யோக ஆஞ்சநேயர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய ஆஞ்சநேயர்
தொண்டை நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கரில், பெரிய மலையில் யோக நரசிம்மரும் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது.யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.
ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், 'பிற்காலத்தில் இந்த மலையில் தவம் செய்யவிருக்கும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படும். அதை தவிர்த்து ரிஷிகளை பாதுகாப்பாயாக' என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து சப்தரிஷிகளின் தவத்துக்கு இடையூறாக இருந்த காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்தார். ஆனால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் பெருமாளை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து சப்தரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் சப்தரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், 'கலியுகத்தில் உன்னுடைய பணி, பூமியில் மிக மிக அவசியம். உன்னை நாடி வரும் என் பக்தர்களின் குறைகளை போக்கி வா' என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் 'யோக ஆஞ்சநேயராக' சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
யோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். மனநோயாளிகள் முறைப்படி இந்த தலத்திலுள்ள 'ஹனுமத் தீர்த்தம்' என்னும் குளத்தில் நீராடி பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய, அவர்களது மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.