
திருவையாறு ஐயாரப்பர் கோவில்
எமபயத்தை நீக்கும் ஆட்கொண்டார்
நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் ஆட்கொண்டார் வழிபாடு
தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாரப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி.
தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும், வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டும். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக ஐதீகம். இந்த ஆட்கொண்டேசரே, திருவையாறு மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
ஆட்கொண்டார் எமபயத்தை போக்கி அருள் புரிபவர். முன்னொரு காலத்தில் சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின் மிக்க வருத்தம் கொண்டு, தல யாத்திரை மேற்கொண்டான். அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி 'இன்றைக்கு ஐந்தாம் நாள் உன் உயிரை நான் பறித்து விடுவேன்' என்று உணர்த்தினார். அதைக் கேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர ஜபம் முதலியன செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார். யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார். அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர். பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, எமனையும் சிறுவனின் உயிரை பறிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.
இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும், இரவு எம் வாகனத்தில் ஆட்கொண்டார் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறும்.
ஆட்கொண்டார் எமபயத்தை நீக்குபவர் என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.

வைரவன் கோயில் காலபைரவர் கோவில்
காசிக்கு நிகரான காலபைரவர் தலம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் சிவபெருமானின் ஆணைப்படி வைரவன் கோவில் எனும் இடத்தில்,காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.
காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே இவரை வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி நல்லவையே நடக்கும்.

திருவையாறு அபிஷ்ட வரத மகா கணபதி கோவில்
பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அபிஷ்ட வரத மகா கணபதி
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள திருவையாறில் அமைந்துள்ளது அபிஷ்ட வரத மகா கணபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் புராணச் சிறப்பு உடையது. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி தருவதால், இவருக்கு அபிஷ்ட மகா கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. அபிஷ்டம் என்ற சொல்லுக்கு, 'கோரிக்கை' என்று பொருள். இவருக்கு காரிய சித்தி விநாயகர் என்ற பெயரும் உண்டு.
இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது. அப்பர் பெருமானுக்கு இக்கோவிலில் தனிச்சந்ததி உள்ளது.
திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கி விட்டாள். காவிரியை மணக்க விரும்பிய சமுத்திரராஜன், இத்தலத்து அபிஷ்ட வரத மகா கணபதியை பூஜித்தார். அவருடைய கோரிக்கையை ஏற்ற கணபதி, அவருக்கு காவேரியை திருமணம் செய்து வைத்தார். அதனால் இக்கணபதியை தரிசித்தால், திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருமணம் அல்லது வேறு எந்தச் செயலிலும் தடைகள் ஏற்பட்டாலும், இவருடைய ஆசீர்வாதத்தால் கடக்க முடியும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலுக்குச் சென்று, 'காரிய சித்தி மாலை' பாராயணம் செய்வது நன்மைகளையும் செழிப்பையும் தரும்.

திருவையாறு ஐயாறப்பர் கோவில்
குகனுக்காக, வில்லும் அம்பும் ஏந்தி ராமராக காட்சியளித்த முருகப்பெருமான்
தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாறப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி.
இக்கோவிலில் அமைந்துள்ள வேலவன் கோட்டம் என்ற சன்னதியில் முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி, தனுசு சுப்பிரமணியயராக வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இப்படி இவர் ராமர் போல், வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிப்பதற்கு, இராமாயண காலத்து நிகழ்ச்சி ஒன்றுதான் காரணம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், அங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியை ஆளத் துவங்கினார். அப்போது தன்னுடைய சொந்த ஊரான சிருங்கிபேரபுரத்தில் தங்கி இருந்த குகனுக்கு, ராமருடைய பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராமரைக் காண வேண்டும் என்று முருகரிடம் குகன் பிரார்த்திக்க, முருகர் கோதண்ட ராமனாகவும், வள்ளி சீதையாகவும், தெய்வயானை லட்சுமணராகவும் காட்சி கொடுத்தனராம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

ஐயாறப்பர் கோவில்
திருவையாறு தர்மசம்வர்த்தினி
அம்மனின் சக்தி பீட வரிசையில் தஞ்சை மாவட்டம், திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்பாள் உடனுறை ஐயாறப்பர் கோயில், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
இவளுக்கு இங்கு தர்மாம்பிகை, அறம்வளர்த்தநாயகி, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சன்னதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு.
காவிரியானது திருவையாறு அருகே காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று ஐந்து கிளை ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் இவ்வூர் திருவையாறு (திரு+ஐந்து+ஆறு) என்று பெயர் பெற்றது.
அறம் வளர்த்த நாயகி
ஆண்கள் தர்மம் செய்வதைவிட ,குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் பார்வதி தேவி இங்கே எழுந்தருளி உள்ளாள்.
காஞ்சி காமாட்சியைப் போன்று இறைவனிடம் இரு நாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்ததால், அம்பாள் 'அறம் வளர்த்த நாயகி' என்று அழைக்கப்படுகிறார்.
அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
அம்பாள், மேல் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் திருமால் அம்சமாக அருள்பாலிக்கிறார். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோயில்கள் இல்லை.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.
தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு மஹாளய அமாவாசையன்று வெளியான பதிவு
சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்
https://www.alayathuligal.com/blog/2a9b25aa7he6e3exfy4756yx3zdc9t

வேதபுரீஸ்வரர் கோவில்
அபூர்வமான அர்த்தநாரீஸ்வர கோலம்
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலமான திருவேதிகுடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில். மூலவர் வேதபுரீஸ்வரர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.

வேதபுரீஸ்வரர் கோவில்
வேதம் கேட்கும் விநாயகர்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவேதிக்குடி. பிரம்மன்(வேதி) வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம், திருவேதிக்குடி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தன் நான்கு முகங்களால் நான்கு வேதங்களையும் அருளி செய்ததால்,அவருக்கு வேதபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்து விநாயகர், இடது காலை உயர்த்திக் கொண்டு, உள்ளே வேதபுரீசுவரரால் அருளப்படும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்து கூர்மையாக கேட்டுக் கொண்டிருக்கும் தோரணையில் இருக்கின்றார். அதனால் இவர், வேத விநாயகர் என்பதோடு செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

ஐயாறப்பர் கோவில்
திருவையாறு ஐயாரப்பன் கோவில் தட்சிணாமூர்த்தியின் தனிச் சிறப்பு
திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். இவரது மேல்நோக்கிய வலது கரத்தில் கபாலமும், இடது கரத்தில் சூலமும் தாங்கி இருக்கிறார். கீழ்நோக்கிய வலது கரத்தில், சின்முத்திரை, இடது கரத்தில் சிவஞானபோதம் காணப்படுகின்றது. இந்த தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் ஆமை இருக்கின்றது. திருவடியானது ஆமையை மிதித்திருப்பது புலன் அடக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது.