குற்றாலம் சித்திரசபை கோவில்

சித்திர வடிவில் இறைவனை வழிபடும் ஒரே தலம்

குற்றாலம் சித்திர சபை, பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றான குற்றால நாதர் கோவிலுக்குப் அருகில் தனிக்கோவிலாக உள்ளது. குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி, ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது குற்றால சித்திர சபை. சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

நடராசப் பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றுதான் குற்றாலம் சித்திரசபை.

மற்ற நான்கு சபைகள்:

சிதம்பரம் நடராசர் கோவில் - கனகசபை

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் - இரத்தினசபை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் - வெள்ளிசபை

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - தாமிரசபை

பொதுவாக கோவில்களில் விக்கிரக வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே குற்றாலம் சபையில் மட்டும்தான். சித்திரசபையில் நடராஜப் பெருமான் தேவியுடன் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.

சித்திரசபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது. தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும். நடராஜபெருமான், வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.

சித்திரசபையின் உட்சுவற்றில் மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், விநாயகர், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான், ரதி - மன்மதன் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன.

நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், நடராஜப் பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனி மாதத்தில், எல்லா சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும். இதுவே ஆனித் திருமஞ்சனம் என்று போற்றப்படும்.

மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும்.

ஆனித் திருமஞ்சனம் இன்று (12.07.2024) நடைபெறுகின்றது.

ஆனித் திருமஞ்சனத்தை ஒட்டி வெளியான முந்தைய பதிவு

 தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி (02.07.2022)

https://www.alayathuligal.com/blog/s5d75w38pyfw8hlatjtgef8t3p9fnm?rq

நடராஜப் பெருமான் பற்றிய முந்தைய பதிவுகள்

1. ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப் பெருமான்(07.01.2023)

https://www.alayathuligal.com/blog/wx25768fr2h8c7e99mkzftzfxgfe5m

இப்பதிவில் நடராஜர், காவிரி ஆற்றில் படகில் பவனி வரும் காணொளி காட்சி இணைக்கப்பட்டுள்ளது. காணத்தவறாதீர்கள்!

 

2. நடராஜர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் தேவாரத்தலம் (06.01.2023)

https://www.alayathuligal.com/blog/p837mcngfmpzwg799njawad37y7fk4

 

3. பாம்பின் மேல் தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் அபூர்வக்    கோலம்(05.01.2023)

https://www.alayathuligal.com/blog/slp422xzxy9ez9xkaj7sa4yrgdcyn5

சித்திர சபை|, குற்றாலம்

 
Previous
Previous

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்

Next
Next

திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்