தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில்

சிவபெருமானைப்போல் நெற்றிக் கண்ணும், மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரமும் உடைய ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் அபூர்வக் கோலம்

ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாதிரிமேடு என்னும் இடத்திலிருந்து பிரியும் கிளைச் சாலையில் ஒரு கி.மீ. பயணித்தால் தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவிலை அடையலாம்.

ராம பக்தனான ஸ்ரீஆஞ்சநேயருக்கு பல ஆலயங்கள் தமிழ் நாட்டில் உண்டு. ஆனால் அவரை ஐந்து முகம் கொண்ட மூர்த்தியாக சித்தரித்து அமைந்துள்ள ஆலயங்கள் ஒரு சில தலங்களில்தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், தத்தனூர் ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ வராகம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய ஐந்து திருமுகங்களோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பஞ்சமுகத்தின் சிறப்பு

ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயரின் திருமுகங்களும், அதன் சிறப்பம்சங்களும்

1. ஸ்ரீ கருடன்: நோய் நீக்குதல், தீராத பிணி, விஷக்கடி நீங்குதல்.

2. ஸ்ரீ வராகம்: குடும்பத்தில் வளம், சுபகாரியங்கள் தடையின்றி நடத்தல், வேலை வாய்ப்பு, முன்னேற்றம், சந்தான பிராப்தி.

3. ஸ்ரீ ஆஞ்சநேயர்: நெற்றி கண்ணுடன், ருத்திராவதார மூர்த்தியாய், எதிரிகளை அழிக்கும் தன்மை பெற்றவராய், ஆக்கிரோஷமாக விளங்குகிறார்.

4. ஸ்ரீ நரசிம்மர்: செய்வினை, பில்லி, சூனியம், இவைகள் நீங்குதல்.

5. ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அம்சம்): கல்வியில் முன்னேற்றம், ஞாபகத்திறன் அதிகரித்தல், வாக்கு வன்மை, புத்தி சாதுர்யம், மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை போன்றவை கிடைக்கும்.

இங்குள்ள மூர்த்திக்கு சிவபெருமானைப்போல் நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதும், இவரது வலது, இடது கரங்களில் மகாவிஷ்ணுவைப்போல் சங்கு சக்கரம் ஏந்தி இருப்பதும், வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அபூர்வக் கோலமாகும்.

 
Previous
Previous

சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோவில்

Next
Next

திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோவில்