உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்

ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள்கள் அருளும் தலம்

செங்கல்பட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் உத்திரமேரூர். இந்த ஊரில் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 9 பெருமாள்களை தரிசிக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் எங்கு வசிக்கிறார்களோ. அங்கே நவமூர்த்திகள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது மரீசி சம்ஹிதை எனும் ஞான நூல். அந்த வகையில் ஒன்பது பெருமாள்களுடன் அமைந்த கோயில் இது ஆகவே, நவநாராயணர் கோயில் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.

இந்தக் கோயிலில் மூன்று தளங்கள் இருக்கின்றன. அதாவது ஒன்றின் மீது ஒன்றாக மூன்று கருவறைகள் அமைந்துள்ளன. தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள இரண்டு பிரதானக் கருவறைகளைச் சுற்றி மூன்று பிரதான திசைகளிலும் திசைக்கொன்றாக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இந்தக் கோவிலின் மூன்று நிலைகளில் உள்ள மூலமூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது.

கீழ்த்தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் காடசி தரும் பெருமாள், மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு ஏந்தியும், கீழ் கைகள் அபய ஹஸ்த முத்திரையும் கடிஹஸ்த முத்திரை காட்டியபடியும், காட்சி தருகிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்குக் கிடைத்ததாம். அதே தனத்தில் பிராகாரத்தில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி முறையே அச்சுத வரதர், அதிருத்த வரதர், கல்யாண வரதர் அருன்கிறார்கள். ஆக கீழ்த் தளத்தில் 4 பெருமான்கள் அருள்பாலிக்கிறார்கள்.

முதல் தளத்தில் நடுநாயகமாக கிழக்கு நோக்கி வைகுண்ட நாதர் அருள்கிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான தர்மனுக்குக் கிடைத்ததாம்.பிராகாரச் சுற்றில் தெற்கு நோக்கி கண்ணன், மேற்கு நோக்கி நாசிம்மர், வடக்கு நோக்கிப் பூவராகர் என இங்கும் 4 பெருமாள்கள் சேவை சாதிக்கிறார்கள். மேல்தளத்தில் அனந்தசயனப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

பாண்டவ சகோதரர்கள் இழந்த ஆட்சியை மீட்டுத் தந்த தலம்

இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலம் சுந்தர வரத பெருமாள் கோயில்.

இந்த கோவிலை வழிபட்டபிறகே பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கோயிலுக்குச் சென்று தவநாராயணரையும் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வைகுண்ட நாதர்

 
Previous
Previous

கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில்

Next
Next

தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்