வேளிமலை குமாரசாமி கோவில்
முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்த தலம்
முருகன் வள்ளியுடன் மட்டும் இருக்கும் அரிய காட்சி
நோய்களை தீர்க்கும் கஞ்சிப் பிரசாதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமாரசாமி கோவில். பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில், கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோவில் ஆகும். முருகனுக்கும், வள்ளி குறத்திக்கும் காதல் வேள்வி நடந்த மலை என்பதால் வேளிமலை என்றும், திருமண பருவமான குமார பருவத்தில் முருகபெருமான் இங்கு குடிகொண்டதால் குமாரகோவில் என்றும் இத்தலத்துக்கு பெயர் வந்தது.
வள்ளிதேவி நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் தோன்றினார் என்றும், நம்பிராஜன் என்ற வேடர் தலைவரால் வளர்க்கப்பட்ட அவர் தினை புனங்காக்க வேளி மலைக்கு வந்ததாகவும், இங்கு வள்ளியை சந்தித்த முருகன் அவர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. வனப்பிரதேசமான வேளி மலையில் தினைப்பயிருக்கு காவல் காத்த குறத்தி இன பெண்ணான வள்ளிதேவியின் அழகில் மயங்கிய முருகப் பெருமான் திருமணம் செய்வதற்காக வள்ளியை காதலித்ததாகவும், முதலில் வள்ளி சம்மதிக்காததால் கிழவன் வேடத்தில் வந்து காதல் கதைகள் கூறி வசப்படுத்தியதாகவும் செவிவழி கதைகள் கூறுகின்றன.
வள்ளிதேவி திருமணத்துக்கு சம்மதித்த பிறகும் பெற்றோரும், சகோதரர்களும் சம்மதிக்காமல் போனதால் வள்ளிதேவியை மலையில் இருந்து முருகபெருமான் அழைத்து வந்த போது வள்ளி தேவியின் சகோதரர்கள் சண்டை போட்டதாகவும், இறுதியில் முருகபெருமானிடம் தோல்வி கண்டு அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இதற்கு சான்றுகளாக வேளிமலையில் வள்ளிகுகை, கல்யாண மண்டபம், வள்ளிசுனை, வள்ளிகாவு போன்றவை இன்றும் காட்சி தருகின்றன. இவை திருக்கல்யாண நிகழ்ச்சியில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள், மேற்கண்ட சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. மலையில் இருந்து வள்ளிதேவியோடு முருகபெருமான் வரும் போது உறவினர்கள் சண்டை போடும் சம்பவத்தை இப்போதும் குறவர் இன மக்கள், குறவர் படுகளம் என்ற நிகழ்ச்சி நடத்தி நினைவுபடுத்தி வருகின்றனர்.
இது போல், முருகபெருமானுக்கு வள்ளிதேவியின் பெற்றோர் சீதனமாக வள்ளி சோலை, வட்டச்சோலை, கிழவன்சோலை, வள்ளிக் காவு நந்தவனம், வாணியங் கோட்டுகோணம் போன்ற இடங்களை கொடுத்ததாக திருக்கல்யாண விழாவின் போது தேவசம் போர்டு அதிகாரிகளால் சொத்துப் பட்டியல் பொதுமக்கள், பக்தர்கள் முன்னிலையில் வாசித்து காட்டும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
கோவில் கருவறையில் மூலவர் முருகப் பெருமான் சுமார் 8 அடி 8 அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இடக் கரம் இயல்பான நிலையில் பாதத்தை நோக்கியிருக்க, வலக் கரம் வரத முத்திரையுடன் திகழ்கிறது. இவர் பெரும்பாலான நாட்களில் சந்தனக் காப்புடன் தரிசனம் தருகிறார். முருகப் பெருமானுக்கு இடப் புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி எழுந்தருளி இருக்கிறார். இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும். அவர்களுடன் தெய்வயானை எழுந்தருளவில்லை. இதுவே இக் கோவிலின் தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலில் வெள்ளிக் கிழமை தோறும் நடக்கும் கஞ்சிதர்மம் பிரசித்திப் பெற்றது. அப்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் கஞ்சியானது பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றது.