நவநீதேசுவரர் கோவில்
முருகப்பெருமான் முகத்தில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில், ஐந்தாம் நாளன்று முருகப்பெருமான் தன் அன்னையிடம் வேல் வாங்கும் திருவிழாவும், அவர் ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதும் மிகவும் பிரசித்தமானது. நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில், முருகப்பெருமான் அத்தலத்து இறைவியான, வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள்.
சிக்கல் தலத்து முருகப் பெருமானின் திருநாமம் சிங்கார வேலர். இவரது உற்சவத் திருமேனி ஐம்பொன்னால் ஆனது.
சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் ஆசி பெறச் சென்றபோது, அம்மன், தன் தவ வலிமையால் சக்தி வேல் ஒன்றை உருவாக்கி முருகனுக்கு அளித்தார். இந்த சக்திவேல், மிகுந்த வீரியம் மிக்கது.அதனால் சிங்காரவேலன் வேல் வாங்கும் நேரம் அவரது முகத்தில் வேர்வை துளிகள் அரும்பி ஆறாய் வழிந்து ஓடும். இப்படி பொங்கிப் பெருகும் வேர்வை துளிகளை, கோவில் அர்ச்சகர்கள் ஒரு பட்டுத் துணியால் தொடர்ந்து துடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த வேர்வைப் பெருக்கானது, சிங்காரவேலன் தன் சன்னதிக்கு திரும்பும் வரை இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஐம்பொன்னாலான உற்சவர் திருமேனியிலிருந்து வேர்வைப் பெருகுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.