படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் சூட்டிய தலம்

முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி

திருவண்ணாமலை அடுத்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோவில் அருகே உள்ள குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. படை+வீடு = படைவீடு படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால், படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று, நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.

முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய படைவீடு

படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த முருகப்பெருமானுக்கு, அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் நடத்தினான்.

முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக் காட்சி

இக்கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கிழக்கு பார்த்து எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அல்லது மயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், இக்கோவிலில் வடக்கு முகம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயில் மீது முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது அபூர்வமான ஒன்றாகும். அந்த மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பதும், எங்கும் காணமுடியாத காட்சியாகும்.

 
Previous
Previous

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

Next
Next

தஞ்சாவூர் பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில்