காளிகாம்பாள் கோவில்

வாழ்வில் உயர்வு தரும் காளிகாம்பாள் குங்குமப் பிரசாதம்

சென்னை பாரிமுனை பகுதியில் தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோவில். 3000 ஆண்டு பழமையான இக்கோவில் முதலில் கடற்கரைக்கருகில் இருந்ததாகவும் பின்னர் 1639-ம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டதாகவும் கோவில் வரலாறு சொல்கின்றது. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமானவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காளி அம்மன் எப்போதும் உக்கிரமாகக் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன், ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னை காளிகாம்பாளை வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள். அது போல காளிகாம்பாள் கோவிலில் குங்குமப் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் தரும் மஞ்சள் அபிஷேகம்

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் காளிகாம்பாளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வீர சிவாஜி தரிசித்த காளிகாம்பாள்

3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வ்ந்து அம்மனை தரிசனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

மகாகவி பாரதி சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றிய போது இந்த காளியை வந்து மனமுருகி வழிபட்டு நிறைய காளியை போற்றும் கவிகளை இயற்றினார். அவர் பாடிய 'யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் காளி!' என்ற பாடலில் வருவது அம்மன் காளிகாம்பாள்தான்.

400 ஆண்டு சரித்திரச் சிறப்பு வாய்ந்த வெண்கலக் கிண்ணித் தேர்

இத்தலத்தில் பூந்தேர், வெண்கலக் கிண்ணித் தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்தியாவிலேயே இக்கோவில் வெண்கலக் கிண்ணித் தேர்தான் மிகப் பெரியது. இந்த வெண்கலக் கிண்ணித் தேரோட்டம் 400 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோவிலில் நடைப் பெற்று வருகிறது. பல ஆங்கிலேய கலெக்டர்கள் இத்தேரின் வடம் பிடித்திருக்கின்றனர்.இத்தேர் ஓடும்போது வெண்கலத் தட்டுக்கள் எழுப்பும் ஒலி ஆங்கிலேயர்களை மயக்கியது. நமமூர் மக்கள் பரவசமடைந்தனர்.

தகவல், படம் உதவி : திருமதி. மஞ்சுளா சேதுராமன், எழும்பூர்

 
Previous
Previous

அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்

Next
Next

உழக்கரிசி பிள்ளையார் கோவில்