திருவாரூர் தியாகராஜர் கோவில்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேர்
திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். எண்கோண வடிவில் ஏழு அடுக்குகளைக் கொண்டு 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர். முற்றிலுமாக அலங்கரிக்கப் படும்போது இது 400 டன் எடையைக் கொண்டது.
ஆழித்தேர் என பெயர் ஏற்பட்ட காரணம்
இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற சோழ மன்னன் முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு இந்தத் தேர் உருவானது . அதனாலேயே இது ஆழித்தேர், அதாவது கடல் போன்ற தேர் என்று பெயர் பெற்றது்.
ஆழித்தேர் திருவிழாவை தேவார முதலிகளான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தினார்கள் என்ற குறிப்பும் இந்த விழாவின் மகத்துவத்தை நமக்கு விளக்கும். 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று வியக்கிறார் ஆளுடைய அரசப் பெருமான்.
திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் தேரழகு என்று இன்றும் போற்றப்படும் இந்ந தேரானது, பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டது. தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இதன் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்படும். உலகில் வேறு எங்கும், தேர் கலசத்தில் வெள்ளிக் குடைகள் கிடையாது. இத்தேரில் 64 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கட்டு உள்ளது. ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளையும் கொண்டிருக்கும்.
இந்த தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், 150 நைலான் கயிறு கட்டுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேரை இழுக்கவென்று 4 பெரிய வடங்கள் பயன்படுகின்றன. ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருத்தேர் உலா வரும்போது கொடு கொட்டி, பாரி நாயனம் போன்ற அபூர்வ இசைக் கருவிகள் இசைக்கப்படுவது வழக்கம்.
ஆழித்தேரோட்டம்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுகிறது. ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆழித்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் அசைந்து சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் கூறுவார்கள். இந்நிகழ்ச்சி 'தேர்த்தடம் பார்த்தல்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. தேர் அசையும்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூடி அரூரா, தியாகேசா என்று விண்ணதிர முழக்கமிடும் ஒலியும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. திருவாரூர் வீதியெங்கும் கயிலாய வாத்திய முழக்கங்களும் திருமுறை முழக்கங்களும் என பூலோக கயிலாயமாக விளங்கும் என்றால் அது மிகையில்லை
மொத்தத்தில் ஆழித்தேர், தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுகின்றது.
திருவாரூர் ஆழித்தேரோட்டம் காணொளி காட்சி