கன்னியாகுமரி குகநாதீசுவரர் கோவில்
முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்
கன்னியாகுமரி ரயில் நிலயத்திற்கு அருகில், பகவதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ.தொலைவில் இருக்கிறது குகநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பார்வதி. இவர் கோனாண்டேசுவரன் என்றும், குகனாண்டேசுவரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது குகநாதீசுவரர் கோவில். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்கு முன்பாகவே, சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார்.
முருகப் பெருமான் தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல்படி, தனது தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று தல வரலாறு கூறுகின்றது.இங்கு, குகன் என்ற முருகக்கடவுள், ஈசுவரன் என்ற சிவனை வழிபட்டதால், இந்தக் கோவிலுக்கு, குகநாதீசுவரர் கோவில் என்று பெயர்க் காரணம் கூறுகின்றனர். இந்த கோவிலில் மூலவர் குகநாதீசுவரர் 5 அடி உயரத்துடன் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இந்த சிவலிங்கம், குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிலையாகும்.
பிரார்த்தனை
இந்த கோவிலில் 11 திங்கட்கிழமை தொடர்ந்து வந்து, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, கோவிலின் கருவறை தீபத்திற்கு பசுநெய் வழங்கி வழிபட்டால் குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம் மற்றும் முதியவர்களை மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.