ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில்
முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்கு அஸ்திரங்கள் பெற்ற திருப்புகழ் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலம் ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில். இறைவனின் திருநாமம் ஸ்கந்த நாதர், சங்கரநாதர். இறைவியின் திருநாமம் சங்கரநாயகி அம்மன். இக்கோவில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.
ஒரு சமயம் அசுரர்களால், முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் முருகனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு, ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம்.
இத்தலத்து இறைவன் சன்னதியின் பின்புறம் முருகன், ஆதிகந்தநாதசுவாமி திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில் முருகன் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டு நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் தான் முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்குப் பல அஸ்திரங்களைப் பெற்றார். இக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில், முருகன் சங்கரியம்மையிடம் சக்திவேல் பெற்று சூரசம்ஹாரத்திற்கு செல்லும் வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்து முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.