திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்
திருநாங்கூர் பதினொரு பெருமாள்கள் கருட சேவை
பெரிய திருவடி எனப்படும், கருடாழ்வார் மீது பெருமாள் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை'. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. அவை
1. திருமணிமாடக் கோவில்
2. திருக்காவளம்பாடி
3. திருஅரிமேய விண்ணகரம்
4. திருவண்புருடோத்தமம்
5. திருச்செம்பொன்செய் கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன்பள்ளி
தை அமாவாசைக்கு மறுதினம் மதிய வேளையில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திவ்ய தேசங்களில் இருந்து, ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோவில்), ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோவில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள், தங்க கருட வாகனத்தில் , திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருள்வார்கள். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி, ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார்.
அதையடுத்து, இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும்.
மேலும் பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசித்த புண்ணியம்
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது. அதாவது, இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால், அதற்கு ஈடான இன்னொரு திவ்யதேச பெருமாளை தரிசித்த புண்ணியமும் கிட்டும். மணிமாடக் கோவில் எம்பெருமானை வழிபடுவதால், இமயமலை பத்ரிநாத்திலுள்ள திருபத்ரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும். திருவைகுந்த விண்ணகரம் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீவைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர். அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரை பெருமாளை சேவித்த பாக்கியததை அருள்கிறார். திருத்தேவனார் தொகை பெருமாள், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தை பெருமாளை தரிசித்த பலனை அருள்கிறார். திருவண்புருஷோத்தம பெருமாளை தரிசித்தால் ராமன் அவதரித்த அயோத்தி திவ்ய தேசத்தை தரிசித்த பலன் கிட்டும். செம்பொன்செய் கோவில் பெருமாள் காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். திருத்தெற்றியம்பலம் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளைச் சேவித்த புண்ணியத்தைத் தருவார். திருவெள்ளக்குளம் பெருமாள் திருமலை வேங்கடநாதனை தரிசித்த புண்ணியம் தருவார். திருமணிக்கூடம் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வணங்கிய நற்பலன்களைத் தருவார். திருக்காவளம்பாடி பெருமாள், காஞ்சிபுரம் பாடக பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். திருபார்த்தன்பள்ளி பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வழிபட்ட பலனை தருகிறார்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
குரு, இராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்
பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.
மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.
கருவறையில், மேற்கு நோக்கியபடி பூவராக சுவாமியின், திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. இப்பிரசாதத்திற்கு, முஸ்தாபி சூரணம் என்று பெயர்.
பூவராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.
சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில்
திருப்பதி பெருமாள் நேரில் வந்து சேவை சாதித்த தலம்
கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில், திருப்பனந்தாள் அருகில், சுமார் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் சேங்கனூர். இத்தலத்தில், சுவாமி பெரியவாச்சான் பிள்ளை வீதியில் அமைந்திருக்கிறது சீனிவாச பெருமாள் கோவில். சேங்கனூர், திருவெள்ளியங்குடி என்னும் திவ்ய தேசத்திற்கு வெகு அருகாமையில் உள்ளது. வைணவ உரைநடை ஆசிரியர்களில் முதன்மையானவரும் , 'வியாக்கியான சக்ரவர்த்தி ' எனப் போற்றப்படுபவருமான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை, இத்தலத்தில்தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார். ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம் போன்ற பல நூல்களுக்கு, அவர் எழுதிய விளக்க உரை வைணவ ஆச்சாரியார்களால் பெரிதும் போற்றிக் கூறப்படுகின்றது.
ஒரு சமயம், சேங்கனுரில் வாழ்ந்த ஸ்ரீபெரிய வாச்சான் பிள்ளை தன் மனைவியுடன் திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய சென்றார். பெருமாளின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டு திருப்பதியில் தங்கி விட நினைக்க, எம்பெருமான் திரு உள்ளம் வேறெண்ணியது. தன்னுடைய சாளக்கிராம உருவத்தை அர்ச்சகர் மூலம் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையிடம் சேர்த்து, அவரால் இன்னும் பல தெய்வீக காரியங்கள் நடக்க வேண்டும் என கூறி செங்கனுர் செல்ல கூறினார். வழியில் சாளக்கிராமத்தை, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து விட்டு இருவரும் நீராடி விட்டு திரும்பும்போது அந்த சாளக்கிராமம் காணவில்லை. அதனால், அன்ன ஆகாரமில்லாமல் இருந்து தன் உயிரை விட்டுவிட முடிவு செய்தார். அவர் கனவில் சங்கு சக்ரதாரியாக தோன்றிய ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கூறியபடி, அவர் கிராம மக்களுடன் சாளக்கிராமம்
வைத்த இடத்தில் தேட, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் முழு உருவத்துடன் கிடைத்தார். அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்தான் சீனிவாச பெருமாள் கோவில். ஸ்ரீ சீனிவாச பெருமாளின் பாதத்தில் ஒரு சாளக்கிராம கல் இருக்கின்றது. பெரியவாச்சான் பிள்ளை தன் வாழ்நாள் முடிந்ததும், அந்த சாளக்கிராம கல்லில் ஐக்கியமாகி, பெருமாள் திருவடியில் சேர்ந்துவிட்டார் என்பது வரலாறு.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
கூடாரவல்லித் திருநாள்
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், திருமாலான கண்ணனையே கரம் பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பை கடைப்பிடித்தாள். அப்போது ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் கொண்ட தொகுப்பே திருப்பாவை ஆகும். இப்பாசுரங்கள் நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதி. அதில், கண்ணனையும், அழகரையும், அரங்கனையும் போற்றிப் பாடியிருக்கிறார் ஆண்டாள்.
இந்நூல், பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் கூறி, அந்நோன்பு நோற்க்கும் விதத்தை விளக்குகிறது. இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில், இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டலில் திருப்பாவை பாடப்படுகிறது.
கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள். பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான் கோவிந்தன். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்
"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"
என்று பாடி பரவசம் கொள்கிறாள். கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். ஆண்டாள் விண்ணப்பித்த சிறிது காலத்திலேயே அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள் கோதை. அதன் பின்னர், கோதையானவள் ஸ்ரீஆண்டாள் என்று அழைக்கப்படலானார் என்கிறது புராணம். எனவே, ஆசைப்படி, வேண்டுதல்படி, தங்கள் குலதெய்வமான கள்ளழகருக்கு, நேர்த்திக்கடனைச் செலுத்தமுடியவில்லை கோதையால்! அதாவது, அக்கார அடிசில் சமர்ப்பிக்கவில்லை.
ஆண்டாள் காலத்துக்குப் பின்னர் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் பிறந்த, உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், அழகருக்கு முன்பாக வந்து அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, 'நூறு தடா அக்கார அடிசில்' நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார். பிறகு, அந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கே ஸ்ரீவில்லிபுத்தூ திருத்தலத்தில், ஆண்டாள் வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல், உடையவரை 'அண்ணா...' என்று அழைத்தாராம். "பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" - ஒரு பாவையாக இருந்தபோது, அவளது மனோபீஷ்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியவர் தகப்பன். அதையடுத்து தமையன். எனவே ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாள் ஆண்டாள் என சொல்லி சிலாகிக்கிறது ஆண்டாள் புராணம்.
ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், மார்கழி மாதம் வரும் கூடாரவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். ஆண்டாளை அன்றைய தினம் சேவிப்பது திருமகளை நேரிலேயே தரிசிப்பதற்கு நிகரானது. இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.
திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு முடிந்ததும், ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் உற்சவ சிலை சந்நிதியில் இல்லாமல், சந்நிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அவர் அன்றைய நாளில் ஸ்ரீராமாநுஜரை வரவேற்பதற்காகத்தான் என்கிறார்கள். கூடாரவல்லி நாளின்போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
கூடாரை கூட வைக்கும் இந்த திருநாளில் இந்த பாடலைப்பாடி, ஆண்டாளையும் அரங்கனையும் துதித்தால் வரன் கூடாத மகளிருக்கு நல்ல இடம் அமையும். நாம் விரும்பியவர்கள் மட்டுமில்லாமல் நம்மை விட்டு விலகிய உறவுகளையும் கூடச் செய்யும் அற்புதமான பாசுரம் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" பாடல்.
தேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்
பெருமாளின் அருகில் இருந்து பிரகலாதனும் கருடாழ்வாரும் காட்சி தரும் திவ்ய தேசம்
மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம், தேரழுந்தூர். இத்தலத்து மூலவர் தேவாதி ராஜப் பெருமாள், சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர திருமேனியுடன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். உக்கிரமாகக் காட்சியளித்த பெருமாளிடம் பிரகலாதன், சாந்த சொரூபியாக, கண்ணன் உருவில் காட்சி தர வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக் கொண்டு பெருமாள், கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் மட்டும்தான் பிரகலாதன் கருவறையில் பெருமாள் அருகில் இருந்து காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார். இப்படி பிரகலாதனும் கருடாழ்வாரும் பெருமாளின் அருகில் இருந்து காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆமருவியப்பன் என்னும் திருநாமம் அமைந்த புராணம்
இத்தலத்து உற்சவ பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். ஒருமுறை, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினார்கள். இந்த ஆட்டத்துக்கு நடுவராக பார்வதிதேவியை நியமித்தார்கள். காய் உருட்டும் போது, சகோதரனான பெருமாளுக்கு சாதகமாக பார்வதிதேவி தீர்ப்பு கூற, அதனால் கோபமுற்ற சிவபெருமான், பார்வதிதேவியை பூவுலகில் பசுவாக அவதாரம் எடுக்க சாபமிட்டார். அதன்படி உமையவள் பசுவானாள். இதைக் கண்டு கலங்கிய சரஸ்வதிதேவியும் லக்ஷ்மிதேவியும் உமையவளுக்குத் துணையாக இருக்க முடிவு செய்து, பசுவாக மாறினார்கள். மூவரும் பசுவாக, பூலோகத்தில் இருந்தபடி, சிவனாரையே நினைத்து வேண்டினார்கள். அவர்களுக்கு மேய்ப்பராக பெருமாள் உடனிருந்து காத்தார். அதனால் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு 'ஆமருவியப்பன்' என்னும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம்.
தேரழுந்தூர் என்று ஊர் பெயர் வந்ததன் பின்னணி
இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். தன் தேரின் நிழல் , எதன் மீது விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவன் அவன். இத்தலத்தில் பெருமாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அந்தத் தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களைக் காப்பாற்ற அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் பிறந்தவர்.
பிரார்த்தனை
இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால், காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும், தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், மேல் அதிகாரிகளின் அராஜகத்தில் இருந்து விடுபடவும், திருமணத்தடை நீங்கவும் வழி பிறக்கின்றது.
தேவதானம் ரங்கநாதர் கோவில்
வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படும் தேவதானம் ரங்கநாதர் கோவில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தேவதானம் கிராமம். பெருமாள் செய்த சேவைக்கு நன்றி செய்யும் விதமாக தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அளித்த தானம் ஆகையால் இவ்விடம் , தேவதானம் என்று பெயர் பெற்றது.
இக்கோவில் வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை விட தேவதானம் பெருமாள் அரை அடி நீளம் அதிகமானவர். இங்குள்ள பெருமாள் சாளக்கிராம கல்லால் ஆனவர். பெருமாள் ,பதினெட்டரை அடி நீளத்தில் 5 அடி உயரத்தில், ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலைத் தலைக்கு வைத்து வடக்கே திருமுகமும், , தெற்கே திருவடியும் வைத்த சயன கோலத்தில் காட்சி தருகிறார் . இவரின் நாபியின் மீது பிரம்மா உள்ளார் . பெருமாளின் பாதத்தின் அருகில் ஸ்ரீதேவி ,பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்கிறார்கள் . அவரின் திருவடியை சேவித்தவாறு தும்புரு மகரிஷியும் ,பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர் . இந்த ரங்கநாதர் திருமேனி முழுதும் சாளக்ராம கற்களால் வடித்த சுதை விக்ரகம் என்பதால் அபிஷேகம் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை தைலக் காப்பு மட்டும் சாத்தப்படும்.
சாளுக்கிய மன்னனுக்கு விவசாயியாக காட்சியளித்த பெருமாள்
ஆயிரம் வருடம் பழமையான இக்கோவில் சாளுக்கிய மன்னரால் கட்டப்பட்டது. சாளுக்கிய மன்னன் ஒருவன் தென் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தான். ஸ்ரீரங்கத்தை அடைந்த மன்னன், அங்கிருந்த ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று பெருமாளைத் தரிசித்தான். பெருமாளின் பேரழகில் அப்படியே சொக்கிப் போய் விட்டான். அப்போது தன் நாட்டிலும் இதே போன்ற பேரழகுடன் பெருமாளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.
சாளுக்கிய மன்னன் தேவதானம் கிராமத்திற்கு வந்தபோது, அந்த பகுதி முழுவதும் ஸ்ரீரங்கத்தைப் போன்றே நெல் வயல்கள் நிரம்பி பசுமை போர்த்தி காட்சி அளித்ததைக் கண்டான். அப்போது ஓரிடத்தில் விவசாயி ஒருவர் வயல் களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகளை ஒரு மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். மன்னர் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த விவசாயி மறைத்துவிட்டார். சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் கண்களில் ஓர் இடத்தில் அந்த விவசாயி மரக்காலை தன் தலைக்கு வைத்தபடி படுத்திருந்தார். அருகில் சென்ற மன்னனுக்கு அந்த விவசாயி பெருமாளாகக் காட்சி கொடுத்ததுடன், அந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வேண்டும் என்றும், அந்த ஆலயம் ஸ்ரீரங்கம் போன்று பிரசித்தி பெற்று விளங்கும் என்றும் கூறினார்.
சாளுக்கிய மன்னன், பெருமாளின் திருவுருவம் வடிக்கப் பொருத்தமான கல்லைத் தேடிக்கொண்டே தன் படையினருடன் வட இந்தியாவுக்குச் சென்றான். இமயமலையின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான ஒரு கல்லைப் பார்த்தான். அந்தக் கல்லில் பெருமாளின் திரு உருவத்தை வடிக்க நினைத்து, அந்தக் கல்லை வீரர்களைத் தூக்கச் செய்து தென்னிந்தியாவுக்குப் புறப்பட்டான். வரும் வழியில் வீரர்கள் எடுத்து வந்த கல் தவறி கங்கையில் விழுந்து விட்டது. ஆனால் கல் மூழ்காமல் மிதந்தது. ஆற்றில் விழுந்த கல்லை வீரர்கள் திரும்ப எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஆற்றில் விழுந்து முழுகாத அந்த கல் பற்றி ஆன்மீகப் பெரியோர்களிடம் கேட்டான் மன்னன். அது சாளக்கிராமக் கல் என்றும், அந்தக் கல்லில் இறைவனின் திரு உருவத்தை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அந்த பகுதி முழுவதும் செழிப்பாக இருக்கும் என்றும் கூறினர். பின்னர் தேவதானம் திரும்பிய மன்னன், இறைவன் தனக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை நிர்மாணித்தான். ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெருமாள் பெரியதாக உள்ளதால், இத்தலம் வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது .
பலன்கள்
இந்த ஆலயத்தை சுக்ர ஓரையில் வழிபடுவது மிகவும் விசேஷம். ரங்கநாத பெருமாளை அமாவாசை மற்றும் ஏழு அல்லது பதினோரு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணக்கஷ்டம், திருமணத்தடை போன்றவை தீர்ந்து செல்வச் செழிப்பு, மகிழ்ச்சியான இல்லறம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்
இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார்
தென்காசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது நீலமணிநாத சுவாமி கோவில். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, 'அர்ஜுனபுரி க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி, நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு, திருவோண நட்சத்திர தினத்தில் கறிவேப்பிலை சாதம், பாயாசம் நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.
இக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் தனி சன்ன தியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சக்கரத்தாழ்வாரையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்று இருக்கின்றது. சக்கரத்தாழ்வாரின் இந்தத் தோற்றம் மற்ற இடங்களில் இல்லாத அபூர்வக் கோலமாகும். சக்கரத்தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோவில்
துளசி தீர்த்தத்துடன் மிளகும் பிரசாதமாக வழங்கப்படும் பெருமாள் கோவில்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள சூலூர் தலத்தில் அமைந்துள்ளது திருவேங்கடநாதப் பெருமாள் கோயில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இது பெருமாள் கோவில்களில் ஓர் அபூர்வ அமைப்பாகும்.
பொதுவாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால், இக்கோயிலில் துளசி தீர்த்தம் வழங்கியபின் சிறிதளவு மிளகு வழங்குகிறார்கள். பெருமாளே, மிளகு கேட்ட வரலாற்றாலும், ஓரு பிடி மிளகு கொடுத்ததன் சிறப்பாலும், இன்றும் இக்கோயிலில் மதியம் பெருமாளுக்கு மிளகு நைவேத்தியம்தான் படைக்கப்படுகிறது. அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்கள். மேலும், வருடம் முழூவதும் மிளகு வைத்துக் காரமாகப் பூசை செய்வதால் இனிப்பான அதாவது, சர்க்கரைப் பொங்கல் தவிர வேறு நைவேத்தியம் இங்கு கிடையாது. பெருமாளின் வெப்பம் குறைய விசேஷ நாட்களில் பச்சரிசியை ஊற வைத்து சர்க்கரை, ஏலக்காய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கலந்து படைப்பதும் உண்டு. மிளகே அக்னி வடிவமாக இருப்பதால் இக்கோவில் சுவாமிக்குத் தவிர, சுபகாரியங்களுக்கு அக்னி உபயோகிப்பதில்லை.
தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில்
சிவபெருமானைப்போல் நெற்றிக் கண்ணும், மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரமும் உடைய ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் அபூர்வக் கோலம்
ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாதிரிமேடு என்னும் இடத்திலிருந்து பிரியும் கிளைச் சாலையில் ஒரு கி.மீ. பயணித்தால் தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவிலை அடையலாம்.
ராம பக்தனான ஸ்ரீஆஞ்சநேயருக்கு பல ஆலயங்கள் தமிழ் நாட்டில் உண்டு. ஆனால் அவரை ஐந்து முகம் கொண்ட மூர்த்தியாக சித்தரித்து அமைந்துள்ள ஆலயங்கள் ஒரு சில தலங்களில்தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ வராகம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய ஐந்து திருமுகங்களோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பஞ்சமுகத்தின் சிறப்பு
ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் திருமுகங்களும், அதன் சிறப்பம்சங்களும்
1. ஸ்ரீ கருடன்: நோய் நீக்குதல், தீராத பிணி, விஷக்கடி நீங்குதல்.
2. ஸ்ரீ வராகம்: குடும்பத்தில் வளம், சுபகாரியங்கள் தடையின்றி நடத்தல், வேலை வாய்ப்பு, முன்னேற்றம், சந்தான பிராப்தி.
3. ஸ்ரீ ஆஞ்சநேயர்: நெற்றி கண்ணுடன், ருத்திராவதார மூர்த்தியாய், எதிரிகளை அழிக்கும் தன்மை பெற்றவராய், ஆக்கிரோஷமாக விளங்குகிறார்.
4. ஸ்ரீ நரசிம்மர்: செய்வினை, பில்லி, சூனியம், இவைகள் நீங்குதல்.
5. ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அம்சம்): கல்வியில் முன்னேற்றம், ஞாபகத்திறன் அதிகரித்தல், வாக்கு வன்மை, புத்தி சாதுர்யம், மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை போன்றவை கிடைக்கும்.
இங்குள்ள மூர்த்திக்கு சிவபெருமானைப்போல் நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதும், இவரது வலது, இடது கரங்களில் மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரம் ஏந்தி இருப்பதும், வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அபூர்வக் கோலமாகும்..
Comments (0)Newest First
கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்
நிலம், வீடு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பெருமாள்
கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் அம்புஜவல்லி.
உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை, 'ஆதிவராகர்' என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக 'வராக சாளக்கிராமம்' உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.
தல வரலாறு
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.
கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்
தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.
ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
சின்னமனூர் லட்சுமிநாராயணர் கோவில்
வயிற்று வலி தீர்க்கும் பெருமாள் திருமஞ்சனத் துண்டு
தேனியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமனூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது லட்சுமிநாராயணர் கோவில். 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
குருவாயூரப்பன் தோற்றத்தில் பெருமாள்
ஒரு சமயம் சேர மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, 'லட்சுமி நாராயணர்' என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.
கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், கழுத்தில் சாளக்கிராம மாலையும், நான்கு திருக்கரங்களில் சங்கு சக்கரமும், அபய ஹஸ்தத்துடன் தான ஹஸ்தமும் திகழக் காட்சி தருகிறார். பெருமாள், குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், இங்கும் லட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள்.
பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு
ஒரு சமயம் இக்கோவிலில், ஆஞசநேயருக்கு தனிச் சன்னதி அமைத்து அதில் அவருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய முற்பட்டார்கள். அப்போது ஆஞ்சநேயரைத் தன் அருகிலேயே பிரதிஷ்டை செய்து விடும்படி பெருமாள் ஒரு பக்தரின் மூலம் உத்திரவிட்டாராம். பொதுவாக ராமபிரானுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், இங்கு பெருமாளுடன் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பாகும்.
வயிற்று வலி தீர பெருமாளுக்கு திருமஞ்சனம்
வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர். பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், வயிற்று வலி நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள்.
தீராத நோய் மற்றும் அடிக்கடி உடல் வலி வந்து அவதிப்படும் பக்தர்கள் ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளின் திருப்பாதத்தில் 9 மிளகுகளை வைத்து வழிபட்டுப் பெற்றுக்கொண்டு, அவற்றைத் தினமும் ஒன்று வீதம் சாப்பிட, தீராத நோயும் தீரும்; உடல் வலி அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க, தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்
108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த பல சிறப்பு அம்சங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
01. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் 'ஏழு பிரகாரங்களுடன்., ஏழு மதில்களை' கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.
02. ஏழு 'பெரிய' பெருமை உடைய
1) பெரிய கோவில்
2) பெரிய பெருமாள்
3) பெரிய பிராட்டியார்
4) பெரிய கருடன்
5) பெரியவசரம்.
6) பெரிய திருமதில்
7) பெரிய கோபுரம்
இப்படி அனைத்தும் 'பெரிய' என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
03. ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சியார்கள்
1) ஸ்ரீதேவி
2) பூதேவி.
3) துலுக்க நாச்சியார்
4) சேரகுலவல்லி நாச்சியார்
5) கமலவல்லி நாச்சியார்
6) கோதை நாச்சியார்
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்
04. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்
1) விருப்பன் திருநாள்
2) வசந்த உற்சவம்
3) விஜயதசமி
4) வேடுபரி
5) பூபதி திருநாள்
6) பாரிவேட்டை
7) ஆதி பிரம்மோத்சவம் ஆகியவை
05.ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்
1) சித்திரை
2) வைகாசி
3) ஆடி
4) புரட்டாசி
5) தை
6) மாசி
7) பங்குனி
06. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்
1) சித்திரை
2) வைகாசி
3) ஆவணி
4) ஐப்பசி
5) தை.
6) மாசி
7) பங்குனி
07. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
08. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் (30 நாட்களும்) தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
09. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 'ராமாவதாரம் ஏழாவது' அவதாரமாகும்.
10. இராப்பத்து ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
1) கோடை உற்சவம்
2) வசந்த உற்சவம்
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை
4) நவராத்திரி
5) ஊஞ்சல் உற்சவம்
6) அத்யயநோத்சவம்
7) பங்குனி உத்திரம்
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
1) பொய்கையாழ்வா, பூதத்தாழ்வார், பேயாழ்வார்
2) நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார்
3) குலசேகராழ்வார்
4) திருப்பாணாழ்வார்
5) தொண்டரடிப் பொடியாழ்வார்
6) திருமழிசையாழ்வார்
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்
13. இராப்பத்து 'ஏழாம் திருநாள்' நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்
14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 'ஏழு கோபுரங்கள்' உள்ளன.
1) நாழிகேட்டான் கோபுரம்
2) ஆர்யபடால் கோபுரம்
3) கார்த்திகை கோபுரம்,
4) ரங்கா ரங்கா கோபுரம்
5) தெற்கு கட்டை கோபுரம் – I
6) தெற்கு கட்டை கோபுரம் – II
7) ராஜகோபுரம்
15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்
4) அத்யயநோற்சவம் ~
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்
16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.
1) பூச்சாண்டி சேவை.
2) கற்பூர படியேற்ற சேவை.
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.
6) தாயார் திருவடி சேவை.
7) ஜாலி சாலி அலங்காரம்
17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்
1) நவராத்ரி மண்டபம்.
2) கருத்துரை மண்டபம்
3) சங்கராந்தி மண்டபம்,
4) பாரிவேட்டை மண்டபம்
5) சேஷராயர் மண்டபம்
6) சேர்த்தி மண்டபம்.
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்
18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.
19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப் பெற்றுள்ளன.
20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கும் தனி சன்னதி உள்ளது
1) ராமானுஜர்
2) பிள்ளை லோகாச்சாரியார்
3) திருக்கச்சி நம்பி
4) கூரத்தாழ்வான்
5) வேதாந்த தேசிகர்
6) நாதமுனி
7) பெரியவாச்சான் பிள்ளை
21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ‘ஏழு முறை’ சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்
1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்
2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்.
(3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்
4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்
5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்
6) பூபதி திருநாள் ~ தை மாதம்
7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்
22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்
1) யானை வாஹனம் ~ சித்திரை, தை, மாசி
2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை, தை, பங்குனி
3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை, தை, பங்குனி
4) இரட்டை பிரபை ~ சித்திரை, மாசி, பங்குனி
5) சேஷ வாஹனம் – சித்திரை, தை, பங்குனி
6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை, தை, மாசி
7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை, தை, மாசி
23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாஹனங்களில் மட்டும் உலா வருவார்.
24. கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும், யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~ ஆகிய ஏழு வாஹனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது இல்லை.
25. மற்ற கோவில்களில் காண முடியாதவை
1) தச மூர்த்தி
2) நெய் கிணறு
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்
4) 21 கோபுரங்கள்
5) நெற்களஞ்சியம்
6) தன்வந்தரி
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி
ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்
மூலஸ்தானத்தில் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வடமேற்கே சுமார் 1 கி.மீ. தூரத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது தசாவதார கோவில்.
ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி, ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை எறறு, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம்தான் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோவிலாகும்.இக்கோவில் மூலஸ்தானத்தில் பெருமாள் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தோற்றத்தில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்மர் ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில் அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும் கல்கி அவதாரம்,குதிரைவாகனத்தில், கேடயம் கத்தியுடனும் காட்சியளிக்கிறார்கள். மச்ச (மீன்) கூர்ம (ஆமை) அவதாரங்கள் அவதார நிலையிலேயே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளன. இங்குள்ள உற்சவ மூரத்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருககு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது தனிசிறப்பாகும். பத்து அவதாரங்களுக்கும் ஒரு கலசம் வீதம், விமானத்தில் பத்து கலசங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானம் செவ்வக வடிவில் இருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.
கிரக தோஷ நிவர்த்தி தலம்
இங்குள்ள ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு கிரகத்தின் தலைவராகக் கருதப்படுகிறது. குறிப்பாக மச்ச-கேது, கூர்ம-சனீஸ்வரர், வராக-ராகு, நரசிம்மா-செவ்வாய், வாமன-குரு, பரகராம-சுக்கிரன், ராம-சூரியன், கிருஷ்ணன்-சந்திரன், பலராமன்-மாந்தி, கல்கி-புதன் ஆகிய கிரக தோஷங்களை நிவர்த்தி செய்கின்றனர். அதனால், கிரக தோஷமுடையவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் இக்கோவிலை வழிபட்டு பலன் பெறலாம்.
எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்
மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் அபூர்வக் காட்சி
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள எண்கண் தலத்தில் அமைந்துள்ளது, ஆதிநாராயண பெருமாள் கோவில்.
பொதுவாக, பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நிலைகளிலும், சிறப்பம்சமாக நடந்த நிலை எனப்படும் திரிவிக்ரம அவதார நிலையிலும் தரிசனம் தருவார். பெருமாளின் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார், நின்ற நிலையில் கைகூப்பியபடி காட்சி தருவார். திருவிழாக் காலங்களில் உற்ஸவ மூர்த்திகள் மட்டும் கருடாழ்வாரின் மீதேறி கருட வாகனராக சேவை சாதிப்பார்.
ஆனால் இந்த எண்கண் திருத்தலத்தில், பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் தரிசிக்கும் வகையில், மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்று மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ள அமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது. இங்கே கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
ஒருசமயம் பிருகு முனிவர் இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அச்சமயம் சிங்க வேட்டைக்கு வந்த சோழ மன்னன் படைகள் எழுப்பிய கூச்சலால் அவர் தவம் கலைந்தது. அதனால் சோழ மன்னனின் முகம் சிங்க முகமாக மாற சபித்து விட்டார். தனது செயலை எண்ணி வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினான்.
மனம் இரங்கிய பிருகு முனிவர், 'தைப்பூசத் திருநாளில், விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் எனப்படும் இந்தத் தலத்தில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்டால், அப்போது, பெருமாள் கருடன் மீதமர்ந்து காட்சி தருவார். மயில் மீது முருகனும் அமர்ந்து காட்சி தர, சாப விமோசனம் கிட்டும். அதன்பின்னர்,பெருமானுக்கு சிம்ம, ரிஷப, மயூர, அன்ன, மேஷ வாகானாதிகள் உள்பட 108 வாகனங்கள் அமைத்து பெருவிழாவை நடத்த வேண்டும்' என்றார். அதன்படி சோழனும் பெருமாளை நினைந்து மனமுருகி வழிபட்டு வந்தான்.
சோழ மன்னனின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்க்கும் விதத்தில், பெருமாள் கருட வாகனத்தில் பறந்து வந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். முருகனும் மயில் மீது அமர்ந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். அதன்மூலம், மன்னனின் சிங்க முகம் மாறி பழைய நிலை அடைந்தான்.
சோழனுக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி கொடுத்த அதே அமைப்பில் சோழ மன்னன் பெருமாளுக்கு இங்கே கோயில் எழுப்பினானாம். எனவே இங்கே கருவறையில் மூலவர் பெருமான் கருட வாகனத்தில் அமர்ந்த நிலையில் நித்திய கருடசேவையாக பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.
மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்
பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததன் காரணமாக இத்தலம் மிருகசீர்ஷ நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் தோன்றி மிருக சீரிட நட்சத்திரக்காரர்களின் நட்சத்திர தோஷத்தை நீக்குவதாக ஜதீகம்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வழிபாடு செய்ய வேண்டும்.
நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக பெருமாளே திதி கொடுக்கும் தலம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது நென்மேலி திருத்தலம். மூலவர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். உற்சவர் ஸ்ரீ ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணப் பெருமாள். இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ, திதியோ கொடுக்கவே இல்லை. பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு என பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக, இத்தலத்து பெருமாளே திதி கொடுத்து நம் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்.
தல வரலாறு
இத்தலம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள். யக்ஞநாராயண சர்மா வரியாக வசூலித்த பணத்தையெல்லாம், நென்மேலி பெருமாளுக்கே தம்பதியர் இருவரும் செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், 'எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே' என வருந்தினார்கள். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது தல வரலாறு.
அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோவிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம். இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் சிராத்த காரியங்கள் செய்யப்படுகின்றன. இங்கு, காலை முதல் மதிய வேளைக்குள் சிராத்தம் செய்யப்படுகிறது. வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டையும் எள்ளும் கலந்த துவையல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியை அவர்களுக்கு உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் சிராத்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து சிராத்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.
இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம். வீட்டில் சகல தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்
இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் திவ்ய தேசம்
ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர்வல்லி தாயாரும் அருள்பாலிக்கிறார்கள்.
ஒரு சமயம், பார்வதியால் குபேரனுக்கு சாபம் உண்டாயிற்று .இதனால் குபேரனிடம் இருந்து நவநிதிகளான, சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மஹாபதுமநிதி ஆகிய ஒன்பது வகைச் செல்வங்களும் விலகிச் சென்றன. அந்த நவநிதிகள் பெருமாளிடம் சென்றடைந்தன. பெருமாள் இந்த நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாள், இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதாக ஐதீகம் இத்தலத்து பெருமானை வழிபட்டு குபேரன், மீண்டும் நவநிதிகள் பெற்றதாக தல புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனமருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார். பெருமாள் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். கருவறையில் வைத்தமாநிதி பெருமாள், ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி தலம்
பாண்டிநாட்டு நவ திருப்பதியில் இது மூன்றாவது திருப்பதி. சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக இப் பாண்டிநாட்டு நவதிருப்பதிகள், நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களில் உள்ள பெருமாளை, நவ கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது.
நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். செவ்வாய் கிரகத்தால் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.
ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.
நீராஞ்சனம் விளக்கு வழிபாடு
அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.
உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்
ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள்கள் அருளும் தலம்
செங்கல்பட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் உத்திரமேரூர். இந்த ஊரில் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 9 பெருமாள்களை தரிசிக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் எங்கு வசிக்கிறார்களோ. அங்கே நவமூர்த்திகள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது மரீசி சம்ஹிதை எனும் ஞான நூல். அந்த வகையில் ஒன்பது பெருமாள்களுடன் அமைந்த கோயில் இது ஆகவே, நவநாராயணர் கோயில் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.
இந்தக் கோயிலில் மூன்று தளங்கள் இருக்கின்றன. அதாவது ஒன்றின் மீது ஒன்றாக மூன்று கருவறைகள் அமைந்துள்ளன. தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள இரண்டு பிரதானக் கருவறைகளைச் சுற்றி மூன்று பிரதான திசைகளிலும் திசைக்கொன்றாக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இந்தக் கோவிலின் மூன்று நிலைகளில் உள்ள மூலமூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது.
கீழ்த்தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் காடசி தரும் பெருமாள், மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு ஏந்தியும், கீழ் கைகள் அபய ஹஸ்த முத்திரையும் கடிஹஸ்த முத்திரை காட்டியபடியும், காட்சி தருகிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்குக் கிடைத்ததாம். அதே தனத்தில் பிராகாரத்தில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி முறையே அச்சுத வரதர், அதிருத்த வரதர், கல்யாண வரதர் அருன்கிறார்கள். ஆக கீழ்த் தளத்தில் 4 பெருமான்கள் அருள்பாலிக்கிறார்கள்.
முதல் தளத்தில் நடுநாயகமாக கிழக்கு நோக்கி வைகுண்ட நாதர் அருள்கிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான தர்மனுக்குக் கிடைத்ததாம்.பிராகாரச் சுற்றில் தெற்கு நோக்கி கண்ணன், மேற்கு நோக்கி நாசிம்மர், வடக்கு நோக்கிப் பூவராகர் என இங்கும் 4 பெருமாள்கள் சேவை சாதிக்கிறார்கள். மேல்தளத்தில் அனந்தசயனப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
பாண்டவ சகோதரர்கள் இழந்த ஆட்சியை மீட்டுத் தந்த தலம்
இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலம் சுந்தர வரத பெருமாள் கோயில். இந்த கோவிலை வழிபட்டபிறகே பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தக் கோயிலுக்குச் சென்று தவநாராயணரையும் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பொன்மலை விஜயராகவப் பெருமாள் கோவில்
தம்பதியர் குறை தீர்க்கும் பெருமாள்
திருச்சிராப்பள்ளி நகரில், பொன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். கருவறையில் ராமபிரான், 'விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.
இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். அதனால், இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
திருமலை நாயக்கருக்கு பிரசன்னமாக காட்சியளித்த திருமலை வெங்கடாஜலபதி
மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில். இத்தலத்து வேங்கடாஜலபதி, மன்னர் திருமலை நாயக்கருக்கு பிரசன்னமாக காட்சியளித்ததால் பிரசன்ன வெங்கடாஜலபதி என்று அழைக்கப்படுகிறார்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் போது, தமது மகாலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக, திருப்பதியில் பூஜை செய்யும் போது தாமும் தரிசனம் செய்ய வசதியாக கோயிவில் இருந்து அவரது மகால் அனமந்திருக்கும் பகுதி வரையில் வழி நெடுக மணிகட்டி மண்டபங்களை அமைத்தார்.
கோயிலில் பூஜை தொடங்கிய உடன் அவரது பணியாளர்கள் முதம் மணியை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்படும். இறுதியில் மகால் அருகேயுள்ள மணி ஒலிக்க, பின் இங்கிருந்தே வெங்கடாஜபதியை தரிசனம செய்து விட்டு, உணவினை உண்பார். இந்நிலையில் ஓர் நாள் மணி ஒலிக்காது போக,கோபமடைந்த மன்னர் என்ன பிரச்சனை என அறிவதற்காக தனது குதிரையில் மணிகட்டி மண்டபம் நோக்கிச் சென்றார். முன்பு மாதுளை தோட்டமாக இருந்த பகுதி அருகே அவர் வந்த போது அவரது குதிரை அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கேயே மிரட்சி உடன் கணைத்தபடி நின்றது. அப்போது கீழே இறங்கிய மன்னர் அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஆஞ்சநேயர் சிலையினைக் கண்டு மனம் வியந்தார். அப்போது அவரது மனதில் பிரசன்னமாக காட்சியளித்த ஸ்ரீவெங்கடாஜபதி தினமும் தன்னை தரிசனம் செய்ய அத்தலத்திலேயே கோயில் ஒன்றினைக் கட்டும்படி அறிவுறுத்தினார். அதன் பின்பே திருமலை நாயக்கர் மன்னர், இவ்விடத்தில் இக்கோயிலை கட்டியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தலம் திருமலை நாயக்கர் மகாலுக்கு நேரே அங்கிருத்தே இறைவனை தொழும்படியாக கட்டப்பட்டுள்ளது. இந்தலத்தில் ஸ்ரீ வெங்கரஜல்பதியின் கருவறைக்கு வலப்பக்கத்தில் நின்ற நிலையில் உக்கிரமாக ஆஞ்சநேயர் அருள் பாவிக்கிறார், அவரின் உக்கிரத்தை குறைக்கும் விதமாக ஏதிரே ஒரே கல்லில் சங்கு மற்றும் சக்கரங்கள் மட்டும் செதுக்கப்பட்ட நிலையில் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
.
பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள்
ஹாதிராம் பாவாஜி என்ற ஒருவர் வடநாட்டைச் சேர்ந்தவர். திருப்பதி பெருமாளின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் பக்தியை ஏற்று வெங்கடேசப் பெருமாள், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். தன்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும் என்று ஹாதிராம் பாவாஜி, வெங்கடேசப் பெருமாளைக் கேட்டுக கொண்டார். வெங்கடேச பெருமாளும் அதையேற்று ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாடினார்.
ஒருநாள் ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாச் சென்ற பெருமாள் தான் அணித்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை ஹாதிராம் பாலாஜி தங்கியிருந்த மடத்திலேயே விட்டுச் சென்று விட்டார். ஹாரத்தைக் கண்டெடுத்த ஹாதிராம் பாலாஜி, காலையில் திருப்பதி கோயிலுக்குச் சென்று கொடுத்து விடலாம் என்று எண்ணினார். காலையில் திருப்பதி கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற அர்ச்சகர்கள் ஹாரம் இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஹாரத்தை வைத்திருந்த ஹாதிராம் பாலாஜியை, திருடன் என்று அதிகாரிகள் முடிவெடுத்து தண்டித்தனர். ஹாதிராம் பாலாஜி, பெருமாளே நேரில் வந்து சொக்கட்டான் விளளயாடிய உண்மையை சொல்லியும் யாரும் அவரை நம்புவதாக இல்லை. பாலாஜியை சிறை வைத்தனர். அவரிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த அறையிலுள்ள கரும்புக் கட்டுக்கள் அனைத்தையும் நீங்களே தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நிபந்தனை விதித்தனர். ஹாதிராம் பாலாஜி பக்தியுடன் பெருமாளை தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் அனைத்து கரும்புக் கட்டுகளையும் தின்று தீர்த்து தனது பக்தனின் பெருமையை உலகறியச் செய்தார்.
திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் ஹாதிராம் பாவாஜியின் அதிஷ்டானம் உள்ளது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
2. திருவேங்கடவனின் மாமனார்
https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr