருந்து நரசிம்மராக வந்து காப்பாற்றினீர்கள் அந்த அவதாரத்தை தான் காணவேண்டும் என்றும் வேண்டினார். அவரின் விருப்பப்படி நாராயணர் லட்சுமி நரசிம்மராக காட்சி தந்தார்.
மத்வ சித்தாந்த மகான் இக்கோயிலின் சிறப்பை கேட்டு இக்கோயிலுக்கு விஜயம் செய்தார் , கருடவடிவில் உள்ள பாறையை கண்டு ஆச்சரியமுற்று, இக்கோயிலின் பின் புறத்தில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார் . இவரே மறுபிறவியில் ராகவேந்தரராக அவதரித்தார் .
பிரார்த்தனை
குடும்பத்தில் தொடர் பிரச்சனை, தீராத கடன் தொல்லை, திருமணத் தடை, தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து வர நன்மை நிகழும்.

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோவில்
ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது ஆதிவராகப் பெருமாள் கோவில். குபேரன் ஆதிவராகரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் 'சிலாசாலிகுரிசி' எனப்பட்டது. இதுவே பின்னர் மருவி 'கல்லிடைக்குறிச்சி’ யாயிற்று.
கருவறையில் மூலவர் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் தரிசனமளிக்கிறார். பெருமாளின் இத்தகைய அமர்ந்த கோலம், இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவரது மடியில் அமர்ந்து இருக்கும் பூமா தேவி, பெருமாளின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறார். இத்தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. உற்சவர் லட்சுமிபதி எனும் திருநாமத்துடன் தாயார் பூமாதேவியுடன் காட்சி தருகிறார்.
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் தாயார்,ஆண்டாள் சன்னதிகள் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தனித்தனி சன்னதியில் இரண்டு பக்கமும் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருமண வரம் அருளும் தலம்
பெருமாள் எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் அவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்ற பெயரும் உண்டு.திருமண வரம் வேண்டுவோர்க்கு தட்டாமல் அவ்வரத்தை அருள்வதால் இத்தலம் கல்யாணபுரி என்றும் அழைக்கப்படுகிறது. நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரவும், கடன்கள் தீர்ந்து செல்வவளம் பெருகவும் பக்தர்கள் இத்தலத்து ஆதிவராகப் பெருமாள் வழிபடுகின்றனர். பக்தர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறினால், பெருமாளை கருட வாகனத்தில் எழுந்தருள செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதனால் இத்தலத்தில் பெருமாளின் கருட சேவையை அடிக்கடி நாம் தரிசிக்க முடியும்.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் இத்தல வராகர் பாடப்பெற்றிருக்கிறார்.

தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்
சாந்த சொரூபமாக நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ லட்சுமி நரசிம்மர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள தாளக்கரை என்னும் ஊரில், 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத்தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது.
கருவறையில் மூலவர் நரசிம்மர் கோரை பற்களுடன், நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரம் ஏந்தி, ஸ்ரீ சக்கரம் அமைந்த பீடத்தில் நின்ற கோலத்தில் சாந்த சொரூபமாக எழுந்தருளி உள்ளார். பொதுவாக நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில், நரசிம்மரும் லட்சுமியும் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார்கள். இப்படி சாந்த சொரூப கோலத்தில் லட்சுமியுடன் நின்ற வண்ணம் நரசிம்மர் காட்சி அளிப்பது இந்த தலத்தின் தனிச் சிறப்பாகும். இத்தலத்தை போல், நரசிம்மரும் லட்சுமியும் தனித்தனியே நின்ற வண்ணம் காட்சி தரும் மற்றொரு தலம், ஐதராபாத் யாதகிரி குட்டா மலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலாகும்.
நரசிம்மர் அருளால் திருமணத்தடை, புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட, பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
அட்சய திருதியை - கும்பகோணம் பன்னிரெண்டு கருடசேவை உற்சவம்
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள பன்னிரெண்டு வைணவ கோவில்களிலிருந்து, பன்னிரெண்டு கருட வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அருள்பாலிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர்.
இதில், ஸ்ரீசாரங்கபாணி, ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீஆதிவராகபெருமாள், ஸ்ரீராஜகோபாலசுவாமி, ஸ்ரீபட்டாபி ராமர், பட்டாச்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ஸ்ரீவேணு கோபால சுவாமி, ஸ்ரீவரதராஜபெருமாள் உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுவர். அப்போது, எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன், அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.
பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
அமாவாசை தினத்தன்று வழிபட வேண்டிய திவ்ய தேசப் பெருமாள்
சென்னை - அரக்கோணம் ரயில் தடத்தில், சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருவள்ளூர். பெருமாளின் திருநாமம் வீரராகவ பெருமாள். தாயாரின் திருநாமம் கனகவல்லி . அரக்கர்களை வதம் செய்ததால் வீரராகவப் பெருமாள் என்றும் இராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால்,வைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் இவருக்கு ஏற்பட்டது.
கருவறையில் 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் வீரராகவ பெருமாள், தன் வலது கரத்தால் சாலிஹோத்ர முனிவர் சிரசில் கை வைத்து, நாபிக்கமலத்தில் இருக்கிற பிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் . இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.
இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு நீராடிப் பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும்! முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி, பெருமாளை ஸேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
ஒரு தை அமாவாசை நன்னாளில், சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள 'ஹிருதாபநாசினி' எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள் நீங்கும் என்று எண்ணினார். குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்று தேவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள்.
முனிவர், குளத்தில் நீராடி, கடும் தவத்தில் மூழ்கினார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே தங்கி, கோயில் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்கிறது தல புராணம்.
தீராத நோய்களைத் தீர்க்கும் பெருமாள்
தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் அமைந்துள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூன்று அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார் என்கின்றனர்.

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில்
திருவோண நட்சத்திரத் தலம்
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் திருப்பாற்கடல். பெருமாளின் திருநாமம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள். தாயாரின் திருநாமம் அலர்மேல் மங்கை.
சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதை போன்று, கருவறையில் சிவபெருமானின் ஆவுடையாரின்மீது பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் அபய கரத்துடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 107-வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை மனித உடலுடன் சென்று தரிசிக்க முடியாது. இந்த குறையை போக்கவே பெருமாள் திருப்பாற்கடலில் அருள்பாலிக்கிறார். இந்த தலத்து பெருமாளை தரிசித்தால் 107வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும் ஒன்றாக அருள்பாலிப்பதால் பிரதோஷம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, தனது கணவனின் தோஷத்தைப் போக்குவதற்காக இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திரத் தலமானது.
திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், நற்பலன்கள் கிட்டும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
தீராத நோய்களைத் தீர்க்கும் அத்திப்பழ தானம்
திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடெசபெருமாளை மனதாரப் பிரார்த்தித்து, அத்திப்பழங்களை தானமாக வழங்கினால், தீராத நோயெல்லாம் தீரும். இல்லத்தில் ஐஸ்வரியம் குடிகொள்ளும். மகாலக்ஷ்மி தாயாரின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பது வைணவ பெரியோர்களின் கருத்தாகும்.

கட்டவாக்கம் விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ள விஸ்வரூப லட்சுமி நரசிம்மர்
காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில், விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெருமாள் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல், பதினாறு அடி உயர திருமேனியுடன், லட்சுமி தாயாரை தன் மடியில் இருத்தி வீற்றிருக்கிறார். அவரின் மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் வடிவமைப்பானது ஆறு அவதாரங்களையும், அவர் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் நான்கு அவதாரங்களையும் குறிப்பிடுகின்றது. கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது.
இந்த நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
நவக்கிரக பரிகார தலம்
இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மருக்கு பன்னிரண்டு பற்கள் அமைந்திருக்கின்றன. இது இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால், இது ஒரு நவக்கிரக பரிகார தலமாக விளங்குகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்
தெய்வத் திருமணங்கள் பல நடைபெறும் திருநாள்தான் பங்குனி உத்திரம். இந்நாளில் நடைபெறும் ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றிய 12 ஆழ்வார்களில், பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த தலம் திருவில்லிபுத்தூர். ஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.பங்குனி உத்திரத்தன்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வருவார்கள். மாலையில் பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன், ஆண்டாளும் ரங்க மன்னாரும் திருமண வைபவம் நடைபெறும் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளுவார்கள். கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கும். தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும்.
ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பிருந்து கண்ணனை நினைத்து அருளிய . 'வாரணமாயிரம்' என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி, பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
என்ற இந்தப் பாசுரம், வைணவர்கள் வீட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஓதப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறும். வைணவத் திருத்தலங்களில் செய்யப்படும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இந்தப் பாசுரம் கட்டாயம் இடம் பெறும்.

பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்
கோவில் கட்டுவதற்காக பக்தன் செலவழித்த பணத்தை நவாபிடம் திருப்பி செலுத்திய ராமன், லட்சுமணன்
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் , கம்மம் நகரிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில். இக்கோவிலில் ராமர், சீதாபிராட்டியை தனது இடது மடியில் இருத்தி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தனது நான்கு கரங்களில் இரண்டில் சங்கு, சக்கரமும், மற்ற இரண்டு கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி இருக்கிறார். ராமருக்கு இடது பக்கம் லட்சுமணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆண்டு தோறும் இராமநவமியன்று, இத்தலத்தில் ராமருக்கும், சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாண உற்சவம் மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.
இந்தக் கோவிலானது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கஞ்சர்ல கோபண்ணா என்பவரால் கட்டப்பட்டது. கோபண்ணா என்பவர் பத்ராச்சலத்தில் தாசில்தாராக இருந்தார். அரசின் பணியாளரான இவர், அரசாங்க பணத்தை எடுத்து இந்த கோவிலை கட்டி முடித்து விட்டார். இதை அறிந்த ராஜ்யத்தின் நவாப் தானீஷா, அவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதித்து, கோல்கொண்டா சிறையில் அடைத்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். தனது பக்தனை காப்பாற்றுவதற்காக ராமர் தனது தம்பி லட்சுமணனுடன், ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து கோபண்ணா செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை நவாப் தானீஷாவிடம் திரும்பச் செலுத்தி, பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வாங்கிக்கொண்டு அதை சிறையில் இருந்த கோபண்ணாவின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள். மறுநாள் இதையறிந்த நவாப் தானீஷா, தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இராமனும் லட்சுமணனுமே என்று உணர்ந்தார். உடனே கோபண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். கோபண்ணாவைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார். ஆனால் கோபண்ணாவோ, தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் ராமரின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் நாம் காணலாம். கோபண்ணா, 'பக்த இராமதாஸ்' என்று எல்லோராலும் போற்றப்பட்டார். அவர் சிறையில் வாடிய போது ராமபிரானை எண்ணி, தெலுங்கில் பல பாடல்களை இராமரைப் போற்றும் வகையில் பாடியுள்ளார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள், தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.
இராம நவமி திருக்கல்யாண உற்சவத்திற்கு முத்துக்கள் அளித்த நவாப்
இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா, பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் வருமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்றும் கூட ஆந்திர அரசு, இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.