
சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவில்
செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்யும் சென்னிமலை முருகன்
வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சிறப்பு
ஈரோட்டில் இருந்து 27 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள திருப்புகழ் தலம் சென்னிமலை. மலைக்கு மேலே செல்ல, 1320 படிக்கட்டுகளும், 4 கி.மீ. நீளம் உள்ள தார் சாலையும் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். கந்தசஷ்டி கவசம் பாடல் அரங்கேறிய திருத்தலம் இது.
இங்கு முருகன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், இத்தலம், செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், செவ்வாய் தோஷத்துக்கான காரணிகள் நீங்கி, நல்ல வாழ்க்கையை அடைவார்கள். சூரசம்ஹாரத்தின் போது குரு பரிகார தலமான திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டால், குரு தோஷம் நிவர்த்தி பெறும். அது போல கந்தசஷ்டியின் போது சென்னிமலை முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும்.
இத்தலத்தில் மூலவரே செவ்வாய் அம்சமாக விளங்குவதால், அவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அமைந்து அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவர் சென்னிமலை ஆண்டவரை வலம் வந்து வணங்கினாலே, நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பது இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.
இங்கு வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சந்நிதி வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும்.

மரண தண்டனையை மாற்றிய முருகன் பாடல்
நம் நாட்டு விடுதலைக்காக போராடிய இஸ்லாமியரின் உயிரை காத்த முருகன் பாடல்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் திரைப்படம் நம் நாட்டில் வெகுவாக வேரூன்றவில்லை. நாடகங்களும் இசைக் கச்சேரியும் தான் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. இசைப் பாடகர்களையும், நாடக நடிகர்களையும் மேடையில் நேரில் பார்க்க மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். நாடகங்களில் ஆர்மோனியம் வாசிப்பவர்கள் மேடையின் ஓரத்தில், திரை மறைவில் வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இந்த நிலையை மாற்றி, மக்கள் எதிரில் ஆர்மோனியத்தை வாசித்த முதல் இசைக் கலைஞர் காதர் பாட்ஷா. திருச்சி உறையூர் பகுதியில் பிறந்தவர். மக்கள் மத்தியில் பிரபலமான ஆர்மோனியக் கலைஞர்.புகழ் பெற்ற நாடக நடிகர், நடிகைகளுக்கு இணையாக மக்களால் ரசிக்கப்பட்டவர் ஆர்மோனியம் காதர் பாட்ஷா. ஒலிபெருக்கி இல்லாத காலத்திலேயே ஐந்தரை கட்டையில் இவர் பாடும் பாட்டும், ஆர்மோனிய இசையும் அரங்கத்தின் கடைசி வரிசையில் இருப்பவருக்கும் தெளிவாகக் கேட்கும். அப்போது புகழ்பெற்றிருந்த இசைக்குழுக்கள் எல்லாம் காதர் பாட்ஷாவின் ஆர்மோனியத்துக்காக காத்திருந்தன. அவர் இடம் பெற்றால் 'சக்கரவர்த்தி காதர் பாட்ஷாவின் ஆர்மோனிய இசையுடன்...' என்று விளம்பரம் செய்வார்கள். அதற்காகவே கூட்டம் கூடும். இவருக்கு ஆர்மோனிய சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயரும் உண்டு.
காதர் பாட்ஷா தனது கச்சேரிகளில் தேசபக்தி பாடல்களும், இந்து இஸ்லாமிய ஒற்றுமை குறித்த பாடல்களும், இஸ்லாமிய பாடல்களும், இந்து கடவுள்கள் பற்றிய பாடல்களையும் பாடுவார். தடை செய்யப்பட்ட தேசபக்தி பாடல்களை இவர் பாடியதால் ஆங்கிலேய அரசு இவரை கைது செய்தது. விடுதலை செய்யப்பட்ட பிறகும், அவர் சுதந்திரப் போராட்டத்திற்காக தொடர்ந்து தேசபக்தி பாடல்களை பாடி வந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஆங்கிலேய அரசு, காதர் பாட்ஷாவின் மீது பொய்யான ஒரு கொலை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தது. வழக்கின் முடிவில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரை தூக்கில் போடுவதற்கான நாள் வந்தது. அவரை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல சிறை வார்டன், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர், சிறை டாக்டர் ஆகிய மூன்று ஆங்கிலேயர்கள் அவரிடம் வந்தனர். அவரை தூக்கில் போடும் முன் அவரது கடைசி ஆசை என்ன என்று சிறை அதிகாரிகள் கேட்க, அவர் தன் ஆர்மோனியத்தை இசைத்து, ஒரு பக்தி பாடல் பாட விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு ஆர்மோனியம் பெட்டி தருவிக்கப்பட்டு, கொடுக்கப்பட்டது.
காதர் பாட்ஷா தனது கம்பீர குரலில் கானம்,தாளம்,பல்லவி,சரணம் ஸ்ருதிநயம் பிசகாமல் கீழ்க்கண்ட முருகன் பாடலை பாடினார்.
சுருளி மலை மீதில் மேவும் சீலா – உனைத்
தோத்திரத்தேன் சுப்ரமண்ய வேலா – பசுந்
தோகைமயில் மீதில் ஏறி
வாருடனே காத்தருளும் ஐயா – முருகைய்யா
அவர் பாட ஆரம்பித்ததும், அந்த மூன்று ஆங்கிலேயர்களும் மெய்மறந்து கேட்டிருக்கிறார்கள். காதர் பாட்ஷா அந்தப் பாடலை பாடி முடிக்க முக்கால் மணி நேரம் ஆனது. இதனால் தூக்குக் தண்டனை நிறைவேற்றும் நேரத்தை, ஆங்கிலேய அதிகாரிகள் தவற விட்டனர். தூக்கு தண்டனை நிறைவேற்ற குறிக்கப்பட்ட நேரம் தவறினால், ஒருவரை தூக்கில் போட முடியாது, மீண்டும் நீதிபதியிடம் முன் நிறுத்தி புதிய தேதியை பெற வேண்டும் என்பது சிறை விதி.
காதர் பாட்ஷாவை அதிகாரிகள் மீண்டும் நீதிபதியிடம் முன் நிறுத்தி, அவரை மீண்டும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை உத்தரவிடுமாறு வேண்டினர். அந்த நீதிபதியும் ஒரு ஆங்கிலேயர். முந்தைய உத்தரவின்படி தூக்கிலிடுவது கால தாமதத்திற்கான காரணத்தை நீதிபதி வினவினார். மூன்று ஆங்கிலேய அதிகாரிகளும் நடந்ததை அவரிடம் விவரித்தனர். ஆங்கிலேயரான அந்த நீதிபதி தானும் அப்பாடலை கேட்க விரும்புவதாக கூறி, காதர் பாட்ஷாவிடம் ஒரு ஆர்மோனிய பெட்டியை கொடுக்குமாறு உத்தர விட்டார்.
காதர் பாட்ஷா மீண்டும் சிறையில் பாடிய அந்த முருகன் பாடலை, நீதிபதி முன் பாடினார். பாடலைக் கேட்ட ஆங்கிலேய நீதிபதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர் தனது உத்தரவில், மீண்டும் காதர் பாட்ஷாவை தூக்கிலிடுவதை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தர விட்டார். அவர் தனது உத்தரவில், இப்படி உள்ளத்தை உருக்கும் பாடலை பாடும் ஒருவர் நிச்சயம் கொலை செய்யும் அளவிற்கு கொடூர மனம் படைத்தவராக இருக்க மாட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இலஞ்சி குமாரர் கோவில்
முருகனுக்கு செலுத்தப்படும் வித்தியாசமான காணிக்கை
மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியை செலுத்தும் பக்தர்கள்
தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில், இலஞ்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது இலஞ்சி குமாரர் கோவில். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு.இத்தலத்து மூலவர் சிவபெருமானின் திருநாமம் இருவாலுக ஈசர். அகத்திய முனிவரால் வெண் மணலில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இவர். தேவநாகரியில் வெண்மணல், 'இருவாலுகம்' என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச்சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் திருநாமம் இருவாலுக ஈசர்க்கினியாள்.
இத்தலத்து முருகப்பெருமான், திருவிலஞ்சிக்குமாரர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவருக்கு இருவாலுக நாயகர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாகவும் இருந்து செயல்படுவதை உணர்த்தியவர். வேண்டும் வரத்தை அளிப்பதால் வரதராஜப்பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார். கபிலர், துர்வாசர், காசிபர்,ஆகியோர் 'உண்மையான பரம்பொருள் யார்?' என்று கேட்க 'நானே பரம்பொருள்' என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயர் சூட்டிக் கொண்டார். வரதன் என்றால் வரம் தரும் வள்ளல். வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார்.
இக்கோவிலில் பிரார்த்தனை வைக்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை சற்று வித்தியாசமாக நிறைவேற்றுகிறார்கள். முருகப் பெருமானை பிரார்த்திக்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

வேளிமலை குமாரசாமி கோவில்
முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்த தலம்
முருகன் வள்ளியுடன் மட்டும் இருக்கும் அரிய காட்சி
நோய்களை தீர்க்கும் கஞ்சிப் பிரசாதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமாரசாமி கோவில். பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில், கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோவில் ஆகும். முருகனுக்கும், வள்ளி குறத்திக்கும் காதல் வேள்வி நடந்த மலை என்பதால் வேளிமலை என்றும், திருமண பருவமான குமார பருவத்தில் முருகபெருமான் இங்கு குடிகொண்டதால் குமாரகோவில் என்றும் இத்தலத்துக்கு பெயர் வந்தது.
வள்ளிதேவி நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் தோன்றினார் என்றும், நம்பிராஜன் என்ற வேடர் தலைவரால் வளர்க்கப்பட்ட அவர் தினை புனங்காக்க வேளி மலைக்கு வந்ததாகவும், இங்கு வள்ளியை சந்தித்த முருகன் அவர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. வனப்பிரதேசமான வேளி மலையில் தினைப்பயிருக்கு காவல் காத்த குறத்தி இன பெண்ணான வள்ளிதேவியின் அழகில் மயங்கிய முருகப் பெருமான் திருமணம் செய்வதற்காக வள்ளியை காதலித்ததாகவும், முதலில் வள்ளி சம்மதிக்காததால் கிழவன் வேடத்தில் வந்து காதல் கதைகள் கூறி வசப்படுத்தியதாகவும் செவிவழி கதைகள் கூறுகின்றன.
வள்ளிதேவி திருமணத்துக்கு சம்மதித்த பிறகும் பெற்றோரும், சகோதரர்களும் சம்மதிக்காமல் போனதால் வள்ளிதேவியை மலையில் இருந்து முருகபெருமான் அழைத்து வந்த போது வள்ளி தேவியின் சகோதரர்கள் சண்டை போட்டதாகவும், இறுதியில் முருகபெருமானிடம் தோல்வி கண்டு அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இதற்கு சான்றுகளாக வேளிமலையில் வள்ளிகுகை, கல்யாண மண்டபம், வள்ளிசுனை, வள்ளிகாவு போன்றவை இன்றும் காட்சி தருகின்றன. இவை திருக்கல்யாண நிகழ்ச்சியில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள், மேற்கண்ட சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. மலையில் இருந்து வள்ளிதேவியோடு முருகபெருமான் வரும் போது உறவினர்கள் சண்டை போடும் சம்பவத்தை இப்போதும் குறவர் இன மக்கள், குறவர் படுகளம் என்ற நிகழ்ச்சி நடத்தி நினைவுபடுத்தி வருகின்றனர்.
இது போல், முருகபெருமானுக்கு வள்ளிதேவியின் பெற்றோர் சீதனமாக வள்ளி சோலை, வட்டச்சோலை, கிழவன்சோலை, வள்ளிக் காவு நந்தவனம், வாணியங் கோட்டுகோணம் போன்ற இடங்களை கொடுத்ததாக திருக்கல்யாண விழாவின் போது தேவசம் போர்டு அதிகாரிகளால் சொத்துப் பட்டியல் பொதுமக்கள், பக்தர்கள் முன்னிலையில் வாசித்து காட்டும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
கோவில் கருவறையில் மூலவர் முருகப் பெருமான் சுமார் 8 அடி 8 அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இடக் கரம் இயல்பான நிலையில் பாதத்தை நோக்கியிருக்க, வலக் கரம் வரத முத்திரையுடன் திகழ்கிறது. இவர் பெரும்பாலான நாட்களில் சந்தனக் காப்புடன் தரிசனம் தருகிறார். முருகப் பெருமானுக்கு இடப் புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி எழுந்தருளி இருக்கிறார். இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும். அவர்களுடன் தெய்வயானை எழுந்தருளவில்லை. இதுவே இக் கோவிலின் தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலில் வெள்ளிக் கிழமை தோறும் நடக்கும் கஞ்சிதர்மம் பிரசித்திப் பெற்றது. அப்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் கஞ்சியானது பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றது.

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர்
45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை
பழனிமலை தெய்வம் தண்டாயுதபாணிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில், மற்ற விசேஷ நாட்களைவிட, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வருவார்கள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. தனக்கு காவடி எடுக்க விரும்பிய பக்தனுக்கு, முருகன் செய்த அருள் லீலைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு சமயம் அவரைக் கடுமையான நோய் தாக்கியது. ஒவ்வொரு நாளும் அவர் உடல் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பழனி முருகனை நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு உறங்கி விடுவார். ஒரு நாள் இரவில் அழகிய இளைஞன் ஒருவன் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழனிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழனிமலை முருகன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து, இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.
மகிழ்ச்சி அடைந்த துரைசாமிக் கவிராயர், பழனி முருகனுக்கு 'அன்னக்காவடி' எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார். துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழனிக் குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். 'துரைசாமிக் கவிராயர் பழனிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!' என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். 'பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்' என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழனி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார்.
அவர் பழனி சென்றடைய 45 நாட்களாயிற்று. துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!' என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழனியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழனிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழனி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.
'பழனிப் பரமனே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!' என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார். ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. பழனி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.
அப்போது துரைசாமிக் கவிராயர் பக்திப் பரவசம் பொங்க பின்வரும் பாடலைப் பாடினார்.
#பல்லவி
மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)
#அனுபல்லவி
உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)
#சரணம்
சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய
அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)
இந்த நிகழ்வை கண்ட அனைவரது உள்ளமும், உடலும் சிலிர்த்தது.

ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில்
முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்கு அஸ்திரங்கள் பெற்ற திருப்புகழ் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலம் ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில். இறைவனின் திருநாமம் ஸ்கந்த நாதர், சங்கரநாதர். இறைவியின் திருநாமம் சங்கரநாயகி அம்மன். இக்கோவில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.
ஒரு சமயம் அசுரர்களால், முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் முருகனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு, ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம்.
இத்தலத்து இறைவன் சன்னதியின் பின்புறம் முருகன், ஆதிகந்தநாதசுவாமி திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில் முருகன் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டு நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் தான் முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்குப் பல அஸ்திரங்களைப் பெற்றார். இக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில், முருகன் சங்கரியம்மையிடம் சக்திவேல் பெற்று சூரசம்ஹாரத்திற்கு செல்லும் வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்து முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
வள்ளி மட்டும் மயிலாசனத்தில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
வள்ளியை திருமணம் செய்து கொண்ட பிறகு முருகப்பெருமான் எழுந்தருளிய தலம் தான் திருமங்கலம். பொதுவாக வள்ளியும், தெய்வானையும் முருகனோடு நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் வள்ளிக்கு மயிலாசனத்தை முருகப்பெருமான் வழங்கியது இங்குதான். அதனால் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அதாவது முருகப்பெருமானும், தெய்வானையும் நின்ற கோலத்தில் இருக்க, மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் வள்ளி காட்சியளிப்பது இக்கோவிலில் மட்டும்தான்.
இங்குள்ள முருகப்பெருமான் மற்ற கோவில்களில் உள்ளது போன்று, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லாமல், ஆறுமுகமும், ஆனால் நான்கு கைகளுடன் சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இக்கோவில் முருகனை வழிபடுவது சிறப்பு. பிரிந்த தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், தம்பதியினர் கூடி வாழக்கூடிய நிலை ஏற்படும் என்பது ஐதீகம்.
.

வெள்ளக்கோவில் வீரகுமாரசுவாமி கோவில்
பக்தர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வெடி போடும் முருகன் தலம்
ஆண்கள் மட்டுமே மூலவரை தரிசிக்கும் கோவில்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார். 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான் புற்று வடிவில் எழுந்தருளி இருக்கிறார். இவர் காலில் பாதக் குறடு கவசம் அணிந்தும், இடுப்பில் தாங்குச்சையும், உடைவாளும், குத்துவாளும், வலது கையில் சூலாயுதமும் கொண்டு, கன்னி தெய்வமாகக் காட்சியளிக்கிறார். இவர் புற்றுமண்ணாலான திருமேனி உடையவர் என்பதால், சந்தன அபிஷேகம் மட்டுமே செய்கிறார்கள்.
இவர் கன்னி தெய்வமாகக் காட்சி தருவதால், பெண்கள் யாரும் கோவிலுக்குள் செல்வது கிடையாது. பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று எந்தவிதக் கட்டுப்பாடும் இங்கு இல்லை. ஆனாலும், பெண் பக்தர்கள் உள்ளே சென்று மூலவரை தரிசிப்பது இல்லை எனத் தாங்களாகவே முடிவெடுத்து, கடைப்பிடித்தும் வருகிறார்கள். மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரை வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது.
பொட்லி போடுதல் என்ற சிறப்புப் பரிகாரம், காலங்காலமாகவே இக்கோவிலில் நடைபெற்று வருகிறது. பொட்லி என்பது ஒரு வகை வெடி ஆகும். இக்கோயிலில் வெடிக்கப்படும் பொட்லி வெடியின் சத்தம் வீரகுமாரசுவாமிக்கு விருப்பமான ஒன்று. தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் வீரகுமாரசுவாமியை தரிசித்துவிட்டு, கோயிலின் எதிரே உள்ள பொட்லி போடும் மண்டபத்துக்குச் சென்று, தங்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, பொட்லி போடுவார்கள். இந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு வீரகுமாரசுவாமி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். பொதுவாக திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பொட்லி வெடி போடுவது வழக்கம்.
இக்கோவில் பக்தர்கள் கனவில் முருகன் குதிரை வாகனத்தில் காட்சி தந்ததால், இக்கோவிலில் குதிரை முருகனின் வாகனமாக கருதப்படுகிறது. இரண்டு ஐம்பொன் குதிரை சிலைகள் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இக்கோவிலுக்கு சுதையால் ஆன குதிரைகளைக் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்
பிரம்ம சாஸ்தா நிலையில், மயில்மேல் அமர்ந்த முருகனின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம். இறைவன் திருநாமம் பூலோகநாதர். இறைவியின் திருநாமம் பூலோகநாயகி. பூலோகவாசிகளுக்கு, சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம் இது.
இத்தலத்தில் கருங்கல் திருமேனி கொண்ட முருகனின் உயரம் சுமார் 4 அடி, அகலம் 3 அடி. முருகன் கையில் ஜெப மாலையுடன், மயில்மேல் அமர்ந்த திருக்கோலத்தில்,வலது காலை மடித்தும் இடது காலை தொங்கவிட்டும் , 'பிரம்ம சாஸ்தா' நிலையில் காட்சி தருகிறார். கிரீடம், கழுத்தணி, மார்பில் சூலம் போன்ற தொங்கலணி போன்ற ஆபரணங்களுடன் தியான நிலையில் அருள் புரிகிறார். துன்பத்தில் இருப்பவர்கள், 'பிரம்ம சாஸ்தா' நிலையில் எழுந்தருளி இருக்கும் இத்தலத்து முருகனை, வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும்.

படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் சூட்டிய தலம்
முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி
திருவண்ணாமலை அடுத்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோவில் அருகே உள்ள குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. படை+வீடு = படைவீடு படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால், படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று, நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.
முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய படைவீடு
படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த முருகப்பெருமானுக்கு, அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் நடத்தினான்.
முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி
இக்கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கிழக்கு பார்த்து எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அல்லது மயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், இக்கோவிலில் வடக்கு முகம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயில் மீது முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது அபூர்வமான ஒன்றாகும். அந்த மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பது

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்
யானை மேல் முருகன் அவர்ந்திருக்கும் அபூர்வ காட்சி
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி.
இத்தலத்தில் முருகப்பெருமான், யானை மீது அமர்ந்து காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப் பரிசாக, தனது பட்டத்து யானையான ஐராவதம் என்ற வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச் செய்து அக்காட்சியை கண்ணார கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன், இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.

விலங்கல்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அரிய காட்சி
கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில், கடலூர் -திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு.
அதிகமாக மலைத்தொடர்கள் இல்லாத கடலூர் மாவட்டத்தில், கூடலூர் குன்று என்ற மலை தொடரில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் கோவில். விலங்கல் என்றால் மலை என பொருள். 100 அடி உயரமுள்ள இந்த சிறிய குன்றின் மேலே ஏறுவதற்கு சரிவு படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன.
300 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாக எழுந்தருளி இருக்கிறார். இங்குள்ள மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலையின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்து இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

கந்தர்மலை முருகன் கோவில்.
தீராத நோய்களை தீர்க்கும் வள்ளி குளம் தீர்த்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில், மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை முருகன் கோவில். 750 அடி உயரமுள்ள இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 250 படிக்கட்டுகள் உள்ளன.
சூரியன், சந்திரன் ஒளி படாத வள்ளி குளம்
இந்த மலையின் மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக இன்றளவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள்.
இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக, மலை மீது உள்ள குகைக்குள், அதிகமான ருத்ராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. இங்கு 'வள்ளி குளம்' என்று ஒரு குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை. இந்த குளத்து நீரை எடுத்து பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.
ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளியம்மை, முருகப்பெருமானிடம் வேண்டினாள். உடனே முருகப்பெருமான் 'எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும்' என்று கூறினார். இதையடுத்து வள்ளியம்மை இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்று விட்டது.
இந்த குகைக் குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் 'கந்தர்மலை வேல்முருகன்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

திருமயிலாடி சுந்தரேசுவரர் கோவில்
முருகனின் பாதத்தின் கீழ் மயில் இருக்கும் அரிய காட்சி
சிதம்பரம் - சீர்காழி சாலையில் அமைந்துள்ள புத்தூர் எனும் சிற்றூரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் திருமயிலாடி சுந்தரேசுவரர் கோவில். மயிலாடி புண்ணிய இத்தலம், சீர்காழியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத்தில் பார்வதி தேவி சிவபெருமானுக்கு அழகிய மயில் வடிவில் காட்சி தந்தபோது, சிவபெருமானும் அழகிய கோலத்தில் காட்சி கொடுத்ததால் இந்தத் தலத்துக்கு திருமயிலாடி என்ற பெயரும், சிவபெருமானுக்கு சுந்தரேசுவரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது.
திருமயிலாடி தலத்தில் சிறப்பாக பார்க்கப்படுவது, இவ்வாலய முருகப்பெருமானாகும். இவருடைய திருநாமம் பாலசுப்ரமணிய சுவாமி. பெரும்பாலான கோவில்களில் முருகப்பெருமான் மேற்கு பிரகாரத்தில் கருவறைக்கு பின்னாலிருந்து கீழ்திசை நோக்கி காட்சியளிப்பார். ஆனால் இவ்வாலய முருகன் வடதிசை நோக்கி தவக்கோலத்தில் மகாமண்டபத்திலேயே தரிசனம் தருகிறார். இவர் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவர்- அசுரர் யுத்தம் முடிந்த பின்னர், சூரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனை தனது மயில் வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். பின் மயில்மீது அமர்ந்து திருமயிலாடி தலத்துக்கு எழுந்தருளினார். ஆணவமலத்தின் வடிவமாகிய சூரன் மயிலாக நின்று அவரைத் தாங்குகின்றான். ஆணவ மலத்தை அழிக்க முடியாது, அடக்கத்தான் முடியும், அடங்கியிருந்தாலும் ஆணவம் அவ்வப்போது தன் முனைப்பை காட்டிக் கொண்டிருக்கும் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது போல முருகப்பெருமானின் உற்சவதிருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனாகிய ஆணவமயில் முருகன்பாதத்தில் பாதரட்சையாக தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. இடதுகால் பெருவிரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையே தலையை தூக்கி முருகப்பெருமானின் முகத்தை எழுச்சியுடன் பார்த்தவண்ணம் தோற்றமளிக்கிறது. மற்றொரு பாதத்தில் பாதரட்சை காணப்படுகின்றது. இத்தனை எழிலார்ந்த தத்துவ பேருண்மை பொதிந்த உற்சவ மூர்த்தியை திருமயிலாடியில் மட்டுமே நாம் தரிசிக்க முடியும். பாலசுப்பிரமணியர், மயிலை தன்னடியில் வைத்திருப்பதால் மயிலடி என்ற பெயரும் இத்தலத்துக்கு உண்டு.
இழுப்பு நோய் எனும் FITS நோயை குணப்படுத்தும் முருகப்பெருமான்
சில குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வருவதுண்டு. ஜுரம் அதிகரிக்கும் பொழுது அது இழுப்பு நோய் எனும் FITS நோயாக மாறி குழந்தைகள் அதிகமான துன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்களின் துயரைத் துடைக்க பாலசுப்ரமணிய சுவாமி அருள் புரிகிறார்.
இங்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் தங்களுடைய கைகளால் அரைத்த சந்தனத்தைக் கொண்டு முருகப்பெருமானை சந்தனக் காப்பு சார்த்தி வழிபட்டு, ஏழைகளுக்கு இளநீரும், தேங்காய் சாதமும் தானமாக அளித்து வர, இழுப்பு நோய் அண்டாமல் நிவர்த்தி பெறலாம். குழந்தை நல மருத்துவர்கள் (Pediatrician) அடிக்கடி இந்த முருகப்பெருமானை வணங்கி, வழிபட்டு வர குழந்தைகளின் பிணிகளை நீக்கும் மருத்துவ குணநல சக்திகள் கிடைக்கப் பெறுவார்கள்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட திருப்பரங்குன்றம் கோவில்
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். முருகன் தெய்வானையை திருமணம் புரிந்த தலம் இது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஆன்மீக பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பு தலமாகும். இக்கோவிலில் கலை நயம் மிக்க நுணுக்கமான சிற்பங்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.
கோவில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ளது ஆஸ்தான மண்டபம். இம்மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட சிற்பங்களுடன், 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது..
மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன.
பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு குதிரைகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இந்த குதிரைகளின் உடலில் காணப்படும் அணிகலன்கள் மிகுந்த நுணுக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் தூண்களில் மீனாட்சி அம்மனின் திக்விஜயம், ஹயக்ரீவர், நரசிம்மர், ஆஞ்சநேயர், மன்மதன், ஆலவாய் அன்னல், வராகிஅம்மன் என்று பல்வேறு அழகிய, தெய்வீக சிற்ப சிலைகள் உள்ளன.
இறைவன் சத்தியகிரீசுவரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன.

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
அனுமனின் தாகத்தை தீர்த்த முருகப்பெருமான்
கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது, அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில். மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 586 படிக்கட்டுகள் உள்ளன.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால், அப்போது அவர் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால், அவர் தனது வேல் கொண்டு ஒரு சுனையை உருவாக்கி அனுமனின் தாகத்தை தீர்த்தார். இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் 'அனுமக்குமரன் மலை' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்பது ஐதீகம்.

கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் கோவில்
ராகு–கேது, காலசர்ப்ப தோஷம் நீக்கும் நாக சுப்பிரமணியர்
தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது விருப்பாச்சி ஆறுமுகநாயனார் கோவில்.
இத்தலத்து மூலவர் முருகன், ஆறு முகங்களுடன் திருவாட்சியுடன் சேர்ந்த சிலை அமைப்பில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் வயலில் கண்டெடுக்கப்பட்டவர். இங்கு வசித்த விவசாயி ஒருவரின் சுனவில் தோன்றிய முருகன் ஒரு வயலைச் சுட்டிக் காட்டி தான் அங்கு சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். தான் கண்ட கனவை விவசாயி, இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் கூறினார். அதன்பின் வயலில் முருகன் சிலையை எடுத்த அவர்கள். இங்கு பிரதிஷ்டை செய்து சன்னதி எழுப்பினர். விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள் புரிந்த முருகன் எழுந்தருளிய தலமென்பதால், விருப்பாச்சி ஆறுமுகனார் என்று மூலவர் பெயர் பெற்றார்.
நாக சுப்பிரமணியர்
மூலவர் விருப்பாச்சி ஆறுமுகனாருக்கு அருகில் ஏழு தலை நாகம் குடைப்பிடித்தபடி இருக்க, அதன் மீது மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சி தருகிறார். நாகத்தின் மத்தியில், வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவருக்கு பூஜை செய்த பின்பே மூலவரை பூஜிக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களை இவர் நீக்குவதாக ஐதீகம். ராகு – கேது, கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும் அன்பர்கள் இவருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தோஷை நிவர்த்தி அடைகிறார்கள்.
கோவில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் நீங்க வேண்டி இந்த தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில்
வள்ளியும் தெய்வயானையும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் வித்தியாசமான அமைப்பு
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அமைந்துள்ளது சிவந்தியப்பர் கோவில்.இறைவன் திருநாமம் சிவந்தியப்பர். இறைவியின் திருநாமம் வழியடிமை கொண்டநாயகி. சிவந்தியப்பர் என்ற மன்னன் இக்கோவிலைக் கட்டியதால், இத்தலத்து இறைவனுக்கும், சிவந்தியப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் பிரகாரத்தில் முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை சமேதராக எழுந்தருளி உள்ளார். பொதுவாக முருகப்பெருமானுடன் இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும், முருகருக்கு வலது பக்கமும், இடது பக்கமுமாக இருந்து பக்தர்களை பார்ப்பது போல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், முருகப்பெருமானுக்கு வலது பக்கமும், இடதுபக்கமுமாக இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்படியாக, நின்றபடி அருள் பாலிக்கின்றனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் (மிட்டாய் முருகன்) கோவில்
முருகனுக்கு மிட்டாய்களை நைவேத்தியமாக செலுத்தும் வினோத நடைமுறை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் வழியில், இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் கோவில். மிகவும் பழமையான இந்த கோவில், பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவில்களில் ஒன்றாக விளங்குகின்றது. கருவறையில், குழந்தை வடிவில் கையில் வேலுடன் திகழ்வதால், முருகப் பெருமானுக்கு குழந்தை வேலப்பர் என்று பெயர். இவருக்கு மிட்டாய் முருகன் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
ஒரு பக்தர் தனக்கு மழலைச் செல்வம் வேண்டி, இத்தலத்து முருகனிடம் பிரார்த்தனை செய்தார், அவருடைய விருப்பம் நிறைவேறியதும், அவர் இங்குள்ள முருகனை வணங்கி, தன்னுடன் வந்த உறவினர்களுக்கு சாக்லேட்களை விநியோகித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் தோன்றி, எனக்கு ஏன் மிட்டாய் கொடுக்கவில்லை என்று கேட்டார். உடனே அந்த பக்தர் கோவிலுக்கு விரைந்து வந்து, முருகனுக்கு மிட்டாய்களை வழங்கினார். அன்றிலிருந்து மிட்டாய் கொடுத்து முருகனை வழிபடும் வினோத நடைமுறை இங்கு வாடிக்கையாகிவிட்டது. கோவிலுக்கு வெளியே மிட்டாய்கள் விற்க கவுண்டர்கள் உள்ளன.
பிரார்த்தனை
இங்கு குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர்.
திருமணம், பிள்ளைவரம் முதலான வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள், குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை நைவேத்தியமாகச் செலுத்துகின்றனர். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று, குழந்தை வேலப்பருக்கு செந்நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைத்து, மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தால், கல்வித் தடை நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.
பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள், குழந்தை வேலப்பரை தரிசித்து, மிட்டாய் வழங்கிவிட்டே பழநிக்குச் செல்கின்றனர்.

முத்துமலை முருகன் கோவில்
முருகப்பெருமானின் தலைக்கிரீடத்திலிருந்து முத்து விழுந்த மலை
கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையே உள்ள கிணத்துக்கடவு என்ற ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் முத்துகவுண்டனூரில் உள்ளது, முத்துமலை முருகன் கோவில். மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு.
முருகப்பெருமான் தனது வாகனமான மயிலின் மீது உலகைச் சுற்றிக் கொண்டிருந்தபோது, அவரது கிரீடத்திலிருந்து ஒரு முத்து விழுந்தது. முருகன் அந்தமுத்துவைத் தேடியபோது, அது இந்த மலையின் மீது விழுந்திருந்தது. முருகப்பெருமான் அதை மீட்க இம்மலையின் மீது கால் வைத்தார். முருகனின் முத்து இம்மலையில் விழுந்ததால், இந்த மலை முத்துமலை என்று அழைக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, முருகப்பெருமான் ஒரு உள்ளூர் பெண்ணின் கனவில் வந்து, மூன்று காரைச் செடிகளின் (காட்டு மல்லிகை) வரிசையின் கீழ் புதைந்து இருப்பதாகக் கூறினார். இதை அந்தப் பெண் உள்ளூர் பெரியவர்களிடம் கூறியபோது, யாரும் நம்பவில்லை. தொடர்ந்து மூன்று கிருத்திகை மற்றும் பரணி நட்சத்திர நாட்களில் அவள் கனவில் முருகன் மீண்டும் தோன்றினார். அந்தப் பெண் முருகனை தேடிச் சென்றபோது, மூன்று காரைச் செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஊர் பெரியவர்கள் அவளை நம்பி, அந்த இடத்தில் ஒரு வேல் (ஈட்டி) நிறுவி, அதை முருகனின் பிரதிநிதியாகக் கருதி வழிபட்டனர். பின்னர் இந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்தலத்தில் நாகர் சன்னதி அமைந்துள்ளது. அதனால் நாக தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் இத்தலத்தில் நடத்தப்படுகின்றது. கோவிலுக்கு அருகில் ஒரு எறும்புப் புற்று உள்ளது. இந்த எறும்புப் புற்றிலிருந்து இரவு நேரங்களில் ஒரு ஒளி வெளிப்படுகிறது. இந்த ஒளியை பல பக்தர்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள். இந்த ஒளிர்விற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.