ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் உற்சவருக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்படக் காரணமான சுவையான சம்பவம்
பூலோக வைகுண்டம் என பெருமை பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவப் பெருமாள் பெயர் 'அழகிய மணவாளன்'. இவரை 'நம்பெருமாள்' என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன் என்ற பெயர் கொண்டிருந்த உற்சவ மூர்த்திக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி சுல்தான் தென்னகத்தின் மீது படையெடுத்து பல கோயில் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றான். ஸ்ரீரங்கம் கோவிலை சூறையாடி, உற்சவர் அழகிய மணவாளன் பெருமாளை டில்லிக்கு எடுத்துச் சென்றான். ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களின் கடுமையான முயற்சியால், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உற்சவர் சிலை டில்லியிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் பலருக்கும் மீட்டுக் கொண்டு வரப்பட்டது பழைய அழகிய மணவாளன் உற்சவமூர்த்திதானா அல்லது அதை போன்றதொரு சிலையை கொடுத்தனுப்பி விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அழகிய மணவாளனின் ஆடைகளை முன்னர் துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை தேடி கண்டுபிடித்தனர். அறுபது ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், அவர் கண் பார்வை குறைந்து, தள்ளாடும் முதியவராக மாறியிருந்தார்.
அவரை அழைத்து வந்த பின்னர், மீட்டுக் கொண்டுவந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் (நீராட்டு) செய்தனர். திருமஞ்சன ஆடையை சலவை செய்யும் முதியவரிடம் கொடுத்தனர். சிறிது திருமஞ்சன நீரை பருகியும், திருமஞ்சன ஆடையை முகர்ந்து அதன் தெய்வீக மணத்தையும் கண்டறிந்த, அந்த முதியவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் அந்த தள்ளாத நிலையிலும் , 'இது நம் பெருமாள்தான்' என்று உரத்தக் குரலில் கூவியபடி துள்ளிக் குதித்தார். அதுமுதல், அழகிய மணவாளன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உற்சவர் பெருமாள், 'நம்பெருமாள்' என்ற திருநாமத்திலும் அழைக்கப்படலானார்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்
https://www.alayathuligal.com/blog/x5zbpw8ldedml3wlypmst5p9zh8caj
தேங்காய்க்கு பதிலாக தேங்காய் துருவல் படைக்கப்படும் திவ்யதேசம்
https://www.alayathuligal.com/blog/jp33g7zlng6gbyhsw8ztjr4rzfdxm7
ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்
https://www.alayathuligal.com/blog/58wd6aefrygy7nzb5pmf3z34y4jzf7
ஸ்ரீரங்கநாதரின் துலுக்க நாச்சியார்
https://www.alayathuligal.com/blog/hz9enzjzz6tt8ddgcnmzx7lrjtn854
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திவ்யதேசம்
https://www.alayathuligal.com/blog/hfk9wjflk3fa28jzxcra3cswsfybx6