மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன், மீன் போன்ற கண்களை உடையவர் என்பதால், மீனாட்சி என்று பெயர் பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளை, தனது பார்வையாலேயே பொரியச்செய்து பின் பாதுகாப்பது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக்கிடப்பது போலவே. மீனாட்சி அம்மனும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் இவருக்கு, மரகதவல்லி, தடாதகை, அபிராமவல்லி, பாண்டிப் பிராட்டி எனப் பல பெயர்கள் உள்ளன. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள ஒன்றான இத்தலத்தில், சுமங்கலியாக இருந்து அருள் புரிகிறார். .
மரகத்தினாலான ஆன திருமேனி உடைய அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில், இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாகக் காட்சி தருகிறார். அம்மன் கையில் உள்ள கிளி, பக்தர் அம்மனிடம் வைக்கும் கோரிக்கையைக் கேட்டு,, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர் களைய உதவுகிறதாம். இத்தலத்தில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்கே செய்யப்படுகின்றது. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, தன் கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்பதால், கணவர் எழுவதற்கு முன்னமே தன் அபிஷேகத்தை முடித்துத் தயாராகிறாள். இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலத்தை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலத்தின் தாழம்பூ குங்குமப் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.