திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்

திருநாங்கூர் பதினொரு பெருமாள்கள் கருட சேவை

பெரிய திருவடி எனப்படும், கருடாழ்வார் மீது பெருமாள் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை'. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

108 திவ்ய தேசங்களில் திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. அவை

1. திருமணிமாடக் கோவில்

2. திருக்காவளம்பாடி

3. திருஅரிமேய விண்ணகரம்

4. திருவண்புருடோத்தமம்

5. திருச்செம்பொன்செய் கோவில்

6. திருவைகுந்த விண்ணகரம்

7. திருத்தேவனார்த் தொகை

8. திருத்தெற்றியம்பலம்

9. திருமணிக்கூடம்

10. திருவெள்ளக்குளம்

11. திருப்பார்த்தன்பள்ளி

தை அமாவாசைக்கு மறுதினம் மதிய வேளையில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திவ்ய தேசங்களில் இருந்து, ஸ்ரீநாராயணப் பெருமாள் (மணிமாடக் கோவில்), ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோவில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள், தங்க கருட வாகனத்தில் , திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருள்வார்கள். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி, ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார்.

அதையடுத்து, இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும்.

மேலும் பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசித்த புண்ணியம்

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது. அதாவது, இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால், அதற்கு ஈடான இன்னொரு திவ்யதேச பெருமாளை தரிசித்த புண்ணியமும் கிட்டும். மணிமாடக் கோவில் எம்பெருமானை வழிபடுவதால், இமயமலை பத்ரிநாத்திலுள்ள திருபத்ரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும். திருவைகுந்த விண்ணகரம் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீவைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர். அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரை பெருமாளை சேவித்த பாக்கியததை அருள்கிறார். திருத்தேவனார் தொகை பெருமாள், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தை பெருமாளை தரிசித்த பலனை அருள்கிறார். திருவண்புருஷோத்தம பெருமாளை தரிசித்தால் ராமன் அவதரித்த அயோத்தி திவ்ய தேசத்தை தரிசித்த பலன் கிட்டும். செம்பொன்செய் கோவில் பெருமாள் காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். திருத்தெற்றியம்பலம் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளைச் சேவித்த புண்ணியத்தைத் தருவார். திருவெள்ளக்குளம் பெருமாள் திருமலை வேங்கடநாதனை தரிசித்த புண்ணியம் தருவார். திருமணிக்கூடம் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வணங்கிய நற்பலன்களைத் தருவார். திருக்காவளம்பாடி பெருமாள், காஞ்சிபுரம் பாடக பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். திருபார்த்தன்பள்ளி பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வழிபட்ட பலனை தருகிறார்.

ஹம்சவாகனத்தில் திருமங்கையாழ்வார்

 
Previous
Previous

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

Next
Next

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்