எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்
மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது எழுந்தருளியிருக்கும் அபூர்வக் காட்சி
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள எண்கண் தலத்தில் அமைந்துள்ளது, ஆதிநாராயண பெருமாள் கோவில்.
பொதுவாக, பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நிலைகளிலும், சிறப்பம்சமாக நடந்த நிலை எனப்படும் திரிவிக்ரம அவதார நிலையிலும் தரிசனம் தருவார். பெருமாளின் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார், நின்ற நிலையில் கைகூப்பியபடி காட்சி தருவார். திருவிழாக் காலங்களில் உற்ஸவ மூர்த்திகள் மட்டும் கருடாழ்வாரின் மீதேறி கருட வாகனராக சேவை சாதிப்பார்.
ஆனால் இந்த எண்கண் திருத்தலத்தில், பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் தரிசிக்கும் வகையில், மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்று மூலஸ்தானத்தில் பெருமாள் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ள அமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது. இங்கே கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
ஒருசமயம் பிருகு முனிவர் இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அச்சமயம் சிங்க வேட்டைக்கு வந்த சோழ மன்னன் படைகள் எழுப்பிய கூச்சலால் அவர் தவம் கலைந்தது. அதனால் சோழ மன்னனின் முகம் சிங்க முகமாக மாற சபித்து விட்டார். தனது செயலை எண்ணி வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினான்.
மனம் இரங்கிய பிருகு முனிவர், 'தைப்பூசத் திருநாளில், விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் எனப்படும் இந்தத் தலத்தில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்டால், அப்போது, பெருமாள் கருடன் மீதமர்ந்து காட்சி தருவார். மயில் மீது முருகனும் அமர்ந்து காட்சி தர, சாப விமோசனம் கிட்டும். அதன்பின்னர்,பெருமானுக்கு சிம்ம, ரிஷப, மயூர, அன்ன, மேஷ வாகானாதிகள் உள்பட 108 வாகனங்கள் அமைத்து பெருவிழாவை நடத்த வேண்டும்' என்றார். அதன்படி சோழனும் பெருமாளை நினைந்து மனமுருகி வழிபட்டு வந்தான்.
சோழ மன்னனின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்க்கும் விதத்தில், பெருமாள் கருட வாகனத்தில் பறந்து வந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். முருகனும் மயில் மீது அமர்ந்து சோழ மன்னனுக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். அதன்மூலம், மன்னனின் சிங்க முகம் மாறி பழைய நிலை அடைந்தான்.
சோழனுக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி கொடுத்த அதே அமைப்பில் சோழ மன்னன் பெருமாளுக்கு இங்கே கோயில் எழுப்பினானாம். எனவே இங்கே கருவறையில் மூலவர் பெருமான் கருட வாகனத்தில் அமர்ந்த நிலையில் நித்திய கருடசேவையாக பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.
மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்
பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததன் காரணமாக இத்தலம் மிருகசீர்ஷ நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் தோன்றி மிருக சீரிட நட்சத்திரக்காரர்களின் நட்சத்திர தோஷத்தை நீக்குவதாக ஜதீகம்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நட்சத்திர நாட்களில் இங்கு வழிபாடு செய்ய வேண்டும்.