மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
இச்சா சக்தியாய் விளங்கும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை மீஞ்சூர் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேலூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது திரிபுரசுந்தரி அம்மன் கோவில். இறைவன் திருநாமம் திருமணங்கீசர்,. அம்மனின் மற்றொரு திருநாமம் திருவுடை அம்மன்.
ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.
மிளகு பயிறு ஆன அதிசயம்
அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.
அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.
மூன்று அம்மன்களின் பௌர்ணமி தரிசனம்
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, 'வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டாராம்.
இத்தலத்து ஈசன் திருமணங்கீசரையும் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனையும் வணங்கினால் திருமண வரம், மக்கட் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.