ஜம்புகேஸ்வரர் கோவில்
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்
அகிலாண்டேஸ்வரி என்பதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும் இத்தலத்தில் இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்த அம்பிகை, காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். நீரால் செய்யப்பட்டதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.
அகிலாண்டேஸ்வரி அம்பிகையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். ஆரம்பத்தில் இத்தலத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்ததால், பக்தர்கள் மிகவும் அச்சமுற்று கோவிலுக்குள் செல்லாமல் வெளியில் இருந்து வழிபட்டு வந்தனர். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த, ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை, ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்குப் பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். அம்பிகையை மேலும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பிகைக்கு முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இத்தலத்தில் தினமும் நடைபெறும் உச்சிக்கால பூஜை தனிச்சிறப்புடையது. அப்போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வார். இது போன்ற பூஜை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்
உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். பக்தர்கள் இத்திருவிழாவிற்காக, சுமார் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, தசரா திருவிழாவன்று பல்வேறு வேடங்களை அணிந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
தன் சிலையைத் தானே வடிவமைத்த அம்மன்
குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் 76 கி.மீ. தொலைவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், முத்தாரம்மனை முதலில் சுயம்பு வடிவிலேயே பக்தர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு விக்கிரகம் அமைக்க விரும்பினர்.
கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு சென்றால் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று கூறினாள். மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. சிலை செய்யும் சிற்பிகளும் அதிகம் பேர் உண்டு. அவர்களில் ஒருவரான சுப்பையா ஆசாரி என்பவர் மிகவும் திறமைசாலி. .அவரது கனவிலும் முத்தாரம்மன் தோன்றி, குலசேகரப்பட்டினத்தில் தான் சுயம்புவாக இருப்பதாகவும், பக்தர்கள் தனக்கு விக்கிரகம் அமைக்க விரும்புவதையும் கூறினாள்.
பின்னர், சுவாமியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள். அந்தக் கற்சிலையை தன் சுயம்பு மேனிக்கு அருகில் நிறுவ வேண்டும் என்றும் கட்டளையிட்டாள்.
சுப்பையா ஆசாரி, முத்தாரம்மன் தனக்கிட்ட ஆணையை நிறைவேற்ற முடிவு செய்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.
முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார்.சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்ததைப் பார்த்தார். பக்தர்கள், அம்மனின் திருவிளையாடலை எண்ணி மெய்சிலிர்த்தனர்.
இந்த அம்மன்தான் குலசேகரன்பட்டினத்தில், இன்றும் காட்சியளிக்கிறாள். ஒரே பீடத்தில், முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இப்படி அம்பாளும், சிவனும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது வேறு எந்த தலத்திலும் இல்லை
திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன
லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.
சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.
காமாட்சி அம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
காமாட்சி அம்மனின் திருநாமத்தில் உள்ள காம என்பது அன்பையும் கருணையையும், அட்ச என்பது கண்ணையும் குறிக்கும். காமாட்சி அம்மன் தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பவர். இவருக்கு, மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீசக்கரநாயகி என்னும் பெயர்களும் உண்டு.
காமாட்சி அம்மன் இருபத்தி நான்கு தூண்கள் தாங்கி நிற்கும் காயத்ரி மண்டபத்தின் நடுவில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். தன் நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் ஏந்தியிருக்கிறார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின்_கண்கள் சிமிட்டுவது போன்ற உணர்வினை ஏற்படுத்துமாம்
இக்கோலிலில் காமாட்சி அம்மன் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்னும் மூன்று வடிவில் இருக்கின்றார். மூலவர் காமாட்சி அம்மன் ஸ்தூல(உருவ) வடிவிலும், அஞ்சன காமாட்சி சூட்சும(உருவமில்லாத) வடிவிலும், காமாட்சி அம்மன் முன் அமைந்துள்ள ஸ்ரீ சக்கரம் காரண(உருவமும், உருவமில்லாத) வடிவிலும் அருளுகிறார்கள. ஸ்ரீ சக்கரம், ஆதிசங்கரரால், எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.
காஞ்சிபுரத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்மனே மூலவர் அம்பாளாக விளங்குகிறார். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்மனுக்கு என தனி சன்னதி கிடையாது.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், ஒட்டியாண(அம்பிகையின் இடுப்பு எலும்பு விழுந்த) பீடம் ஆகும்.
காயாரோகணேசுவரர் கோவில்
நாகை நீலாயதாக்ஷி அம்மன்
நாகை நீலாயதாக்ஷி, நீலோற்பல மலரின் குளிர்ச்சியைப் போல தன் பார்வையை பக்தர்களுக்கு வழங்குவதால், ‘நீலாயதாட்சி’ என்ற திருநாமத்தோடு விளங்குகிறாள். அம்பிகைக்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரும் உண்டு. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார்.
அன்னை நீலாயதாக்ஷி பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், தன் இரு திருக்கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தி, மற்ற இரு திருக்கரங்களில் அபய வரத முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூப்பெய்திய அம்பிகைக்கு காவலாக இருக்கும்படி, நந்திதேவரை சிவபெருமான் பணித்தார். அதனால் கோவில் வாசலில் அமர்ந்திருக்க வேண்டிய நந்திதேவர், அம்பிகையின் சன்னதி முன் வலது கண்ணால் அம்பிகையையும் இடது கண்ணால் சிவபெருமானையும் பார்த்தபடி இரட்டை பார்வையுடன் அமர்ந்திருக்கிறார்.
நீலாயதாக்ஷி, இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால் அவருக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை. அம்பிகை இத்தலத்தில் பருவமடைந்ததால், மற்ற கோயில்களைப் போல இக்கோவிலில் திருக்கல்யாணம் ஆடிப்பூரம் வளைகாப்பு போன்ற வைபவங்கள் நடைபெறுவதில்லை.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
மாலையில் ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு அம்மனுக்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வரும் காட்சி காண்போரை பரவசப்படுத்தும்.
சங்கீத மும்மூர்த்திகள் நீலாயதாட்சி மீது பல கீர்த்தனைகள் பாடியுள்ளனர். அதில்,‘அம்பா நீலாயதாக்ஷி’ என்று முத்துச் சாமி தீட்சிதர் இந்த அம்பிகையை போற்றிப் பாடும் கீர்த்தனை மிகவும் பிரசித்தம்.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன், மீன் போன்ற கண்களை உடையவர் என்பதால், மீனாட்சி என்று பெயர் பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளை, தனது பார்வையாலேயே பொரியச்செய்து பின் பாதுகாப்பது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக்கிடப்பது போலவே. மீனாட்சி அம்மனும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் இவருக்கு, மரகதவல்லி, தடாதகை, அபிராமவல்லி, பாண்டிப் பிராட்டி எனப் பல பெயர்கள் உள்ளன. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், ஒன்றான இத்தலத்தில், சுமங்கலியாக இருந்து அருள் புரிகிறார்..
மரகத்தினாலான ஆன திருமேனி உடைய அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில், இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாகக் காட்சி தருகிறார். அம்மன் கையில் உள்ள கிளி, பக்தர் அம்மனிடம் வைக்கும் கோரிக்கையைக் கேட்டு,, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர் களைய உதவுகிறதாம். இத்தலத்தில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்கே செய்யப்படுகின்றது. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, தன் கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்பதால், கணவர் எழுவதற்கு முன்னமே தன் அபிஷேகத்தை முடித்துத் தயாராகிறாள். இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலத்தை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலத்தின் தாழம்பூ குங்குமப் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.
கபாலீசுவரர் கோவில்
மயிலாப்பூர் கற்பகாம்பாள்
‘கற்பகம்’ என்றால் ‘வேண்டும் வரம் தருபவள்’ என்று பொருள். தேவலோகத்தில் கற்பக விருட்சம் எப்படித் தன்னிடம் கேட்பதையெல்லாம் தருகின்றதோ, அது போல தன் பக்தர்களின் கோரிக்கையை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால் கற்பகாம்பாள் என்று பெயர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது.
ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினார்.. சிவபெருமான் அதை உபதேசித்து கொண்டிருக்கும்போது பார்வதிதேவி கவனம் சிதறி,அங்கே தோகை விரித்து நடனமாடிக் கொண்டிருந்த ஒரு மயில் மீது கவனத்தை செலுத்தினார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை பூலோகத்தில் மயிலாக பிறக்க சாபம் கொடுத்தார். பார்வதிதேவி சாபவிமோசனம் வேண்டியபோது தொண்டை நாட்டில் மயில் வடிவில் பூஜை செய்தால் தன்னை மீண்டும் அடையலாம் என்று கூறினார். அம்பிகை இத்தலத்தில் புன்னை மரத்தின் அடியில், மயில் உருவில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் கொடுத்தார்
பொதுவாக சிவாலயங்களில், சிவனை தரிசித்த பிறகே அம்பிகையை தரிசிக்கும் படியான அமைப்பு இருக்கும். ஆனால் இக்கோவிலில், கற்பகாம்பாளை தரிசித்து விட்டே கபாலீசுவரரை தரிசிக்கும்படியான அமைப்பானது தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்
திரிபுரசுந்தரி என்பது, மூவுலகிலும் பேரழகி என்றும், அரசர்க்கெல்லாம் அரசி என்றும் பொருள்படும். இந்த அம்மனின் மற்ற திருநாமங்கள் திருநிலைநாயகி, ஸ்திரநாயகி, பெரியநாயகி. எத்தகைய துன்பத்திலும் சிக்கலிலும் நம்மை நிலைகுலைய விடாமல், நமக்கு ஸ்திரதன்மையை தருபவர் என்று பொருள்.
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர். 7-ம் நூற்றாண்டில் இந்த தலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாக அவதரித்தவர். குழந்தை சம்பந்தருக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு நாள், சிவபாத இருதயர் குழந்தை சம்பந்தருடன் இக்கோவில் பிரம்மதீர்த்தக் குளத்திற்கு நீராட வந்தார். குளக்கரையில் சம்பந்தரை விட்டுவிட்டு நீராடச் சென்றார். வெகு நேரமாகி தந்தை வராததாலும் பசியினாலும் குழந்தை சம்பந்தர் அழத் தொடங்கினார். அதைக் கண்ட சிவபெருமான் குழந்தையின் பசியாற்றும்படி உமாதேவியை பணித்தார். சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார்.
'தோடுடைய செவியன்' என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி, பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான்.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு,குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா, திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
திருக்காமீசுவரர் கோவில்
சுகப்பிரசவம் அருளும் பிரசவ நந்தி
புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என பெருமை கொண்டது வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள சுகப்பிரசவ நந்தி ஆகும். அம்மன் சன்னிதியை(வடக்கு திசை) நோக்கியவாறு இந்தப் பிரசவ நந்தி அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும், இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி(அதாவது நந்தியின் இயல்பு திசைக்கு எதிர் திசையில்)திருப்பி வைத்துவிட வேண்டும். பிரசவ நந்தியின் அருளால் நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். அதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து பிரசவ நந்திக்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அந்த நந்தியை, அம்மனை நோக்கிய வடக்கு திசையில், அதாவது அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே சுகப்பிரசவத்திற்கான பரிகாரமும், நன்றிக்கடனும், ஆகும்.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
வீணை வாசிக்கும் விநாயகர்
பவானியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் பெண் விநாயகி உள்ளார். இங்கு நாம் விநாயகரை பெண் வடிவில் தரிசனம் செய்யலாம். விநாயகரின் இந்த தோற்றம் ஒரு அரிதான காட்சியாகும்.
கோலவில்லி ராமர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய கருடாழ்வார்
கும்பகோணம்-அணைக்கரை சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் வெள்ளியங்குடி. கோலவில்லி ராமர் கோவில். நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தலப் பெருமானை தவமிருந்து வழிபட்டமையால், இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தை நிர்மாணித்த அசுர குல சிற்பி மயன், திருமால் தனக்கு இத்தலத்தில் ராமராக காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். திருமாலும் அவன் விருப்பத்திற்காக, தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக, வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார். அதனால்தான், இந்த ஆலயத்தில் கருடாழ்வார் தன் நான்கு கரங்களுள், இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தருகிறார். இத்தகைய கருடாழ்வாரின் காட்சி வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லை. சுக்கிரன் திருமாலை வழிபட்டு கண் பார்வை பெற்ற தலம், எனவே வெள்ளியங்குடி கோலவில்லி ராமரை வழிபட்டால் கண் நோய், சுக்கிர தோஷம் நீங்கி சுகமான வாழ்வு உண்டாகும்.
இங்கு, கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்துள்ளது, மற்றொரு ஆச்சரியமாகும். ஆண்டுக்கு ஒரு முறை குலை தள்ளுவதும் பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது.
பாலசுப்பிரமணியர் கோவில்
முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில்
புதுக்கோட்டை அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் என்ற தலத்தில், முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. இங்கு முருகன், ஒரு திருக்கரத்தில் ஜபமாலை ஏந்தியுள்ளார். மறுகரம் சின்முத்திரையுடன் உள்ளது. முருகப்பெருமானுக்கு இங்கு வாகனமாக யானை உள்ளது.
வில்வ நாதேஸ்வரர் கோவில்
கனி வாங்கிய பிள்ளையார்
ராணிப்பேட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவலம். விநாயகப் பெருமான் சிவபெருமான் பார்வதியை, வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகர் மாங்கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில், துதிக்கையில் மாங்கனியுடன் காட்சி தருகிறார். அதனால், இவரை கனி வாங்கிய பிள்ளையார் என்கின்றனர்.
சுப்பிரமணியசாமி கோயில்
புளிக்காத அபிஷேக தயிர்
ஈரோடில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புகழ் தலம் சென்னிமலை. இங்கு, முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.
நின்ற நாராயணன் கோயில்
அமிர்த கலசத்துடனும் பாம்புடனும் காட்சி தரும் கருட ஆழ்வார்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் தலத்தில், கருடாழ்வாா் தனது வலது திருக்கையில் அமிா்தகலசத்துடனும், இடது திருக் கையில் வாசுகி நாகத்துடனும், இரண்டு கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி ஹஸ்தத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவது மிக மிக அரிதான தரிசனமாகும். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தின் சிறப்பு. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை
இத்தலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
துர்கையம்மன் கோயில்
கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன்
பெரும்பாலும் துர்க்கையம்மனை ஆலயங்களில் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில், சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில், தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு. ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் (கங்கைகொண்டான் வழி) பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர். மேலும் துர்க்கையம்மன், நாகராஜ பரிவார தேவதைகளுடன், தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்த வேப்பமரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
மாணிக்கவண்ணர் திருக்கோவில்
கைகாட்டி விநாயகர்
திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநாட்டியாத்தான்குடி.இக்கோவிலின் கிழக்கு கோபுர வாயிலின் முன், விநாயகர் கை விரலை நீட்டியபடி, மேற்கு பார்த்த சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
ஒருசமயம் சுந்தரமூர்த்தி நாயனார், இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனையும் இறைவியையும் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். அவ்வழியே சென்று பார்த்த போது, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் விவசாயிக் கோலத்தில், நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதைக் கண்டு சுந்தரர், நடவு நட்டது போதும், கோவிலுக்கு வாருங்கள் என்று அழைக்க, சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் சென்றனர்.
சுந்தரருக்கு இறைவன் இருந்த திசையை சுட்டிக் காட்டியதால் இத்தலத்து விநாயகருக்கு, கைகாட்டி விநாயகர் என்ற பெயர் வந்தது.
கந்தசாமி கோயில்
ஓம்கார அமைப்பில் அமைந்த திருப்புகழ் தலம்
சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் கந்தசாமி கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இக்கோவில் ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். அதனால்,சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது, சந்நிதியில் இருந்து நாம் பார்த்தால், நமக்கு முன்னே சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்பவர்களைப் பார்க்கமுடியாதபடி நுட்பமாக அமைக்கப்பட்டு உள்ளது.
அரசலீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்திற்கு தலைப்பாகை அணிவித்துப் பூஜை செய்யும் தேவாரத்தலம்
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாகும்.இறைவன் பெயர் அரசலீஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
ஆதிகேசவ பெருமாள் கோயில்
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திவ்யதேசமான திருவட்டாறு அமைந்துள்ளது.
பொதுவாக ஆலயங்களில் மூலவர் உள்ள கருவறைக்கு ஒரு வாசல் தான் இருக்கும். ஆனால் திருவட்டாறில், சயனக்கோலத்திலுள்ள ஆதிகேசவ பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம்.