கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் கோவில்

ராகு–கேது, காலசர்ப்ப தோஷம் நீக்கும் நாக சுப்பிரமணியர்

தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது விருப்பாச்சி ஆறுமுகநாயனார் கோவில்.

இத்தலத்து மூலவர் முருகன், ஆறு முகங்களுடன் திருவாட்சியுடன் சேர்ந்த சிலை அமைப்பில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் வயலில் கண்டெடுக்கப்பட்டவர். இங்கு வசித்த விவசாயி ஒருவரின் சுனவில் தோன்றிய முருகன் ஒரு வயலைச் சுட்டிக் காட்டி தான் அங்கு சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். தான் கண்ட கனவை விவசாயி, இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் கூறினார். அதன்பின் வயலில் முருகன் சிலையை எடுத்த அவர்கள். இங்கு பிரதிஷ்டை செய்து சன்னதி எழுப்பினர். விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள் புரிந்த முருகன் எழுந்தருளிய தலமென்பதால், விருப்பாச்சி ஆறுமுகனார் என்று மூலவர் பெயர் பெற்றார்.

நாக சுப்பிரமணியர்

மூலவர் விருப்பாச்சி ஆறுமுகனாருக்கு அருகில் ஏழு தலை நாகம் குடைப்பிடித்தபடி இருக்க, அதன் மீது மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சி தருகிறார். நாகத்தின் மத்தியில், வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவருக்கு பூஜை செய்த பின்பே மூலவரை பூஜிக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களை இவர் நீக்குவதாக ஐதீகம். ராகு – கேது, கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும் அன்பர்கள் இவருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தோஷை நிவர்த்தி அடைகிறார்கள்.

கோவில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷம் நீங்க வேண்டி இந்த தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர்.

மூலவருக்கு அருகில் நாக சுப்பிரமணியர்

 
Previous
Previous

திருவண்ணாமலை: அருணாச்சலேசுவரர் கோவில்

Next
Next

விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில்