திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்
திருவாரூரில் பிறக்க முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. சைவ சமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். அதுபோல பெரிய கோவில், பூங்கோவில், திருமூலட்டானம் என்று குறிப்பிட்டால் அது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலை குறிக்கும். திருமூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள்.
தியாகராஜர் வரலாறு
திருமாலானவர். சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய, அகமகிழ்ந்த சிவபெருமான் உமையவளுடன் தோன்றியபோது, சிவபெருமானை மட்டும் திருமால் வணங்கியுள்ளார் கோபமடைந்த உமையவள் திருமால் மீது சாபமிட கலங்கி நின்ற திருமால். மீண்டும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதன்பின் மீண்டும் உமையவளுடன் சிவபெருமான் தோன்றியபோது, உரிய முறையில் திருமால் வணங்க, மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தாள். அதைக் கண்டு மகிழ்ந்த திருமால், சோமாஸ்கந்த திருக்கோலத்தில் எழுந்தருளக் கோரி தன் நெஞ்சக் கோயிலில் நிறுத்திக்கொண்டார். திருமாலின் உச்சுவாசித்தால் (மூச்சுக் காற்றை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் பெருமானும் அசைந்தாடி ஆனந்தங் கொண்டு திருமாலுக்குத் திருவருள் தந்தார். இதுவே அஜபா நடனம்.இது ஒரு மந்திரத்தின் பெயர். ஜபா என்றால் ஜெபித்தல். அஜபா என்றால் ஜெபிக்காது இருத்தல் என்று பொருள். அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப் படுவதில்லை.
தியாகராஜ சுவாமி திருமேனியின் ரகசியம்
தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். சிதம்பரம் ரகசியம் என்பது போல் திருவாரூர் ரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோம குல ரகசியம் என்பார்கள். தியாகராஜரின் திருமார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால், அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது. எனவே நம்மால் அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.
தியாகராஜ பெருமாள் திருமுடியை தலை சீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது. சதுர வடிவிலான இந்த அணிகலன், உயர்ந்த வகை ஜாதி கற்கள் பதிக்கப் பெற்றது. சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு.இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் தமது தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு சிவதலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில், இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி
https://www.alayathuligal.com/blog/j43pt78f2b8ec9bkcer3cnd5xj46gk