வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்

செவ்வாய்க்கிழமை கோவில் என்ற சிறப்பு பெற்ற தலம்

சென்னை வில்லிவாக்கத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.

முன்பொரு காலத்தில், வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வலனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.

மார்க்கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம்பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் செவ்வாய்க்கிழமைதோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு

நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.

பக்தர்கள் இக்கோயிலை, 'செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

சிவன் கோவிலான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் அம்மன் கோவில்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அதனால்இந்த அகத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை, சிறப்பு மிக்க வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. 5 வாரங்களும் சுவாமி அம்பாளுக்கு விசேஷ சிறப்பு அலங்காரமும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அனைத்துவிதமான தோஷங்களும் விலகி, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

சொர்ணாம்பிகை

அங்காரகன்

 
Previous
Previous

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்

Next
Next

கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்