காவேரி அம்மன் கோவில்
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.
காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.
இஞ்சிமேடு வரதராஜபெருமாள் கோவில்
ராமனின் வில்லின் மேல்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளி இருக்கும் அபூர்வ கோலம்
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் உள்ள இஞ்சிமேட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில்.
இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமருடன் லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் இருக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்து ராமபிரான், பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ராமபிரானின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வில்லின் மேல்புறத்தில் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இது, வேறு எங்கும் காண முடியாத அற்புதமாகும்.
ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் இருக்கும் அபூர்வக் காட்சி
ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் காட்சியளிக்கின்றனர். இப்படி கருவறையில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் ஒருசேர காட்சியளிப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோவிலுக்கு வந்து ஸ்ரீபெருந்தேவி தாயாருக்கு மஞ்சள் மாலை சாற்றுவதாக வேண்டிக் கொள்கின்றனர். பின்னர் தங்கள் இல்லத்திற்குச் சென்று இத்தலத்தின் தாயாரை வேண்டி ஒரு நாளுக்கு ஒரு மஞ்சளை எடுத்து பூஜையறையில் வைக்கின்றனர். இவ்வாறு செய்து வர 48 நாட்களுக்குள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் இந்த மஞ்சளை மாலையாகத் தொடுத்து காணிக்கையாக தாயாருக்கு சமா்ப்பிக்கின்றனா்.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
ஆடிமாதம் மூன்றாவது செவ்வாய் மட்டுமே சுயரூப காட்சி தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை
தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கல்யாண காமாட்சி கோவில். தருமர் வழிபட்டதால் இந்த தலத்திற்கு தருமபுரி என்று பெயர். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.
அம்பாள் கல்யாண காமாட்சி கருவறையின் அருகில், அர்த்தமண்டபத்தில் சிறிய தனிச்சன்னதியில் அம்பிகை சூலினியின் இராஜதுர்காம்பிகை வடிவம் கிழக்குநோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர், இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட துர்க்கை இவள்.
துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி இருந்தால் அவளை சூலினி துர்க்கை என்பார்கள். இத்தலத்தில் துர்க்கை, சூலினி ராஜ துர்காம்பிகையாக சூலம் சங்கு ஏந்தி மகிஷாசுரனை வதம் செய்யும் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். கீழே விழுந்து கிடக்கும் மகிஷனின் கொம்பை இடதுகரத்தால் பிடித்துக்கொண்டு வலதுபாதத்தால் அவன் கழுத்தை மிதித்துக்கொண்டு, காரணம் , காரணி, அதன் பலன் என மூன்று வகையில் மூன்று வகை சூலங்களுடன், சம்கார தோற்றத்தில் காட்சி தருகிறாள். இது தமிழகத்தில் சூலினிக்கான ஒரே கோயிலாகும்.
சூலினி ராஜ துர்காம்பிகையின் முழு தரிசனம், வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நமக்குக் கிட்டும். மற்ற நாட்களில் திரையிடப்பட்டு திருமுக மண்டலத்தை மட்டுமே தரிசிக்க முடியும். சூலினி ராஜ துர்காம்பிகையின் சுய ரூபத்தை, முழு உருவை சந்தனக்காப்பு அலங்காரத்தில் , வருடத்தில் ஆடி மூன்றாவது செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும்.
பிரார்த்தனை
சங்கு சக்ரம் ஏந்தி மகிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். ராகு கிரக அதிதேவதையான ஸ்ரீ சூலினி ராஜ துர்கையை, கிருஷ்ணரின் ஆலோசனைப்படி வழிபட்டு தருமர் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற்றார். செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுகிறாள்.
சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்
பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைகளுக்கு பூஜை நடத்தப்படும் தலம்
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுள்ள சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது சுக்ரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடைநாயகி. ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது.
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நந்திகள் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
இந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. ஒரு சமயம், இந்த கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.
பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த கோவிலில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. இப்படி இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்திருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில், சிதம்பரம், பேரூர் கோவில்களுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில்
கருவறையில் விக்கிரகம் இல்லாமல் பீடம் மட்டுமே இருக்கும் அம்மன் தலம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை என்ற ஊரில் கோட்டை அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோட்டை அம்மன் தேவகோட்டையின் காவல் தெய்வம் ஆகும். கோட்டை என்றால் அரண்மனை என்று பொருள். கோட்டையில் வாழ்பவர்கள் கூட, தம் வாழ்வில் உயர்வதற்கு கோட்டை அம்மனை வழிபட வேண்டும்.
இக்கோவில் கருவறையில் அம்மனின் விக்கிரகம் கிடையாது. பீடம் மட்டும் தான் இருக்கும் அதற்கு தான் தினசரி பூஜை நடைபெறுகிறது. விழா காலங்களில் பீடத்தின் மேல் ஒரு கும்பமும் தேங்காயும் வைத்து, அதை அம்மன் போல் அலங்கரித்து பூஜை செய்வார்கள். இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது, அச்சமயத்தில் உருவாக்கப்படும் அம்மன் சிலை, தன் கண்களை ஒரு வாரத்தில் திறக்கும் என்பது ஐதீகம். கோட்டை அம்மனை இச்சமயத்தில் வழிபடுவது அதிஷ்டம். இத்தருணத்தில் நாம் செய்யும் வேண்டுதலின் வலிமை அதிகம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.நம் வேண்டுதலுடன் தொடர்புடைய பொருட்களை, வெள்ளியில் செய்த வடிவமாக, கோவிலில் வைத்தால் நம் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். குறிப்பாக பணியில் உயர் பதவி கிடைக்க, கோட்டை அம்மன் உதவுவாள். உதாரணத்திற்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள், குழந்தை வடிவத்தை வைப்பர். வீடு வாங்க விரும்புவோர், வீட்டின் வடிவத்தை வைப்பர். உடல் நல குறைவு ஏற்பட்டால் குணமடைய வேண்டிய உடல் உறுப்பு பகுதிகளின் உருவத்தை வைக்கலாம். இவ்வுருவங்கள் இக்கோவிலின் வாசலிலேயே கிடைக்கும்.
ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, கோட்டை அம்மனுக்கு மிகவும் விசேஷமாகும். எனவே இந்த நாளில் கோட்டை அம்மனை நாம் வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.
வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்
அனுமனை வணங்கி நிற்கும் ராமரின் அபூர்வ தோற்றம்
காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இறைவன் திருநாமம் வளரொளி நாதர்..இறைவியின் திருநாமம் ஸ்ரீவடிவுடைநாயகி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் நகரத்தார் வசம் ஒப்படைக்கப்பட்ட, ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 1874 ஆம் ஆண்டு இக்கோவில் நகரத்தாரால் புனரமைக்கப்பட்டது.
சிவன் கோயிலில் ராமரது சிற்பமும் அனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப்பட்டுள்ளது எந்த சிவ தலத்திலும் காணாத அதிசயம். இங்கு கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது வேறெங்கும் காண முடியாத அதிசயக் கோலம். ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. அனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியைக் கொண்டு வந்து ராமரிடம் சேர்த்தார். அதுகேட்டு மகிழ்ந்த ராமர் நன்றிப் பெருக்குடன் அனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இது. இதனாலேயே ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக உள்ளது.
கண்களையும், மனதையும் கவரும் சிற்பங்கள், உயிரோட்டமுள்ள ஓவியங்கள்
இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து காணப்படும் எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்களையும் மனதையும் கவர்கின்றன.
கோயிலின் உள் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் கண்ணப்ப நாயனாரின் சிற்பம் சிவபிரானுடன் காணப்படுகிறது.தட்சிணாமூர்த்திக்கு முன்பு ஏழிசைத் தூண்கள் இருக்கின்றன.
நடராஜர் சபையின் முன் மண்டப வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு மிகவும் சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், உடலமைப்புகள், முகபாவம் எல்லாம் தத்ரூபமாய் அமைந்து நம்மை வியக்க வைக்கின்றன. ராஜகோபுர வாயில் நிலைகளில் உள்ள கொடிப் பெண்களின் சிற்பங்களும் முகபாவம், உடை, தலை அலங்காரம் எல்லாம் அக்காலத்திய நாகரிகத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகளாகத் திகழ்கின்றன.
இக்கோவிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. எல்லாமே இயற்கை வண்ணங்களால் உருவானவை. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்ச பாண்டவர்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
காண்பவர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் இந்த அழகிய சிற்பங்களும், ஓவியங்களும் நம் முன்னோர்கள் சிற்பக் கலையிலும் ஓவியக் கலையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டும் சாட்சியங்களாக உள்ளன.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
ஸ்ரீசக்கரத்தின் மீதே சன்னதி எழுப்பப்பட்ட தனிச்சிறப்புடைய கல்யாண காமாட்சி
தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையான இடத்தை பெறுகிறது கல்யாண காமாட்சி கோவில். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி. 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவில், ஒரு தேவார வைப்பு தலமாகும் .
கருவறையில் சுயம்பு மூர்த்தியாக இறைவன் மல்லிகார்ஜுனேஸ்வரர் 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் எழுந்தருளி இருக்கிறார். இது சிவாகமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது.
அம்பாளின் சன்னதி ஈசனின் சன்னதியை விட உயரமாக உள்ளதால், 18 படிகள் ஏறித்தான் அன்னையை தரிசிக்கவேண்டும். இங்கு அம்பாள் கல்யாண காமாட்சி, சிவசக்தி ஐக்கிய சொரூபமாக , பிரம்மா விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் நான்கு கால்களாக, சதாசிவர் மேற்பலகையாக இருக்கும் பஞ்ச பிரம்ம ஆசனத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு, நான்கு கரங்களோடு, அபய வரத ஹஸ்த கோலத்தில் அருள் புரிகிறாள். மாங்காட்டில் தபசு காமாட்சியாகவும் , காஞ்சிபுரத்தில் யோக காமாட்சியாகவும் , இத் தகடூரில்( தர்மபுரி) ஐக்கிய காமாட்சியாகவும் காட்சி தருகிறாள்.
பதினெட்டு கல்யாண குணங்களை நாம் கடைபிடித்தால்தான் கல்யாண காமாட்சியின் அருளும் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்துகின்றன. இந்த 18 படிகளையும் மலர்களால் அலங்காரம் செய்து மஞ்சள் குங்குமமும் இட்டு புடவைச்சாத்தி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில், சிற்பவடிவில் 18 யானைகள், தங்களின் தலையின் மேல் அம்பாளின் சன்னதியை தாங்கிக் கொண்டு இருக்கின்றன.
அமாவாசையன்று பெண்கள் மட்டுமே நடத்தும் திருப்படி பூஜை
ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும், பெண்கள்தான் பதினெட்டுத் திருப்படிகளிலும் திருப்படி பூஜை செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாது அம்மனின் உற்சவ திருமேனியை சுமந்து, திருப்பாதம்தாங்கிகளாக, திருக்குடை ஏந்தியவர்களாக கோவிலினுள்ளே வலம் வருவதும் பெண்கள்தான். இது எந்த கோவிலிலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் அம்பிகைக்கு முதலிடம் கொடுப்பதாலும், ஆலய அமைப்பு தாய்மையின் பெருமையை உணர்த்துவதாலும், ( தாய்மண், தாய்மொழி என்று கூறுவது போல) தாய்க்கோவில், மாத்ரு மந்திர் என்று போற்றப்படுகிறது.
பிரார்த்தனை
இந்த அம்பிகை, கல்யாண காமாட்சி என்று போற்றப்படுவதற்கான சிறப்பு என்னவென்றால், ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, திருமண வரம் வேண்டுவோர், ஐந்து அஷ்டமி தினங்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், திருமணத் தடை அகல்வதற்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தேய்பிறை அஷ்டமியில் காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரை கல்யாண மாலை பூஜை செய்து, கால பைரவர் சந்நிதியில் கந்தர்வ ராஜ கல்யாண மாலை தருகிறார்கள்.
சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
63 நாயன்மார்களை லிங்க வடிவில் சடையில் தரித்த தட்சிணாமூர்த்தி
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அன்னியர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை காப்பாற்ற எண்ணிய பக்தர்கள், இதனை மண்ணால் மூடிவிட்டனராம். பின்பு, 1958-ல், அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர தொண்டைமான் ( ‘வேங்கடம் முதல் குமரி வரை’ போன்ற பிரசித்தி பெற்ற ஆன்மீக நூல்களை எழுதியவர்) என்பவரால் ஆலயம் வெளிக் கொணரப்பட்டது.
இறைவனின் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் பச்சைக் கல்லாலான தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். இவர் தனது தலையின் சடையில் 63 நாயன்மார்களை சிவலிங்க வடிவில் தரித்துள்ளார். அவருடைய காதுகளில் மகரம் என்னும் அணிகலன்,முதலையின் தலை வடிவில் குண்டலமாக தொங்குகின்றது.
அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் 27 நட்சத்திரங்கள் வட்ட வடிவ உருவில் அமைந்திருக்கின்றன. இந்த தட்சிணாமூர்த்தியின் தலையின் மேல் கல்லாலமரம் இருக்கின்றது.
தாயின் வயிற்றில் குழந்தையின் நிலையை காட்டும் ஆச்சரியமான சிற்பம்
இக்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களின் கலைத்திறனும், நுணுக்க வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை காட்டும் சிற்பமானது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த சிற்பம், நம் முன்னோர்களின் சிற்பத் திறனை மட்டுமல்லாது, விஞ்ஞான அறிவினையும் உலகத்திற்கு பறைசாற்றுகின்றது.
வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்
திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பைரவர்
காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இறைவன் திருநாமம் வளரொளி நாதர். சிவபெருமான், சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இந்த பெயர் வந்தது.இறைவியின் திருநாமம் ஸ்ரீவடிவுடைநாயகி. இக்கோவிலில் ஸ்ரீவளரொளி நாதரும், ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர். ஸ்ரீபைரவருக்கு வயிரவர், வைரவர் என்ற பெயர்களும் உண்டு. இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்து பிரதான தெய்வமாக ஸ்ரீவயிரவரே இங்கு வழிபடப்படுகிறார்.
சம்பகாசுரன் என்னும் அசுரனை அழிக்க, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்தான் ஸ்ரீபைரவ மூர்த்தி. சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் அவர் சன்னதிக்கு எதிரே உள்ளது. இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்று அழைக்கிறார்கள். இந்த பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இந்த 12 ராசிகளையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.
குழந்தை வரம் தரும் விருட்சம்
இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து 3 புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகள் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்; இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்று கருதப்படுகிறது.
புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
புற்று வடிவில், நிறைமாதக் கர்ப்பிணி போல் காட்சி தரும் மாரியம்மன்
சென்னையில் இருந்து 38 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது புட்லூர் புற்று மாரியம்மன் ஆலயமான, அங்காள பரமேஸ்வரி கோவில். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே புட்லூரில், பூங்காவனத்தம்மன் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றாள்.
பொதுவாக அம்மனை நாம் நின்ற திருக்கோலத்திலோ அல்லது அமர்ந்த திருக்கோலத்திலோ தரிசிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் புற்று வடிவில் எழுந்தருளி இருக்கும் பூங்காவனத்தம்மன், ஓர் கர்ப்பிணிப் பெண் போல, மல்லாந்து காலை நீட்டி படுத்த நிலையில், வயிறு நிறைமாதக் கர்ப்பிணி போல் இருக்க, வாய் பிளந்தபடி அருட்காட்சி தருகிறாள். இந்த சுயம்பு புற்று முழுவதும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகின்றாள். இந்த மண்புற்று மாதாவுக்கு அப்பால், அங்காள பரமேஸ்வரி சூலம் தாங்கி கருவறையில் எலுமிச்சை மாலைகள் தாங்கி அருள் பாலிக்கின்றாள்.
பிரார்த்தனை
பொதுவாக, இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.
அம்மன் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடப்பதற்கு முன் அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துகின்றனர். ஐந்து, ஏழு, ஒன்பது மாதங்களில் இந்த சீமந்தவழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த வழிபாட்டில் வளையல், பூச்சூட்டி சடை முடித்து ஏழுவிதமான கலவை சாதங்கள் செய்து அம்மனுக்கு படையல் இடுகின்றனர்.
கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில்
வைகுந்த வாசப் பெருமாள் அமர்ந்திருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது வைகுண்ட வாசப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கனகவல்லி .
‘கோ’ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, ‘அயம்’ என்னும் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த இடம் என்பதால் ‘கோயம்பேடு’ என பெயர் பெற்றது. பேடு என்றால் ‘வேலி’ என்று பொருள். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.
வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், அவர் ஸ்ரீதேவி , பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும்.
சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில் இருக்கும் அரிய தோற்றம்
இத்தலத்தில் ராமர், சீதை ஆகிய இருவர் மட்டுமே, லட்சுமணன் அனுமன் உடன் இல்லாமல் காட்சி தருவது ஒரு அபூர்வமான அமைப்பாகும். இக்கோவிலில் ராமர் அரச கோலத்தில் இல்லாமல் மரவுரி தரித்து இருப்பதும் ஒரு அபூர்வ கோலமாகும். மேலும் இந்தக் கோவிலில், தனிச் சன்னதியில் சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில், மேடிட்ட வயிற்றுடன் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும். இத்தலத்தில் சீதா தேவிக்கு நடத்தப்படும் வளைகாப்பு உற்சவம் மிகவும் சிறப்பானது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சீதா தேவிக்கு வளையல் அணிவித்து வேண்டிக்கொண்டால், விரைவில் அந்த பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் முன் மண்டபத்தில் ராமனின் மைந்தர்கள் லவன், குசன் வால்மீகி முனிவரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
பிரார்த்தனை
கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள், ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது. இம்மரங்கள், சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகின்றன. இம்மரத்திற்கு 'பார்வதி சுயம்வர விருட்சம்' என்று பெயர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், இவ்விருட்சங்களுக்கு கல்யாண தோஷம் நிவர்த்தி வேண்டி, பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.
தவளகிரி தண்டாயுதபாணி கோவில்
சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் அணிந்த முருகன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கொடிவேரி செல்லும் சாலையில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது தவளகிரி தண்டாயுதபாணி கோவில். தவளகிரி மலை ஏறிச் செல்ல 270 படிகள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்ல தார்ச் சாலையும் உள்ளன.
கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி, மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்ப காட்சி தருகிறார். இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 'தர்ஜனி' என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை குறிப்பிடுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனியில் முருகர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி சண்முகநதி பாய்வதும் போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கியுள்ளார், பவானி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் பழனி சென்ற பலனை இத்தலத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
துர்வாசர் பிரதிஷ்டை செய்த தலம்
துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து விட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி நதியினை அவர் கடக்கும் போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெருகிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது. முருகப் பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார் துர்வாசர். உடனே மெய்சிலிர்த்து நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருகியபோது முருகனே மயில் மூலமாக அருகில் குன்று இருப்பதை உணர்த்தியதோடு மனம் தளராத தைரியத்தையும் தனக்குக் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து, அதற்கு நன்றிக்கடனாக மலையின் உச்சியில் முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் காட்சி அளிக்கும் வள்ளி, தெய்வயானை
வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக, தவக்கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார்கள். வேறு எந்த தலத்திலும் வள்ளியும், தெய்வானையும் கன்னிப்பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவதில்லை. திருமணத்தடையுள்ள கன்னிப் பெண்கள் வள்ளிக்கும், தெய்வானைக்கும் பட்டுப் பாவாடை சாத்தி மன முருக வேண்டிக் கொண்டால் அந்தத் தடை நீங்குவதாக ஐதீகம்.
பிரார்த்தனை
திருமணத்தடையை நீக்குவது, பில்லி, சூனியம், தொழில் விருத்தி, செவ்வாய் தோஷம், விரோதி நிவர்த்தி, வியாபார விருத்தி ஆகிய பரிகாரம் செய்ய உகந்த கோயிலாக இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள வள்ளி, தெய்வானைக்கு 21 விளக்கு வைத்து பூஜைகள் செய்தால் திருமணத்தடைகள் நீங்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள் மானிட ரூபமாக அவதரித்து, ஸ்ரீரங்க மன்னருக்கு பாமாலை சூட்டி பின் பூமாலை சூட்டிய பெருமை வாய்ந்த தலம்தான் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்.
இங்கு ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருஆடிப்பூர உற்சவம் 14.07.23 வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தேரோட்ட விழாவானது மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் ஐந்தாம் நாள், ஐந்து கருட சேவையும், ஏழாம் நாள் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும், அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான திருவாடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி, பூர நட்சத்திரதன்று நடைபெறுகிறது.
துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த பட்டு வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து, ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில்
முகத்தில் புனுகு காப்புடன் காட்சி அளிக்கும் பங்காரு காமாட்சி அம்மன்
தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது பங்காரு காமாட்சியம்மன் கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் இக்கோவிலை கட்டினார். கோவிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். தெலுங்கு மொழியில் பங்காரு என்றால், தங்கம் என்று பொருள்.
கருவறையில் பங்காரு காமாட்சியம்மன், தங்கத்தாலான திருமேனி உடையவளாய், வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும், மூன்று வளைவுகளோடு வில்போன்ற ஒயிலோடு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் திருமுகத்தில், எப்போதும் புனுகு காப்பு சாத்தப்பட்டு இருப்பதால், கருமை நிறத்துடன் காட்சி அளிப்பாள். பங்காரு காமாட்சி அம்மன் முதலில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்தான் எழுந்தருளி இருந்தாள். பதினெட்டாம் நூற்றாண்டில் அடிக்கடி நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால் அச்சம் கொண்ட அப்போதைய காஞ்சி மடாதிபதி, காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து இந்த பங்காரு காமாட்சி அம்மன் விக்ரகத்தை எடுத்துக் கொண்டு பல ஊர்களில் தங்கி இருந்து பின்னர் தஞ்சை வந்தடைந்தார். விக்ரகத்தின் பாதுகாப்பு கருதி அதன் திருமேனியை துணியால் சுற்றி முகத்திற்கு மட்டும் கருமையான புனுகு காப்பு சாத்தி எடுத்து வந்தார்கள். அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் அம்மனின் திருமுகத்தில் புனுகு காப்பு சாத்தப்பட்டு வருகிறது.
கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் உற்சவர் காமகோடியம்மன் சன்னதி உள்ளது. மூலவர் பங்காரு காமாட்சி அம்மனுக்கு வருடத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள், காமாட்சியின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம், பங்குனி உத்திரம் ஆகிய 11 நாட்கள் மட்டும் தான், அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் உற்சவருக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தி காமகோடி அம்மனுக்கு கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. அதுபோல கிருஷ்ண ஜெயந்திக்கும் முறுக்கு-சீடை நிவேதனம் செய்கிறார்கள். வைணவ ஆலயங்களைப் போலவே பக்தர்களுக்கு சடாரி சார்த்தும் வழக்கம் இருந்து, இப்போது மறைந்து விட்டிருக்கிறது.
சியாமா சாஸ்திரிகளுக்கு அருள் புரிந்த பங்காரு காமாட்சியம்மன்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இக்கோவிலில் நித்ய பூஜைகள் செய்யும் பணியில் இருந்து,பின்னர் கீர்த்தனைகள் பாடும் புலமை பெற்றார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். அவ்வேளைகளில் அநேக கீர்த்தனைகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது கீர்த்தனைகளுக்கு தனியான சுவை ஏற்பட்டது என்பர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஆடி முளைக்கொட்டு விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பனிரெண்டு மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.
உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் இருக்கும் அதிசயம் மதுரையில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.
'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை மேற்கொள்வர். விளைநிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு விழா 20.7.2023 வியாழக்கிழமையன்று துவங்குகிறது. விழாவின்
முதல் நாள் -சிம்ம வாகனம்
2ம் நாள்- அன்ன வாகனம்
3ம் நாள்- காமதேனு வாகனம்
4ம் நாள்- யானை வாகனம்
5ம் நாள் -ரிஷப வாகனம்
6ம் நாள்- கிளி வாகனம்
7ம் நாள்- மாலை மாற்றுதல்
8ம் நாள் -குதிரை வாகனம்
9ம் நாள்- இந்திர விமானம்
10ம் நாள்- கனகதண்டியல் வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் பவனி வரும் மீனாட்சி அம்மன்
திருவிழாவின் ஆறாம் நாளன்று, கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பது விசேஷமான ஒன்று.
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
வேண்டியதை உடனுக்குடன் நிறைவேற்றும் லட்சுமி நரசிம்மர்
சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது, சுமார் 1400 வருடங்கள் பழமையான, நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம், துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. இவரிடம் வேண்டிக்கொண்டால், உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார் என்பது ஐதீகம். எனவே 'நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்' என்று போற்றப்படுகிறார்.
கல்யாண லட்சுமி நரசிம்மர்
கருவறையில் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் சிரித்த முகத்துடன் கம்பீரமான தோற்றம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் , லட்சுமி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இங்கே மகாலட்சுமி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி நரசிம்மரை அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். இதனால் இந்த லட்சுமி நரசிம்மருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு. இவரை தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பிரார்த்தனை
இங்கு நான்கு அடி உயரத்தில், பதினாறு நாகங்களை அணிகலனாக கொண்ட கருடாழ்வார் அருள்புரிகின்றார். இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
.நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அந்திப் பொழுதில் அவதரித்தவரானதால், இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், பிணி, திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இங்கு மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை முப்பத்திரண்டு முறை வலம் வந்தால் திருமணத் தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும்.
வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்
செவ்வாய்க்கிழமை கோவில் என்ற சிறப்பு பெற்ற தலம்
சென்னை வில்லிவாக்கத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.
முன்பொரு காலத்தில், வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வலனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.
மார்க்கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம்பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் செவ்வாய்க்கிழமைதோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு
நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.
பக்தர்கள் இக்கோயிலை, 'செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
சிவன் கோவிலான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் அம்மன் கோவில்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அதனால்இந்த அகத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை, சிறப்பு மிக்க வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. 5 வாரங்களும் சுவாமி அம்பாளுக்கு விசேஷ சிறப்பு அலங்காரமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அனைத்துவிதமான தோஷங்களும் விலகி, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.
கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்
கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்திய அதிசய ஆஞ்சநேயர்
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து 23 கி.மீ. தூரத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் உள்ள கூகலூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அதிசய ஆஞ்சநேயர் கோவில்.
இக்கோவில் கருவறையில் அதிசய ஆஞ்சநேயர், ஆறடி உயரத்தில் நின்ற திருவடிவினராக, கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு வித்தியாசமாக காட்சி தருகிறார். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயரின் இந்த அபூர்வ தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
இந்த அதிசய ஆஞ்சநேயர் தினமும் தங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அதிசய ஆஞ்சநேயரை வழிபட்டு நற்பலன்கள் பெறுகிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.
மதுரை மதனகோபாலசுவாமி கோவில்
சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த மதன கோபாலன்
மதுரை நகரத்தின் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில், 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மதனகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கூடல் அழகர் கோவிலுக்கும் இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கும் மிக அருகில் உள்ளது. இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர் மதனகோபால சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூபக் கண்ணனாகப் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
தல வரலாறு
ஒரு முறை சிவபெருமான், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் சிவலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவபெருமான், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவபெருமானின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம், சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவபெருமான் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்' என்றார். மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவபெருமானையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.
ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.
பிரார்த்தனை
இசைதுறையில் மேன்மையடைய விரும்புபவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.. இத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள நாக தேவி, ஹரிஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் இராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில்
மங்கள சனீஸ்வர பகவானும், எமதர்மராஜனும் அவதரித்த தலம்
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலின் அருகில் அமைந்துள்ள தலம் திருக்கொடியலூர். இறைவன் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் ஸ்ரீலலிதாம்பிகையை தரிசித்து நவரத்தின மாலையை பாடி அம்பாளின் பேரருளை பெற்றபின், இத்தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
சூரிய பகவான், அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூலரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது. அதுவே பின்னர் திருக்கொடியலூர் என்று மருவியது. இத்தல இறைவனை வேண்டி உஷாதேவி எமதர்மராஜனையும், சாயாதேவி சனீஸ்வர பகவானையும் பெற்றெடுத்தனர். இரு சகோதரர்களும் ஒருங்கே அவதரித்த தலம் இதுவாகும். இக்கோவிலில், தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும், சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணந்தால் இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
வியாழக்கிழமைதோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
சனி பகவான் இத்தலத்தில் அபய ஹஸ்தத்துடன், அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதால் அவர் மங்கள சனீஸ்வர பகவான் என்று அழைக்கப்படுகிறார். சனிக்கிழமைகளில் பக்தர்கள் இத்தலத்தின் தென்புறம் உள்ள தேவர் தீர்த்தத்தில் நீராடி, அகத்தீஸ்வரரை வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்து கொண்டு பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அபிஷேகம் ஆராதனை செய்து வழிபடுதல், எள்சாதம் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அன்னதானம் வழங்குதல், ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.
இத்தலத்தில், எமதர்மராஜாவிடம் பக்தர்கள் ஆயுள் நீடிக்க வேண்டிக் கொள்கிறார்கள். எமதர்மர் நீதிக்கு அதிபதியாக இருப்பதால் ஏமாற்றப்பட்டவர்கள், பொருளை திருட்டு கொடுத்தவர்கள், தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பகவானை வணங்கி செல்கின்றனர். தங்கள் கோரிக்கையை பேப்பரில் எழுதி அதனை எமதர்மர் சந்நிதியில் வைத்து பூஜித்து வருகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைக்கப்பட்ட சில நாட்களில் பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடுகிறது என்பதால், பக்தர்கள் தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பூஜை செய்து செல்கின்றனர். இப்பூஜையினை எமதர்மரிடம் படிக்கட்டுதல் என்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் (மதியம் 1:30 - 3:00 மணி) க்கு, இங்கு ஆயுள்விருத்தி ஹோமம் செய்யப்படுகிறது.