
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்
மிகச் சிறிய கருவறை கொண்ட மாரியம்மன் கோவில்
மாரியம்மனுக்கு நைவேத்தியங்களை ஊட்டி விடும் வித்தியாசமான நடைமுறை
சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால், 'எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோவில் மணிமுத்தாறு நதிகரையில் அமைத்துள்ளது,
இந்தக் கோவிலின் கருவறை மிகவும் சிறியது.. தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோவில் இதுவாகத்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது. கருவறையில் மாரியம்மனின் சிரசில் ஜூவாலா கிரீடம், அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக் கொண்டு ஈசான திசை நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள்.
பொதுவாக எல்லா கோவில்களிலும், பூஜா காலங்களில் நைவேத்தியம் தெய்வங்களுக்கு முன் படைக்கப்படும். ஆனால் இக்கோவிலில் நைவேத்தியம், மாரியம்மனுக்கு படைக்கப்படுவதில்லை. மாறாக நைவேத்தியத்தை எடுத்து மாரியம்மனுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம். இந்த நடைமுறை வேறு எந்த கோவிலிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
பிரார்த்தனை
மண் உரு சாத்துதல் : அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு, கோவிலை மூன்று முறை வலம் வர வேண்டும்.
கண்ணடக்கம் சாத்துதல் : கண்ணில் பூ விழுந்தாவோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகள், கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாற்றுவார்கள்.
உருவாரம் சாத்துதல் : நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பார்கள்.
அடியளந்து கொடுத்தல் : பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, மூன்று முறை கோவிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.
உப்பு மிளகு போடுதல் : பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக் கொள்பவர்கள், குங்குமம் கலந்த உப்பை பலி பீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கரைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதிகம்.
ஆடித் திருவிழா
கோட்டை மாரியம்மன் கோவிலின் மிகப்பெரிய விழா, ஆடித் திருவிழா ஆகும். இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று, பிற மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காரிசேரி லட்சுமி நாராயணர் கோவில்
நவபாஷாணத்தால் ஆன அபூர்வ லட்சுமி நாராயணர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது, காரிசேரி லட்சுமி நாராயணர் கோவில். இக்கோவில் மிகச் சிறியதாக இருந்தாலும், இக்கோவிலின் மூலவர் லட்சுமி நாராயணர் நவபாஷாணத்தால் ஆனவர் என்பது தனிச்சிறப்பாகும். நவபாஷாணத்தால் ஆன மூலவர் என்றால் நம் நினைவுக்கு வருவது முருகக்கடவுள் தான். ஆனால் பெருமாள், லட்சுமி நாராயணராக நவபாஷாணத்தால் ஆன விக்ரகமாக எழுந்தருளி இருப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு அரிய காட்சியாகும். கருவறையில் மூலவர் லட்சுமி நாராயணர் நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து வட்சுமி தாயாரை மடியில் வைத்து, அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.
முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோவிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர் ஒருசமயம் வெள்ளப் பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள் இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினர்.
பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால், நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மரக்காணம் பூமீசுவரர்கோவில்
நிலம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பூமீசுவரர்
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இத்தலத்து இறைவன் திருநாமம் பூமீசுவரர். இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.
இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. இத்தலத்திற்கு மரக்காணம் என்று என்று பெயர் வந்ததற்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. முன்னொரு காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். சிவபெருமான் முனிவராக உருவெடுத்து அந்த பக்தரின் இல்லத்துக்குச் சென்றார். முனிவரை வரவேற்று உபசரித்த சிவனடியார் அவருக்காக அறுசுவை உணவு தயாரித்தார். பின்னர் முனிவரைப் பசியாற அழைத்தார். உணவருந்துவதற்குமுன் சிவாலய தரிசனமும் பூஜையும் செய்வது வழக்கம் என்று அடியாரிடம் கூறினார் முனிவர் வடிவில் வந்த சிவபெருமான். அருகில் சிவத்தலம் ஏதும் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அடியார், பின்னர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, தன்னி டமிருந்த நெல் அளக்கும் 'மரக்கால் படியை' குப்புறக் கவிழ்த்து, அதையே சிவலிங்கமாகக் கருதி, நீறு பூசி மலர்களால் அலங்கரித்து முனிவரை பூஜைக்கு அழைத் தார். முனிவரும் சிவபூஜையை இனிதே முடித்து, உணவருந்தி மகிழ்ந்து, அடியாரை ஆசீர்வதித்து விடைபெற்றார். அவர் சென்றதும், சிவனடியார் மரக்கால்படியை எடுக்க முயற்சி செய்ய, அதை அவரால் அசைக்கக்கூட முடியவில்லை. மரக்கால் படியைத் தரையிலிருந்து பெயர்த்தெடுப்பதற்காக உபகரணம் எடுக்கச் சென்ற அடியார் திரும்பி வந்தபோது, அந்த இடத்தில் மரக்கால் படியைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த சிவபக்தர் 'மரக் காலைக் காணோம்' என்று சத்தமிட்டபடி, அதைத் தேடிச் சென்றார். பின்னர் அந்த மரக்கால், கடற்கரை மணலில் சிவலிங்கமாகப் புதைந்திருப்பதைக் கண்டார். மெய்சிலிர்த்துப் போனவர், அதன் பின்னர் லிங்கத் திருமேனிக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட ஆரம்பித்தார். மரக்கால் காணாமல் போய் பின்னர் சிவலிங்கமாக காட்சி அளித்ததால், இத்தலத்திற்கு மரக்காணம் என்ற பெயர் ஏற்பட்டது.
பூமியிலிருந்து சுயம்புத் திருமேனியாக வெளிப்பட்ட இந்த பூமீசுவரரை வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னைகளில் விரைவில் தீர்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
நவநாரி குஞ்சரம் - மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு
யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள்
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் சிறிய சிற்பங்கள் முதல் பெரிய ஆளுயர சிற்பங்கள் வரை மிக அற்புதமாகவும், நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்தக் கோவில் சிற்பத் தொகுப்பில், ஒரு அடி உயரமுள்ள ஒரு சிறிய சிற்பம் தான் நவநாரி குஞ்சரம்.
நவம் என்றால் ஒன்பது. நாரி என்றால் பெண். குஞ்சரம் என்றால் யானை. சிற்பக் கலையின் ஒரு வகையாக, யானை வடிவத்தில் தெரியும் இந்த சிற்பமானது, ஒன்பது பெண்களின் உருவத்தை தன்னுள் கொண்டுள்ளது. சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போது நமக்கு யானையின் உருவம் மட்டும் தான் தெரியும். ஆனால் அதன் அருகில் சென்று பார்க்கும் போது ஒன்பது பெண்கள் தங்கள் உடலையும், அங்கங்களையும் பல்வேறு கோணங்களில் வளைத்து, யானையின் உருவத்திற்குள் அடக்கி இருப்பது நமக்கு தெரிய வரும். மேலும் அந்த ஒன்பது பெண்களின் முகங்களில், நவரசங்களான அன்பு, சிரிப்பு, கருணை, வீரம், பயம், வெறுப்பு, ஆச்சரியம், கோபம், அமைதி என்னும் குணங்களை பிரதிபலிக்கும்படி செதுக்கி உள்ளது நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.
இதேபோல், பறவைகளைக் கொண்டு அமைந்த யானை உருவ சிற்பமும் இக்கோவிலில் அமைந்துள்ளது.
இந்த நவநாரி குஞ்சரம் சிற்பம் திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் இருக்கின்றது.
பஞ்ச நாரி துரகம் - குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள்
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும். நாரி என்றால் பெண். துரகம் என்றால் குதிரை. ஐந்து பெண்களின் உருவத்தை ஒரு குதிரையின் உடலமைப்பில் அடக்கி இருப்பதுதான் பஞ்ச நாரி துரகம்.
சிற்பியின் கற்பனைத் திறனும், மிக நுணுக்கமான வேலைப்பாடும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பெற்றிருந்த கலை திறமையை நமக்கு இந்த கோவில் சிற்பங்கள் உணர்த்துகின்றன. கலையுணர்வு மிளிரும் இத்தகைய படைப்புகளைக் நாம் காணும் பொழுது நம்மை பெருமிதம் அடையச் செய்யும்.

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
கையில் பாம்பை பிடித்தபடி இருக்கும் சர்ப்ப பைரவர்
தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி. இறைவியின் திருநாமம் கோமதி அம்மன்.
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். சிவபெருமானின் சொரூபங்களில் சரபேசரும், பைரவரும் பக்தர்களின் கோரிக்கைகளை கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவர். பைரவர், சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். இவர் காவல் தெய்வம் என்பதால் பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் பைரவர், சங்கரன்கோவில் ஸ்ரீசங்கர நாராயணர் கோவிலில், நின்ற திருக்கோலத்தில் தனது இடது மேற்கரத்தில், செங்குத்தாக பாம்பை கையில் ஏந்தியபடி காட்சி தருகிறார். இவரை 'சர்ப்ப பைரவர்' என்கிறார்கள். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இந்த பைரவரை வணங்கினால், அரளி மலர்கள் சார்த்தி, மிளகு வடை மாலையோ வெண் பொங்கலோ நைவேத்தியம் படைத்து வணங்கி வழிபட்டால், எல்லா செளபாக்கியங்களும் தடையின்றித் தந்தருள்வார். சர்ப்ப தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சர்ப்ப பைரவர்
27 நட்சத்திரக்காரர்களும், அவரவர்க்குரிய பைரவரை வழிபட்டால் நற்பலன்கள் கூடும். அந்த வகையில், சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பைரவர், சர்ப்ப பைரவர் ஆவார்.

குற்றாலம் சித்திரசபை கோவில்
சித்திர வடிவில் இறைவனை வழிபடும் ஒரே தலம்
குற்றாலம் சித்திர சபை, பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றான குற்றால நாதர் கோவிலுக்குப் அருகில் தனிக்கோவிலாக உள்ளது. குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி, ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது குற்றால சித்திர சபை. சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
நடராசப் பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றுதான் குற்றாலம் சித்திரசபை.
மற்ற நான்கு சபைகள்:
சிதம்பரம் நடராசர் கோவில் - கனகசபை
திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் - இரத்தினசபை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் - வெள்ளிசபை
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - தாமிரசபை
பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே குற்றாலம் சபையில் மட்டும்தான். சித்திரசபையில் நடராஜப் பெருமான் தேவியுடன் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.
சித்திரசபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது. தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும். நடராஜப் பெருமான், வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.
சித்திரசபையின் உட்சுவற்றில் மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், விநாயகர், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான், ரதி - மன்மதன் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.
மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும்.
நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், நடராஜப் பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனி மாதத்தில், எல்லா சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம் என்று போற்றப்படும்.
ஆனித் திருமஞ்சனம் இன்று (12.07.2024) நடைபெறுகின்றது.

திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்
அர்த்தநாரீசுவரர் மற்றும் வீணாதர தட்சிணாமூர்த்தி கோலத்தில், கோவில் விமானத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கும் அரிய காட்சி
கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. பொதுவாக ஒரு சில ஆலயங்களில், மூலவர் இருக்கும் சன்னிதிக்குள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் சூரியனின் கதிர்கள் விழும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது தினந்தோறும் சூரியனின் கதிர்கள் படர்வது, வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, இக்கோவில் சுவாமி கருவறை விமானத்தின் மேல் கல்லால மரத்தின் கீழ், ஆசனங்கள் ஏதும் இன்றி, வலது கையை ஊன்றி உடலை சற்றே சாய்த்து, சாவகாசமாக அமர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, தட்சிணாமூர்த்தியின் உருவம் வலது பக்கம் ஆணைப் போன்ற தோற்றமும், இடது பக்கம் பெண்ணைப் போன்ற தோற்றமும் கொண்டு அர்த்தநாரீசுவரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது, வேறு எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். சுற்றிலும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற அவரது மாணவர்கள் இருக்கின்றனர். இங்கு, தட்சிணாமூர்த்தியின் உடலில் பார்வதியும் இருந்து, பாடம் கேட்பதாக ஐதீகம். இவரை, 'சிவசக்தி தட்சிணாமூர்த்தி' என்கின்றனர்.
இந்த அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தி இருக்கும் மாடத்தின் கீழேயே, வீணாதர தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன், தனது நான்கு சீடர்களுடன் காட்சி தருகிறார். இப்படி அர்த்தநாரீசுவர தட்சிணாமூர்த்தியும், வீணாதர தட்சிணாமூர்த்தியும் ஒருசேர கோவில் விமானத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.
கேசவன், நாராயணன், மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.
நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை
இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.

மரக்காணம் பூமீசுவரர்கோவில்
இரண்டு துவாரபாலகியருடனும், ஆறு கரங்களுடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இறைவன் திருநாமம் பூமீசுவரர். இத்தலத்து இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்’ என்று குறிப்பிடுகின்றன. 'எயில்' என்பதும் 'சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு 'எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டது. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மன், நான்கு கைகளுடன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் இரண்டு துவாரபாலகிகள் உடன் இருக்க, தலைக்கு மேல் குடையுடனும், ஆறு கரங்களுடனும் மகிஷாசுரன் மேல் நின்ற கோலத்தில் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

ஏமப்பூர் வேதபுரீசுவரர் கோவில்
மொட்டைத் தலையுடன், நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ பால விநாயகர்
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவார தலமான திருவெண்ணெய்நல்லூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஏமப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் வேதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் பால குஜாம்பாள். தேவார வைப்புத் தலமான இக்கோவில், 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் நந்தி, மூலவரை நோக்கி இல்லாமல் கோபுர வாயிலை நோக்கி அமைந்திருப்பது சிறப்பாகும். கருவறை வாயிலில் இருக்கும் துவாரபாலகர்கள் சுதை வடிவில் இல்லாமல், கருங்கல் சிற்பமாக இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், கருவறையின் பின்புறம் லிங்கோத்பவர் தான் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில், லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில், சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவது, வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு அமைப்பாகும்.
இக்கோவில் மகாமண்டபத்தில் எழுந்தருளி உள்ள விநாயகர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பொதுவாக விநாயகர் தலையில் கிரீடத்துடனும், அமர்ந்த கோலத்திலும் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், தலையில் கிரீடம் இல்லாமல் மொட்டைத் தலையுடனும், வலது கரத்தில் தந்தம், இடது கரத்தில் மோதகத்தையும் தாங்கி நின்ற கோலத்தில், பால விநாயகராகக் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.
பிரார்த்தனை
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரத்தலமாக இக்கோவில் விளங்குகின்றது. மேலும் தங்கள் ஜாதகத்தில், ஆயுள் ஸ்தானம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரணபயம், எம்பயம் போக்கும் தலமாகவும் விளங்குகின்றது.

அனுமன் சாலிசா
அனுமன் சாலிசாவின் சிறப்புகள்
ஆலயத்துளிகள் தனது நான்காம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
துளசி இராமாயணம் என்பது துளசிதாசர் என்று அழைக்கப்படும் இராம்போலா துபே எழுதிய நூலாகும். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் ராமர் மீதான பக்திக்கு புகழ்பெற்றவர். துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். இவர் வாரணாசியில், அனுமன் தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.
துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர்மீட்டார். இந்தச் செய்தியானது முகலாய அரசர் அக்பர் செவிக்கும் எட்டியது. இதனால் அக்பருக்கு துளசிதாசரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எவ்வாறேனும், துளசிதாசரை தன் தர்பாருக்கு அழைத்து வந்து, நேரடியாக அவர் செய்யும் அற்புதத்தைக்கண்டு ரசிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். அரசவைக்கு அழைத்து வரப்பட்ட துளசிதாசரிடம் அக்பர், ராமனின் அருளாலும், உங்களின் அருளாலும், இறந்தவரின் உயிரை மீட்டது போல, என்னுடைய அரசவையிலும் ஒரு அற்புதத்தை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு, நான் மாயாஜாலக்காரன் அல்ல. ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி தினம் ஒரு பாடலாக, சிறையில் இருந்தபோது 40 நாட்கள் அவர் எழுதிய 40 பாடல்கள் தான் அனுமன் சாலிசா.
முகலாய அரசர் அக்பரை பணிய வைத்த அனுமன் சாலிசா
அனுமன் சாலிசாவை துளசிதாசர் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது நகரம் முழுவதும் பெரிய குரங்கு கூட்டம் ஒன்று புகுந்தது. அந்தக் குரங்குகள் சேட்டைகள். அரண்மனை, அந்தப்புரம், கடைவீதிகள், தோட்டத்துரவுகள், மரங்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கின. மக்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதனைக் கண்ட அக்பர், செய்வது தெரியாது குழப்பம் அடைந்தார். ஹஜித் என்ற ஒரு பெரியவர், மன்னரிடம் சென்று, 'துளசிதாசரிடம் நீங்கள் கேட்ட அற்புதம் நிகழ்ந்து விட்டது. ராமதூதனுடைய அவதாரமான குரங்குகள் படையெடுப்பின் மூலம், ஒவ்வொரு மக்களுக்கும் ராம தரிசனம் கிடைத்து விட்டது. எனவே துளசிதாசரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறினார். துளசிதாசரை விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார். துளசிதாசரிடம், 'குரங்குகள் தொல்லையினால் நகர மக்கள் அவதிப்படுகிறார்கள். குரங்குகள் இங்கிருந்து மீண்டும் காட்டுக்குச் செல்ல தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்' அக்பர் கேட்டுக் கொண்டார். உடனே துளசிதாசர் அனுமனிடம் மக்களின் துயரத்தை நீக்குமாறு வேண்டிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார். துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்திருந்த பொழுது, நகரத்தில் ஆங்காங்கே சேட்டை செய்து கொண்டிருந்த குரங்குகள் மாயமாக மறைந்தன. இதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். குரங்குகள் மறைந்ததை எண்ணி, துளசிதாசரின் மகிமையை அக்பர் உணர்ந்தார். ராமனின் பெருமையை அறிந்தார்.
அனுமன் சாலிசாவின் பலன்கள்
அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களுக்கும் , ஒரு நற்பலனை பெற்றுத் தரும் தன்மை உண்டு. அதுபோல, 40 பாடல்கள் கொண்ட அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு பாடலும், ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தையைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள். அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள், தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு, அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் இருக்கும் அரிய காட்சி
சென்னை மண்ணடி பகுதியில், லிங்கி செட்டி தெருவில் அமைந்துள்ளது மல்லிகேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பாள். வட சென்னையில் உள்ள மிகப் பெரிய கோவில் கோபுரங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. 17 ஆம் நூற்றாண்டில், ஒரு சில பிரிட்டிஷ் நாளேடுகளிலும் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
சோழ மன்னன் ஒருவன், இந்தப் பகுதியில் வேட்டையாடச் சென்றபோது, மல்லிகைப் புதர்கள் மண்டி இருந்ததாக தலபுராணம் கூறுகின்றது. களைகளை அகற்றி, மல்லிகைச் செடிகளைச் சுற்றி அழகான தோட்டம் அமைக்குமாறு அரசர் தனது வீரர்களுக்குக் கட்டளை இட்டார். இதைச் செய்யும்போது, மணலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் சிவலிங்கத்தைக்கண்டெடுத்தார்கள். எனவே இந்த இடத்திற்கு மண்-ஆதி என்று பெயர். மன்னன் உடனே லிங்கத்தைச் சுற்றி கோவில் கட்ட உத்தரவிட்டான். மல்லிகைப் புதர்களுக்கு மத்தியில் சிவலிங்கம் கிடைத்ததால். இறைவன் மல்லிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மல்லிகேஸ்வரர் கோவில், நம் முன்னோர்களின் கட்டிடக்கலை திறனுக்கு ஒரு உதாரணமாக திகழ்கின்றது. கோவில் கோபுரம் கலைநயம் மிக்கது. வளாகத்திற்குள் நுழைந்தவுடன், சிறிய சிற்பங்கள் நிறைந்த தூண்களுடன் கூடிய மண்டபத்தைக் காணலாம். .பொதுவாக சிவாலயங்களில்சிவாலயங்களில் நவக்கிரகங்கள் தனியாகத் தான் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலின் நவக்கிரக சன்னதி தனித்துவமானது. ஒன்பது நவக்கிரகங்களும், அவர்களின் வாகனங்களுடனும், சூரிய பகவான் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் அமர்ந்தும் காட்சி தருகிறார்கள். நவக்கிரக சிலைகள் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோவில் ஒன்பது பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)
திருமால் திருமார்பில் இடம் பிடிக்க திருமகள் தவம் செய்த தலம்
கும்பகோணத்திற்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் நாதன்கோவில். பெருமாள் திருநாமம் ஜெகந்நாதன். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் கையில் மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள் வட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்த அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.
திருப்பாற்கடலில் திருமகள் எப்போதும் திருமாலின் பாதத்தருகே இருந்து சேவை சாதிப்பது வழக்கம். அவளுக்கு ஒருநாள் திருமாலில் திருமார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் உதித்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டி செண்பகாரண்யம் (செண்பக மரங்கள் நிறைந்த வனம்) என்ற இத்தலத்துக்கு வந்து கிழக்கு நோக்கி தவம் புரிந்தாள். திருமகளின் பிரிவை திருமாலால் தாங்க முடியவில்லை. ஓர் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வெள்ளிக்கிழமை அன்று திருமகளை தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் திருமால். அதன் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகம், ஆராதனைகள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.
செண்பக வனத்தில் தவம் செய்ததால் தாயாருக்கு செண்பகவல்லி என்ற பெயர் வழங்கலாயிற்று. தாயார் கிழக்கு நோக்கி தவம் செய்தாள். திருமால் அவளை மார்பில் ஏற்றதால் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இத்தல பெருமாள் ஜெகநாதன் என்பதால் இவ்வூர் நாதன்கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
திருமண தடை நீக்கும் செண்பகவல்லி தாயார்
திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இணையவும், தம்பதிகள் பிரியாமல் இருக்கவும், குடும்ப நலத்திற்கு உதவும் சுக்ல பட்ச அஷ்டமியில் இக்கோவிலில் ஸ்ரீ சூக்த ஹோமம் நடக்கிறது. ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்தால், குழந்தைப்பேறு உண்டாகும்.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் காட்சியளிக்கும் வாஸ்து பகவான்
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ளது போல் தென்புறம் கண்ணப்பர் சன்னதியும், ராகு, கேது கிரகங்கங்களுக்கு தனி சன்னதியும் உள்ளது. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள், இக்கோவிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு, காளஹஸ்தி சென்று வந்த பலனைப் பெற முடியும். இதனால் தான் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
இக்கோவிலின் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இதனையடுத்து, நடுவில் சூரியனும், சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட 'சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம்' இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே ஆவுடையார் கோவில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் மட்டுமே, இந்த சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் இருக்கின்றது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள், இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சனை விரைவில் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)
மூலஸ்தானத்தில், பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தரும் நந்தியும், பிரம்மாவும்
தட்சிண ஜகந்நாதம் என்று போற்றப்படும் திவ்யதேசம்
கும்பகோணத்திற்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் நாதன் கோவில். பெருமாள் திருநாமம் ஜெகந்நாதன். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. இத் திவ்ய தேசம் 'தட்சிண ஜகந்நாதம்' என்று அழைக்கப்படுகிறது.
இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் சிவபெருமானின் வாகனமாகிய நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நந்தி சாப விமோசனம் பெற்ற தலம்
ஒரு சமயம் நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். சாப விமோசனத்திற்காக சிவபெருமானிடம் தீர்வு கேட்டார். அதற்கு சிவபெருமான், 'சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்' என்றார். அதன்படி நந்தி தேவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார். அதன் பிறகு இத்தலம், நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது. நந்தி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் சன்னதி, ஊர், தீர்த்தம் என அனைத்தும் நந்தியை முதன்மைப்படுத்தியே அமைந்திருக்கின்றது. இந்த தலத்தின் குளத்திற்கு நந்தி தீர்த்தம் என்றும், விமானத்திற்கு நந்தி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன.
சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார். காளமேகப் புலவர் இவ்வூரில் அவதரித்தவர்.
சந்திர தோஷ பரிகார தலம்
நந்தி சாபம் விலகி தலம் என்பதுடன், சந்திர தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. சந்திர தோஷம் நீங்க, வேண்டியது நிறைவேற, திருமணத் தடை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, குழந்தை வரம் கிடைக்க, பிரிந்த தம்பதி ஒன்று சேர, நரம்பு நோய் நீங்க பக்தர்கள் இப்ப பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில்
மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படும் முருகன் தலம்
புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலை அடைய, 75 படிக்கட்டுகள் உள்ளன. சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்குத் தபசு மலை என்ற பெயர் வந்துள்ளது. இக்கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்லும் பக்தர்களுக்கு, மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு நோய் உள்ளிட்டவைகள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம்.
கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இங்கு வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது. கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து ஒருமுறை தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மனவேற்றுமையால் பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது நம்பிக்கை. கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்களும் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறார்கள்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
சிவபெருமானும் பார்வதி தேவியும் விவசாயிகளாக வந்திருந்து நாற்று நட்ட தலம்
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி.
பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா, ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பட்டதற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
சிவபெருமான், சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்திரமூர்த்தி நாயனாருக்கு உணர்த்த எண்ணினார். சுந்தரர் பேரூர் வந்திருந்தபோது, சிவபெருமான் விவசாயக் குடிமகனாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் பள்ளன் என்ற விவசாயியாகவும், உமாதேவி பள்ளி என்ற விவசாயப் பெண்ணாகவும் அவதரித்து, காஞ்சி நதிக்கரைக்கு நாற்று நடச் சென்றனர். தேவர்களுனம், சிவ கணங்களும் உதவியாளர்களாய் வந்தார்கள்.
சிவபெருமான் அடித்த அடியால், சப்பையான தாடையுடன் காட்சி தரும் நந்தி தேவர்
தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரன் வந்து கேட்டால் 'நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்திதேவரிடம் எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், கோவிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் காஞ்சி நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். நந்தி தம் சொல்லை மீறியதால் கோபமடைந்த சிவபெருமான், தன் கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்து விட்டார். இதனால் இந்தக் கோவிலில், நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது. பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார். பிறப்பில் பேதமில்லை என்று இறைவனே உணர்த்திய தலம் இதுவாகும்.

தென்காசி காசி விசுவநாதர் கோவில்
கோபுர வாசலில் இரண்டு எதிர் திசைகளில் காற்று வீசும் அதிசயம்
தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை.
இந்தக் கோவில் ராஜகோபுரம் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை திறனுக்கும், பொறியியல் தொழில்நுட்பத் திறனுக்கும் ஒரு சான்றாக விளங்குகின்றது. ஒன்பது நிலையும் 175 அடி உயரமும் கொண்ட இக்கோவில் கோபுரம், கி.பி.1456-ல் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும். பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோவிலுக்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கிலிருந்து கிழக்காக, அதாவது கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக, வீசுகின்றது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று, கிழக்கில் இருந்து மேற்காக வீசும் . அதாவது பக்தர்களின் பின்புறத்தில் இருந்து கோவிலுக்குள் தள்ளுவது போல, காற்று வீசுகிறது.
காற்றை எதிர் திசையில் திருப்புவதற்கு எந்த தடுப்பும் இல்லாத நிலையில், ஒரே நேர்கோட்டில் காற்று, இரண்டு எதிர் திசையில் வீசும்படி கோபுரத்தை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் மதிநுட்பத் திறனை எடுத்துக் காட்டுகின்றது. இப்படி, கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும், பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசும் சிறப்பானது வேறெந்த கோவிலிலும் கிடையாது.

அழிவிடைதாங்கி சொர்ணகால பைரவர் கோவில்
சொர்ணகால பைரவர் மூலவராக விளங்கும் தலம்
காஞ்சிபுரத்திலிருந்து, வெம்பாக்கம் வழியாக சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழிவிடைதாங்கி. இங்கு 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சொர்ண கால பைரவர் கோவில் இருக்கின்றது. ஆதிசங்கரர் இத்தல பைரவரை பிரதிஷ்டை செய்தார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. கருவறையில் ஐந்தடி உயர திருமேனியுடன் நின்ற கோலத்தில், தனது நான்கு திருக்கரங்களில் உடுக்கை, பாசுரம், சூலம், கபாலம் ஆகியவவற்றை ஏந்தியபடி தலையில் அக்னி ஜுவாலை கிரீடத்துடனும், தெற்கு முகம் நோக்கி, நாய் வாகனத்துடன் காட்சி அளிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்க்கு நோக்கி இருக்கும். ஆனால் இத்தலத்தில் அவருடைய வாகனம் கிழக்கு நோக்கி இருக்கின்றது. மேலும் இக்கோவிலில் அட்ட பைரவர்கள் தங்கள் மனைவியருடனும், வாகனத்துடனும் பிரகாரத்தில் சுதை வடிவில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.
கி.பி.14ஆம் நூற்றாண்டில் வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே நடந்த போரின் முதல் நாள் தனது படைகள் பெருமளவில் நாசமடைந்ததைக் கண்டு சம்புவராயன் மனம் வருந்தினார். அன்று இரவு, கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்படவேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துனையிருப்பேன் என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றார். அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி எனப் பெயரிட்டார். இந்த வெற்றியை அருளிய சொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோவிலையும் எழுப்பினார். இதுபோன்று, சொர்ணகால பைரவருக்கு என்ற தனி கோவில் வேறு எங்கும் கிடையாது.
பிரார்த்தனை
சொர்ணகால பைரவர், வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும விலகும்.

நத்தம் மாரியம்மன் கோவில்
மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் மாரியம்மனின் அபூர்வ தோற்றம்
திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்கு, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, சுயம்புவாக எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவில் இருக்கின்றது.
கருவறையில் மாரியம்மன், எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுக் கொண்டு மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இப்படி மயில் மேல் அமர்ந்து மாரியம்மன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எந்த தலத்திலும் நாம் அம்மனை இப்படி மயில் மீது அமர்ந்த கோலத்தில் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
குழந்தைவரம், அம்மைநோய், உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன. வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.
நேர்த்திக் கடன்
தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,கரும்பு தொட்டில் கட்டுதல், கழுகு மரம் ஏறுதல் முதலானவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக செய்கின்றனர்.
சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரத்தை வழுவழுவென செதுக்கி, அந்த மரத்தின் மேல் விளக்கெண்ணெய், மிளகு, கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களை பூசுவார்கள். அந்த மரத்தில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். இந்த நேர்த்திக் கடனுக்கு கழுகு மரம் ஏறுதல் என்று பெயர்.
இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் பூக்குழித் திருவிழா, தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூக்குழிக்கு ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் வெட்டப்படும். அதற்கு மேல் ஒரு ஆள் அடி உயரத்திற்கு கட்டைகள் அடுக்கப்பட்டு பூக்குழி அமைக்கப்படும். சுமார் 45,000 பேர் தங்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழியில் இறங்குவார்கள்.
கொங்குநாடு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு அடுத்து, இக்கோவிலில் தான் அதிக அளவில் மக்கள் பூக்குழி இறங்குவார்கள்.