
கூடலழகர் கோவில்
பாண்டிய மன்னன் கொடியில் மீன் சின்னம் அமைந்த கதை
பாண்டிய மன்னர்களின் கொடியில் மீன் சின்னம் அமைந்ததற்கு மதுரை கூடலழகர் பெருமாளே காரணமாவார். முற்காலத்தில் கூடலழகர் கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதி சுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை பாண்டிய மன்னன் வைத்துக்கொண்டான்.

அப்பக்குடத்தான் கோவில்
அப்பக்குடம் ஏந்திய பெருமாள்
தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான கோவிலடி தலத்து பெருமாள் அப்பக்குடத்தான்,தனது வலது திருக்கரத்தில் அப்பக்குடத்தை அணைத்தவாறு சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், 'ஆதி ரங்கம்' என்னும் பொருள்பட 'அப்பால ரங்கம்' என்னும் பெயர் ஏற்பட்டது.
பெருமாள் அப்பத்தை உணவாக ஏற்றுக்கொண்ட திவ்ய தேசம்
உபரிசிரவசு என்பவன் பாண்டிய மன்னன்,. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது மதம் பிடித்த யானை ஒன்று கௌதமரின் ஆஸ்ரமத்தில் நுழைவதைப் பார்த்து, அதன் மீது அம்பெய்தான். மேலும் சீற்றமடைந்த அந்த யானை, வேதமோதிய வேதியன் ஒருவனைக் கொன்றது. இதனால் மன்னனுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' பிடித்தது. தன் பலமெல்லாம் இழந்து உடல் நலக்குறைவால் துன்பப்பட்டான்.இதனால் உபரிசிரவசு தன் அரசைத் துறந்து புண்ணியத் தலங்களில் புனித நீராடச் சென்றான். புரசங்காடுகள் நிறைந்த கோயிலடிக்கு வந்தவுடன் தெய்வ அனுக்கிரஹம் கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டதால் இத்தலத்தின் விசேஷத்தைத் தனது குலகுருவிடம் கேட்டான். அதற்கு அவர், துர்வாசரின் சாபத்தால் அசுரர்களால் துரத்தப்பட்டு பதவியிழந்த இந்திரனை மீண்டும் தேவலோக அதிபதி ஆக்கப் பெருமாள் இங்கு அருளினார் என்று எடுத்துக் கூறினார், 'சிறப்புமிக்க இத்தலத்தில் நீ தவம் செய்தால் உன் தோஷமும் விரைவில் நீங்கும்' என்று வழி காட்டினார். கோயிலடியில் உபரிசிரவசு மன்னன்தன் தோஷம் நீங்க தினசரி ஆயிரம் வேதியர்களுக்கு அன்னம் வழங்கி வந்தான். அதனால் அவன் மீது பெருமாள் கருணை கொண்டார். ஒரு நாள், அதிகாலையிலேயே ஒரு பிராமணர் வந்துவிட்டார். மன்னனின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே, 'மிகவும் பசிக்கிறது எப்போது உணவு தயாராகும்" எனப் புலம்பத் தொடங்கினார். மன்னன் அவசர அவசரமாய் பூஜைகளை ஆரம்பித்து முடித்தான். பிராமணருக்கு உணவு பரிமாறச் சொன்னான். பிராமணர் ஒற்றை ஆளாக அத்தனை உணவையும் உண்டு விட்டார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். பிராமணர் அரை வயிறே நிரம்பியதாக முறையிட்டார். மன்னன்மீண்டும் உணவு சமைத்து பரிமாறிகிறேன் என்றான். மன்னனிடம், வேதியர் உருவில் வந்த பெருமாள் . 'மன்னனே! நான் சற்றே ஓய்வு எடுக்க வேண்டும், அந்தி சாய்ந்ததும் எனக்கு ஒரு குடம் நிறைய அப்பங்களைக் கொண்டு வா' என்று கூறிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார் .ஒரு குடம் முழுக்க அப்பம் நிரப்பப்பட்டு அந்தணராக வந்த பெருமாளின் அருகில் வைக்கப்பட்டது. அதில் ஒன்றைத் தின்று விட்டு மன்னனைப் பார்த்துச் சிரித்தார் பிராமணர். மன்னன் ஏதோ பரவசமாக உணர, பிராமணர் உடனே பெருமாளாக மாறி மன்னன் உபரிசிரவசுக்கு காட்சி தந்தார். அப்பத்தை விரும்பிக் கேட்டுத் தின்றதால், அன்று முதல் இந்தப் பெருமாளுக்கு 'அப்பக் குடத்தான்'என்ற வித்தியாசமான திருநாமம் ஏற்பட்டது. இன்றைக்கும் இரவு வேளையில் அப்பால ரங்கநாதருக்கு அப்பம்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.

கள்ளழகர் கோயில்
அபரஞ்சி தங்கத்தினால் செய்யப்பட்ட அழகர் விக்ரகம்
திருமாலிருஞ்சோலை உற்சவமூர்த்திக்கு அழகர் என்றும், சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது.
’அபரஞ்சி’ என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள்.உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில்.
அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் விக்கிரகம் கருத்து விடும் என்ற அச்சமே காரணம்.

கரிவரதராஜ பெருமாள் கோவில்
"தேன் உண்ட பெருமாள்
சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., தொலைவில் மாதவரம் உள்ளது.இங்குள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.நாம் உணவு உண்ணும்போது ஜனார்த்தனன் என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது பத்மநாபன் என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்ல நேரிட்டால் நரசிம்மன் திருநாமத்தையும், மலையேறும்போது ரகுநந்தன் என்னும் திருநாமத்தையும் உச்சரித்துச் சொல்வது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது மாதவபுரம் என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம் செய்து வரம் பெற்ற தலம் என்பதால், ‘மகாதவபுரம்’ என்று பெயர் பெற்று, அதுவே நாளடைவில் மருவி ‘மாதவரம்’ என்றாயிற்று.மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். திருமலையில் எழுந்தருளி வரும் திருவேங்கடமுடையான் போல், இடக்கரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், ‘வேங்கடவரதன்’ எனவும் வழங்கப்படுகிறார்.ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாயருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்கு தேன் உண்ட பெருமாள் என்ற பெயரும் உண்டு.

நீர் வண்ணப் பெருமாள் கோவில்
பெருமாள் நான்கு நிலைகளில் காட்சி தரும் திவ்ய தேசம் சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது திருநீர்மலை என்னும் திவ்ய தேசம்..இந்தத் தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.இந்தத் திவ்யதேசத்தில் பெருமாள் இருந்தான், நின்றான் கிடந்தான், நடந்தான்,என்று நான்கு கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த திருகோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் போல் சயன கோலத்தில் பெருமாளை காணலாம். மூலஸ்தானத்தின் வலது புறங்களில் நரசிம்ம பெருமாளும், வாமன அவதாரமான உலகலந்த பெருமாளும், மலையின் கீழே நீர் வண்ணப் பெருமாளும் காட்சி அளிக்கின்றனர்.நின்றான் என்பது மலையின் கீழ் உள்ள நீர்வண்ண பெருமாளையும், கிடந்தான் என்பது ரங்கநாதப் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்திலும், நடந்தான் என்பது வாமன அவதாரமான உலகலந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையிலும், இருந்தான் என்பது நரசிம்மப் பெருமாள் சாந்தமாய் அமர்ந்த நிலையிலும் நான்கு விதமாகப் பெருமாள் காட்சி அளிக்கின்றார்.இத்தலத்தில் நரசிம்மப் பெருமாள் பால ரூபத்தில் காட்சி தருகிறார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் ரெங்கநாதரை அர்ச்சனை செய்து ,ஒரு துணியில் கருங்கல் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் வைத்து ,தல விருட்ச்சமான வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள் .இதனால் புத்ர பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம்

சாரங்கபாணி கோவில்
மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தாயாரின் திருநாமம் கோமளவல்லி ஆகும். இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கேற்றாற்போல், தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் கோவில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் காலை நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை, தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

வேத நாராயண சுவாமி கோவில்
பாதி மனித உருவமும் மீதி மீன் வடிவமும் கொண்ட பெருமாள்
சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டையைத் தாண்டி, , ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின, நாகலாபுரம் என்ற ஊரில் உள்ளது வேத நாராயண பெருமாள் கோவில். பெருமாளின் திருநாமம் வேத நாராயணப் பெருமாள். தாயாரின் திருநாமம் வேதவல்லித்தாயர். இத்தலத்தில், திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தருவது, இத்தலத்தின் சிறப்பாகும். திருமால், தலையிலிருந்து இடுப்பு வரை மனித வடிவமும், இடுப்புக்கு கிழே மீன் வடிவமும் கொண்டுள்ளார்.திருமாலின் தசாவதாரங்களில் முதல் அவதாரம், மச்ச அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன், பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி, மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . திருமால் மச்ச வடிவில் அவதாரம் எடுத்து, கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக, இத்தலத்து பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

வரதராஜ பெருமாள் கோவில்
இந்திரன் இடியாய் இறங்கி பெருமாளை தரிசிக்கும் தலம்
கொங்கு நாட்டில் உள்ள புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள புதன் சந்தையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாயார் குவலய வல்லி. நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது. சுமார் 3,700 படிகள் கொண்ட இந்த மலையின் உச்சியில் உள்ள 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்திரன் இடியாய் இந்த மலையில் இறங்கி பெருமாளை தரிசிப்பதாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் ஆனி முதல் நாளில் இருந்து ஆடி 30ம் தேதி வரை, சூரியஒளி சுவாமி மீது விழுந்து கொண்டே இருப்பது வேறு எங்கும் காண முடியாத வியப்பான அம்சமாகும். இதுபோல் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் மூலவர் மீது சூரிய ஒளி படுவது வேறு எங்கும் கிடையாது.

லோகநாதப் பெருமாள் கோவில்
மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் திவ்ய தேசம்
திருக்கண்ணங்குடி என்னும் திவ்ய தேசம் திருவாரூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இத்தலத்தில் உள்ள மூலவர் திருநாமம் லோகநாதப் பெருமாள். தாயார் லோகநாயகி. உற்ஸவர் தாயாரின் திருநாமம் அரவிந்தநாயகி..திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்னவென்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே முக சாயலில் இருப்பது தான். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. இது வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

விஜயராகவ பெருமாள் கோவில்
அதிசயமான குதிரை வாகனம் உள்ள திவ்ய தேசம்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருப்புட்குழி ஆகும். இத்தலத்தில் உள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமான வாகனம் ஆகும். 'கல் குதிரை' என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டதாகும். இதைச் செய்த கலைஞா் இனி எவருக்கும் இது போன்ற வாகனம் செய்து கொடுப்பதில்லை என்ற உறுதியினை எடுத்ததுடன், அதனைக் கடைசி வரைக் கடைப்பிடித்து உயிா்துறந்தாராம். இக் கலைஞரது உறுதிக்கும் பக்திக் கும் மதிப்பளிக்கும் விதமாக, திருப்புட்குழி உற்சவப் பெருமான், மாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழாவின் போது இவரது வீதிக்கு எழுந்தருளிச் சேவை சாதிப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.மேலும் இந்தக் குதிரை குறித்து அதிசய செய்தி ஒன்றை சொல்கிறார்கள். குதிரையின் தலை, உடல், வால் பகுதி என மூன்றும் தனித்தனியாக மரத்தினால் செய்யப்பட்டதாம். அவை மூன்றையும் இணைத்த பின் உயிர் பெற்ற குதிரை இரவு நேரங்களில் வயற்காட்டை மேய்ந்து தீர்த்ததாம். இதனால் இப்போதும் ஆண்டு முழுவதும் இக்குதிரையின் உடல் மூன்றாக பிரிக்கப்பட்டே வைக்கப்படுகிறது. பிரம்மோற்ஸவத்தின் குதிரை வாகன நாளன்று மட்டும் இணைக்கப்பட்டு அதில் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார்.

ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் உற்சவருக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்படக் காரணமான சுவையான சம்பவம்
பூலோக வைகுண்டம் என பெருமை பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவப் பெருமாள் பெயர் 'அழகிய மணவாளன்'. இவரை 'நம்பெருமாள்' என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன் என்ற பெயர் கொண்டிருந்த உற்சவ மூர்த்திக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது.பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி சுல்தான் தென்னகத்தின் மீது படையெடுத்து பல கோயில் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றான். ஸ்ரீரங்கம் கோவிலை சூறையாடி, உற்சவர் அழகிய மணவாளன் பெருமாளை டில்லிக்கு எடுத்துச் சென்றான். ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களின் கடுமையான முயற்சியால், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உற்சவர் சிலை டில்லியிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டது.ஆனாலும் பலருக்கும் மீட்டுக் கொண்டு வரப்பட்டது பழைய அழகிய மணவாளன் உற்சவமூர்த்திதானா அல்லது அதை போன்றதொரு சிலையை கொடுத்தனுப்பி விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அழகிய மணவாளனின் ஆடைகளை முன்னர் துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை தேடி கண்டுபிடித்தனர். அறுபது ஆண்டுகள் கழிந்து விட்டநிலையில், அவர் கண் பார்வை குறைந்து, தள்ளாடும் முதியவராக மாறியிருந்தார்.அவரை அழைத்து வந்த பின்னர், மீட்டுக் கொண்டுவந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் (நீராட்டு) செய்தனர். திருமஞ்சன ஆடையை சலவை செய்யும் முதியவரிடம் கொடுத்தனர். சிறிது திருமஞ்சன நீரை பருகியும், திருமஞ்சன ஆடையை முகர்ந்து அதன் தெய்வீக மணத்தையும் கண்டறிந்த, அந்த முதியவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் அந்த தள்ளாத நிலையிலும் , 'இது நம் பெருமாள்தான்' என்று உரத்தக் குரலில் கூவியபடி துள்ளிக் குதித்தார். அதுமுதல், அழகிய மணவாளன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உற்சவர் பெருமாள், 'நம்பெருமாள்' என்ற திருநாமத்திலும் அழைக்கப்படலானார்.

யோக ஆஞ்சநேயர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய ஆஞ்சநேயர்
தொண்டை நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கரில், பெரிய மலையில் யோக நரசிம்மரும் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது.யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், 'பிற்காலத்தில் இந்த மலையில் தவம் செய்யவிருக்கும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படும். அதை தவிர்த்து ரிஷிகளை பாதுகாப்பாயாக' என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து சப்தரிஷிகளின் தவத்துக்கு இடையூறாக இருந்த காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்தார். ஆனால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் பெருமாளை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து சப்தரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் சப்தரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், 'கலியுகத்தில் உன்னுடைய பணி, பூமியில் மிக மிக அவசியம். உன்னை நாடி வரும் என் பக்தர்களின் குறைகளை போக்கி வா' என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் 'யோக ஆஞ்சநேயராக' சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.யோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். மனநோயாளிகள் முறைப்படி இந்த தலத்திலுள்ள 'ஹனுமத் தீர்த்தம்' என்னும் குளத்தில் நீராடி பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய, அவர்களது மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

கமலவரதராஜப் பெருமாள் கோவில்
வலது பாதத்தில் ஆறுவிரல்கள் உள்ள சுந்தர மகாலட்சுமி
செங்கல்பட்டு - மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில். இந்த ஊரில் அமைந்துள்ளது கமலவரதராஜப் பெருமாள் கோவில். இத்தலத்துப் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக்கொண்டு, ஸ்ரீதேவி-பூதேவியோடு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தாயார் சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். தாயார் சுந்தர மகாலட்சுமி, பெயருக்கு ஏற்றாற்போல் அழகு சுந்தரியாக காட்சி தருகிறாள். மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய-வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கற்பூர ஆரத்தியின் போது தாயாரின் வலது பாதத்தை தரிசிக்க வைக்கிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் உள்ள வலது பாதத்தில், சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல் அமைந்திருக்கிறது. இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு, சுந்தர மகாலட்சுமி அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
தாயார் சன்னதி முன், ஒரு இசை மண்டபம் உள்ளது. அங்குள்ள தூண்களை நாம் தட்டினால் ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள தூணிலுள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.
ஆறு என்பது சுக்கிரனின் எண் ஆகும். இந்த தாயாரிடம் சுக்கிரன் ஐக்கியமானதாக ஐதீகம். எனவே சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம் இதுவாகும். அதிக செல்வம் பெற, வீடு வாங்க திருமண பாக்கியம்,பிள்ளைப்பேறு கிடைக்க, இந்தத் தாயாரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கஜேந்திரவரதன் கோவில்
இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்த திவ்ய தேசம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் கபிஸ்தலம். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்தது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

கள்ளழகர் கோயில்
பஞ்ச ஆயுதங்களோடு பெருமாள் காட்சி தரும் திவ்ய தேசம்
மதுரைக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருமாலிருஞ்சோலை. மூலவர் பரமசுவாமி. கருவறையில் இவர் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதம் தாங்கிய நிலையில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்

ரங்கநாதர் கோவில்
தேங்காய்க்கு பதிலாக தேங்காய் துருவல் படைக்கப்படும் திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்து கோவிலில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.

ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கைசிக ஏகாதசியான நவம்பர் 15 அன்று நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம் நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி விழா
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதனை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது, மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால், வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி பெருமாள் அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில், இன்று(14.12.2021) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் போகிப்பண்டிகை நாளில் ஏகாதசி வருவதால் இந்த ஆண்டு கார்த்திகையிலேயே பரமபதவாசல் திறக்கப்படுகிறது. இப்படி கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடப்பது, சுமார் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமையும்.

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
சயனகோலத்தில் நரசிம்மர்
பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சிதருகிறார். திருமாலின் கோவில்களில் இந்தக்கோவிலில்தான் நரசிம்மர் சயன கோலத்தில் இருக்கிறார். இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார். தாயாருடன் எழுந்தருளியதால் இது போக சயனம் ஆகும் . சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிங்கர்குடி ,பூவரசன்குப்பம் ,பரிக்கல் ஆகிய நேர்கோட்டில் உள்ள நரசிம்மர் தலங்களை வணங்கும்போது, இத்தலத்திற்கு வந்து இவரையும் வணங்குவது சிறப்பாகும் .

கோதண்டராமர் கோவில்
பார்ப்பவரை பரவசமடையச் செய்யும் ராமர்
திருவாரூர் மாவட்டத்தில், ராமர் கோவில்கள் அமைந்துள்ள தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்னும் ஐந்து தலங்கள் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. இலங்கை போர் முடிந்து வீர கோதண்ட ராமஸ்வாமியாக கையில் வில் ஏந்தி வலப்புறம் சீதை இடப்புறம் இளைய பெருமாளுடன் நின்ற திருக்கோலத்தில் அனுமனுடன், இத்தலத்தில் காட்சி தருகிறார். 150 ஆண்டுகளுக்கு முன் குளம் வெட்ட தோண்டியபோது பூமியில் சுயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமபிரானின் 5 அடி உயர பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. மூலவரே பஞ்சலோக விக்ரகமாய் எழுந்தருளி இருக்கும் தலம் இது. ராமரின் ஐந்தடி உயர பஞ்சலோக சிலாரூபம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவர் திருமேனியில், திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகள், திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் பகுதிகளில் காணப்படுகின்றன. கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே விரல்களில் நகங்களும் அமைந்திருக்கின்றன. திருமார்பில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே காட்சியளிக்கின்றன. கைகள் மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும் விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருடைய திருமேனியின் முழங்கால்கள், மனிதர்களின் முழந்தாள்களைப்போலவே உருண்டு திரண்டு, கால்களில் பச்சை நரம்போடுவது தெரிகின்றன. கால்களில் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷை மற்றும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் காட்சியளிக்கின்றன. மற்ற திருத்தலங்களில் அர்த்த சந்திர பாணத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீராமன் இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சிதருகிறார். ஸ்ரீராமன், இந்த ராம சரத்தை காகாசுரன், வாலி மற்றும் இராவணவதத்திற்காக பிரயோகித்தார்.

யோக நரசிம்மர் கோவில்
கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்
சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்.வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து ஒரு கடிகை அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள். அசலம் என்றால் மலை என்று பொருள். அதனால்தான் சோளிங்கர் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகாசலம் என்றெல்லாம் புராணத்தில் பெயர்கள் அமைந்துள்ளன. திருமால் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதாரம் மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக உதவிய அவதாரமாகும்.அத்தகைய அவதாரமாக, திருமால் யோக நரசிம்மராக இருக்கும் தலம் இது.சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான சோளிங்கர் மலையின் மீது கோவில் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். அவர் வருடத்தில் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் கார்த்திகை திருவிழா மிகவும் விசேஷம்.இவ்விழா நாட்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். மலை மீதுள்ள நரசிம்மருக்கு, பக்தோசித பெருமாள் என்னும் திருநாமமும் உண்டு. அதாவது, பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவார் என்பதால், பக்த உசிதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு, அதுவே பக்தோசிதப் பெருமாள் என்றானது. இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை, வியாபார நஷ்டம் ஆகிய பிரச்னைகள் தீர்ந்து சுபிட்சம் ஏற்படும்.