அப்பக்குடத்தான் கோவில்

அப்பக்குடம் ஏந்திய பெருமாள்
தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான கோவிலடி தலத்து பெருமாள் அப்பக்குடத்தான்,தனது வலது திருக்கரத்தில் அப்பக்குடத்தை அணைத்தவாறு சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், 'ஆதி ரங்கம்' என்னும் பொருள்பட 'அப்பால ரங்கம்' என்னும் பெயர் ஏற்பட்டது.
பெருமாள் அப்பத்தை உணவாக ஏற்றுக்கொண்ட திவ்ய தேசம்
உபரிசிரவசு என்பவன் பாண்டிய மன்னன்,. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது மதம் பிடித்த யானை ஒன்று கௌதமரின் ஆஸ்ரமத்தில் நுழைவதைப் பார்த்து, அதன் மீது அம்பெய்தான். மேலும் சீற்றமடைந்த அந்த யானை, வேதமோதிய வேதியன் ஒருவனைக் கொன்றது. இதனால் மன்னனுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' பிடித்தது. தன் பலமெல்லாம் இழந்து உடல் நலக்குறைவால் துன்பப்பட்டான்.
இதனால் உபரிசிரவசு தன் அரசைத் துறந்து புண்ணியத் தலங்களில் புனித நீராடச் சென்றான். புரசங்காடுகள் நிறைந்த கோயிலடிக்கு வந்தவுடன் தெய்வ அனுக்கிரஹம் கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டதால் இத்தலத்தின் விசேஷத்தைத் தனது குலகுருவிடம் கேட்டான். அதற்கு அவர், துர்வாசரின் சாபத்தால் அசுரர்களால் துரத்தப்பட்டு பதவியிழந்த இந்திரனை மீண்டும் தேவலோக அதிபதி ஆக்கப் பெருமாள் இங்கு அருளினார் என்று எடுத்துக் கூறினார், 'சிறப்புமிக்க இத்தலத்தில் நீ தவம் செய்தால் உன் தோஷமும் விரைவில் நீங்கும்' என்று வழி காட்டினார். கோயிலடியில் உபரிசிரவசு மன்னன்தன் தோஷம் நீங்க தினசரி ஆயிரம் வேதியர்களுக்கு அன்னம் வழங்கி வந்தான். அதனால் அவன் மீது பெருமாள் கருணை கொண்டார்.

ஒரு நாள், அதிகாலையிலேயே ஒரு பிராமணர் வந்துவிட்டார். மன்னனின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே, 'மிகவும் பசிக்கிறது எப்போது உணவு தயாராகும்" எனப் புலம்பத் தொடங்கினார். மன்னன் அவசர அவசரமாய் பூஜைகளை ஆரம்பித்து முடித்தான். பிராமணருக்கு உணவு பரிமாறச் சொன்னான். பிராமணர் ஒற்றை ஆளாக அத்தனை உணவையும் உண்டு விட்டார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். பிராமணர் அரை வயிறே நிரம்பியதாக முறையிட்டார். மன்னன்மீண்டும் உணவு சமைத்து பரிமாறிகிறேன் என்றான். மன்னனிடம், வேதியர் உருவில் வந்த பெருமாள் . 'மன்னனே! நான் சற்றே ஓய்வு எடுக்க வேண்டும், அந்தி சாய்ந்ததும் எனக்கு ஒரு குடம் நிறைய அப்பங்களைக் கொண்டு வா' என்று கூறிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார் .

ஒரு குடம் முழுக்க அப்பம் நிரப்பப்பட்டு அந்தணராக வந்த பெருமாளின் அருகில் வைக்கப்பட்டது. அதில் ஒன்றைத் தின்று விட்டு மன்னனைப் பார்த்துச் சிரித்தார் பிராமணர். மன்னன் ஏதோ பரவசமாக உணர, பிராமணர் உடனே பெருமாளாக மாறி மன்னன் உபரிசிரவசுக்கு காட்சி தந்தார். அப்பத்தை விரும்பிக் கேட்டுத் தின்றதால், அன்று முதல் இந்தப் பெருமாளுக்கு 'அப்பக் குடத்தான்'
என்ற வித்தியாசமான திருநாமம் ஏற்பட்டது. இன்றைக்கும் இரவு வேளையில் அப்பால ரங்கநாதருக்கு அப்பம்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.

 
Previous
Previous

முருகய்யனார் கோவில்

Next
Next

ஆரண்யேசுரர் கோவில்