சண்முக நாதர் கோவில்

முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் திருப்புகழ் தலம்

திருச்சி மதுரை சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விராலிமலை சண்முக நாதர் கோவில்.

ஒருகாலத்தில், கருப்புமுத்து எனும் பக்தர் இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த மழை பெய்யவே. கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, முருகப்பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்று வருத்தமுடன் இருந்தார். குளிருக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தபோது சன்னதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார். கருப்பமுத்து ஊர்மக்களிடம் நடந்ததைக்கூற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.

பின்னர் இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதனால்தான் அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே” என்றார். அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் இந்த சுருட்டைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவன் நாம் அன்புடன் படைக்கும் எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

இத்தலத்தில் நோய், துன்பம் விலகவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் பெருகவும் முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்கள்.

 
Previous
Previous

பிரளயகாலேசுவரர் கோவில்

Next
Next

ஞானபுரீஸ்வரர் கோயில்