களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய அபூர்வ வேணுகோபால சுவாமி
செங்கல்பட்டு நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.
கருவறையில், பெருமாள் லட்சுமி தேவியைத் தன் இடது மடியின் மேல் அமர்த்திக் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இப்பெருமாள் தனது மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டும், கீழ் இடது திருக்கரத்தால் லட்சுமி பிராட்டியை அணைத்துக் கொண்டும், கீழ் வலது திருக்கரத்தால் அபய ஹஸ்த கோலத்தைக் காட்டியபடியும் காட்சியளிக்கிறார்.
பொதுவாக, வைணவத் திருத்தலங்களில் வேணுகோபாலன் தம் இரு கரங்களால் புல்லாங்குழலை ஏந்திய இரு கை உருவமாகவே பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ருக்மிணி-சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி சற்று வித்தியாசமான தோற்றத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் கொண்டும், கீழ் இருக்கரங்களால் புல்லாங்குழலை பற்றிக் கொண்டும் சேவை சாதிக்கிறார். நிற்கும் நிலையிலுள்ள பெரும்பாலான மற்ற தெய்வ வடிவங்களின் அமைப்பில் இரண்டு வளைவுகள் (த்விபங்கம்) அல்லது மூன்று (த்ரிபங்கம்) வளைவுகளே காணப்படும். மாறாக, இந்த மனங்கவரும் வேணுகோபால சுவாமியின் திருமேனி ஐந்து (பஞ்சபங்கம்) வளைவுகளைக் கொண்டுள்ளது என்பது அரிய சிறப்பாகும். இத்தகைய வேணுகோபால சுவாமியின் திருவுருவை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.