பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில்

கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள கொம்மடிக் கோட்டையில் அமைந்துள்ளது பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோயில் (கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்).

கொம்மடிராயன் என்ற குறுநில மன்னர், இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்ததால் இவ்வூர், 'கொம்மடிக்கோட்டை' என்ற பெயர் பெற்றது.

சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி அம்மன்

அகத்தியர் உட்பட பல சித்தர்களும் பாலா திரிபுரசுந்தரி அம்மனைப் புகழ்ந்து போற்றியுள்ளனர். பல சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி அம்மன் இங்கு பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டு பட்டுப்பாவாடை, சட்டையுடன், மூக்குத்தி, ரத்னாலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பாலா என்பது சம்ஸ்கிருதப் பெயர். வாலை என்பது தான் அதன் தமிழாக்கம். சித்தர்களின் வழிபடும் தெய்வமாகத் திகழ்பவள் ஸ்ரீ பாலா என்கிற வாலை அம்மன். இவளை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில்

சுமார் 800 வருடங்களுக்கு முன்பு வாலை அம்மனை வணங்க, கயிலாயத்தில் இருந்து வந்தார் வாலை குருசாமி. இவர் வாலையைத் தனது தாயாக ஏற்று தனது பெயருக்கு முன்னால் 'வாலை' என சேர்த்துக் கொண்டவர். இவர் பல புண்ணிய தலங்களுக்கெல்லாம் சென்றுவிட்டு, காசி வந்தடைந்தார். அங்கே, காசியானந்தா என்பவரைக் கண்டார். காசியானந்தா வாலை குருசாமியின் சீடராகி விட்டார். அவரோடு சேர்ந்து அன்னையைக் காண, தென் திசை நோக்கிப் பயணமானார்கள். வரும் வழியில் பல புண்ணியத் தலங்களில் தங்கி யாகங்கள் பல செய்தனர்.இறுதியாக, கொம்மடிக் கோட்டை வந்து சேர்ந்தனர். அங்கே அமைதியின் இருப்பிடமான பாலா திரிபுரசுந்தரி அம்மனைக் கண்டனர். ஆசிரமம் ஒன்றை அமைத்து ஸ்ரீ வாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி சித்திகள் பெற்றனர்.

தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்கு சன்னிதி ஒன்றை அமைத்தனர். பாலக்ஷேத்ரத்தில் உள்ள சித்தர்களின் ஆசிரமத்துக்குப் பலரும் வந்து சென்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என பலர் அருள் வேண்டி நின்றனர். அவர்களுக்கெல்லாம் வாலை குரு சாமியும், காசியானந்தாரும் திருமாத்திரைகள் வழங்கினர். அந்தத் திருமாத்திரையைப் பெற்றவர்கள் நற்பயன் பெற்றனர். அவர்களின் நோய் நீங்கியது.

சித்தர்கள் சன்னிதி அமைந்த வரலாறு

சித்தர்கள் இருவரும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர். சித்தர் பெருமக்கள் பூமிக்குள் அடக்கிய இடம் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஆனால், அருள் ஆற்றல் மட்டும் அங்கே வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. அதன் பிறகு, பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு ஆலயம் ஒன்றைக் கட்ட முடிவு செய்தனர். ஆனால், இந்தத் தலத்தில் எங்கு ஆலயம் கட்டுவது என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. அப்போது அங்கே ஒருவர் இவ்விடத்தில் விபூதியைப் பரத்தி வைப்போம். இரவுக்குள் சித்தர் பெருமக்கள் நமக்கு அருள்பாலிக்கும் இடத்தினைக் கூறுவார்கள்" என்றார். அதை அனைவரும் ஏற்று, விபூதியை அந்த இடம் முழுவதும் பரப்பி வைத்தனர். மறுநாள் காலை விடிந்ததும் பார்த்தபோது, சித்தர்கள் பூமிக்குள் அடங்கிய இரண்டு இடங்கள் மட்டும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஒரு சிறந்த வரைபடம் போல அவ்விடத்தினைக் கண்ட பக்தர்கள் உடனே ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். அங்கே ஒரே கருவறையில் வாலை குருசாமிக்கும், காசியானந்தாருக்கும் லிங்கம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.

தீராத நோய் தீர்க்கும் திருமாத்திரைகள்

சித்தர் வாலை குருசாமியும், காசியானந்தாரும் இங்கு இருந்தபோது வழங்கிய திருமாத்திரைகள் இன்றளவும் தயார் செய்யப்பட்டு கோவிலில் கொடுக்கப்படுகிறது. மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவற்றைக் கோயிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, திருநீறு, சிறிது கோயில் திருமண் சேர்த்து அரைத்துக் கோயிலில் வாலைகுருசாமி முன்பு பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைக்கிறார்கள். இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் நீங்குவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

 
Previous
Previous

திருவேட்டீசுவரர் கோவில்

Next
Next

இராமநாதர் கோவில்