நம்புநாயகி அம்மன் கோவில்
நம்பி வந்தவர்களைக் காக்கும் அம்மன்
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 5 கீ.மீ. தொலைவில் நம்புநாயகி அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால், நம்பு நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இப்பகுதி மக்களின் கண் கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். நம்பு என்பது ராமேஸ்வரம் தீவை சுற்றி மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வார்த்தை.அதனால் இப்பகுதி மக்களின் பெயர் நம்பு குமார், நம்பு லட்சுமி, நம்பு ராஜன் என்று இந்த அம்மனின் பெயரை இணைத்துதான் இருக்கும்.
நம்புநாயகி அம்மன் கோவில் தல வரலாறு
ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு காளி தேவியாக காட்சி கொடுத்தாள். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய் போக்கும் பணியை செய்து வந்ததார்கள். இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இப்பகுதியை ஆண்டு வந்த சூலோதரன் என்ற மன்னன் இந்த காளியை நம்பி வேண்டி தன் நோய் நீங்கி நலமடைந்தான். அம்மனை நம்பி குணமடைந்ததால் அம்மன் நம்பு நாயகி என அழைக்கப் பெற்றாள்.
சர்வரோக நிவாரண தீர்த்தங்கள்
இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நண்ணீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள். தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள். மஞ்சள் தூள் இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருமண வரம், மழலைச் செல்வம் அளிக்கும் அம்மன்
திருமணத்தடை உள்ள பெண்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், குழந்தை வரம் வேண்டுவோரும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நம்பு நாயகியை வழிபட்டால் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலந்துறைநாதர் கோயில்
அழகும், கம்பீரமும் மிகுந்த துர்க்கையம்மன்
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையைத் தாண்டி, கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் தேவாரத் தலமான பசுபதி கோயிலை அடையலாம். இத்தலத்தின் புராணப்பெயர் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர். இறைவி அல்லியங்கோதை. இத்தலம் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.
இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையம்மனின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. இந்த துர்க்கையம்மனின் அழகும், கம்பீரமும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். கருங்கல் குடை நிழலில், எட்டுக் கைகளுடன்,எருமைத் தலைமீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தன் கைகளில் சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். துர்க்கையம்மனின் வாகனங்களான சிம்மம் வலதுபுறமும், கலைமான் இடதுபுறமும் இருக்கின்றன. துர்க்கையம்மனின் வாகனங்ககளின் கீழே இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித் தருகிறார்கள். துர்க்கையம்மன் திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் இருக்க, பின்புறம் அம்பறாத்தூணி, அம்புகளும் விளங்க துர்கையம்மன் நின்றிருக்கும் கோலம், நேரிலேயே அவளைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தரும்.
திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கையம்மன்கள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் கோவில்
சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மார்
புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் அமைந்துள்ளது காரைக்கால் அம்மையார் கோவில். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண் இனத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர். சிவபெருமானால் மாங்கனி தந்து அவர் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு, அவர்தம் பக்தியின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலம்மையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
சிவபெருமான் மாங்கனி தந்து காரைக்கால் அம்மையாரை ஆட்கொண்ட வரலாறு
காரைக்காலிலுள்ள குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்காரைக்கால் அம்மையார். இவர் இயற் பெயர் புனிதவதி. சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். புனிதவதி வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், பரமதத்தன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அப்போது சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் அங்கு வந்தார் சிவன். தாம் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது உணவு தருமாறும் புனிதவதியை வேண்டினார். அப்போது உணவு தயாரகவில்லை என்பதால் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார்.அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.
சிவபெருமான் கொடுத்த மாங்கனி
இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.
சிவபெருமானிடம் பெற்ற வரம்
காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும், தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், 'அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,'இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்தான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சிவபெருமானைத் துதித்து, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.
பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா
இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூலை மாதம்10 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 10-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 11-ந் தேதி திருக்கல்யாணமும், 13-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள் வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும். இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.ஜூலை 14-ந் தேதி, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
காளிகாம்பாள் கோவில்
வாழ்வில் உயர்வு தரும் காளிகாம்பாள் குங்குமப்பிரசாதம்
சென்னை பாரிமுனை பகுதியில் தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோவில். 3000 ஆண்டு பழமையான இக்கோவில் முதலில் கடற்கரைக்கருகில் இருந்ததாகவும் பின்னர் 1639-ம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டதாகவும் கோவில் வரலாறு சொல்கின்றது. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமானவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காளி அம்மன் எப்போதும் உக்கிரமாகக் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன், ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னை காளிகாம்பாளை வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள். அது போல காளிகாம்பாள் கோவிலில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்
குழந்தை பாக்கியம் தரும் மஞ்சள் அபிஷேகம்
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் காளிகாம்பாளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வீர சிவாஜி தரிசித்த காளிகாம்பாள்
3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வ்ந்து அம்மனை தரிசனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றிய போது இந்த காளியை வந்து மனமுருகி வழிபட்டு நிறைய காளியை போற்றும் கவிகளை இயற்றினார். அவர் பாடிய 'யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் காளி!' என்ற பாடலில் வருவது அம்மன் காளிகாம்பாள்தான்.
400 ஆண்டு சரித்திரச் சிறப்பு வாய்ந்த வெண்கலக் கிண்ணித் தேர்
இத்தலத்தில் பூந்தேர், வெண்கலக் கிண்ணித் தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்தியாவிலேயே இக்கோவில் வெண்கலக் கிண்ணித் தேர்தான் மிகப் பெரியது. இந்த வெண்கலக் கிண்ணித் தேரோட்டம் 400 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோவிலில் நடைப் பெற்று வருகிறது. பல ஆங்கிலேய கலெக்டர்கள் இத்தேரின் வடம் பிடித்திருக்கின்றனர்.இத்தேர் ஓடும்போது வெண்கலத் தட்டுக்கள் எழுப்பும் ஒலி ஆங்கிலேயர்களை மயக்கியது. நமமூர் மக்கள் பரவசமடைந்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
ரௌத்திர துர்க்கை
ரௌத்திர துர்க்கை திருவாரூர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் எட்டுக் கரங்களுடன் எருமைத் தலையின் மேல் நின்ற கோலத்தில் வடக்கு முகமாக அருள்பாலிக்கின்றாள். இத்துர்க்கையின் வலது புறத்தில் கிளி அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இத்துர்க்கைக்கு எரிசின கொற்றவை என்ற பெயரும் உண்டு.
ரௌத்திர துர்க்கை அம்மன், ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்யும் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவர்களுடைய திருமணத்தடையை நிவர்த்தி செய்து திருமண பாக்கியத்தை அருளுகின்றாள். ரௌத்திர துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். பிரதி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால பூஜை செய்வது விசேஷம். பதவி உயர்வு வேண்டுவோரும், பணி மாற்றம் வேண்டுவோரும் இத்துர்க்கையை வழிபடுகின்றனர்.
முதன் முதலில் துர்க்கைக்கென்று தனித் துதிப்பாடல் இயற்றப்பட்டது இந்த துர்க்கைக்குத்தான். தேவாரம் பாடிய மூவருக்கும் முன் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீஞானசம்பந்த முனிவர் இயற்றிய
மாயவன் தனக்கு முன்னம் மணிமுடியளித்து ஆருர் தூயனை வணங்கி
ஆங்கு துர்க்கையை விதியினால் தாபித்து ஆய்மலர் தூவி அன்பால்
அர்ச்சனை புரியின் மன்ன! நீ உளந்தனில் இன்று நினைந்தது முடியும்
என்றான்.
கோமகன் அசன் ஆருரில் கொற்றவை தனை ஸ்தாபித்து நமநீர்
உலகமெல்லாம் நன்னலார் வணங்கி ஓம்பி, ஏமுறுங்காதை இதை
இசைப்பவர் இனிது கேட்போர் தாம் மற்றவர் போல் வையந்தனில்
அரசாள்வர் மாதோ.
என்ற பாடல்களிலிருந்து, இந்த துர்க்கையை செவ்வரளி மலர் கொண்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அறியலாம்.
வைத்தியநாதசுவாமி கோவில்
நாள் பட்ட சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கிறார்கள்.
இறைவி சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சரும நோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த சுந்தராம்பிகை. நாள்பட்ட சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈர உடையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
ஆயிரங்காளியம்மன் கோவில்
ஐந்த ஆண்டிற்கு ஒரு முறை தரிசனம் தரும் அம்மன்
பாண்டிசேரி மாநிலம் காரைக்காலிற்கு அருகில் திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ளது ஆயிரங்காளியம்மன் கோவில்.
ஆயிரங்காளியம்மன் தல வரலாறு
அன்னை ஆயிரங்காளியம்மன் திருமலைராயன்பட்டினதிற்கு தானாக வந்தவள் ஆவாள். திருமலைராயன் எனும் அரசன் முதலில் தஞ்சைப் பகுதியை ஆண்டு வந்தான். பின்னர், இந்தப் பட்டினத்திற்கு தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். அவன் உருவாக்கிய நகரமாதலால் திருமலைராயன் பட்டினம் என்றழைக்கப்பட்டது.
முற்காலத்தில் வடதேசத்து மன்னன் ஒருவன் அன்னை காளியை திருவுருவம் வைத்து பூசித்து வந்தான். அன்னைக்கு எதை படைத்தாலும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து பூசித்தான். அவனுக்கு மனமிரங்கிய அன்னை காளி அவன் தேசம் செழிப்புடன் விளங்க அருள் புரிந்தாள். மன்னனின் இறுதிக் காலம் நெருங்கிய போது தன்னை ஒரு பெட்டியில் வைத்து கடலில் போட்டு விடும்படி ஆணையிட்டாள். பின் மன்னன் முன் ஒரு பேழை தோன்றியது அதில் அன்னையை வைத்து. வங்க கடலில் விட்டுவிட்டு. மன்னன் அன்னையின் திருவடி அடைந்தான்.
அன்னை காளி இருந்த பேழையும், மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன்பட்டினம் வந்தது. அருகில் இருந்த மீனவர்கள் பெட்டியை எடுக்க முயற்சித்தும் எடுக்க முடியவில்லை.
அன்றிரவு செங்குந்த முதலியார் மரபினரின் மூத்த சிவநேசர் ஒருவரின் கனவில் தோன்றி. தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.
விடிந்ததும் அவரும் ஊராரிடம் நடந்தவற்றை கூறி மேள தாள வாத்தியங்களோடு கடற்கரைக்கு அனைவருடனும் சென்றார். அவர் வந்தவுடன் யாருக்கும் அகப்படாத பெட்டி வேகமாக அவருக்கு அருகில் வர அவரும் பேழையை அணைத்து தூக்கி வந்தார். பின் அவ்வூரில் உள்ள தேவார வைப்புத் தலமான ராஜ சோழீஸ்வரமுடையார் கோவில் கீழ வீதி மடத்தில் பேழையை வைத்து திறந்தனர். அதில் அன்னையின் அற்புதமான திருவுருவமும் ஒரு ஓலையும் இருந்தது. அந்த ஓலையில்
"அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்
இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்,
அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்
எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்
ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை
திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!"
என்று இருந்தது.
அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில்தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.
பேழையில் இருந்து வெளிப்படும்போது ஏற்படும் அதிசய நிகழ்வுகள்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறை பட்சத்தில் திங்கட்கிழமை இரவில் அம்மன் இருக்கும் பெட்டியை திறப்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும். ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும். மலர்ப் பாதங்களில் சிலம்பும், வளைக்கரங்களும், பட்டாடையும் நெற்றியில் திலகமோடு அழகுத் திருமுகத்துடன் காளியன்னை வீர வடிவம் கொள்கிறாள். மாதுளம்பூ மேனி கொண்ட அம்மனின் கம்பீரமான தோற்றத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். வீரகோலம் பூணுவதாலேயே வீரமாகாளி என்று அழைக்கப்படுகிறாள்.
ஆயிரம் எண்ணிக்கையில் சீர்வரிசைப் பொருட்கள்
மறுநாள் செவ்வாய்கிழமையன்று ஒவ்வொரு செங்குந்த குடும்பப் பெண்டிரும் காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானையைப் பெற்று தங்கள் இல்லத்திலிருந்து பொங்கல் பொங்குவதற்கு உண்டான பொருள் யாவும் கொண்டு வந்து மடத்தினில் பொங்கல் வைப்பார்கள். இதனிடையே அன்று மாலை ஆறு மணிக்கு அபிராமி உடனுறை ராஜசோளீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து காளியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருவார்கள். மாலைகள் ஆயிரம், கனிகள் ஆயிரம், தின்பண்டங்கள் ஆயிரம், இளநீர் ஆயிரம், மஞ்சள் ஆயிரம் என பலவகையான நிவேதனப் பொருட்கள் சீர்வரிசையில் இடம் பெறும்.
சீர்வரிசைப் பொருள்களை ஏற்றி வரும் ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வந்து கொண்டிருக்கும். வானத்திலிருந்து இந்த வரிசை ஊர்வலத்தைப் பார்த்தால், நீண்ட நெடிய ஆற்றில் நிவேதனங்கள் மிதந்து செல்வது போலிருக்கும். காளியம்மன் கோயிலை அடைந்ததும் சித்ரான்னங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேவியின் முன்பு சமர்ப்பிக்கப்படும். அன்னைக்கு படையல் போட்டு முடித்ததும் தீபாராதனை காட்டப்படும்.
அடுத்து புதன், வியாழக் கிழமை இரண்டு நாட்கள், இரவு பகலாக தொடர்ந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் அன்னையை தரிசித்தபடி இருப்பர். பிரசாதங்கள் நிவேதிக்கப்பட்டும், தொடர்ந்து விநியோகம் செய்தபடியும் இருக்கும். அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் விதம் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தபடி இருப்பார்கள். வெள்ளிக்கிழமை விடிவதற்குள் அன்னையை மீண்டும் பெட்டிக்குள் வைத்து விடுவார்கள்.
கேட்ட வரம் தரும் ஆயிரம் காளியம்மன்
அன்னை ஆயிரங்காளி தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக கோவில் கொண்டுள்ளாள். இவளிடம் என்ன வரம் கேட்டாளும் வாரி வழங்குகிறாள். பக்தர்களும் தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர்.
இந்த ஆண்டு மீண்டும் ஆயிரங்காளியம்மன், ஜூன் மாதம் 6ம் தேதி திங்கட்கிழமை பேழையிலிருந்து வெளி வருகிறாள்.
திருமறைக்காடர் கோவில்
சரஸ்வதி தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவர் திருப்பெயர் திருமறைக்காடர்.
இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர்.அதனால் பொதுவாக கையில் வீணையுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம். சரஸ்வதியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உருவான கதை
தஞ்சாவூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு மன்னர் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க சென்று கொண்டிருந்தார். அவர் கனவில் ஒரு அம்மன் தோன்றி நான் இந்த புன்னை மரக் காட்டில் இருக்கிறேன் நீ வந்து என்னை பார் எனக் கூறி மறைந்துவிட்டார் அவர் அடுத்த நாள் அந்த இடத்தை தேடிப் பார்த்ததபோது அங்கு ஒரு பெரிய புற்று ஒன்று இருந்தது.அந்தப் புற்று மண் அம்மன் போன்ற அமைப்பில் இருந்தது. உடனே அவர் அந்த புன்னை மர காட்டை சீர் செய்து அதில் ஒரு கோவிலைக் கட்டி அந்த அம்மனை வழிபட ஆரம்பித்தார் அஅவள்தான புன்னைநல்லூர் மாரியம்மன். அந்த அம்மன் புற்று மண்ணால் செய்யப்பட்ட அம்மன் என்பதால் இன்றுவரை அபிஷேகம் கிடையாது தைலம் காப்பு மட்டும்தான்
ஆங்கிலேய துரையிடம் மாரியம்மன் நடத்திய திருவிளையாடல்
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்கும் அதை குருக்கள் துடைத்து விடுவார் ஒருமுறை ஒரு ஆங்கிலேயே துரை இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அதை சோதிப்பதற்காக கோவிலுக்கு வந்தார். கோவில் குருக்களிடம் அம்மன் முகத்தை துணியால் துடைக்கச் சொன்னார்.அதேபோல் குருக்கள் ஒரு துணியை வைத்து துடைத்ததும் ஆங்கிலேயர் துரைக்கு கண்ணில் அம்மை போட்டுவிட்டது அவர் மிகவும் அவதிப்பட ஆ.ரம்பித்து வி ட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை அம்மனுக்கு கண்மலர் சாத்துவதாக வேண்டிக் கொண்டால், கண்பார்வை திரும்பிவிடும் என்று சொனனார்கள்.
அதேபோல் அவர் வேண்டிக்கொண்டதும் அவருக்கு கண் பார்வை சரியானது. அவர் கண்மலர் செலுத்திவிட்டு அதன்பின அவர் வீடு இருந்த வல்லம் என்ற ஊரிலிருந்து மாரியம்மன் கோவில் வரை, தான் அம்மனை அடிக்கடி காண வேண்டும் என்தற்காக சாலை அமைத்தார். அதுமட்டும் இல்லாது, அவர் கோவில் பக்கம் செல்லும் போதெல்லாம் அம்மனை கும்பிட வேண்டும் என்பதற்காக, சுற்றுச்சுவரில் ஒரு சிறு துவாரம் வைத்தார். இப்பொழுதும் அந்த சதுர வடிவ துவாரம் அந்த சுற்றுச்சுவரில் இருக்கிறது.
மகா மருத்துவ குணம் கொண்ட மாரியம்மன்
இக்கோயிலுக்கு செல்லும் வழியில் மண்ணினால் சுட்ட மனித உருவங்கள், வெள்ளியினால் செய்த மனித உருவங்கள் விற்பார்கள் நமக்கு எந்த பகுதியில் நோய் உள்ளதோ அந்தப் பகுதியை வாங்கி உண்டியலில் செலுத்தினால் நோய் நீங்கிவிடும் உப்பும் மிளகும் கொடி மரத்தில் செலுத்தினால் நமது உடம்பில் உள்ள நோய்கள், மருக்கள் போன்றவை போய்விடும் ஒரு வெல்ல கட்டி வாங்கி அதை அந்தக் குளத்தில் வீசி விட்டால், வெல்லம் கரைவது போல் நமது கவலைகளும் நோய்களும் கரைந்து விடும். தீராத நோய்களையும் மாரியம்மன் குணப்படுத்துவாள் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
Nex
மதுரகாளியம்மன் கோவில்
திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் கோவில்
பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர். இங்கு அமைந்திருக்குந் மதுரகாளியம்மன் கோவில் வாரத்தில் இரு நாட்கள், அதாவது திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும்
வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், 'அதிதி' என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அன்னை காளி அதிதியாய், ஒரு கிராமத்துக்கு வந்து, அந்த ஊருக்கு அனுகிரகம் செய்து அங்கேயே கோவில் கொண்டு அருள்புரிகிற அற்புதத் தலம்தான் சிறுவாச்சூர்.
மதுரகாளியம்மனின் அருட்கோலம்
இங்குக் கோயில் கொண்டிருக்கும் மதுரகாளியம்மன், நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியனவற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கிறாள். இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள். ஆதிசங்கரர் இந்தப் பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்துக்குள் விநாயகரைத் தவிரவேறு தெய்வங்கள் இல்லை.
மாவிளக்கு நைவேத்தியம்
இங்குப் பிரதான நைவேத்தியம் மாவிளக்கு. மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டிய எண்ணம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் மற்ற ஆலயங்களைப் போல மாவாகச் செய்து கொண்டு சென்று மாவிளக்கு இட இங்கு அனுமதியில்லை. அரிசியாகக் கொண்டு சென்று அங்கே இருக்கும் உரலில் இட்டு இடித்து அங்கேயே மாவைத் தயார் செய்து மாவிளக்கிடவேண்டும். பூஜையின் போது நடைபெறும் முதல் தீபாராதனை, செல்லியம்மன் உறையும் மலை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும்.
மாவிளக்கு பிரார்த்தனை பலன்கள்
இங்கு மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர். இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்..
பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள கொம்மடிக் கோட்டையில் அமைந்துள்ளது பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோயில் (கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்).
கொம்மடிராயன் என்ற குறுநில மன்னர், இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்ததால் இவ்வூர், 'கொம்மடிக்கோட்டை' என்ற பெயர் பெற்றது.
சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி அம்மன்
அகத்தியர் உட்பட பல சித்தர்களும் பாலா திரிபுரசுந்தரி அம்மனைப் புகழ்ந்து போற்றியுள்ளனர். பல சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி அம்மன் இங்கு பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டு பட்டுப்பாவாடை, சட்டையுடன், மூக்குத்தி, ரத்னாலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பாலா என்பது சம்ஸ்கிருதப் பெயர். வாலை என்பது தான் அதன் தமிழாக்கம். சித்தர்களின் வழிபடும் தெய்வமாகத் திகழ்பவள் ஸ்ரீ பாலா என்கிற வாலை அம்மன். இவளை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
சுமார் 800 வருடங்களுக்கு முன்பு வாலை அம்மனை வணங்க, கயிலாயத்தில் இருந்து வந்தார் வாலை குருசாமி. இவர் வாலையைத் தனது தாயாக ஏற்று தனது பெயருக்கு முன்னால் 'வாலை' என சேர்த்துக் கொண்டவர். இவர் பல புண்ணிய தலங்களுக்கெல்லாம் சென்றுவிட்டு, காசி வந்தடைந்தார். அங்கே, காசியானந்தா என்பவரைக் கண்டார். காசியானந்தா வாலை குருசாமியின் சீடராகி விட்டார். அவரோடு சேர்ந்து அன்னையைக் காண, தென் திசை நோக்கிப் பயணமானார்கள். வரும் வழியில் பல புண்ணியத் தலங்களில் தங்கி யாகங்கள் பல செய்தனர்.இறுதியாக, கொம்மடிக் கோட்டை வந்து சேர்ந்தனர். அங்கே அமைதியின் இருப்பிடமான பாலா திரிபுரசுந்தரி அம்மனைக் கண்டனர். ஆசிரமம் ஒன்றை அமைத்து ஸ்ரீ வாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி சித்திகள் பெற்றனர்.
தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்கு சன்னிதி ஒன்றை அமைத்தனர். பாலக்ஷேத்ரத்தில் உள்ள சித்தர்களின் ஆசிரமத்துக்குப் பலரும் வந்து சென்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என பலர் அருள் வேண்டி நின்றனர். அவர்களுக்கெல்லாம் வாலை குரு சாமியும், காசியானந்தாரும் திருமாத்திரைகள் வழங்கினர். அந்தத் திருமாத்திரையைப் பெற்றவர்கள் நற்பயன் பெற்றனர். அவர்களின் நோய் நீங்கியது.
சித்தர்கள் சன்னிதி அமைந்த வரலாறு
சித்தர்கள் இருவரும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர். சித்தர் பெருமக்கள் பூமிக்குள் அடக்கிய இடம் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஆனால், அருள் ஆற்றல் மட்டும் அங்கே வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. அதன் பிறகு, பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு ஆலயம் ஒன்றைக் கட்ட முடிவு செய்தனர். ஆனால், இந்தத் தலத்தில் எங்கு ஆலயம் கட்டுவது என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. அப்போது அங்கே ஒருவர் இவ்விடத்தில் விபூதியைப் பரத்தி வைப்போம். இரவுக்குள் சித்தர் பெருமக்கள் நமக்கு அருள்பாலிக்கும் இடத்தினைக் கூறுவார்கள்" என்றார். அதை அனைவரும் ஏற்று, விபூதியை அந்த இடம் முழுவதும் பரப்பி வைத்தனர். மறுநாள் காலை விடிந்ததும் பார்த்தபோது, சித்தர்கள் பூமிக்குள் அடங்கிய இரண்டு இடங்கள் மட்டும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஒரு சிறந்த வரைபடம் போல அவ்விடத்தினைக் கண்ட பக்தர்கள் உடனே ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். அங்கே ஒரே கருவறையில் வாலை குருசாமிக்கும், காசியானந்தாருக்கும் லிங்கம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.
தீராத நோய் தீர்க்கும் திருமாத்திரைகள்
சித்தர் வாலை குருசாமியும், காசியானந்தாரும் இங்கு இருந்தபோது வழங்கிய திருமாத்திரைகள் இன்றளவும் தயார் செய்யப்பட்டு கோவிலில் கொடுக்கப்படுகிறது. மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவற்றைக் கோயிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, திருநீறு, சிறிது கோயில் திருமண் சேர்த்து அரைத்துக் கோயிலில் வாலைகுருசாமி முன்பு பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைக்கிறார்கள். இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் நீங்குவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
அபிமுக்தீஸ்வரர் கோவில்
அபூர்வ கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன்
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் மணக்கால் அய்யம்பேட்டை. இறைவன் திருநாமம் அபிமுக்தீஸ்வரர். இறைவி அபினாம்பிகை, .முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் 'பெருவேளூர்' எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.
ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,'இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்' என வேண்டினாள்.
கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,'கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,'என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.
பக்தவத்சலேஸ்வரர் கோவில்
அம்பாளுக்கு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் தேவாரத் தலம்
பக்தவத்சலேஸ்வரர் செங்கல்பட்டு- மாமல்லபுரம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கழுக்குன்றம். மலைமேல் உள்ள கோவிலில் வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஊரில் அமைந்துள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் பக்தவத்சலேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி.
அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்பு திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாள் மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது. மற்ற நாட்களில் தினசரி நடைபெறும் அபிஷேகம், அம்பாளின் பாதத்திற்கு மட்டுமே செய்யப்படுகிறது
மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
இச்சா சக்தியாய் விளங்கும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை மீஞ்சூர் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேலூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது திரிபுரசுந்தரி அம்மன் கோவில். இறைவன் திருநாமம் திருமணங்கீசர்,. அம்மனின் மற்றொரு திருநாமம் திருவுடை அம்மன்.
ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.
மிளகு பயிறு ஆன அதிசயம்
அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.
மூன்று அம்மன்களின் பௌர்ணமி தரிசனம்
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, 'வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டாராம்.
இத்தலத்து ஈசன் திருமணங்கீசரையும் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனையும் வணங்கினால் திருமண வரம், மக்கட் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வில்வவனேசுவரர் கோவில்
பக்தர்களின் குறைகளுக்கு உடனே தீர்வு கூறும் அம்பிகை
கும்பகோணம் திருவையாறு சாலையில் தியாகசமுத்திரம் வழியாக புள்ளபூதங்குடி அடுத்து உள்ளது திருவைக்காவூர் என்னும் தேவாரத்தலம். ஆலயத்தின் மூலவர் வில்வவனேசுவரர், சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து இருக்க அவர் சன்னதியின் இடதுபுறம் வளைக்கைநாயகி எனும் பெயருடன் அம்பாள் தனி சன்னதியில் இருக்கின்றார்.
இந்த கோயிலில் உள்ள அம்பாள் வளைக்கை நாயகி மிகவும் அருள் வாய்ந்தவர். இங்கு அம்பாளுக்கு சர்வஜனரட்சகி என்ற பெயரும் உண்டு. அம்பாளிடம் தங்கள் குறை தீர்க்க தேடி வரும் பக்தர்கள், செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு முதலில் அர்ச்சனை செய்கிறார்கள். பின்னர், தங்கள் குறைகள் எதுவென்றாலும் அதை அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அர்ச்சகர், அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். அவர் கூறியது போலவே எல்லா விஷயங்களும் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.
பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்
ஒரே மண்டபத்தில் இரண்டு நந்திகள்
கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் வழியில் கீழக்கொருக்கை அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை. பூக்களை பூமியில் சிருஷ்டித்ததால், உமையவள் புஷ்பவல்லி எனும் திருநாமம் கொண்டாள். அம்பிகை சன்னதி தனியாக தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் கருவறையின் முன் இருக்க வேண்டிய நந்தியும் அம்மன் சன்னதி முன் இருக்க வேண்டிய நந்தியும் ஒன்றாக வெளி மண்டபத்தில் அமர்ந்து இருக்கின்றன. இப்படிப்பட்ட அமைப்பை வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாது. முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
தான்தோன்றீஸ்வரர் கோவில்
மான் வாகன துர்க்கை
பொதுவாக துர்க்கையம்மன் சிம்ம வாகனத்துடன் தான் காட்சி தருவாள் ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகில் உள்ள பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் துர்க்கையம்மனை மான் வாகனத்துடன் தரிசிக்கலாம். கோவில் வளாகத்தில் ஒரு பாறையில் புடைப்பு சிற்பமாக இந்த துர்க்கை அருளுகிறாள் அம்பிகைக்கு பின்புறத்தில் மான் நின்றிருக்கிறது இந்த துர்க்கையின் பின் இடுப்பிலிருந்து செல்லும் சூலாயுதம் காலுக்கு கீழே உள்ள எருமைதலையின் (மகிஷாசுரன்) மீது குத்தியபடி இருக்கிறது
தயாநிதீசுவரர் கோவில்
சிவன் கோவிலில் விஷ்ணு துர்க்கை
அபிஷேகத்தின் போது நீல நிறமாக மாறும் பால்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர் ..
பொதுவாக சிவாலயத்தில் இருக்கும் துர்க்கையை சிவதுர்க்கை என்றே அழைப்பார்கள். ஆனால், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை, கையில் சங்கு- சக்கரத்துடன் பெருமாள் அம்சமாகத் திகழ்வதால், ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை என்று போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்தத் துர்க்கைக்குப் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீலநிறத்தில் காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்
நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.
தண்டுமாரியம்மன் கோவில்
திப்பு சுல்தான் படை வீரர்களின் அம்மை நோய் தீர்த்த அம்மன்
ஒரு சமயம், திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்மனை தினமும் வழிபடுபவன். அப்போது,ஒருநாள் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக் கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
கனவில் மாரியம்மனை தரிசித்த அவ்வீரன், மறுநாள் காலையில், அம்மன் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்ப மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட அம்மன் வீற்றிருந்தாள். அங்கேயே அம்மனை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, காலப் போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். 'தண்டு' என்றால் 'படை வீரர்கள் தங்கும் கூடாரம்' என்று பொருள். படைவீரர்கள் தங்கும் இடத்தில் கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் 'தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தண்டு என்பதற்கு 'தங்கு' என்பது பொருள். தங்கும் (தண்டு) இடமாக இருந்ததால் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என பெயர் உண்டானது. ஆங்கிலத்தில் 'டென்ட்' என்பது கூடாரத்தை குறிப்பதால் 'டென்ட்' மாரியம்மன் என்றும் பெயருண்டு.
படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்மனை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை நோய் குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியும் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று.
தண்டு மாரியம்மன்: கருவறையில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்சவரின் பெயர், அகிலாண்ட நாயகி. தினமும் மாலையில் தங்கத்தேர் பவனி நடக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். சித்திரை மாதத்தில் அக்னி (பூ) சட்டி ஊர்வலம் நடக்கும்.
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இந்த அம்மனை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்..
கண்ணாயிரநாதர் கோவில்
சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
தேவாரத் தலமான திருக்காரவாசல் இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் கைலாச நாயகி. கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இக்கோவிலில், ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சன்னதிகள் அமைந்துள்ளன.இத்தலத்து அம்பிகை "பஞ்ச்சதசா ஷர" சொரூபிணியாக விளங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. மக்கள் செய்த பாவங்களால் உலகில் தலங்கள் மகிமை குன்றிய காலத்தில் பராசக்தியே இத்தலத்தை உயர்த்தினார் என்பது புராண வரலாறு. கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத்தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் , முக்கியமாக சரும நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.