சுப்பிரமணிய சுவாமி கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைந்துள்ள திருப்புகழ் தலம்
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் வல்லக்கோட்டை. மூலவர் சுப்பிரமணியர் சுவாமி வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் 7 அடி முருகன் சிலைதான் மிகப் பெரிய முருகன் சிலை ஆகும்.
அருணகிரிநாதர் தல யாத்திரையாக பல ஆலயங்களுக்குச் சென்று வந்தார். திருப்போரூர் முருகனை தரிசித்த அவர், அன்றிரவு அங்கேயே தங்கினார். காலையில் திருத்தணி முருகனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், ‘கோடைநகர் மறந்தனையே’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் எழுந்த அருணகிரிநாதர், கனவில் தோன்றிய முருகப்பெருமானை நினைத்தபடி, திருத்தணி செல்லும் வழியில் வல்லக்கோட்டை திருத்தலம் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார். மேலும் அந்த முருகப்பெருமானின் மீது 8 திருப்புகழ் பாமாலை பாடி மகிழ்ந்தார்.