
சண்முக நாதர் கோவில்
முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் திருப்புகழ் தலம்
திருச்சி மதுரை சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விராலிமலை சண்முக நாதர் கோவில்.ஒருகாலத்தில், கருப்புமுத்து எனும் பக்தர் இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த மழை பெய்யவே. கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, முருகப்பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்று வருத்தமுடன் இருந்தார். குளிருக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தபோது சன்னதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார். கருப்பமுத்து ஊர்மக்களிடம் நடந்ததைக் கூற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.பின்னர் இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதனால்தான் அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே” என்றார். அதன் பிறகு இன்றுவரை இப்பழக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் இந்த சுருட்டைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவன் நாம் அன்புடன் படைக்கும் எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இத்தலத்தில் நோய், துன்பம் விலகவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் பெருகவும் முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்கள்.

சுப்ரமணிய சுவாமி கோவில்
புத்தாண்டில் படிபூஜை நடக்கும் முருகன் தலம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிவில் வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கின்றது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.

சுப்ரமணிய சுவாமி கோவில்
குழந்தை முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்
திருத்தணி மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்
திருவிடைக்கழி,சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம்.இறைவர் திருப்பெயர் காமேசுவரர். இறைவியார் திருப்பெயர் காமேசுவரி. முருகனின்திருப்பெயர் சுப்பிரமணிய சுவாமி. இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது.கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்.இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கு உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் முக்தி தரும் தலம்
மயில் வாகனன் முருகன், வள்ளி, தெய்வயானை இல்லாமல் தனித்துக் காட்சி தரும் கோலத்தில் மயில் மீது அமர்ந்திருக்கையில், மயிலின் முகம் நேர்கொண்ட பார்வையில் காணப்படும். வள்ளி தெய்வ யானையுடன் முருகன் அமர்ந்திருக்கும்போது மயிலின் முகம் வலப்புறமாக நோக்கி யிருக்கும். வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வயானையுமாய்க் காட்சி தரும் முருகனைத்தான் கோயில்களில் பெரும்பாலும் காண முடியும். போகவாழ்வு தரும் முருகனின் கோலம் இது. ஆனால் வலப்புறம் தெய்வயானையும் இடப்புறம் வள்ளி என்ற கோலத்தில், ஞானியர்க்கு முக்தி தரும் மூர்த்தியாகக் காட்சிதரும் முருகனாக வயலூர் சுப்பிரமணிய சுவாமி விளங்குகின்றான்.

கந்தசாமி கோவில்
பாஸ்போர்ட், விசா பெற ஏற்படும் தடைகளை தகர்க்கும் முருகப்பெருமான்
திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.

சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகனின் இடப்பக்கம் மயிலின் தலை திரும்பி இருக்கும் தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார்14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு முகங்களுடனும் 12 திருக்கரங்களுனும் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். பெரும்பாலான முருகன் ஆலயங்களில் மயிலின் தலையானது முருகனின் வலப்பக்கம் திரும்பியிருக்கும் ஆனால் இத்தலத்தில் மயிலின் தலையானது முருகனின் இடப்பக்கம் திரும்பி இருக்கிறது.இது ஒரு விசேடமான அமைப்பாகும்.

சுப்பிரமணிய சுவாமி கோயில்
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் திருத்தணி,முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. அப்போது, ஆயிரம் கிலோ பூக்களை புஷ்பாஞ்சலிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
கடத்தப்பட்ட தன் விக்ரகத்தை கடலில் கண்டெடுக்க உதவிய கந்தப் பெருமான்
திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையும் சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடையும் அணிவிக்கப்படுகிறது.சுமார் 370 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை, வடமலையப்பப் பிள்ளை என்பவர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்து நிர்வகித்து வந்தார். 1648 ஆம் ஆண்டு நம் நாட்டிற்கு வந்த டச்சுக்காரர்கள், நம் கோவில்களில் உள்ள ஐம்பொன் விக்கிரங்களை கடத்திச் சென்றால் அதிக பொருள் ஈட்டலாம் என்று திட்டமிட்டனர். அவர்கள் திருநள்ளாறு தலத்திற்குச் சென்று அங்குள்ள நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு கப்பல் மூலம் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சண்முகர் விக்கிரகத்தை கடத்திக்கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல் மூலம் செல்ல ஆரம்பித்தனர். அந்த நேரம், கடல் கொந்தளித்து, கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. கப்பலில் இருந்த டச்சுக்காரர்கள் 'நாம் இந்த சிலைகளைத் திருடிக் கொண்டு வந்ததால்தான் கடல் கொந்தளிக்கிறது. எனவே சிலைகளைக் கடலில் போட்டு விடுவோம்' என்ற முடிவுக்கு வந்தனர். சிலைகளைக் கடலில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.வடமலையப்ப பிள்ளை, சண்முகர் விக்கிரகம் களவு போன செய்தியை அறிந்து மனம் வருந்தினார். திருச்செந்தூரில் முருகன் சிலை இல்லை என்பதால் மனம் கலங்கி சாப்பிடாமல் பல நாட்கள் இருந்தார். மேலும் புதிதாக முருகன் விக்கிரகம் ஒன்றை செய்து அதனைத் திருச்செந்தூர் கோவிலில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார். 'வடமலையப்பரே! என்னைக் காணவில்லை என நீர் வருத்தப்பட வேண்டாம். நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சற்று தொலைவில் கடலுக்குள்தான் உள்ளேன். நீர் படகின்மூலம் கடலில் பயணம் செய்தால் கடலில் ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கடலுக்கடியில் நான் இருக்கிறேன். எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்திற்குமேல் ஒரு கருடன் வட்டமிடும். அந்தக் கருடன் பறக்கும் இடத்தை வைத்தே நீர் என்னைக் கண்டுகொள்ளலாம்” - எனக் கூறினார்.வடமலையப்ப பிள்ளை தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு, ஒரு சிறிய படகில் கடலுக்குள் சென்றார். முருகப் பெருமான் கூறியபடி கருடன் வானத்தில் வட்டமடித்தது. அந்தக் கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதந்தது. அந்த இடத்தில் கடலுக்குள் குதித்து சண்முகர் விக்கிரகத்தை தேடினார்கள். முதலில் திருநள்ளாறு நடராஜர் விக்கிரகமும், பின்னர் சண்முகர் விக்கிரகமும் கிடைத்தது. பின்னர் 1653ஆம் ஆண்டு தை 29ஆம் தேதி சண்முகர் விக்கிரகத்தை கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். கடலில் சிலகாலம் இந்த விக்கிரகம் இருந்ததால், கடல் நீர் அரித்த நிலையை இன்றும் சண்முகரின் முகத்தில் காணலாம். எம் ரென்னல் எனும் பிரெஞ்ச் எழுத்தாளர் தன்னுடைய நூலில், சண்முக விக்கிரக கொள்ளையில் சம்மந்தப்பட்ட டச்சுக்காரர் ஒருவரே தன்னிடம் இந்த தகவலை கூறியதாக பதிவு செய்துள்ளார்

நவநீதேசுவரர் கோவில்
முருகப்பெருமான் முகத்தில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில், ஐந்தாம் நாளன்று முருகப்பெருமான் தன் அன்னையிடம் வேல் வாங்கும் திருவிழாவும், அவர் ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதும் மிகவும் பிரசித்தமானது. நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில், முருகப்பெருமான் அத்தலத்து இறைவியான, வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள்.சிக்கல் தலத்து முருகப் பெருமானின் திருநாமம் சிங்கார வேலர். இவரது உற்சவத் திருமேனி ஐம்பொன்னால் ஆனது. சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் ஆசி பெறச் சென்றபோது, அம்மன், தன் தவ வலிமையால் சக்தி வேல் ஒன்றை உருவாக்கி முருகனுக்கு அளித்தார். இந்த சக்திவேல், மிகுந்த வீரியம் மிக்கது.அதனால் சிங்காரவேலன் வேல் வாங்கும் நேரம் அவரது முகத்தில் வேர்வை துளிகள் அரும்பி ஆறாய் வழிந்து ஓடும். இப்படி பொங்கிப் பெருகும் வேர்வை துளிகளை, கோவில் அர்ச்சகர்கள் ஒரு பட்டுத் துணியால் தொடர்ந்து துடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த வேர்வைப் பெருக்கானது, சிங்காரவேலன் தன் சன்னதிக்கு திரும்பும் வரை இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஐம்பொன்னாலான உற்சவர் திருமேனியிலிருந்து வேர்வைப் பெருகுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
ஒரு சமயம், ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அபிநவகுப்தர் என்பவர் ஆதி சங்கரருடன் வாதம் செய்து தோல்வியுற்றார்.வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், அபிசார வேள்வி செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். ஆதிசங்கரர் தீராத காச நோயால் அல்லல்பட்டார். ஆதிசங்கரர் திருக்கோகரணத்தில் சிவபெருமானை வழிபடும்போது, 'என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்' என சிவபெருமான் உணர்த்தினார். பிறகு, ஆதிசங்கரர் சிவபெருமானின் கட்டளைப்படி, ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார். திருச்செந்தூரில் ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில், 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி, முருகன் அருளால் காச நோய் நீங்கப் பெற்றார். அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார். 'சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்' என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்
திருச்செந்தூர் அருகே இருக்கும், 'காலன் குடியிருப்பு' என்னும் ஊரில் மீராக் கண்ணு என்ற இஸ்லாமிய புலவர் வாழ்ந்து வந்தார். திருச்செந்தூர் முருகன் மீது பக்தி கொண்டவர். இவரை வறுமை மிகவும் வாட்டியது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார்.
மீராக் கண்ணு நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால் வணிகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை. இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்னை அனுப்பி மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார். சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு உறக்கமில்லாமல், இரவு முழுவதும் திருச்செந்தூர் முருகனை மனதில் எண்ணி, பதிகம் பாடி உருகினார். இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில் உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, 'நாளை உமது கடனை வட்டியும் முதலுமாக யாமே அடைப்போம்' என்று கூறி மறைந்தார். இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும் தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்' என்று கூறி மறைந்தார்.
அப்போது திருச்செந்தூர் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் கனவில் செந்திலாண்டவர் தோன்றி, 'என்னுடைய பக்தன் மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான். நாளை காலையில் திருச்செந்தூர் கோவில் உண்டியலைத் திறந்து அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி அவனது கடனை அடைத்துவிடுங்கள்' எனக் கூறிச் சென்றார்.
பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம் மூவரும் சந்தித்துக்கொண்டனர்.
இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன. இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம், புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான். திருச்செந்தூர் ஆண்டவன் செந்திலாண்டவனின் கருணையை எண்ணி ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே கசிந்துருகினர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் திருச்செந்தூர் இராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. இந்த இராஜகோபுரம் முருகப்பெருமானுக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில், நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த இராஜகோபுரம் வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
157அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவர் கோபுரம் கட்டும்போது, பணியாளர்களுக்கு கூலியாக பன்னீர் இலை விபூதி தருவார். இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம். ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், 'காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி' என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலையும் இனிதே முடிந்தது.
தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்."""

சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
ஒவ்வொரு கோவிலுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி முதற்கொண்டு அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் வரை அடங்கும்.இதே போல் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.திருச்செந்தூரில் சூரபத்மாதியர்களை வதம் செய்து விட்டு,வெற்றி வீரனாக, தேவ சேனாதிபதியாக நின்ற முருகப் பெருமானின் பெருமைகளை துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலாண்டவரின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக தோன்றின. எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் இந்த வேத மந்திர சக்திகள் நிறைந்து இருக்கிறது என்பது நம்பிக்கை. முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன். அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிருத் திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் கையில் வேல் இல்லாத தலம்
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு திருத்தணி.இத்தலம் அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இத்தலத்து முருகனின் திருநாமம் சுப்ரமணியசுவாமி. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர்.

சாயாவனேஸ்வரர் கோவில்
வில்லேந்திய வேலன்
நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அருகில் உள்ள தேவார பாடல் பெற்ற சாயாவனம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் கையில் வேலுக்கு பதிலாக வில்லேந்தி சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். சத்ரு பயம் உள்ளவர்கள் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைந்துள்ள திருப்புகழ் தலம்
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் வல்லக்கோட்டை. மூலவர் சுப்பிரமணியர் சுவாமி வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் 7 அடி முருகன் சிலைதான் மிகப் பெரிய முருகன் சிலை ஆகும்.
அருணகிரிநாதர் தல யாத்திரையாக பல ஆலயங்களுக்குச் சென்று வந்தார். திருப்போரூர் முருகனை தரிசித்த அவர், அன்றிரவு அங்கேயே தங்கினார். காலையில் திருத்தணி முருகனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், ‘கோடைநகர் மறந்தனையே’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் எழுந்த அருணகிரிநாதர், கனவில் தோன்றிய முருகப்பெருமானை நினைத்தபடி, திருத்தணி செல்லும் வழியில் வல்லக்கோட்டை திருத்தலம் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார். மேலும் அந்த முருகப்பெருமானின் மீது 8 திருப்புகழ் பாமாலை பாடி மகிழ்ந்தார்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுத்த கந்தபுராணம் அரங்கேறிய தலம்
புராணங்களில் சிறப்புடையது என்று எல்லோராலும் போற்றப்படுவது கந்த புராணம். இந்த நூலில் சொற்சுவையும் பக்திச் சுவையும் மிகுந்திருப்பதால்,'கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை' என சிறப்பிக்கப்படுகின்றது.
கந்தபுராணம், பதினோராம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவரால் இயற்றப்பட்டது. அர்ச்சகரான இவர் அனுதினமும் காஞ்சீபுரம் குமரக்கோட்டத்து குமரனை பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள், சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் செந்தமிழில் பாடுவாயாக' என்று கூறினார். மேலும் 'திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார்.
இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். கூடவே 'காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி' என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி 'கந்த புராணம்' குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர் களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டைப் போக்க, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து அவர்களின் ஐயத்தைப் போக்கினார். கந்த புராணம் அரங்கேறிய மண்டபத்தை, இன்றைக்கும் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
இத்தலத்தில் முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் 'பிரம்ம சாஸ்தா' வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார். கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை மடி மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அருணகிரிநாதர் இங்கு வந்து, அழகன் முருகனின் அழகில் மயங்கி, திருப்புகழ் பாடியிருக்கிறார்.

பாலசுப்பிரமணியர் கோவில்
முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில்
புதுக்கோட்டை அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் என்ற தலத்தில், முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. இங்கு முருகன், ஒரு திருக்கரத்தில் ஜபமாலை ஏந்தியுள்ளார். மறுகரம் சின்முத்திரையுடன் உள்ளது. முருகப்பெருமானுக்கு இங்கு வாகனமாக யானை உள்ளது.
சுப்பிரமணியசாமி கோயில்
புளிக்காத அபிஷேக தயிர்
ஈரோடில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புகழ் தலம் சென்னிமலை. இங்கு, முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.