ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவில்
திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருக்கும் 'ஆபரண தாரி' பெருமாள்
நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ஆவராணி அனந்த நாராயண பெருமாள்கோவில். தாயார் திருநாமம் அலங்காரவல்லி. பஞ்ச நாராயணத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
திருவரங்கத்தில் ரங்கநாதப் பெருமாள் 18 அடி நீள திருமேனியுடன், ஐந்து தலை ஆதிசேஷன் மேல் வானத்தைப் பார்த்தவண்ணம் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து கருவறையில், மூலவரான அனந்த நாராயண பெருமாள், தென் திசை முடியை வைத்து, வட திசை பாதம் நீட்டியுள்ளார். 21 அடி நீளத்தில், ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, பக்தர்களை பார்த்த வண்ணம் சயனம் கொண்டுள்ளார். இந்த காட்சியை, இங்கு மட்டுமே நாம் தரிசிக்க முடியும். வேறு எந்த தலத்திலும்காண முடியாது.
சயன கோலத்தில் இருக்கும் அனந்த நாராயண பெருமாள் தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய தலையைத் தாங்குகிறார். பெருமானுடைய இன்னொரு கை முழங்கால் வரை நீண்டுள்ளது. கன்னங்கரிய வடிவத்திலே தைலக்காப்புக்குள்ளே இருக்கிறார்.
இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவர் தலை முதல் கால் வரை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். சிரத்தின் மேல் மணிமகுடம், அழகான நீண்ட காது வளையங்கள், திருமார்பில் நலங்கிளர் எனும் ஆரம் ,தண்டம், தாரணம், சிரேஷணம், கடகம் போன்ற ஆபரணங்கள், மார்பின் குறுக்கே கவசம், இடுப்பில் உத்தரியம், உடல் முழுவதும் யஜ்ஞோபவிதம். அவரது காலில் தண்டை, கொலுசு அணிந்தபடி காணப்படுகிறார். அவரது கைகளின் விரல்களிலும், கால்களின் கால்விரல்களிலும் ஒவ்வொரு மோதிரம் காணப்படுகிறது. இப்படி இத்தலத்துப் பெருமாள் திருமேனி முழுவதும் ஆபரணங்களை தரித்து இருப்பதால், இவருக்கு ஆபரண தாரி என்கிற பெயரும் வந்தது. அதுவே இந்த ஊரின் பெயராகி பின்னர் ஆவராணி என்று மருவியது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
சிவபெருமானின் பாதம் அமைந்துள்ள தேவாரத்தலம்
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் யாழினும் மென்மொழியம்மை.
இக்கோவில் கருவறையில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என, ஒரே சன்னதியில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் கிடையாது.
திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இத்தலத்தில் சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால், பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில் மூலவர் பதஞ்சலி மனோகரர் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.
தல வரலாறு
தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தை கண்ட பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் சிவபெருமானிடம் 'தங்கள் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம். தங்களின் திருவடி தரிசனத்தையும் எல்லோரும் காண வழி செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டனர். அதற்கு சிவபெருமான், நீங்கள் இருவரும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள் என்று கூறினார். சிவபெருமானின் ஆணையின்படி பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். திருவாரூரில் எங்கெங்கும் சிவலிங்கமாகவே இருக்க, பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் உடலை புலிக்காலாகவும் மாற்றிக்கொண்டு அன்னை கமலாம்பாளை வணங்கினர்.
அம்பாள். மண்ணால் லிங்கத்தைப் பிடிக்க உத்தரவிட்டாள். விமலாக்க வைரம் என்ற அந்த தேவலோக மண்ணில் விளமர் என்ற அந்த இடத்தில் பதஞ்சலி லிங்கத்தைப் பிடித்தார். அப்போது சிவபெருமான் தோன்றி அஜபா நடனம் ஆடியதோடு, தியாக முகம் காட்டி தன் ருத்ர பாதத்தை காட்டினார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் எல்லாம் புடைசூழ நின்று கண்டுகளித்தார்கள்.
இதையொட்டி, இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ருத்ர பாத தரிசனம் காட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும், சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் வடகிழக்கு முகமாக நந்தி வீற்றிருக்கிறது. இவ்வாறு நந்தி வடகிழக்கு முகமாக உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.
பிரார்த்தனை
இக்கோவிலில் வந்து வழிபாடு செய்தால் நோய்கள் நிவர்த்தியாகும். ஆயுள் விருத்தியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். முக்தி கிடைக்கும். கல்வியில் சிறப்பு பெறலாம் என்கிறார்கள். மேலும் இங்கு ஒரு பிடி அன்னதானம் செய்தால், பல அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்பதும் ஐதீகம்.
மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்
யானை. மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
மயிலாடுதுறைக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில், மூவலூர் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மார்க்க சகாயேசுவரர். இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகி, மங்களாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பொதுவாக சிவாலயங்களில், இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் யானை முகம், மான், ரிஷபம், சிம்மம் ஆகியவற்றோடு முயலகனும், சனகாதி முனிவர்களும் இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இத்தகைய தட்சிணாமூர்த்தியின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில்
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் கீழரங்கம்
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் சுமார் 24 கி.மீ., தொலைவில் கீழையூர் பூர்வரங்கநாதர் கோவில் உள்ளது. பெருமாள் தன் பக்தனுக்க கிருஷ்ணனாகக் காட்சி தந்து, பின் அரங்கனாகப் பள்ளி கொண்ட திருத்தலம் இது. பூர்வ என்றால் வடமொழியில் முழுமையான குறைவில்லாத எனப்பொருள். அதனால் இத்தலம் பூர்வாங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. பூர்வஜன்ம வினைப்பயனால் உண்டான தோஷங்களைக்கூட தரிசித்த மாத்திரத்தில் தீயினில் இட்ட தூசு போல காணாமல் போக்கும் பெருமாள் அருளும் தலம், கீழையூர்.
பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்ற ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. திருவரங்கம் - மத்தியரங்கம், கர்நாடகத்து ஸ்ரீரங்கப்பட்டினம் - மேலரங்கம், மாயவரம் - வடரங்கம், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம், இத்தலம் கீழரங்கம்.
தல வரலாறு
மார்க்கண்டேய மகரிஷி தான் மகளாக வளர்ந்த மகாலட்சுமியை பெருமாளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின் ஐந்து ரங்கத் தலங்களுள் நான்கிற்குச் சென்று பெருமாளையும் மகாலட்சுமியையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக பூர்வரங்கம் அல்லது கீழை அரங்கம் என அழைக்கப்படும் அரங்கத்தில் உறையும் அரங்கனைத் தேடி அலைந்தார். அரங்கனைக் காண முடியாததால் அங்கேயே தவம் இருக்கத் தொடங்கினார். கால ஓட்டத்தில் மெதுவாக புற்று வளர்ந்து அவரை மூடியது. ஒருநாள், அந்தக் கானகத்தில் எழுந்த குழல் ஓசை, தவம் செய்த முனிவரையும் கவர்ந்திழுத்தது. அதனால், உள்ளேயிருந்து வெளிப்பட்ட ரிஷி, குழலோசை வந்த திக்கை நோக்கிச் சென்றார். அங்கே கால்நடை மேய்க்கும் சிறுவன் ஒருவன் குழலிசைப்பதைக் கண்டார்.சிறிது நேரத்தில் சிறுவன் உருமாறி கண்ணனாகக் காட்சியளித்தான். வணங்கிய முனிவர். 'அரங்கன் வடிவில் தரிசனம் தந்து வரங்கள் அருள வேண்டும்' என்று வேண்டினார். உடனே, திருவரங்கத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் குண திசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி யோக நித்திரையில் காட்சிதந்தார். பெருமாள் மார்க்கண்டேய மகரிஷிக்கு பெருமாள் காட்சி கொடுத்தது. தை மாதம் இரண்டாம் நாளாகும். பெருமாள் அன்று முதல் தன்னருகே மார்க்கண்டேய மகரிஷி கருவறையிலேயே இருக்குமாறு செய்தார்.
கருவறையில் ஆனந்த விமானத்தின் கீழ் இடக்கை பக்கவாட்டில் இருக்க வலக்கையைத் தலை அருகில் வைத்து யோக சயனத்தில் ஐந்து தலை ஆதிசேஷன் மேல் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் தலையருகே மார்க்கண்டேய மகரிஷியும், திருவடி அருகே பூதேவியும் உள்ளனர் யோக மூர்த்தியாக இருப்பதால் நாபிக் கமலத்தில் பிரம்மா கிடையாது. மார்க்கண்டேய மகரிஷிக்கு முதலில் ஆயன் உருவில் காட்சி தந்ததால், உற்சவர் ஆயனார் என்ற திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
கோயிலில் வடக்கே உள்ள புஜ்கரணியின் அருகே ரங்கநாயகித்தாயார் தவம் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருமணங்குடி என்னும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு உள்ளது. எனவே இங்கு ரங்கநாயகித் தயாரிடமும், பெருமாளிடமும் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு பாலும் பழமும் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு கொடுத்தால் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை. வாழைப்பழம், உலர்திராட்சை, முந்திரி, கல்கண்டு போன்றவற்றை தாயாருக்கு நைவேத்யம் செய்து சிறுகுழந்தைகளுக்குத் தந்தால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம்.
திருவரங்கம் தலத்தின் அபிமானத் தலமாகக் கருதப்படும் இத்தலத்தில் அனைத்து திருவிழா, உற்சவங்களும் திருவரங்கத்தினைப் போலவே நடைபெறுகின்றன.
விளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோவில்
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் பந்தநல்லூருக்கும், மணல் மேட்டிற்கு இடையே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது விளத்தொட்டி என்ற தேவார வைப்புத்தலம். இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் இட்சுரச நாயகி. இட்சு என்றால் கரும்பு, ரசம் என்றால் சாறு என்ற வகையில் கரும்புச் சாறு போல பக்தர்களுக்கு நல்ல அருளையும், இனிய வாழ்வினையும் அளிப்பதால் இறைவி அவ்வாறு அழைக்கப்படுகிறார்.
மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் பால முருகன் தனிச் சன்னதியில் உள்ளார். சுவாமிமலை - முருகன் பிரணவம் உபதேசித்த தலம். திருச்செந்தூர் - சூர வதம் நடந்த தலம். முருகன் கோபம் கொண்டு குடியேறிய தலம் பழனி. முருகன் சக்திவேல் பெற்ற திருத்தலம் சிக்கல். இந்த வரிசையில் விளத்தொட்டி தலம், பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி, தூங்க வைத்தாளாம்.
சிவாலயமாக இந்த ஆலயம் திகழ்ந்தாலும், முருகனே இந்த ஆலயத்தில் பிரதானம். முருகப்பெருமான் குழந்தையாய் தொட்டிலில் வளர்ந்த தலம் இது என்பதால், வளர் தொட்டில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப் போக்கில் மருவி விளத்தொட்டி என மாறியுள்ளது.
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், இந்த ஊர் மக்களிடையே வினோதமான பழக்கம் ஒன்று உள்ளது. பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை. தூளியில் போட்டுதான் தாலாட்டுகின்றனர்.
'தொட்டில் முருகன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் இத்தல முருகப்பெருமான் இவ்வூர் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு குழந்தை மட்டுமல்ல காவல் தெய்வமும் கூட. பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள பாலமுருகனை வழிபட்டுச் செல்கின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்
பாலாபிஷேகத்தின்போது நீல நிறமாக காட்சி தரும் சிவலிங்கம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை, தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காரைக்குடியில் இருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் ஆதிரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் சிநேகவல்லி. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தின் பிற்பகுதியில் இத்தலத்தின் மூலவர் மற்றும் அன்னை திருமேனிகளில் சூரிய கிரணங்கள் படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தல வரலாறு
ஒரு சமயம், சூரியன் தானே மிகுந்த ஒளி உடையவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு, சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீல ரத்தினக்கல்லால் ஆவுடையார் மற்றும் லிங்கம் அமைத்து, ரத்தினமயமான அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேசுவரர்' என்று பெயர். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி காட்சியளிக்கின்றார்.
சுக்ரனுக்குரிய பரிகாரத்தலம்
இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. அம்மனுக்கு விசேஷ சுக்ர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்ரதிசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது. சுவாமி ஆதிரத்தினேசுவரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும்.
குன்னத்தூர் கோதபரமேசுவரன் கோவில்
மூலவரும், பரிவார தேவதைகளும் ராகு அம்சத்தோடு திகழும் அபூர்வத் தலம்
திருநெல்வேலி - மேலத்திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில், 11கீ.மீ தூரத்தில் உள்ளது குன்னத்தூர் என்கிற கீழத்திருவேங்கடநாதபுரம். இறைவன் திருநாமம் கோதபரமேசுவரன். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்பாள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவகைலாய தலங்களில் ராகு பரிகார தலம் இது. இந்த ஊர் செங்காணி எனவும் அழைக்கப்படுகிறது. காணி என்றால் நிலம், செங்காணி என்றால் செம்மண் பொருந்திய நிலம் எனப்பொருள்படும். இக்கோவில் 900 ஆண்டுகள் பழமையானது.
இங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த ரோமச முனிவர், ராகுவை நினைத்து வழிபாடு செய்ததால், ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாவும் இக்கோவில் திகழ்கிறது. மூலவர் லிங்கம் மார்பில் சர்ப்பம் போல் முத்திரை காணப்படுகின்றது. மூலவர் கோதபரமேசுவரன் மட்டுமின்றி, இங்கே தனித் தனிச் சந்நிதிகளில் அருளும் தட்சிணாமூர்த்தி, பைரவர்,ஆறுமுகநயினார், கன்னி விநாயகர், நந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனியிலும் ராகு இருப்பதைக் காண முடியும். இப்படி அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்வது இந்த தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சிவகாமி அம்பாளின் திருமேனி முழுவதும், ருத்ராட்சம் போன்று அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவரை வழிபட, குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் விரைவில் கிடைக்கும்; மாங்கல்ய தோஷம் நீங்கும். இக்கோவிலின் வெளிபிரகாரத்தில் ஒரே கல்லி்ல் வடிவமைக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய ஆறுமுகநயினார் சந்நிதி உள்ளது.
பிரார்த்தனை
இத்தலமானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும். இத்தலத்து இறைவனை வழிபடுதல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபடுதலுக்குச் சமமான ஒன்று. மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம்,காலதோஷம்,நாகதோஷம் ஆகியவற்றிற்கும் பரிகாரத் தலமாகும். இத்தலத்தை வழிபட்டால் வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் நீங்கும். மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
திரிபங்கி நிலையில் காட்சியளிக்கும் விசித்திர வடிவ நரசிம்மர்
திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது, பிரசித்தி பெற்ற கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது. இந்தியாவில் மூன்று இடங்களில்தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்னும் சிறு குன்றிலும் உள்ளன. மூன்றாவதாக, கீழப்பாவூரில் மட்டுமே சமதளப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச் சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இதனை ஒட்டி பின்புறத்தில் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தமிழகத்தில் இத்தலத்தில் மட்டும்தான், திரிபங்க நிலையில் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் நரசிம்ம அவதாரம் எடுத்ததால் அவரது உக்கிரகத்தைத் தணிக்க அவரது சன்னிதி முன்பு மாபெரும் தெப்பக்குளம் உள்ளது சிறப்பு. இது நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
மகாவிஷ்ணு, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த நரசிம்ம அவதார காலம் இப்பூவுலகில் (அகோபிலத்தில் ) இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்தது. 'மற்ற அவதாரங்களைப் போல், நரசிம்ம அவதாரம் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லையே' என்ற எண்ணம் மகாவிஷ்ணுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்வதற்கும்,தன்னை நோக்கி தவமிருந்த ரிஷிகளுக்கு நரசிம்ம தரிசனம் தருவதற்காகவும் இத்தலத்தில், கிருதயுகத்தில் அகோபிலத்தில் எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடனுடன் எடுத்து, மகா உக்கிர மூர்த்தியாக பதினாறு திருக்கரங்களுடன் காட்சியளித்தார்.
தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்து அடிக்கடி சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவருடைய முழு அருளுக்குப் பாத்திரமாகலாம். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்ட திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும், போன, இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும்.
கன்னியாகுமரி குகநாதீசுவரர் கோவில்
முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்
கன்னியாகுமரி ரயில் நிலயத்திற்கு அருகில், பகவதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ.தொலைவில் இருக்கிறது குகநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பார்வதி. இவர் கோனாண்டேசுவரன் என்றும், குகனாண்டேசுவரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது குகநாதீசுவரர் கோவில். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்கு முன்பாகவே, சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார்.
முருகப் பெருமான் தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல்படி, தனது தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று தல வரலாறு கூறுகின்றது.இங்கு, குகன் என்ற முருகக்கடவுள், ஈசுவரன் என்ற சிவனை வழிபட்டதால், இந்தக் கோவிலுக்கு குகநாதீசுவரர் கோயில் என்று பெயர்க் காரணம் கூறுகின்றனர். இந்த கோவிலில் மூலவர் குகநாதீசுவரர் 5 அடி உயரத்துடன் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இந்த சிவலிங்கம், குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிலையாகும்.
பிரார்த்தனை
இந்த கோவிலில் 11 திங்கட்கிழமை தொடர்ந்து வந்து, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, கோவிலின் கருவறை தீபத்திற்கு பசுநெய் வழங்கி வழிபட்டால் குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம் மற்றும் முதியவர்களை மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நத்தம் அக்னி ஈசுவரர் கோவில்
ஆட்டின் முகமும், காளை உடலும் கொண்ட அபூர்வ நந்தி
திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியான மேலப்பாளையம் அருகே நத்தம் என்னும் ஊரின் அருகே தாமிரபரணி நதியின் கரையிலே அமைந்துள்ளது அக்னி ஈசுவரர் கோவில்.
இறைவியின் திருநாமம் கோமதி அம்பாள். மூலவர் அக்னி ஈசுவரர் சுயம்பு மூர்த்தி. அவரது திருமேனியில் ருத்ராட்சத்தில் உள்ளது போலவே பட்டைகள் காணப்படுவதால், ருத்ராட்சமே லிங்கமாக அமைந்தது போன்ற தோற்றமளிக்கிறார்.
இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நந்தி அபூர்வமான தோற்றம் உடையதாக இருக்கின்றது. இந்த நந்தி ஆட்டின் முகத்தோடும் , காளை உடலோடும் அமைந்துள்ளது. இத்தகைய நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இந்த நந்திக்கு மேஷ நந்தி என்று பெயர். மேஷ ராசி அன்பர்களுக்கு சிறந்த வழிபாட்டுத் தலமாகும். குறிப்பாக பரணி நட்சத்திர அன்பர்களுக்கு உரிய தலமாகும். இது செவ்வாய் கிரக பரிகார தலமாகவும் உள்ளது.
களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய அபூர்வ வேணுகோபால சுவாமி
செங்கல்பட்டு நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது களியப்பேட்டை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.
கருவறையில், பெருமாள் லட்சுமி தேவியைத் தன் இடது மடியின் மேல் அமர்த்திக் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இப்பெருமாள் தனது மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டும், கீழ் இடது திருக்கரத்தால் லட்சுமி பிராட்டியை அணைத்துக் கொண்டும், கீழ் வலது திருக்கரத்தால் அபய ஹஸ்த கோலத்தைக் காட்டியபடியும் காட்சியளிக்கிறார்.
பொதுவாக, வைணவத் திருத்தலங்களில் வேணுகோபாலன் தம் இரு கரங்களால் புல்லாங்குழலை ஏந்திய இரு கை உருவமாகவே பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ருக்மிணி-சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி சற்று வித்தியாசமான தோற்றத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் கொண்டும், கீழ் இருக்கரங்களால் புல்லாங்குழலை பற்றிக் கொண்டும் சேவை சாதிக்கிறார். நிற்கும் நிலையிலுள்ள பெரும்பாலான மற்ற தெய்வ வடிவங்களின் அமைப்பில் இரண்டு வளைவுகள் (த்விபங்கம்) அல்லது மூன்று (த்ரிபங்கம்) வளைவுகளே காணப்படும். மாறாக, இந்த மனங்கவரும் வேணுகோபால சுவாமியின் திருமேனி ஐந்து (பஞ்சபங்கம்) வளைவுகளைக் கொண்டுள்ளது என்பது அரிய சிறப்பாகும். இத்தகைய வேணுகோபால சுவாமியின் திருவுருவை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நட்சத்திர கோயில் (வில்வாரணி) சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
நாகாபரணத்துடன், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் காட்சி தரும் அபூர்வ முருகன்
திருவண்ணாமலை-வேலூர் சாலையில், கலசபாக்கத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ளது நட்சத்திர கோயில் (வில்வாரணி) என்னும் சிற்றூர். இந்த ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருவது தனிச்சிறப்பாகும். வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க ஆலயம் இதுவாகும்.
கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை. அதனால் இத்தலம் ,27 நட்சத்திரங்களுக்கும் அனுகிரகத் தலமாகவும் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோவில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர். 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை. இக்கோவிலின் சுயம்பு முருகனை வழிபட்டால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. கிருத்திகைதோறும் பக்தர்கள் நட்சத்திரகிரி மலையை வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்தின் போது, மலேசியா நாட்டில் உள்ள முருகன் சிலையை போல் 42 அடி உயர முருகன் சிலை இக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும். பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை.
இந்த கோவில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 227 படிகள் அமைக்கப்பட்டுள் ளன. சன்னதி வரை வாகனங்கள் செல்லவும் சரிவுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.
தகடி அழகியநாதேசுவரர் கோவில்
வேத கோஷத்தை ஒய்யாரமாக அமர்ந்து கேட்கும் ஆனந்த விநாயகர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தகடி என்னும் ஊரில் அமைந்துள்ளது அழகியநாதேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் அழகியநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை.
இக்கோவிலில் விநாயகர் வேத கோஷத்தை கேட்கும் ஆனந்த நிலையில் நமக்கு தரிசனம் தருகிறார். விநாயகர் நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடித்து வலது காலை ஊன்றி, ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் கண் மூடி தலையை சாய்த்து வேத மந்திரங்களை ஊன்றி கவனிக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். விநாயகரின் இந்த ஒய்யார தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில்
பசுவின் கொம்பைப் போல் காட்சியளிக்கும் அபூர்வ சிவலிங்கம்
கிழக்கு தாம்பரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தேனுகாம்பாள். கருவறையில் மூலவர் தேனுபுரீஸ்வரர் , காமதேனு பசுவின் கொம்பு வடிவில் காட்சி அளிக்கிறார். சதுர ஆவுடையாரின் நடுவில் மூன்று அங்குல அகலமும், எட்டு அங்குல உயரமும் கொண்டு, சிறிய மூர்த்தியாக இந்த தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஈசன் பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும், பசுவின் கொம்பைப் போல் தரிசனம் அளிக்கும் இந்தக் காட்சி அபூர்வமானது. சிவலிங்கத்தின் மீது பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலைக் கட்டியவர் ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நடைபெறும் சரபேஸ்வரர் பூஜை
இக்கோவில் மண்டபத்தில் உள்ள 18 தூண்களும் அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. கையில் வீணையுடன் விநாயகர், கையில் சேவலுடன் யானையின் மீது அமர்ந்து இருக்கும் முருகன், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதத்தை தொட்டு வணங்கும் அஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய தூண் சிற்பங்கள் விசேஷமானவை.
ஒரு தூணில், உக்கிர சரபேஸ்வரர் சிலை உள்ளது. தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாளுக்கு அடுத்தபடியாக,இந்தக் கோயிலுக்கு சரபேஸ்வரரை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மரின் கோபம் தணிப்பதற்காகவே, சிவபெருமான் சரபேஸ்வரர் திருவுருவம் எடுத்தார் என்கிறது தல புராணம். சரபேஸ்வரர், நரசிம்மனை கீழே சாய்த்து அவரது கோபத்தை அடக்கும் நிலையில் காட்சி தருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் (4.30 முதல் 6 மணி வரை), சரபேஸ்வரருக்கும் உத்ஸவ மூர்த்தியான சரபேஸ்வரருக்கும் அபிஷேகங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. நரசிம்மரைப் போலவே, சரபேஸ்வரருக்கும் பானக அபிஷேகம் மிகவும் விசேஷம். சரபேஸ்வரரை வணங்கினால் எதிர்ப்புகள் விலகும், தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது ஐதீகம். கிரக, நாக தோஷம் உள்ளவர்களும் இங்குள்ள சரபேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலம்
அருணகிரிநாதர் இத்தலத்தை மாடையம்பதி என்று தமது திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார். இத்தலத்துக்கு அருகே சித்தர்கள் வாழ்ந்த இடம், முற்காலத்தில் சித்தர் பாக்கம் என்றிருந்தது. இப்போது சித்தல பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்
தெற்கு அகோபிலம் என்று போற்றப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்
விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி அருகில் பூவரசன்குப்பம் ஊரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில். மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் அமிர்தவல்லி. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோவிலில், தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால், இந்த ஒரு கோவிலில் மட்டும்தான், நரசிம்மர் தாயாரை ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றார்.
இக் கோவில் தெற்கு அகோபிலம் எனக் கூறப்படும் அளவுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகளுக்கு நரசிம்மர் காட்சி தந்தாராம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற பாதி மனித பாதி மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்குக் காட்சி தர தெற்கு நோக்கி வந்தபோது பூவரசன்குப்பத்தின் அருகில் அவர்களுக்குக் காட்சி தந்தார். ஆனால் அவர்களால் உக்கிர அவதாரத்தில் இருந்த நரசிம்மரை தரிசிக்க முடியவில்லை. காரணம் அத்தனை சூடாக அந்த பூமியே தகித்ததாம். ஆகவே அவர்கள் அவரது துணைவியாரான அமிருதவல்லித் தாயாரிடம் பெருமானை தாங்கள் தரிசனம் செய்ய வசதியாக இருக்க அவர் கோபத்தை தணிக்குமாறு வேண்டிக் கொள்ள, தாயாரும் அவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு கண்ணால் நரசிம்மரையும் இன்னொரு கண்ணால் முனிவர்களையும் பார்த்துக் கொண்டு இடது தொடை மீது அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தாயாரை நரசிம்மரும் நோக்க அவர் உக்கிரத்தை தாயார் அப்படியே உறிஞ்சிக் கொண்டு விட , நரசிம்மரின் கோபம் அடங்கியது. முனிவர்கள் ஆனந்தம் அடைந்து அவரை மனமார தரிசித்தார்கள். அது முதல் நரசிம்மர் அதே கோலத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும். மற்றும் எதிரிகள் எல்லாம் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
பள்ளியூர் ஆதி வீரமாகாளியம்மன் கோவில்
திருமணம் நடைபெற வேண்டி ஜாதகத்தை உண்டியலில் போடப்படும் தலம்
தஞ்சையில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பௌர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு. காரணம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும்
ஆதி வீரமா காளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியூர் பகுதியில் இருந்துள்ளது. அந்த பகுதியில் குடியிருந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு சென்ற பின்னர் அந்த பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது . அதில் ஒரு புற்று இருந்துள்ளது . இதனை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒருநாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல் பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது அந்த புற்றிலிருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை.இதை அடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை ஒன்றரை அடி உயர கருங்கல் சிலையாகும்.
இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும்,குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.
திருமணமாகாதவர்கள் தங்கள் ஜாதகத்தின் நகல்களில் இரண்டு பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டுவர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும் . அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு மூன்று பௌர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும் . மூன்றாவது பௌர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும்போது ஆண் , பெண் உருவம் கொண்ட இரண்டு மரப்பாச்சி பொம்மைகள் எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்துவிட்டு ஒரு பொம்மை கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது .
நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக் கொண்டு வருபவர்களுக்கும் அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள் .
தஞ்சை 24 பெருமாள்கள் கருட சேவை
தஞ்சை வைகாசி திருவோண 24 பெருமாள்கள் கருட சேவை விழா
தஞ்சாவூர் மற்றும் அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
தஞ்சை கொடிமரத்து மூலைக்கு அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் எழுந்தருளுவார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள், ஸ்ரீநரசிம்மர், மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜப்பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேசர், கரந்தை ஸ்ரீயாதவக் கண்ணன், கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு ராஜவீதி ஸ்ரீகலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத் தெரு பஜார் ஸ்ரீராமசுவாமி, எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீஜனார்த்தனர், கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், மேலராஜவீதி ஸ்ரீவிஜயராமர், ஸ்ரீநவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு ஸ்ரீபூலோகக் கிருஷ்ணர், மாச்சாவடி நவநீதகிருஷ்ணர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி, சுக்காந்திடல் ஸ்ரீலக்ஷ்மி நாராயணபெருமாள், கரந்தை வாணியத் தெரு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், கொல்லுப்பேட்டைத் தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆகிய கோயில்களில் இருந்து 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.
நவநீத சேவை
கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இதில் 15 பெருமாள்கள் கையில் வெண்ணை குடத்துடன், நவநீத அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.
நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோவில்
ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் நேமம் உள்ளது. இறைவன் திருநாமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர். இறைவியின் திருநாமம் சவுந்தர நாயகி. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.
கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். இப்படி ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் பைரவர் இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோவில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. இக்கோவில் சிற்பங்கள், யாவரும் வியக்கும்படியான நுட்பமான சிற்ப வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
பிரார்த்தனை
சிவன் மன்மதனை வெற்றி கொண்ட தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடக்கவும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர்
தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்
பாண்டவர்கள் வழிபட்ட வனபத்ரகாளியம்மன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது.
தல வரலாறு
சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால் இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றாள். இது தவிர ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் கதையோடும் இக்கோவில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி என்ற ஏழு சகோதரிகளை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு பாண்டவர்கள் அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை சங்கவதியின் மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.
அவன் இங்குள்ள வனபத்ரகாளி அம்மனை வழிபட்டுச் சென்று ஆரவல்லியின் பெண்கள் சாம்ராஜ்ஜியத்தைத் தவிடு பொடியாக்க அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர். இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விஷயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து வெகுண்டெழுந்து ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராஜ்ஜியத்தை அழித்தான்.
பிரார்த்தனை
அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர்.
மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்
இதய நோய்க்கான பரிகாரத்தலம்
மயிலாடுதுறைக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில், மூவலூர் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மார்க்க சகாயேசுவரர். இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகி, மங்களாம்பிகை என்ற இரண்டு இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியிருக்கிறார்கள். ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும், இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால் இறைவனுக்கு, 'வழிகாட்டிய வள்ளல்' என்றும், 'மார்க்க சகாயேசுவரர்' என்றும் பெயர் வழங்கலாயிற்று. இதேபோல் மூவரும் வழிபட்ட ஊர் இதுவென்பதால், 'மூவரூர்' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது, 'மூவலூர்' என்றாகி இருக்கிறது. இத்தலம் தேவார வைப்புத் தலமாகும்.
திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம், மகிஷாசுரனை வதம் செய்த துர்ககையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட சிறப்பு மிக்கது இந்த ஆலயம்.
இக்கோவிலில், மையத்தில் பலிபீடம் இருக்க அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு வேத நந்திகள் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இந்த கோவில் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலபிஷேகம் செய்தும், அபிஷேகப் பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை.