மரக்காணம் பூமீசுவரர்கோவில்

நிலம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பூமீசுவரர்

சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இத்தலத்து இறைவன் திருநாமம் பூமீசுவரர். இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.

இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது.

இத்தலத்திற்கு மரக்காணம் என்று என்று பெயர் வந்ததற்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. முன்னொரு காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். சிவபெருமான் முனிவராக உருவெடுத்து அந்த பக்தரின் இல்லத்துக்குச் சென்றார். முனிவரை வரவேற்று உபசரித்த சிவனடியார் அவருக்காக அறுசுவை உணவு தயாரித்தார். பின்னர் முனிவரைப் பசியாற அழைத்தார். உணவருந்துவதற்குமுன் சிவாலய தரிசனமும் பூஜையும் செய்வது வழக்கம் என்று அடியாரிடம் கூறினார் முனிவர் வடிவில் வந்த சிவபெருமான். அருகில் சிவத்தலம் ஏதும் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அடியார், பின்னர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, தன்னி டமிருந்த நெல் அளக்கும் 'மரக்கால் படியை' குப்புறக் கவிழ்த்து, அதையே சிவலிங்கமாகக் கருதி, நீறு பூசி மலர்களால் அலங்கரித்து முனிவரை பூஜைக்கு அழைத் தார். முனிவரும் சிவபூஜையை இனிதே முடித்து, உணவருந்தி மகிழ்ந்து, அடியாரை ஆசீர்வதித்து விடைபெற்றார். அவர் சென்றதும், சிவனடியார் மரக்கால்படியை எடுக்க முயற்சி செய்ய, அதை அவரால் அசைக்கக்கூட முடியவில்லை. மரக்கால் படியைத் தரையிலிருந்து பெயர்த்தெடுப்பதற்காக உபகரணம் எடுக்கச் சென்ற அடியார் திரும்பி வந்தபோது, அந்த இடத்தில் மரக்கால் படியைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த சிவபக்தர் 'மரக் காலைக் காணோம்' என்று சத்தமிட்டபடி, அதைத் தேடிச் சென்றார். பின்னர் அந்த மரக்கால், கடற்கரை மணலில் சிவலிங்கமாகப் புதைந்திருப்பதைக் கண்டார். மெய்சிலிர்த்துப் போனவர், அதன் பின்னர் லிங்கத் திருமேனிக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட ஆரம்பித்தார். மரக்கால் காணாமல் போய் பின்னர் சிவலிங்கமாக காட்சி அளித்ததால், இத்தலத்திற்கு மரக்காணம் என்ற பெயர் ஏற்பட்டது.

பூமியிலிருந்து சுயம்புத் திருமேனியாக வெளிப்பட்ட இந்த பூமீசுவரரை வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னைகளில் விரைவில் தீர்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

இரண்டு துவாரபாலகியருடனும், ஆறு கரங்களுடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை (09.07.2024)

https://www.alayathuligal.com/blog/xnrp3kycghs6d83z3tt4ycdy5ct5f2

 
Previous
Previous

காரிசேரி லட்சுமி நாராயணர் கோவில்

Next
Next

திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்