திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்
கிரகண காலத்தில் நடை திறந்திருக்கும் தேவாரத்தலம்
திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.
பொதுவாக கிரகண காலத்தில் எல்லா கோவில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
நமக்கு முக்தி கிடைக்க நாமே செய்யும் ஆத்ம தர்ப்பணம்
திருவாரூரில் பிறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்பது முதுமொழி. அதுபோல இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோவில் அருகில் யாராவது இறந்து விட்டால், சடலத்தை எடுக்கும் வரை கோவிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு ஷேத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. இங்கே சுவாமிக்கு எமதர்மராஜனே வாகனமாகவும் இருக்கிறார். மேலும் கோவில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. சடலத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள்.
ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோவிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். இதற்கு 'ஆத்ம தர்ப்பணம்' எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிறவர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர்களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.
மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இத்தலத்தில் வழிபடுகின்றனர்.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்
எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருச்சியில் இருந்து ( வழி - மண்ணச்சநல்லூர் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவன் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும்.
இத்தலத்தில் எமதர்மனுக்கு என்று அமைந்துள்ள தனிச் சன்னதி, ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் புடைப்பு சிற்பமாக சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க,சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார். இறைவன் பெயர் மிருத்யுஞ்சயர் , தாயார் தாட்சாயணி . மிருத்யுஞ்சயர் என்றால் எம பயம் போக்குபவர் என்று அர்த்தம் அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.
திருக்கடவூர் தலத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான் அதற்கிணங்கி தைப்பூச நாளன்று மீண்டும் எமதர்மனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து, தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.
எமதர்மன் சனி பகவானுக்கு அதிபதி என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்ன உள்ளதாலும் இத்தலத்தில் நவகிரக சன்னதி இல்லை . இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும். அதனால் சனிபகவானின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர் .
மேலக்கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
இரவு வேளைகளில் மட்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் முருகன் தலம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல ஆயுதங்களைப் பெற்றுச் சென்றார். அவற்றுள் பிரதானமான `மழு' எனும் ஆயுதத்தை முருகப் பெருமான் பெற்ற தலம்தான் கொடுமழுவூர் என்றழைக்கப்படும் மேலக்கொடுமலூர்.
மேலக்கொடுமலூர் என்றால் 'வலிமைமிக்க மழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்' என்ற அர்த்தமும் உண்டு. அதாவது முருகப் பெருமான் அசுரனை மழு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும் பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அவர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.
முருகனுக்கு முப்பழ பூஜை
இங்கே முருகப்பெருமான் அஸ்தமன வேளையில் முனிவர்களுக்குக் காட்சி தந்ததால், சூரிய அஸ்தமன த்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனைகள் நடைபெறு கின்றன. திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாள்களில் இரவு வேளைகளில் 33 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. வைகாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் செய்யப்படும் முப்பழ பூஜை மிகவும் பிரசித்திபெற்ற பூஜையாகும். முப்பழ பூஜையின்போது முருகப்பெருமானின் அழகைக் காண்பதற்காகவே தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
முழங்கால் வலி தீர்க்கும் முருகன்
தீராத முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு, மஞ்சள் பூசப்பட்ட உடைமரக் கால்களை (கவட்டையுடன் கூடியது) வாங்கி சமர்ப்பித்தால், நாள்பட்ட முழங்கால் வலி நீங்கி விடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
மேலும் வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகிய பாதிப்புகளால் அவதிப்படும் அன்பர்கள், இங்கு வந்து மாவிளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றால், விரைவில் அந்தப் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள்.
அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து, கோயிலின் தலவிருட்சமான உடைமரத்தின் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
வரதராஜப் பெருமாள் கருட சேவை
108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் முக்கியனமான தலமாகும். இங்கு, வருடத்துக்கு மூன்று கருட சேவை நடைபெறும் என்றாலும், வைகாசி மாதம் வரும் கருடசேவை உலகப் பிரசித்தமானது. இவ்விழா வைகாசி விசாக நாளில் கொண்டாடப்படுகின்றது. இந்த கருட சேவையை கண்டு மகிழ்ந்து ஆழ்வார்கள் தனி மங்களாசாசனமே செய்துள்ளார்கள்.
ஒரு விநாடி தரிசனம் - கருட சேவையை திருக்குடைகளால் மறைப்பதற்கான பின்னணி
கருட சேவையின் பொழுது அலங்காரம் முடிந்து பெருமாள் புறப்படும் நேரத்தில் கருட சேவையை ஒரு விநாடி பொழுது திருக்குடைகளால் மறைப்பார்கள். இது இங்கு மட்டுமே நடைபெறும் வழக்கமாகும். இதற்கு ஒரு விநாடி தரிசனம் என்று பெயர். இதற்கு காரணம் முற்காலத்தில் சோளிங்கர் நகரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்னும் விஷ்ணு பக்தர். அவர் காஞ்சியில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தவறாது தரிசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அவரால் ஒரு முறை காஞ்சிபுரம் கருட சேவைக்கு செல்ல முடியவில்லை. அதனால் மனம் வேதனையுற்ற, அவர் சோளிங்கரில் இருந்தபடியே பெருமாளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். தன் பக்தனுக்கு பெருமாள் மனமிரங்கி சோளிங்கரில் அவருக்கு கருட தரிசனம் தந்தார். இதனைக் கருத்தில் கொண்டே இன்றும் கருட சேவை நடைபெறும் பொழுது சேவையை திருக்குடைகளால் ஒரு விநாடி பொழுது மறைக்கிறார்கள்.
ராபர்ட் கிளைவ் காணிக்கையாக தந்த மகர கண்டி ஆபரணம்
ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியாவில் நிறுவக் காரணமாய் இருந்த ராபர்ட் கிளைவ், மகர கண்டி என்னும் ஆபரணத்தை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்குக் காணிக்கையாக கொடுத்தார். ஒவ்வொரு கருட சேவையின் போதும், ராபர்ட் கிளைவ் மகர கண்டி ஆபரணத்தை இன்றும் பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 2.6.2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகின்றது
சேங்காலிபுரம் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் ஒருக்களித்த நிலையில் சயனித்திருக்கும் அபூர்வ கோலம்
திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ள குடவாசலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது சேங்காலிபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பரிமள ரங்கநாதர் கோவில். முன்னர் இந்த ஊரின் பெயர் திருக்கலீஸ்வரம் என்று இருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னனின் படை தளபதியான அரவான் ராஜராஜன் என்பவர் சாளுக்கிய மன்னனான ஜெயசிம்மனை தோற்கடித்ததினால், இந்த ஊரை அவருக்கு பரிசாக மன்னன் கொடுத்து விட, இந்த ஊரின் பெயர் ஜயசிங்ஹ குலகாலபுரம் என ஆயிற்று. நாளடைவில் அதுவே சேங்காலிபுரம் என மருவியது.
இத்தலம் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் ஆகும். இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அந்த கோவில்களை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம்,
பொதுவாக அனைத்து கோவில்களிலும் சயன கோலத்தில் காணப்படும் பெருமாள், ஆகாயத்தை நோக்கி படுத்த நிலையில் காணப்படுவார் . ஆனால் இங்குள்ள பெருமாளோ சயன கோலத்தில் இருந்தாலும், தனது முகம் உட்பட முழு சரீரத்தையும் பக்தர்களுக்கு காட்டி அருள் பாலிக்கும் வகையில் சயன கோலத்தில் காட்சி தருகின்றார் என்பது ஒரு அதிசய காட்சியாகும். தனது ஒரு கைமீது தலையை வைத்து படுத்தபடி சயன கோலத்தில் உள்ளார். பூமி மீது நேரடியாக தலையை வைத்துக் கொண்டு படுக்கலாகாது என்பது ஒரு நெறிமுறை என்பதினால், அதை தவிர்க்கவே, தனது ஒரு கையின் மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உள்ளார்.
வலது காலில் ஆறு விரல்கள் உள்ள பெருமாள்
இத்தலத்து பெருமாளுடைய வலது காலில் ஆறு விரல்கள் உள்ளன. அதை தரிசிப்பவர்களுக்கு பெரும் அதிருஷ்டம் வரும். மேலும், ஆறாவது விரல், கலியுகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.
ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய இருவரும் 'இங்கேயே இரு' என்ற பாவனையில் கைகளை வைத்து இருக்கும் அபூர்வ தோற்றம்
தசரத சக்ரவர்த்தி தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பல கோவில்களில் யாகங்கள், பூஜைகள், பரிகாரங்கள் செய்தார். இந்த தலத்திற்கும் வந்திருந்து ஒரு வருடம் பூஜைகள் செய்தார். ஆனால் பலன் கிடைக்காமல் இருக்கவே, இந்த தலத்திருந்து வருத்தத்துடன் திரும்பிப் போகையில், அவர் முன் தோன்றிய ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி 'உனக்கு அனுக்கிரகம் கிடைக்கும் வேளை வந்து விட்டதினால் இன்னமும் சற்றே இங்கிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க, பெருமாளை தோத்திரம் செய்' என அழைத்தார்கள். அந்த நிலையில் இங்கேயே இரு என கூறும் வகையில் காட்சி தரும் கைகளுடன், இரு தேவிகளும் காணப்படுகின்றார்கள். அந்த தேவிகளின் கைகளை உற்றுப் பார்த்தால் இந்த காட்சியைக் காணலாம். பிற கோவில்கள் அனைத்திலும் உள்ள இரு தேவிகளும் கைகளில் பூ அல்லது ஆயுதங்களோடு காட்சி தர இங்கு மட்டுமே ' இங்கு இன்னும் சற்று இரு' என கூறுவது போன்ற நிலையில் உள்ள கைகளோடு காட்சி தருகிறார்கள். அதைக் கேட்டு படுத்திருந்த பெருமாள் அங்கேயே நின்றிருந்த தசரதரை நோக்கி சற்றே ஒருக்களித்து படுத்துக் கொண்டு 'தசரதா, நான் உன்னுடைய தவத்தினால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் இன்னமும் உனக்கு உள்ள பாவங்களை தொலைத்துக் கொள்ள சில புண்ணிய காரியங்களை செய்ய வேண்டி உள்ளது. அவற்றையும் நீ செய்து முடித்தப் பின்னர், நானே உனக்கு புத்திரனாக பிறப்பேன்' என கூறினாராம்.
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோவில்
பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் ஒரே தலம்
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில், தேவாரத் தலமான திருவாசிக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் துடையூர், இறைவனின் திருநாமம் விஷமங்களேஸ்வரர் . அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி. சுமார் 2,000 வருடப் பழைமை மிக்க கோயில்.
இறைவன் கருவறையின் வடபுற சுற்றுச்சுவரில், நான்முகனாராகிய பிரமன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையின் தென்புறச் சுவரில் பத்மாசன கோலத்தில் குடையின்கீழ், ஞான சரஸ்வதி தேவி கரங்களில் வீணை இல்லாமல், அருள்புரிகிறார். தீச்சுவாலைகளுடன் திகழும் திருவாசி இத்தேவியின் தலைக்குப் பின் திகழ, சடாமகுடத்துடன் அமர்ந்த கோலத்தில், வலக்கரம் சின்முத்திரை காட்ட, தொடைமீது திகழும் இடக்கரத்தில் ஏட்டுச் சுவடி திகழ பின்னிரு கரங்களில் நீர்ச் சொம்பும், மணிமாலையும் ஏந்திய நிலையில் ஞான சரஸ்வதி தேவி, காணப் பெறுகின்றாள்.
வைகாசி விசாக நன்னாளில் இந்த கோயிலில் பிரம்மாவிற்கும் சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஹோமங்கள் முடிந்து பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 மணிமுதல் 6 மணிக்குள் பிரம்மாவிற்கும், சரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இது போல் பிரம்மாவிற்கு கல்யாணம் நடைபெறும்தலம் தமிழ்நாட்டிலேயே இந்த துடையூர் தலம் மட்டும் தான். வேறு எங்கும் நடப்பதில்லை- பிரம்ம முகூர்த்த வேலையில் பிரம்மாவை தரிசிப்பதே பெரும் புண்ணியம். அத்துடன் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி- பிரம்மா திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது பெரும் புண்ணியம்.
அருப்புக்கோட்டை படித்துறை விநாயகர் கோவில்
ஜடாமுடியுடன், தவக்கோலத்தில் தோற்றமளிக்கும் அபூர்வ விநாயகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பாண்டிய மன்னன் ஒருவனுக்கு, சாபத்தினால் உடலில் தீராத நோய் ஒன்று ஏற்பட்டது. அந்த சாப நிவர்த்திக்காகவும், தனது நோய் நீங்கிடவும் , அந்த பாண்டிய மன்னன் அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில் அருகிலேயே ஒரு திருக்குளத்தினை வெட்டினான். அந்த திருக்குளம் வெட்டிய இடத்தில், புதையுண்டுக் கிடந்த அழகிய விநாயகர் சிலை ஒன்றுக் கிடைத்தது. எல்லா விநாயகர் சிலை போன்று அல்லாமல் , அந்த விநாயகர் சிலை தலையில் கிரீடம் இல்லாமல், ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் காணப்பட்டதாம்.எனவே இந்த விநாயகர் சிலை காலத்தால் , பாண்டிய ஆட்சிக்கும் முற்பட்டது எனவும் , தவக்கோலத்தில் இருப்பதால், சித்தர்களாலும், முனிவர்களாலும் இவர் பூஜிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கருதுகிறார்கள்.
பாண்டிய மன்னன் இந்த சிலையை , திருக்குளத்தின் ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்,.காலங்கள் பல மாறிய பின்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை முன்பு இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அதே ஈசான்ய மூலையில் புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர் வழிபட சிறந்த கோயிலாகும். விநாயகர் சதுர்த்தி, மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இசை தூண்கள்
திருநெல்வேலி தேவாரப்பாடல் பெற்ற 14 பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி அம்மன்.
நம் தமிழகத்தில் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்ட பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் விஞ்ஞானிகளாலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அதிசயமான இசைத் தூண்களைக் கொண்டது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், ஆழ்வார் திருநகரி, திருவானைக்காவல், தாடிக்கொம்பு, தாராசுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களில் இசைத் தூண்கள் உள்ளன. இருந்தாலும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத்தூண்கள் தனித்துவமானவை. நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத் தூண்கள், உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இந்த தூண்களில் இருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள் எப்படி ஒலிக்கிறது என்பது இன்றும் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் ஏழிசை ஸ்வரங்களை எழுப்பும் இசை தூண்கள் உள்ளன. ஒரு பெரிய தூணை சுற்றிலும் 48 சிறிய தூண்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. இந்த தூண்களை வெறும் கைகளால் தட்டினாலே ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு ஸ்வரங்களும் ஒலிக்கும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.
பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கின்றன. ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக்கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.
எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள் இந்த தூண்களின் வடிவமைப்பு, இதிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை ஆய்வு செய்தனர். தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாவதாக மட்டுமே ஆய்வின் முடிவில் தெரிவித்தனர். ஆனால் இந்த தூண்களை எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்பது தற்போதும் விடை தெரியாத புதிராக மட்டுமே உள்ளன.
இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வழிபடுத்தும் ஒரு முறை ஆகும். ஆனால் கற்களால் செதுக்கப்பட்ட இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே செல்வதற்கு துவாரம் ஏதும் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்ப முடியும் என்பது விஞ்ஞானிகளை இன்று வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தகட்டூர் கால பைரவர் கோவில்
குழந்தை உருவிலான கால பைரவர்
வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில், 20 கிமீ தொலைவில்,முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது தகட்டூர் கால பைரவர் கோவில். இக்கோவிலில் உள்ள மூலவர் பைரவர் ஆவார். காசியில் இருப்பது போல், மூலவராக கால பைரவர் எழுந்தருளியிருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இக்கோவில் மகாமண்டபத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தினைக் கொண்ட யந்திரம் உள்ளதால் தகட்டூர் என்று பெயர் பெற்றது. இவ்வூருக்கு 'யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது.சுந்தரர் பாடிய வைப்புத்தலமாகும்.
காசியில் கருடன் பறக்காது இருப்பதற்கும், பல்லி கத்தாது இருப்பதற்கான காரணம்
ராவணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள ராமர், ராமேசுவரத்தில் சுயம்பு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்ய விரும்பினார். அனுமனை சுயம்பு சிவலிங்கத்தை கொண்டுவருவதற்காக காசிக்கு அனுப்பினார். காசிக்கு சென்ற அனுமான் பல சிவலிங்கங்களை கண்டார். ஆனால் அவை அங்கு தவம் இருந்த ரிஷி முனிவர்களால் பிரதிட்டை செய்யப்பட்டவை. எனவே சுயம்பு லிங்கங்கள் அல்ல. அனுமான் எத்தனை தேடியும் சுயம்பு லிங்கத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அங்கு பறந்து கொண்டு இருந்த ஒரு கருடனும், சிவலிங்கங்கள் மீது ஓடிக் கொண்டு இருந்த பல்லி ஒன்றும் அனுமானின் தேடுதலைக் கண்டு அவருக்கு உதவ முன் வந்தன. சுயம்பு லிங்கம் ஒன்றின் மீது கருட பகவான் பறக்கத் துவங்க, பல்லியும் அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று கத்தியது. அனுமானும் அவை அடையாளம் காட்டிய ஸ்வயம்புவாக எழும்பி இருந்த சிவலிங்கத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். காசி நகரமோ கால பைரவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தன் அனுமதி இன்றி கருடன் மற்றும் பல்லியின் உதவியுடன் ஒரு சிவலிங்கத்தை பகவான் அனுமான் எடுத்துச் செல்வதைக் கண்ட, பைரவர் கோபம் கொண்டு அனுமானை தடுத்து நிறுத்த அவர்கள் இடையே கடும் யுத்தம் நடந்தது. யுத்தம் பல நாட்கள் நீண்டு கொண்டே இருக்க அதைக் கண்ட தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் பகவான் பைரவரிடம் சென்று பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள ராமபிரான் அனுப்பிய தூதுவராகவே அனுமான் அங்கு வந்து சிவலிங்கத்தை எடுத்துச் செல்கின்றார் என்று கூற, அதைக் கேட்ட கால பைரவரும் சினம் தணிந்தார்.
சிவன் கோவில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோவிலைப் பூட்டி பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதனால் பைரவர் காசி சிவலிங்கத்தை ராமேஸ்வரம் வரை பத்திரமாக எடுத்துச் செல்ல அனுமானுக்கு தானே துணையாக செல்வதாக வாக்குறுதி தந்தார். பின் அனுமானுடன் சென்று அதை ராமபிரானுக்கு அளித்தார். பின் தான் சென்ற வழியில் கண்ட தகட்டூரிலேயே தங்கி விட முடிவு செய்தார். அதன் காரணம் என்ன எனில் அவர் அனுமானுடன் சென்றபோது, வழியில் வந்த தகட்டூர், காசியைப் போலவே தனக்கு தோற்றம் தந்ததால், தகட்டூரில் ஒரு கணம் தான் சிறு குழந்தையாக மாறி விட்டு, மீண்டும் தன் பழைய உருவை அடைந்ததை உணர்ந்தார். ஆகவே தகட்டூரிலேயே அமர்ந்து விட முடிவு செய்து அங்கு அமர்ந்து கொண்டார். அதே சமயத்தில் காசியில் தன்னை மீறி கருடனும், பல்லியும் அனுமானுக்கு உதவி செய்ததினால், இனி காசியில் பல்லி கத்தக் கூடாது, கருடன் பறக்கக் கூடாது என தடை விதிக்க, இன்றுவரை காசியில் பல்லியும் கத்துவது இல்லை. கருடனும் பறப்பது இல்லை.
தகட்டூரை அடைந்த பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள். இந்த ஆலயத்தில் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மரங்கள் உள்ளன். அவற்றை ஒன்பது முறை சுற்றினால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.
அச்சங்குட்டம் காளி கோவில்
அக்னி ரூபமாக இருக்கும் அம்மனுக்கு வியர்க்கும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் சுரண்டை என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது அச்சங்குட்டம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள காளி கோவில் பல அதிசயங்கள் நிறைந்த கோவிலாக இருக்கின்றது.
இக்கோவிலில் மூலவர் காளி அம்மன் அக்னி ரூபமாக இருப்பதால், அலங்காரம் செய்யும் போது காளி அம்மன் சிலையில் வியர்க்கிறது. வியர்வையை துடைக்க துடைக்க அது வடிந்து கொண்டிருப்பது தான் அதிசயம், மேலும் அலங்காரம் செய்து முடித்த பிறகும் சிலையின் முகத்தில் வியர்வை வருவதும் முக்கிய அம்சமாகும். காளி அம்மனின் இரண்டு பக்கமும், முத்தாரம்மன் மற்றும் மாரியம்மன் மண் வடிவில் இருக்கிறார்கள். காளியம்மன் அபிஷேகத்தின் போது மண் குவியல் வடிவில் இருக்கும் இரண்டு அம்மன் பீடங்கள் கரைவதும் சில தினங்களில் மீண்டும் அவை பழைய நிலைக்கு வளர்வதும் மற்றொரு அதிசயமாகும்.
கோவில் வரலாறு
இக்கோவில் அமைந்துள்ள இடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துமலை ஐமீனின் கணக்கு பிள்ளைக்கு சொந்தமாக இருந்துள்ளது. அவரிடம் வேலை பார்த்தவர்கள் தங்களை காப்பாற்ற தங்களுக்கு ஒரு தெய்வம் வேண்டும் என்று கருதி காளி அம்மனை மண்ணில் பிடித்து அம்மனுக்கு பனை ஒலையால் ஒரு குடில் அமைத்து புரட்டாசி மாதம் கொடை விழாவும் நடத்தி, வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் அந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட, மாடக்கண்ணு என்பவரின் கணவில் தோன்றிய அம்மன் கோவில் முன்பு ஒரு இடத்தை காட்டி அங்கு கிணறு தோண்டினால் எந்த கோடையிலும் வற்றாத தீர்த்தம் கிடைக்கும் என்று வாக்கு அளித்தார். அதனை தெடர்ந்து பெண்களே ஒன்று சேர்ந்து ஒரு கிணற்றை தோண்ட இன்று வரை எந்த கோடையானாலும் இந்த கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றாமல் உள்ளதும் ஒரு அதிசயம்.
70 ஆண்டுகளுக்கு முன்பு குத்தாலிங்கம் என்ற பார்வையிழந்தவரின் கனவில் அம்மன் தோன்றி நான் சிலை வடிவில் பூமிக்கு அடியில் ஒர் இடத்தில் இருப்பதாகவும் அந்த இடத்தையும் காண்பித்து விட்டு மறைந்தாள், இது குறித்து அவர் ஊர்மக்களிடம் தெரிவிக்கும் போது யாரும் அவர் கூறுவதை நம்பவில்லை. ஆனால் அவர் நண்பர் அய்யாதுரை மட்டும் அதை நம்பினார். பின் குத்தாலிங்கமும், அய்யா துரையும் அம்மன் சொன்ன இடத்திற்கு சென்று மண்ணை தோண்டி பார்க்க 3 அடியில் ஒரு சிலை கிடைத்தது. பின்னர் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அம்மனுக்கு கோயில் கட்ட முடிவு செய்து, இக்கோவிலை கட்டினார்கள். கருவறையில், சாந்த சொருபமாக அமைதியாக சிரித்த முகத்தோடு பக்தர்களுக்கு மகுடம் தரித்த காளியாக சூலம், குங்குமக் கிண்ணம், நாகம் புரளும் உடுக்கை, என சிம்ம வாகனத்தல் காட்சி கொடுக்கிறாள்.
இந்த காளி தேவியை நம்பி வந்து சன்னதியில் விழுந்து வணங்கும் போது, கேட்ட வரங்களை அள்ளி தருபவளாகவும், கிராம மக்களுக்கு காவலாகவும் இருக்கின்றாள் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர்
திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டுதான், முதலில் தனது திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கினார்.
முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த தலமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. இத்தலத்து இறைவன் திருநாமம் ஆதிநாதர். தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும்பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ஆதிநாயகி.
சிவபெருமான் நடராஜராக ஆடும் ஆனந்த தாண்டவத்தின் போது தனது வலது காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலைத் தூக்கிய வண்ணம் காட்சி அளிப்பார். ஆனால் வயலூர் தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜரோ சதுர தாண்டவ கோலத்தில், காலடியில் முயலகன் இல்லாமல் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியபடி காட்சியளிக்கிறார். நடராஜரின் சதுர தாண்டவ கோலம் என்பது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.
கோவை, ஒத்தக்கால் மண்டபம் நவகோடி நாராயணப்பெருமாள் கோவில்
ஜாதக தோஷங்களை நீக்கும் பெருமாள்
கோயம்புத்தூரிலிருந்து 19 கி.மீ தொலைவிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊரில் அமைந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நவகோடி நாராயணப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில், பெருமாள் நவகோடி நாராயணர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
வைணவப் பெரியவரான ராமாநுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து, துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு. இத்தலப்பெருமாள், நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதால், ' நவகோடி நாராயணன்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ராமாநுஜர் பெருமாளை இத்திருநாமத்தில் முதன்முதலில் அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். நவகோடி ரிஷிகளும் வழிபட்ட நாராயணர் இவர் என்ற கூற்றும் இங்கு உண்டு.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமாநுஜரும் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலையும், புற நகர்ப் பகுதியில் உள்ள இக்கோயிலையும் அரசர்களும் வீரர்களும் போர்ப் பாசறையாகப் பயன்படுத்தியுள்ளனர். திப்புசுல்தானின் படைவீரர்கள் ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து திண்டுக்கல் செல்லும்போது, இக்கோயிலில் முகாமிட்டிருந்தனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இக்கோயிலைச் சுற்றியும் மிகப் பெரிய கோட்டை இருந்ததாகவும் பிற்காலத்தில் சிதைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
பிரார்த்தனை
செண்பகம், மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள், உடனே நிறைவேறுவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம்.
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்
நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு நல்வழி காட்டும் முத்துமாரியம்மன்
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 1960களில்தான் உருவானது. இக்கோவில் திருவிழா காலங்களில், மதுரை சித்திரை திருவிழாவில் கூடும் கூட்டத்தோடு ஒப்பிடும் வகையில், ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். திருவிழாக்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்பது சிறப்பம்சமாகும். கிறித்துவர்களும், இசுலாமியர்களும்கூட இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்
கோவில் உருவான பின்னணி
1956ம் ஆண்டில் இந்த ஊருக்கு வந்த ஒரு சிறுமி திடீரென மக்களின் குறைகளை தீர்க்க அம்மன் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள் இதை சில நாத்திகவாதிகள் எதிர்த்தனர்.இந்தசிறுமிக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டது.இருந்தாலும் அந்த சிறுமி அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. திடீரென சின்னம்மை நோய் பெரியம்மை நோயாக மாறியது. சிறுமி இறக்கும் தருவாயில்கூட அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. சிறுமி இறக்கும் தருவாயில் அவரை கேலிசெய்த ஒரு நபர் மிகுந்த கஷ்டத்துடன் வந்தார். தீராநோயுடன் வந்த நபரிடம் சிறுமி சொன்னாள். உன் வீட்டின் கிணற்றடியில் வடமேற்கில் ஒரு தக்காளிசெடி உள்ளது. அதில் ஒரு தக்காளி பழத்தை எனக்கு கொண்டு வந்து தா என சொன்னாள்
வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வீட்டில் தக்காளி செடியே இல்லையே என்று சொன்னார். நான் சொன்ன இடத்தில் சென்று பார் இருக்கும் என்றாள்.உடனே அந்த நபர் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்ணுக்கே தெரியாத அளவிற்க்கு சிறு தக்காளி செடி முளைத்திருந்தது அதில் ஒரே ஒரு தக்காளிபழம் இருந்தது.அந்த நபருக்கு ஒரே ஆச்சரியம். பழத்தை எடுத்து கொண்டு சிறுமியிடம் சென்று கொடுத்தார். அந்த நபருக்கு ஓரிரு நாட்களில் அவருக்கு இருந்த நோய் முற்றிலும் குணமானது. அந்த சிறுமிக்கு பெரியம்மை முற்றியது இறக்கும் தருவாயில் ஊர் மக்களை அழைத்த சிறுமி, நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் அம்மனுக்கு ஒரு புது ஆலயம் எழுப்புங்கள். உங்களது அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நான் உங்களை காப்பேன் என்றாள். அதன் படியே கோவில் எழுப்பபட்டது.இந்த ஊரில் மிக சக்திவாய்ந்த அம்மனாக முத்துமாரியம்மன் இருக்கிறாள். வருடத்தின் பல நாட்கள் இந்த அம்மனுக்கு குளிர்ச்சி சார்ந்த அபிசேகங்களே நடைபெறுவதால் இந்த அம்மனுக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு.
கருவறையில் அம்மன் நின்ற நிலையிலும், அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது அம்மன் தலையும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
இந்த அம்மனை நம்பிகையுடன் வழிபடுபவர்களுக்கு நிச்சயம் நல்ல வழியை ஏற்படுத்தி கொடுக்கிறாள் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு இக்கோவிலுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டமே சாட்சியாகும்.
இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கின்றனர். முத்துமாரி அம்மனுக்கு, தாவிவரும் வேல்போட்டு, காவடியும் பால்குடமும், முளைப்பாரி மதுக்குடமும், தீச்சட்டி பூமிதியும், நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.
திருவாரூர் ஐநூற்று விநாயகர் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்த விநாயகர் கோவில்
திருவாரூர் அருகே விஜயபுரம் காந்தி சாலையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் உள்ளது. மூலவர் ஐநூற்று விநாயகர்.
கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் வரலாறு கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோவில் கொண்டதால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோவில் எனப் பெயர் வந்தது. அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் என்றும், இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் என்றானது. ஐநூற்று விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவருக்கு மட்டுமே கருவறையில் தினசரி பூஜை நடக்கும். ஆனால் இக்கோவிலில் மூலவர், உற்சவர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே சன்னதி அமைந்துள்ளது. தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருக்குமே தினமும் ஆராதனைகள் நடைபெறுகிறது. நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர்.
ஐநூற்று விநாயகரை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும். அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திண்டுக்கல் அபிராமி கோவில்
இரண்டு மூலவர் சன்னதிகள் கொண்ட கோவில்
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அபிராமி கோவில். பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் பழைய காலத்து பெயர். இதற்கு திண்டீச்சுரம் என்ற பெயரும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவர் சன்னதிதான் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில், இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இரண்டு இறைவன்களின் திருநாமம் காளகத்தீசுவரர் , பத்மகிரீசுவரர். அம்பிகைகளின் திருநாமம் ஞானம்பிகை, அபிராமியம்பிகை.
ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோவில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீசுவரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீசுவரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த பத்மகிரீசுவரர், அபிராமி அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோவிலாகக் கட்டப்பட்டது. தற்போது இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். இப்பகுதியில் 'அபிராமி கோயில்' என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், 'அபிராமா அம்பிகை' என்பதாகும். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும். இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
பிரார்த்தனை
ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
12 அடி உயர கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்
அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது
இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு
1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோவிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில்
மூலவர் அம்பிகை அர்த்தநாரீசுவரியாக எழுந்தருளியிருக்கும் அபூர்வ தோற்றம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கிழக்கே அரை கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளி கோவில். இக்கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன்கள் ஆனந்தசௌபாக்கிய சுந்தரி, உஜ்ஜைனி காளியம்மன் ஆகியோர் ஆவார்.
சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீசுவர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப்போலவே பூசைகள் நடக்கவேண்டும் எனக் கேட்டதன் விளைவாக, மாகாளிக்குடியில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் அம்பிகை ஆனந்த சௌபாக்கிய சுந்தரியாக எழுந்தருளினாள்.
பொதுவாக அர்த்தநாரீசுவர கோலத்தில், சிவபெருமான் வலதுபுறமும், பார்வதிதேவி இடதுபுறமும் காட்சியளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், பார்வதிதேவி வலதுபுறமும் சிவபெருமான் அவருக்கு இடதுபுறமும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். ஆனந்த சௌபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை 'ஆனந்த சௌபாக்கிய சுந்தரி' என்கிறார்கள்.
விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மன்
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன்மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி.
ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட உஜ்ஜயினி காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு இத்தலத்தில் கோவில் கட்டி வழிபட்டார்.
இத்தலத்தில், விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்திற்கும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனுக்கும் சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது.
பிரார்த்தனை
பௌர்ணமி, அஷ்டமி, அமாவாசை ஆகிய தினங்களில் இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் குளித்து உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் உஜ்ஜயினி காளியம்மனை வழிப்பட்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் கைக்கூடும் என்று வரலாறு கூறுகிறது. அஷ்டமி நாளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டு மேன்மை அடைந்து வெற்றிப் பெற்றவர்கள் ஏராளம்.
சண்டிஹோமம் வேள்வித்தீயில் தோன்றிய மாகாளியம்மன்
இக்கோவிலின் கும்பாபிஷேகம் இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நடைபெற்றது. அதன்பின்னர் நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று, இறுதியாக சண்டிஹோமம் 16.03.2023 அன்று நடைபெற்றது. அன்று, சண்டிஹோமம் வேள்வித்தீயில் மாகாளியம்மன் தோன்றியது, அப்பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.
இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.
பிரார்த்தனை
இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.
திருநிலை பெரியாண்டவர் கோவில்
சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்த தலம்
செங்கல்பட்டிற்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவிலுள்ள திருநிலை கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாண்டவர் கோவில். இறைவியின் திருநாமம் அங்காள பரமேசுவரி. இந்த தலத்தில் சிவபெருமான், மனித வடிவம் தாங்கி உலகெல்லாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன் பாதம் பதித்து, பெரியாண்டவராய் காட்சி தந்த பின் சுயம்பு லிங்கமாய் கோவில் கொண்டார். இத்தலத்தில் சிவபெருமான் நின்ற கோலம், அமர்ந்த கோலம், தவக்கோலம் என மூன்று வித தோற்றத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். சிவபெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாக அவதாரம் எடுத்ததன் பின்னணி
சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி, பல அரிய வரங்கள் பெற்றான். அவன் பெற்ற வரத்தின்படி, சிவபெருமான் ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் வாழ்ந்தால்தான் அவனை அழிக்க முடியும் என்னும் நிலை இருந்தது. இறைவனின் திருவிளையாடலின்படி, பார்வதி தேவி எம்பெருமான்மேல் கோபம் கொண்டு, ஒரு நாழிகைப் பொழுது மனிதனாய் பிறப்பீர்கள்! என்று ஈசனை சபித்தாள். அதன் காரணமாக சிவபெருமான் மனிதனாகப் பிறந்து தன்நிலை மறந்து பூமியில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். இதனால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் மனம் கலங்கினர். அவர்கள் அனைவரும் பார்வதி தேவியிடம் சென்று, ஈசனை ஆட்கொண்டு உலகை உய்விக்க வேண்டும் என்று வணங்கி நின்றனர். அதையேற்ற பார்வதி தேவி அங்காள பரமேசுவரியாக பூவுலகம் வந்து, மனம்போன போக்கில் அலைந்து கொண்டிருந்த சிவனைக் கண்டு மனம் வருந்தி, தன் சூலாயுதத்தை ஓரிடத்தில் வீசியெறிந்தாள். அது பூமியில் ஓர் இடத்தில் குத்தி, நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 மண் உருண்டைகள் சிதறி விழுந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி, சுற்றி சிவனின் வருகைக்காகக் காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு சிவபெருமான் அந்த இடத்தில் பாதம் பதித்து, ஒருநிலையாய் நின்றார். அவரை பரமேஸ்வரி வணங்கினாள். அப்போது ஒரு நாழிகைப் பொழுது நிறைவுற, சிவபெருமான் மனித உருவம் நீங்கி தன்நிலை அடைந்தார். பெரிய மனிதராய் உலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிர் பெரியாண்டவர் என்னும் பெயரில் வழங்கப் பெறுவீர்கள் என்று உமாதேவி கூற, தேவர்கள் அனைவரும் பெரியாண்டவரே என்று சொல்லி ஈசனின் பாதங்களைப் பணிந்தனர். அங்கேயே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் திருநிலை.
நந்திதேவர் மனித உடலுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்
சிவபெருமான் மனித அவதாரம் எடுத்தபோது அவருடன் நந்தி தேவரும் மனித வடிவில் சென்றார். எனவே இங்குள்ள நந்திதேவர் மனித உடலுடன் காணப்படுகிறார். இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தத் திருநீற்றைப் பூசி, உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும்; கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
பிரார்த்தனை
இவ்வாலயத்தின் அருகிலுள்ள சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு, சிவபெருமானையும் அம்மனையும் தொடர்ந்து ஆறு வாரங்கள் வணங்கி வந்தால் நடக்காத காரியங்களும் நடைபெறும் என்கின்றனர். மகப்பேறு கிட்ட பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. பல்லாயிரம் பேர் இந்த சிவனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்கள் 21 மண் உருண்டைகளை சிவலிங்கத்தைச் சுற்றி வைத்து வணங்கிச் செல்கின்றனர்.
வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
வேடுவக் கோலத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தரும் முருகன்
கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குள் உள்ள வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சிவசுப்ரமணிய சுவாமி கோவில். அருணகிரிநாதரின் திருப்புகழலில் இத்தலம் அத்திப்பட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் முருகப் பெருமான் வேலுடனும் அல்லது தண்டத்துடனும்தான் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் மூலவர் சிவசுப்ரமணியசாமி, வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, இடுப்பில் சல்லடத்துடன், காலில் இறகு அணிந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது அதன் சிறப்பம்சம் ஆகும். கொடிமரத்தின் அருகேபெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவிற்காகக் காத்து நிற்கும் சேவகர்களைப் போல் இருப்பது வேறு எந்த முருகன் தலத்திலும் காணமுடியாத அமைப்பாகும்.
பிரார்த்தனை
கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக இத்தல முருகனை பக்தர்கள் போற்றுகிறார்கள்.