திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன
லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.
சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.
திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில்
மூலவராக, சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்து காட்சி தரும் ராஜதுர்க்கை அம்மன்
திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகில், திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது ராஜதுர்க்கை அம்மன் கோவில். பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மனை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் மூலவராக சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களில், சங்கு சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகவும் இச்சை, கிரியை ஞானம் ஆகிய மூன்று சக்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சக்தியாகவும், வேதம் ஆகமம், புராணம் ஆகியவற்றில் வெற்றி என்ற நாமத்திற்கு பொருளுடையவளாகவும் விளங்குபவள் ஜெய துர்க்கா. இப்படி எங்கும், எதிலும், எந்நிலையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஜெயதுர்க்கா தேவியானவள், ராஜதுர்க்கை என்ற திருநாமத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.
ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை வழிபட்டுச் சென்று, அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் ரகு வம்ச காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரார்த்தனை
பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குகிறாள் இந்த ராஜ துர்க்கை. அனைத்து யோகங்களும் விரைவிலேயே கிடைக்க, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடை நீங்க, இங்குள்ள துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர்.
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்
பக்தர்கள் பூதகணம் வேடமிட்டு பங்கேற்கும் திருக்குவளை மாசிமகம் நெல் அட்டி திருவிழா
திருவாரூரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் வண்டமர் பூங்குழலம்மை. பிரம்மன் இத்தல இறைவனை வணங்கி படைப்புத்தொழில் கைவரப் பெற்றமையால், இறைவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. பிரம்மனால் வெண்மணலால் அமைக்கப்பட்டவர் என்பதால், மூலவருக்குக் குவளை சாற்றியே வழிபடப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று இரவு 6 மணிக்கு மட்டுமே குவளை நீக்கப்பட்டு, வெண்மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிக்குத் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
திருவாரூரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும், அவரது மனைவி பரவை நாச்சியாரும், தினந்தோறும் சிவனடியார்களுக்கு உணவு படைத்து வந்தார்கள். உணவு சமைப்பதற்கான பொருட்களை, திருக்குவளை அருகே உள்ள குண்டையூரைச் சேர்ந்த வேளாளரான குண்டையூர் கிழார் என்பவர். சுந்தரருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஒரு சமயம், திடீரென பஞ்சம் ஏற்பட்டது. அதனால், சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் கவலையுற்று, இறைவனை வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், குண்டையூர் கிழாரின் கனவில் தோன்றி. சுந்தரமூர்த்தி நாயனாருக்காக உமக்கு நெல் தந்தோம் என்றருளி மறைந்தார். குண்டையூர் கிழார் கண்விழித்துப் பார்க்கையில் நெல் மலை ஒன்றை இறைவன் அருளியிருப்பதை அறிந்தார். இந்த செய்தியை அறிந்த சுந்தரர் நெல்லைப் பெற்றுச் செல்ல குண்டையூர் வந்தார். அங்கு குவிந்திருந்த நெல் மலையைக் கண்டு வியந்த சுந்தரர். அந்த நெல் அனைத்தையும் தன்னால் கொண்டு செல்ல இயலாது என்பதை உணர்ந்து, நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, திருக்குவளைக்கு வந்து திருக்கோளிலி இறைவனை வேண்டி.
"....கோளிலி எம்பெரு மான் குண்டையூர்ச்
சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
அட்டித் தரப்பணியே"
என்ற திருப்பதிகம் பாடினார். அன்றிரவே, சிவபெருமானின் அருளால் பூதகணங்கள், குண்டையூர் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சென்று ஊர் முழுவதும் நிரப்பின.
இக்கோவிலில், குண்டையூர் கிழார், சுந்தரருக்கு அளித்த நெல்லைத் திருவாருருக்குக் கொண்டு செல்ல சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா, மாசி மாதத்தில் நெல் மகோற்சவமாக, 5 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மக நட்சத்திர நாளில், திருக்குவளையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டையூருக்கு அருள்மிகு கோளிலிநாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது, பூதகணங்களைப் போல வேடமணிந்த பக்தர்கள் உடன் சென்று, குண்டையூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சியும், அங்கிருந்து திருவாருருக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இந்த மாசிமகம் நெல் அட்டி திருவிழா, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
மார்கழி திருவாதிரை பாத தரிசன விழா
திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. மூலவர் தியாகராஜரின் முழு மூர்த்தத்தையும் யாரும் கண்டதில்லை. தில்லை இரகசியம் போல, திருவாரூர் இரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோமகுல இரகசியம் என்பர். சுவாமியின் மார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால், தியாகராஜரின் முழு திருமேனியையும் நாம் தரிசிக்க முடியாது. நித்தியப்படி அவரின் திருமுக தரிசனம் மட்டுமே நமக்கு கிட்டும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். அவை மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.
தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு முறை தியாகராஜர் பாத தரிசன விழா நடைபெறுகிறது. மார்கழி மாத திருவாதிரை அன்று வலது பாத தரிசனம் விழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு இடது பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தின்போது இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூரில் வலது பாதத்தையும் காட்டுவதாக ஐதீகம்.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்
தினந்தோறும் பிரதோஷ பூஜை நடைபெறும் தேவாரத்தலம்
பொதுவாக சிவாலயங்களில் வளர்பிறை திரயோதசி மற்றும் தேய்பிறை திரயோதசி அன்று மட்டும்தான் பிரதோஷ பூஜை நடைபெறும். அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பிரதோஷ பூஜை என்பது நடைபெறும். ஆனால் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில், தினம் தோறும் மாலை 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை தொடங்கி நடைபெறும். இதற்கு நித்திய பிரதோஷம் என்று பெயர். உலகத்திலேயே நித்ய பிரதோஷ பூஜை நடைபெறும் ஒரே சிவாலயம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்தான். இந்த பூஜையின் போது தியாகராஜப் பெருமானை முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி தரிசிப்பதாக ஐதீகம்.
இந்த நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, கோடி புண்ணியம் கிட்டும். ஈரேழு ஜென்ம பாவமும் விலகும் என்பது நம்பிக்கை.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்
திருவாரூரில் பிறக்க முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. சைவ சமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். அதுபோல பெரிய கோவில், பூங்கோவில், திருமூலட்டானம் என்று குறிப்பிட்டால் அது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலை குறிக்கும். திருமூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள்.
தியாகராஜர் வரலாறு
திருமாலானவர். சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய, அகமகிழ்ந்த சிவபெருமான் உமையவளுடன் தோன்றியபோது, சிவபெருமானை மட்டும் திருமால் வணங்கியுள்ளார் கோபமடைந்த உமையவள் திருமால் மீது சாபமிட கலங்கி நின்ற திருமால். மீண்டும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதன்பின் மீண்டும் உமையவளுடன் சிவபெருமான் தோன்றியபோது, உரிய முறையில் திருமால் வணங்க, மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தாள். அதைக் கண்டு மகிழ்ந்த திருமால், சோமாஸ்கந்த திருக்கோலத்தில் எழுந்தருளக் கோரி தன் நெஞ்சக் கோயிலில் நிறுத்திக்கொண்டார். திருமாலின் உச்சுவாசித்தால் (மூச்சுக் காற்றை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் பெருமானும் அசைந்தாடி ஆனந்தங் கொண்டு திருமாலுக்குத் திருவருள் தந்தார். இதுவே அஜபா நடனம்.இது ஒரு மந்திரத்தின் பெயர். ஜபா என்றால் ஜெபித்தல். அஜபா என்றால் ஜெபிக்காது இருத்தல் என்று பொருள். அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப் படுவதில்லை.
தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்
தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். சிதம்பரம் ரகசியம் என்பது போல் திருவாரூர் ரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோம குல ரகசியம் என்பார்கள். தியாகராஜரின் திருமார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால், அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது. எனவே நம்மால் அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.
தியாகராஜ பெருமாள் திருமுடியை தலை சீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது. சதுர வடிவிலான இந்த அணிகலன், உயர்ந்த வகை ஜாதி கற்கள் பதிக்கப் பெற்றது. சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு.இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் தமது தமது தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு சிவதலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில், இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.
திருவாரூர் ஐநூற்று விநாயகர் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்த விநாயகர் கோவில்
திருவாரூர் அருகே விஜயபுரம் காந்தி சாலையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலவர் ஐநூற்று விநாயகர்.
கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் வரலாறு கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோவில் கொண்டதால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோவில் எனப் பெயர் வந்தது. அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் என்றும், இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் என்றானது. ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவருக்கு மட்டுமே கருவறையில் தினசரி பூஜை நடக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருக்குமே தினமும் ஆராதனைகள் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர்.
ஐநூற்று விநாயகரை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும். அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி
பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.
சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.
பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லாலோ அல்லது வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.
தியாகராஜர் கோவில்
கடன் தொல்லைத் தீர்க்கும் ருண விமோசனர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ருண விமோசனர், லிங்க வடிவில் தனிச் சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். ரண் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கடன் என்று பொருளும் ரண என்ற தமிழ் சொல்லுக்கு காயம் என்ற பொருளும் உண்டு. நெடுநாள் தீராத, வராத கடனையும், தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் ரு(ர)ண விமோசனர் என அழைக்கப்படுகின்றார். இந்திரன் தனது உடலில் இருந்த தோல் நோயை நீக்க இத்தலத்திலுள்ள ருண விமோசனரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான் என்று தல புராணம் கூறுகின்றது.
இந்த ருண விமோசனரை பதினொரு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவரை அமாவாசை தினத்தன்று அபிஷேகம், உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுவது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
தியாகராஜர் கோவில்
எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.
பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
ரௌத்திர துர்க்கை
ரௌத்திர துர்க்கை திருவாரூர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் எட்டுக் கரங்களுடன் எருமைத் தலையின் மேல் நின்ற கோலத்தில் வடக்கு முகமாக அருள்பாலிக்கின்றாள். இத்துர்க்கையின் வலது புறத்தில் கிளி அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இத்துர்க்கைக்கு எரிசின கொற்றவை என்ற பெயரும் உண்டு.
ரௌத்திர துர்க்கை அம்மன், ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்யும் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவர்களுடைய திருமணத்தடையை நிவர்த்தி செய்து திருமண பாக்கியத்தை அருளுகின்றாள். ரௌத்திர துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். பிரதி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால பூஜை செய்வது விசேஷம். பதவி உயர்வு வேண்டுவோரும், பணி மாற்றம் வேண்டுவோரும் இத்துர்க்கையை வழிபடுகின்றனர்.
முதன் முதலில் துர்க்கைக்கென்று தனித் துதிப்பாடல் இயற்றப்பட்டது இந்த துர்க்கைக்குத்தான். தேவாரம் பாடிய மூவருக்கும் முன் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீஞானசம்பந்த முனிவர் இயற்றிய
மாயவன் தனக்கு முன்னம் மணிமுடியளித்து ஆருர் தூயனை வணங்கி
ஆங்கு துர்க்கையை விதியினால் தாபித்து ஆய்மலர் தூவி அன்பால்
அர்ச்சனை புரியின் மன்ன! நீ உளந்தனில் இன்று நினைந்தது முடியும்
என்றான்.
கோமகன் அசன் ஆருரில் கொற்றவை தனை ஸ்தாபித்து நமநீர்
உலகமெல்லாம் நன்னலார் வணங்கி ஓம்பி, ஏமுறுங்காதை இதை
இசைப்பவர் இனிது கேட்போர் தாம் மற்றவர் போல் வையந்தனில்
அரசாள்வர் மாதோ.
என்ற பாடல்களிலிருந்து, இந்த துர்க்கையை செவ்வரளி மலர் கொண்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அறியலாம்.
தியாகராஜர் கோவில்
ஐங்கலக் காசு விநாயகர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள எழுந்தருளியிர்க்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐங்கலக் காசு விநாயகர், தியாகராஜப் பெருமான் சன்னதிக்கும், வன்மீகநாதர் சன்னதிக்கும் நடுவில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இவர் அழகிய சோழ மன்னன் தந்த காணிக்கையால் உருவாக்கப்பட்டவர். ஒரு கலம் தங்கம், ஒரு கலம் வெள்ளி, ஒரு கலம் செம்பு, ஒரு கலம் வெண்கலம், ஒரு கலம் பித்தளை ஆகிய ஐந்து மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டவர்தான் ஐங்கலக் காசு விநாயகர்.
தியாகராஜர் கோவில்
ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூர் தலத்தில் நவக்கிரகங்கள் தியாகராஜப் பெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆதலால் திருவாருரிலுள்ள நவக்கிரகங்கள் அனுக்கிரக நவக்கிரகங்கள் ஆகும்.
ஒரு சமயம் சதயகுப்தன் என்ற அசுரனுக்கு சனி தோஷம் பீடிக்கவே, அவன நவக்கிரகங்களை எதிர்த்துப் போரிட்டான். அதனால் பயந்து போன நவக்கிரகங்கள், தியாகராஜப் பெருமானிடம் சரண் அடைந்தன. அவர்களக் காப்பாற்றிய தியாகராஜப் பெருமான், 'என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்தவித உபத்திரமும் செய்யக் கூடாது' என்று உத்தரவிட்டார்.
அதனால்தான் இத்தலத்தில், நவக்கிரகங்கள தங்கள் வக்கிரத்தைக் குறைத்துக் கொண்டு, ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நின்று, தியாகராஜப் பெருமானை நோக்கியபடி இருக்கின்றன. நவக்கிரகங்களின் இத்தகைய கோலம், ஒரு காண்பதற்கு அரிய காட்சியாகும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேர்திருவாரூர் ஆழித்தேர்
ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். எண்கோண வடிவில் ஏழு அடுக்குகளைக் கொண்டு 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர். முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையைக் கொண்டது.
ஆழித்தேர் என பெயர் ஏற்பட்ட காரணம்
இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற சோழ மன்னன் முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு இந்தத் தேர் உருவானது . அதனாலேயே இது ஆழித்தேர், அதாவது கடல் போன்ற தேர் என்று பெயர் பெற்றது்.
ஆழித்தேர் திருவிழாவை தேவார முதலிகளான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தினார்கள் என்ற குறிப்பும் இந்த விழாவின் மகத்துவத்தை நமக்கு விளக்கும். 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று வியக்கிறார் ஆளுடைய அரசப் பெருமான்.
திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் தேரழகு என்று இன்றும் போற்றப்படும் இந்ந தேரானது, பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டது. தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இதன் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்படும். உலகில் வேறு எங்கும், தேர் கலசத்தில் வெள்ளிக் குடைகள் கிடையாது. இத்தேரில் 64 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கட்டுள்ளது. ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளையும் கொண்டிருக்கும்.
இந்த தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், 150 நைலான் கயிறு கட்டுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேரை இழுக்கவென்று 4 பெரிய வடங்கள் பயன்படுகின்றன. ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருத்தேர் உலா வரும்போது கொடு கொட்டி, பாரி நாயனம் போன்ற அபூர்வ இசைக் கருவிகள் இசைக்கப்படுவது வழக்கம்.
ஆழித்தேரோட்டம்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுகிறது. ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆழித்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் அசைந்து சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் கூறுவார்கள். இந்நிகழ்ச்சி 'தேர்த்தடம் பார்த்தல்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. தேர் அசையும்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூடி அரூரா, தியாகேசா என்று விண்ணதிர முழக்கமிடும் ஒலியும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. திருவாரூர் வீதியெங்கும் கயிலாய வாத்திய முழக்கங்களும் திருமுறை முழக்கங்களும் என பூலோக கயிலாயமாக விளங்கும் என்றால் அது மிகையில்லை
மொத்தத்தில் ஆழித்தேர், தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுகின்றது.
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன
லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.
சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.
மாணிக்கவண்ணர் திருக்கோவில்
கைகாட்டி விநாயகர்
திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநாட்டியாத்தான்குடி.இக்கோவிலின் கிழக்கு கோபுர வாயிலின் முன், விநாயகர் கை விரலை நீட்டியபடி, மேற்கு பார்த்த சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
ஒருசமயம் சுந்தரமூர்த்தி நாயனார், இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனையும் இறைவியையும் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். அவ்வழியே சென்று பார்த்த போது, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் விவசாயிக் கோலத்தில், நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதைக் கண்டு சுந்தரர், நடவு நட்டது போதும், கோவிலுக்கு வாருங்கள் என்று அழைக்க, சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் சென்றனர்.
சுந்தரருக்கு இறைவன் இருந்த திசையை சுட்டிக் காட்டியதால் இத்தலத்து விநாயகருக்கு, கைகாட்டி விநாயகர் என்ற பெயர் வந்தது.
அக்னீஸ்வரர் கோயில்
முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக காட்சி தரும் தேவாரத் தலம்
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு தலத்தில் முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார்.